புதன், 24 ஜூலை, 2019

வெற்றியாளர்களின் கதை - 1 நிர்மா

1990களில் டிவிப் பெட்டியில், நிர்மா எனும் விளம்பரத்தின்பொழுது பளீச்சென்று மின்னலடிக்கும் கவுனில் ஒரு பெண் சிறுமி வருவதை பார்த்திருப்பீர்கள்.. அந்த நிறுவனம் மற்றும் அதன் நிறுவனரின் வெற்றிக்கதையை இங்கு பார்க்கப் போகின்றோம்.



1969 ஆம் ஆண்டு, ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட்டின் (இப்போது இந்துஸ்தான் யூனிலீவர்) 'சர்ப்' என்றழைக்கப்படும் பிராண்ட் இந்தியாவின் சோப்பு சந்தையில் முழுமையான ஏகபோகத்தை கொண்டிருந்தது. இதன் விலையானது 10 ரூபாய்க்கும் 15 ரூபாய்க்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது மக்களின் துணிகளில் இருந்த கறைகளை நீக்கி வெண்மையாக்கவும், துவைப்பர்களின் கைகளை பாதுகாப்புடன் வைத்திருக்கவும் உதவியது. அன்றைய காலத்தில் இந்த விலை நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு அதிகமானதாக தெரிந்தது, அவர்களின் வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பால் இந்த சோப் விலை இருப்பதாக அறிந்தனர். எனவே, அவர்கள் சாதாரணமான சோப் வில்லைகளைப் பயன்படுத்தினர். இருந்தபொழுதினும் தரம் மற்றும் சுயபாதுகாப்பு விசயங்களில் அதீத விலையின் காரணமாக விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது, இந்த வெற்றிடத்தினைத்தான் நமது கட்டுரையின் தல, சரிப்பா.. தலதளபதியான திரு.கர்சன்பாய் படேல் நிரப்பினார்.



குஜராத் அரசின் சுரங்க மற்றும் புவியியலாளர் துறையில் வேதியியலாளராக பணிபுர்ந்த கர்சன்பாய் படேல் இந்த சந்தையில் நுழைந்து நடுத்தர-வர்க்க குடும்ப பெண்களூக்கு துணிதுவைப்பதில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து தீர்வு வழங்க விரும்பினார். குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் சோப்பு தயாரிக்க அவர் முடிவு செய்தார், அதன் உற்பத்தி செலவுகள் குறைவாக இருக்க வேண்டும் அப்படியானால்தான் குறைந்தவிலையில் விற்கமுடியும் என்று முடிவுசெய்தார்.



அவர் இதற்கான உற்பத்தி சூத்திரத்தை உருவாக்கி, பின்பு மஞ்சள் நிறத்தில் சோப்பு மற்றும் சோப்பு தூள் தயாரித்தார், இந்த சோப்பின் பெயராக, விபத்தில் இறந்த தனது மகள் நிருபமாவின் நினைவு காரணமாக நிர்மா என்ற பெயரிலே சந்தையில் 3ரூபாய்க்கு விற்கத் தொடங்கினார்.



ஆரம்பத்தில் அவரே நேரடியாக தனது ஒவ்வொரு அண்டை வீட்டின் கதவைத் தட்டி ஒவ்வொரு பாக்கெட்டையும் விற்றார், தனது வாடிக்கையாளர்களிடம் தனது சோப் பயன்படுத்தும்பொழுது திருப்தி தராவிடில் 'பணம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்' என உத்தரவாதம் தருவார். ஆனால் நிர்மா சோப்பானது அந்த நேரத்தில் மிக குறைந்த விலையில்  தரம் மிக்க பிராண்டட் வாஷிங் பவுடராக மக்களிடையே புகழ்பெறத் துவங்கியது. முதலில் அகமதாபாத்தின் சந்தையில் பெரும் வெற்றி பெற்றது.

அகமதாபாத் சந்தையின் வெற்றியானது பட்டேலை தனது முழுநேர வேலையை விட்டுவிட்டு, இந்த முயற்சியில் முழுநேரமாக தொடரவும் மற்றும் சந்தையில் பெரிய விநியோகஸ்தர்களை பிடிக்கவும் முடிவு செய்தார். வடமேற்கு இந்திய சந்தையில் நிர்மா குறைந்தவிலை நிரந்தர தரம் என எளிதில் நுழைந்தது. இந்திய சந்தையை பிடிக்க அந்த நாட்களில், படேல் நேரடியாக சந்தித்த சில சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சொன்ன சந்தை விதிமுறைகள் கடினமானதாகவும், படேலுக்கு இலாபம் தரும் வழியாகவும் இல்லை, அவர்கள் கடனுக்கு நிர்மாவினை விற்க நிபந்தித்தனர். ஆக படேல் அவர்கள் சொன்ன நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் ஒரு பெரும் பண நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பார். இருப்பினும் அவர் ஒரு அற்புதமான மாற்றுத் திட்டம் திட்டினார்.

1980களின் துவக்கத்தில் டிவி ஒளிபரப்பு இந்தியாவில் முழுவதும் துவக்கப்பட்டிருந்தது. எனவே டிவி விளம்பரம் மூலம் மக்களிடையே நேரடியாக செல்லலாம் என முடிவுசெய்து   தொலைக்காட்சி விளம்பரத்தில் கொஞ்சம் பணம் முதலீடு செய்தார். நிர்மா "சப் கி பாசண்ட்" (அனைவருக்குமான தெரிவு) என்று ஒரு  வெள்ளை உடையில் உள்ள சிறுமி சுழலுமாறு ஒரு துள்ளலுடன் கூடிய விளம்பரம் வெளியானது, உடனடியாக பெண்கள் மத்தியில் இந்த விளம்பரம் பெரிதும் கவனத்தினை ஈர்த்து, வெற்றி பெற்றது.


பெண்கள் கடைகளில் நிர்மா இருக்கிறதா என்று விசாரிக்கத் தொடங்கினர், இது சந்தையின் சங்கிலித்தொடரான சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் என எதிரொலிக்கத் தொடங்கியது. ஏற்கனவே படேல் இவர்களிடம் பேசியதும் வியாபாரிகளிடம் ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தியருந்ததும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.  வியாபாரிகள் படேலை சந்திக்க தொடங்கி புதிதாக ஆர்டரை கொடுக்கத்தொடங்கினர்.

ஆனால் தந்திரக்கார படேலோ, 90% நிர்மா சோப்பு பொருட்களை சந்தையிலிருந்து இப்பொழுது திரும்பப் பெற்றுக் கொண்டார். அதேநேரத்தில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு வாடிக்கையாளர்கள் விளம்பரம் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர், இது உற்பத்தி மற்றும் விற்பனைக்கான தேவையில் பெரும் வித்தியாசத்தினை ஏற்படுத்தியது.  இப்பொழுது சில்லரை விற்பனையாளர்கள் நிபந்தனைகள் ஏதுமின்றி நிர்மா சோப்பினை பெற்றுக்கொள்ள வாதாடினார்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு, படேல் நிர்மா சோப்பினை முழுஅளவில் சந்தைக்கு கொண்டு வந்தார். விலை இந்தகாலத்திற்குள் முன்பை விட அதிகரித்தது, ஆயினும் சோப் விற்பனையில் மிகப்பெரிய அளவுக்கு சந்தையை நிர்மாமா எடுத்துக்கொண்டது, அந்த ஆண்டின் மிக அதிக விற்பனையான சோப்பு நிர்மா ஆகும். உண்மையில், இந்த அற்புதமான நடவடிக்கைக்குப் பின்னர் ஒரு தசாப்தத்திற்கு பிறகு சோப் சந்தையில் 50%த்தினை நிர்மா எடுத்துக்கொண்டது.

ஹிந்துஸ்தான் லீவர் கடும் நெருக்கடியைச் சந்தித்தது, நிர்மாவினை எதிர்கொள்ள "வீல்" என்ற பெயரினில் அவர்கள் புதிய சோப்பினை குறைந்த விலைக்கு இறக்கி இழந்த சந்தையை பெறத்துவங்கினர்.

சந்தையின் ஏற்றத்தாழ்வுகள் குறித்து படேல் கவலைப்படவில்லை, ஏனெனில் அவர் ஒரு துணி சோப்பு மட்டுமின்றி அனைத்துவிதமான சோப்புகளூம் தயாரிப்பதற்கு முடிவு செய்திருந்தார். விரைவில், அவர் கழிப்பறை சோப்புகள், அழகு சோப்புகள், ஷாம்பு மற்றும் பற்பசை என பல்வேறு பொருட்களின் உற்பத்தியைத் தொடங்கினார். சில தயாரிப்புகள் வெற்றிகரமாக இருந்தன, சிலவற்றில் தோல்வி. ஆனால் பிராண்டாக நிர்மா சந்தையில் வெற்றிகரமாக நின்றது.




பிற பங்களிப்பு:
1995 ஆம் ஆண்டில், அகமதாபாத்தில் நிர்மா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பட்டேலினால் நிறுவப்பட்டது, அவர் 2003 ஆம் ஆண்டில்  நிர்மா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக நிறுவனத்தை நிறுவினார். படேலின் மகளின் நினைவால் குஜராத்தில் சிறிய அறையினில் துவங்கப்பட்ட  நிர்மா எனும் நிறுவனம் மக்களிடையே ஏகோபித்த ஆதரவினைப் பெற்றது. 2010 இல் பத்ம ஸ்ரீ உட்பட பல கௌரவ விருதுகள் படேலுக்கு வழங்கப்பட்டது, மேலும் இந்தியாவின்  ஃபோர்ப்ஸ் செல்வந்தர் பட்டியலில் (2009 மற்றும் 2017) இடம்பெற்றார். கர்சான்பாய் படேல் இந்திய தொழில் முனைவோர் சகாப்தத்தில் ஒரு மைல்கல்லே...


இன்றைய களநிலவரம்:

18000கோடிக்கும் அதிகமான டிடர்ஜெண்ட் சோப் சந்தையினுள் இன்றைய நிலவரம் ஹிந்துஸ்தான் லீவர் தனது சர்ப், வீல், ரின் மற்றும் சன்லைட் போன்ற பிராண்ட்கள் மூலமாக 37%க்கும் அதிகமான சந்தையை கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்து இந்தியாவின் உள்ளூர் நிறுவனமான உத்திரப்பிரதேசத்திலிருந்து காரி என்ற பிராண்ட் 22% சந்தையை கைப்பற்றி மிகப்பெரிய பிராண்டாக உருவெடுத்துள்ளது.
இதற்கடுத்து பி&ஜி நிறுவனத்தின் ஏரியல் மற்றும் டைட் பிராண்டுகள் மூலம் 10%க்கும் அதிகமான சந்தையை ஆக்கிரமித்துள்ளது. நிர்மா 2 முதல் 3% வரையை சந்தையில் இன்றுள்ளது..


காரீ மற்றும் பிற உள்ளூர் நிறுவனங்களின் வருகை நிர்மாவின் சந்தை மதிப்பினை பெரிதும் பாதித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக