செவ்வாய், 16 ஜூலை, 2019

கூடங்குளம் அணு மின்நிலையம் அணு உலைக்கு அப்பால் (அ) சாத்தானே அப்பால் போ :)

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கான ஒப்பந்தம் 1988-ஆம் ஆண்டு அப்பொழுதைய காங்கிரசு கட்சியின் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி மற்றும் ரஷ்ய பிரதமர் கார்ப்பசேவ் தலைமையில் ஒப்பந்தமிட்டனர். அப்பொழுது கூடங்குளத்தில் வசித்த மக்களிடையே அணு சக்தி அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாத காரணத்தினால் அதிக அளவில் எதிர்ப்பு எதுவும் எழவில்லை.

பின்பு ரஷ்யா சிதறுண்டு பல நாடுகளாக பிரிந்து சென்றது, 96க்கு பிறகு இந்தியாவில் நிலையான ஆட்சி இல்லாமல் போனது, இந்தியா அணுவாற்றல் வழங்குவோர் குழுமத்தில் உறுப்பினராக இல்லாதது போன்ற காரணங்களினால் இந்த அணு மின் நிலையம் அமைவது தள்ளிச்சென்றது. 2001ல் ஆட்சியிலிருந்த பாஜகவின் திரு.வாஜ்பேய் தலைமையிலான வழுவான மத்திய அரசினால் மீண்டும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் மத்திய அரசாங்கத்தின் வழுவுவான கூட்டணிதாரர்களாக தமிழகத்தின் கட்சிகளும் இடம்பெற்றிருந்தது, ஆனால் மத்திய அமைச்சரவை கூட்டங்களில் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துவிட்டனர், ஆனால் இப்பொழுது மிகக்கடுமையாக உள்ளூர் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இருப்பினும் மத்திய, மாநில அரசாங்கங்கள் எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு WER1200 வகை 1000 மெகா வாட் அணுமின் திறன் கொண்ட இரு அணு உலைகளை நிறுவியது. இந்த நிலையில் மத்திய அரசாங்கம் 2008ல் மேலும் ஆறு அணு உலைகளை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டது. இறுதியாக 22 அக்டோபர், 2013ல் சோதனை ஒட்டமாக 160மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது.


பொருளடக்கம்

  • 1சுரங்கத்தொழில் VS நவீன தொழில்நுட்பம்:
  • 2யுரேனிய உற்பத்தி:
  • 3அணு உலைக்கு அப்பால் (அ) சாத்தானே அப்பால் போ :)
  • 4தமிழக அணு உலைகள் மின்சார உற்பத்திக்கானதா இல்லை அணு சக்தி பரிசோதனைக்கானதா??

சுரங்கத்தொழில் VS நவீன தொழில்நுட்பம்:

மானுடத் தேவைகளுக்கான உலோகப்பொருட்கள் தேவையான வடிவில், அளவில் பொதுவில் கிடைப்பதில்லை. அவை மலைகள், கடல் போன்றவற்றில் தாதுப்பொருட்கள்(இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கனிமங்கள் சேர்ந்திருக்கும்) வடிவிலிருக்கும். வழமையான முறையில் மலைகளிடமிருந்தோ அல்லது கடற்கரை மணல் அல்லது நீருக்கு அடியில் தாதுப்பொருட்களை வெட்டி எடுத்து நிலப்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு அமிலக் கரைசலில் முழ்க வைத்து தேவையான உலோகப் பொருட்களாக தனித்தனியாக பிரிக்கப்படுகின்றன. இவ்வாறு பிரிக்கப்பட்ட பொருட்களிலும் உலோகங்களின் செரிவு குறைந்த சதவிகிதத்திலேயே இருக்கும், மேலும் இதில் தேவையானப் பொருட்களை விட மீதமாகும் பொருட்கள் அதிகம் ஆகும்
இதனைத் தவிர்க்கவே சுரங்கத் தொழிலில் புதிய செயல்முறைகள் கண்டறியப்பட்டன. அவை InLine, InMine, Insitu-Leeching ஆகும். இந்த மூன்று முறை உலோக உற்பத்திகளிலும் சிறிதளவு வேறுபாடு இருந்தாலும், பூமிக்கு மேலே மலைகளை வெட்டி எடுத்து கொண்டு வரத் தேவையில்லை, தேவையான உலோகப்பொருட்கள் பூமிக்கு கீழேயே தாதுப்பொருட்களிடமிருந்து பிரிக்கப்பட்டு எடுக்கப்படுகின்றது.

Qn கோயிந்து: அப்ப ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்கள் இந்த முறையத்தான் பின்பற்ற போறாங்களா!!

யுரேனிய உற்பத்தி:

உலக அளவில் ஆஸ்திரேலியா 29%மும், கசகசுதான் 13%மும், ரஷ்யா மற்றும் கனடா 9%மும் யுரேனிய இருப்பு கொண்டுள்ளது. கசகசுதான் உலகிலேயே அதிக யுரேனிய உற்பத்தி நாடாக திகழ்கிறது. (இந்தியா சமீபகாலங்களில் கசகசுத்தானுடன் ராஜ்யரீதியிலான தொடர்பை அதிகரிக்கிறது :) )...

யுரேனியம் மலைகளிலும், கடலிலும் தாதுப்பொருட்களாக கலந்து உள்ளன. தாதுப்பொருட்களிடமிருந்து உலோகமாக பிரிக்கப்பட்ட பிறகு யுரேனியம் ஆக்சைடு அடர்த்தியாக (U3O8) சந்தையில் விற்கப்படும். இது அணு உலைக்கு மின்சார எரிபொருளாக அனுப்புமுன் தொழிற்சாலைகளில் தொடர்ச்சியான செயலாக்க முறைக்கு உட்படுத்தப்படும். இங்கு யுரேனியம் வாயு வடிவிற்கு அதிக வெப்பநிலையில் மாற்றப்படும் (யுரேனியம் ஹெக்சாபுளொரைடு UF6), இது யுரேனிய செரிவூட்டத்தினை எளிதாக்குகிறது. செரிவூட்டல் பணி என்பது யுரேனியம்-235 ஐசோடோப்புகளை அதன் இயற்கை அளவான 0.5 முதல் 0.7% லிருந்து 4 முதல் 5% அளவிற்கு அதிகப்படுத்துகிறது. செரிவூட்டப்பட்ட யுரேனிய அளவானது அணு உலைகளில் சாதாரணநீரையே குளிர்விக்கும் பொருளாக அனுமதிக்கிறது மேலும் அணு உலையின் செயல்திறனையும் அதிகரிக்கின்றது. கடைசியாக வாயு நிலையிலிருக்கும் யுரேனியமானது யுரேனியம் ஆக்சைடாக(UO2) மாற்றப்பட்டு துகள்களாக செப்புறையிடப்பட்ட இரும்பு குப்பியில் அடைக்கப்பட்டு அணு உலைகளுக்கு அனுப்பபடுகின்றது.
ஒரு டன் யுரேனியம் மூலம் 44மில்லியன் கிலோவாட்/மணிக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது, இதே அளவு மின்சார உற்பத்திக்கு 20000 டன் நிலக்கரி அல்லது 8.5மில்லியன் கன அளவு வாயுக்கள் தேவைப்படும். கூடங்குளத்தின் அணு உலைக்கு தேவையான எரிபொருள் ரஷ்யாவின் -50டிகிரி வெப்பநிலை கொண்ட சைபீரியாவிலிருந்து தயாரிக்கப்பட்டு அனுப்பபடுகின்றது.

அணு உலை மின்சாரத் தயாரிப்பு:
ஒரு சரவெடியின் முனையிலுள்ள திரியில் நெருப்பினைப் பற்ற வைத்தால் எப்படி தொடர்ச்சியாக சரவெடிக்கன்னி முழுவதும் தொடர்ச்சியாக வெடிக்கிறதோ அப்படி கற்பனை செய்துகொள்ளுங்கள் அணு உலை மின்சாரத் தயாரிப்பினை.
Pic credit: Internet

அணு உலையில் யுரேனியம் எரிபொருளாக(எ.கா:சரவெடி) பயன்படுத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது, பொதுவாக யுரேனியம் மூன்று ஆண்டுகள் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு அணு மின்சாரம் எடுக்கப்படும், யுரேனியமானது 1000க்கும் அதிகப்படியான வெப்பநிலையில் உலையில் எரிக்கப்படும்பொழும் அதனுள் செலுத்துப்படும் நீரினால் உருவாகும் நீராவியினால் விசையாழி சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகின்றது. யுரேனியம் எரிந்த பிறகு கழிவுப்பொருட்களாக, 1.0% U-235 and 0.6% அணுசக்தியுடன் கூடிய புளூட்டோனியம், 95% U-238 மற்றும் 3% அணு பிளவு பொருட்கள் மற்றும் ஆக்டினைட்டுகளாக எஞ்சுகிறது. ஒவ்வொரு பதினெட்டு அல்லது 36 மாதங்களுக்கு ஒரு முறை அணு உலைக்கு தேவையான எரிபொருள் மாற்றப்பட வேண்டும் என்பதைவிட அணு உலையின் மின்கலனின் மீது படியும் அணுக்கழிவுகள் அகற்றப்பட்டவேண்டும் என்பதனாலேயே பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்படுகின்றது.

Pic credit: Internet


அணு உலையிலிருந்து எடுக்கப்படும் எஞ்சிய எரிபொருட்கள் உடனடியாக குளிர்விக்கப்படவேண்டும் அல்லது அது தொடர்ந்து அணுப்பிளவில் ஈடுபட்டுக்கொண்டுக்கும், இதனால் நீரினைப் பயன்படுத்தி உடனடியாக அதிகப்படியான கதீர்விச்சும், வெப்பநிலையும் கொண்ட அணு எரிபொருள்(யுரேனியம்) குளிர்விக்கப்படும். இங்கு குளிர்பொருளாக பயன்படும் நீரில் கடத்தப்படும் அதிகப்படியான வெப்பநிலை "வெப்ப பரிமாற்றி"(Heat Exchanger) மூலம் நீக்கப்படுகின்றது.
அடுத்ததாக இயற்கையான காற்றோட்டமுள்ள உலர் சேமிப்புக்கு(Dry storage) முன்பு எஞ்சிய எரிபொருட்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் அணு உலை வளாகத்தினுள்ளே, பொதுவாக அணு உலையின் கீழேயே குளிர்விக்கப்பட்ட நிலையில் சேமிக்கப்படும். சில ஆண்டுகளுக்கு பின்பு அவை வெளியே எடுக்கப்பட்டு பொதுவான ஒர் இடத்தில் சேமிக்கப்படும், அதாவது இந்த செயலானது அணு உலைக்கு வெளியே (Away from reactor) என்று அழைக்கப்படுகின்றது.

அணு உலைக்கு அப்பால் (அ) சாத்தானே அப்பால் போ :)

கூடங்குளம் அணு உலை வளாகத்தில் இந்த "அணு உலைக்கு வெளியே" அணுக் கழிவுகள் சேமிக்கப்படலாம் என்று இந்திய அரசு கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளது. இங்கு இந்தியா முழுவதுமுள்ள அணு உலை கழிவுகள் சேமிக்கப்படும் என்று தெரிகிறது. இதுதான் இப்பொதைய பிரச்சினை...
புளூட்டோனியத்தின் அரை வாழ்வு வருடம் 24000 ஆகும், யுரேனியத்தின் அரை வாழ்வு வருடம் 6000 ஆகும். அதென்ன அரை வாழ்வு வருடம்? ஒரு கிலோ புளூட்டோனியத்தின் பாதியளவு, அதாவது 500கிராம் சக்தி குறைய எடுத்துக்கொள்ள ஆகும் கால அளவு. ஆக புளூட்டோனியத்தின் ஒரு அணுவின் கதிரியக்க கால அளவு 48000 ஆண்டு ஆகும். எந்த வெண்ணையாவது அல்லது ஈரவெங்காயமாவது அரசிற்கும் அறிவியலுக்கும் தெரியும் என புளூகுமுட்டைகளையோ அல்லது அறைகுறை மேதாவித்தனங்களையோ எடுத்துக்கொண்டு இங்கு வரவேண்டாம். உங்களிடம் தெளிவான, தீர்மானமான வழிமுறை இருந்தால் வாருங்கள் கூடிப்பேசலாம். அதைவிட்டு விட்டு வெற்றுக் கூச்சல் கதைக்குவாது.
நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு மேசையின் மீது ஒரு சாதாரண வெற்றுக் காகிதத்தினை வையுங்கள், தினந்தோறும் அதன் மீது நடைபெறும் மாற்றங்களை கவனியுங்கள். அடுத்த ஒருவருடம் கழித்து அது நீங்கள் வைத்த மாதிரியே இருக்கிறதா எனச் சொல்லுங்கள்?? நிச்சயம் இருக்காது என நம்புகின்றோம். இப்படி இருக்கையில் நமது மனித வாழ்நாள் அளவு சராசரியாக 60 வருடமே ஆகும், இந்நிலையில் மண்ணுக்குள்ளே புதைக்கப்படும் அணுக் கழிவுகளை எவ்வகையில் 48000 வருடம் பாதுகாக்கப்போகின்றோம். நமது வாரிசுகளூக்கு விட்டுச்செல்லும் நல்ல சொத்து அணுக் கழிவு !
குறிஞ்சி மக்களின் கவனத்தினையும், அரசின் கவனத்தினையும் ஈர்க்கும் மற்றொரு பிரச்சினையை பேசத் தீர்மானிக்கிறது, அது அணு சக்தியில் இயங்கும் நீர்முழ்கிக் கப்பல்களில் கழிவுகளூம் இங்கு சேமிக்கப்படும் என்ற ஐயப்பாடே. அரிஹந்த கப்பல் 87மெகாவாட் சக்திகொண்ட அணு உலை மூலம் இயங்குகின்றது, அவ்வாறெனில் இந்தியாவில் புதிதாக கட்டியமைக்கப்படும் 12 அணுசக்தி நீர்முழ்கி கப்பல்களின் மொத்த சக்தி ஒரு மின்சார அணு உலையின் அளவான 1200மெகாவாட்டிற்கு சமமானது. இந்த நீர்முழ்கிக் கப்பல்களின் கழிவு எங்கு புதைக்கப்படும். இதை பற்றி யாரும் கேள்வி எழுப்பவதில்லை, எழுப்பவும் போவதில்லை, வழக்கம்போல் தேசப்பக்தியின் மூலம் இதுவும் மூடி மறைக்கப்படும்.

தமிழக அணு உலைகள் மின்சார உற்பத்திக்கானதா இல்லை அணு சக்தி பரிசோதனைக்கானதா??

அரிஹந்த் கப்பலின் அணு உலைக்கு மாதிரியானது கல்பாக்க அணு மின்நிலையத்தில் 2008ல் செயற்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனவே அணு உலை எதிர்ப்பார்களின் கருத்தான "அணு உலைகள் மக்களின் மின்சாரத் தேவைக்கானது அல்ல, அது அரசியல் காரணங்களுக்காகவும், இராணுவத் தேவைகளுக்காகவுமே செயற்படுகின்றது" என்ற கருத்தினையும் புறந்தள்ளவேண்டியது அல்ல.
குறிஞ்சி அறிவியலை மதமாக கொண்டு இயங்கவே விரும்புகின்றது. ஆனால் அணு சக்தி அறிவியலில் குறிஞ்சி மாற்றுக் கருத்து கொண்டுள்ளது. அறிவியல் இன்னும் அதன் முழுஅளவில் அணு சக்தியில் இயங்கவில்லை எனக் கருதுகின்றோம். ஆக அணு அறிவியலில் எளிய பாமர மக்களின் நலன் பக்கமே நிற்க விரும்புகின்றோம். மாற்று அறிவியல் கண்டறியும் வரை பெரிய அளவிலான அணு உலைகளை முழுவதுமாக நிறுத்தவேண்டும் என்பதுவே எங்கள் எண்ணமும் விருப்பமும் ஆகும்.

ஜப்பானின் புகுசிமா அணு உலை விபத்தானது நிலநடுக்கத்தினால் அணுக் கழிவுகளை பாதுக்காக்க பயன்படுத்தப்படும் குளிர் நீர் அமைப்புகள் செயல் இழந்நததினால் வந்த பிரச்சினை ஆகும். அந்த விபத்திற்கு பிறகு ஜப்பான் அணு சக்தி மின்சார உற்பத்தியினை குறைத்து விடுகிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக