செவ்வாய், 28 மே, 2019

மீண்டும் மோடி!

இந்திய வாக்காளர்களுக்கு முதலில் பாராட்டுக்கள், நீங்கள் வழங்கிய தெளிவான தீர்ப்பின் மூலம் குதிரைப் பேரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது, மேலும் இதுவரை நடந்த தேர்தல்களில் இதுவே அதிகப்படியான வாக்குப்பதிவு (67.11%) நடந்த தேர்தலாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆளப் போகும் அரசிற்கும், எதிர்கட்சிகளுக்கும் வாழ்த்துக்கள்! அடுத்து வரும் ஐந்து வருடங்களில் ஆளும் அரசு தீர்வினை வழங்கவும், அதனில் குற்றம் குறை இருப்பின் எதிர்கட்சிகளானது அதனை சுட்டிக் காட்டி இந்திய அரசின் ஜனநாயகத் தன்மையைப் பேணிக்காக்கும் சூழ்நிலையை அளித்திடவும் இயற்கையை வணங்குகிறோம்.
வெறுப்பரசியலும், வாட்சப் வதந்திகளும் இன்றோடு இருபுறமும் நிற்கும் என்று நம்புவோமோக... மிடியல...

வரலாறு ஒரு பார்வை

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் துவக்கத்தில் திரு.மோடி அவர்கள் பின் தங்கியிருந்தார், ஆக குறிஞ்சி அவர்தம் தரப்பினை முன்னிலைப்படுத்தியது, பின்னர் கள நிலவரம் மாறியபொழுது திரு.ராகுல் அவர்கள் கடுமையாக பாஜகவினரால் கேலிக்குட்படுத்தப்பட்டார், அது தவறு என்றும் ராகுலின் குரலிலிருந்த உண்மையையும் குறிஞ்சி தனது கட்டுரைகளில் எடுத்து வைத்திருந்தது.
பின்னர் ஆட்சிகாலத்தின் துவக்கத்தில் சில கட்டுரைகளில் மோடி சர்க்காருக்கு சில கோரிக்கைகளை வைத்திருந்தோம் & பின்னர் அவரை விமர்சித்தும் கட்டுரை எழுதியிருந்தோம்... அவர் படிப்பாரா இதையெல்லாம் என்று நண்பர்கள் கேட்கலாம்... :)
2014 - ஜன்தன் வங்கி கணக்கு (2005 முதல் வழக்கதிலிருந்தாலும் மோடி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டது) 2016 செப்டம்பர் - கருப்பு பண ஒப்படைப்பு கடைசி தவணை (60000கோடி கணக்கிற்கு வந்ததாக தகவல்) 2016 அக்டோபர் - பண மாற்ற செயலி அறிமுகம் 2016 நவம்பர் - பணமதிப்பிழப்பு 2017 ஜீலை - ஜிஎஸ்டி வரி விதிப்பு
என்று தொடர்ச்சியாக பாஜக அரசு பெரும் திட்டங்களை எடுத்து வைத்தது... பணமதிப்பிழப்பின் உண்மையான கோரத்தினை களத்தினில் நாம் பார்த்தாலும், சில பல தனிநபர் காரணங்களால் அதன் விளைவுகளை பதிவுசெய்ய முடியவில்லை என்பது கூறித்து உண்மையாகவே வருந்துகின்றோம்... இருப்பினும் ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பு என இருதுருவங்களையும் சமதொலைவினில் வைத்து தொடர்வோம் என்ற முடிவின் காரணமாக அரசியல் கட்டுரைகளை தவிர்த்தே வந்திருந்தோம்...
மீண்டும் தேர்தல் 2019ல் வரும்பொழுது வெறுப்பரசியல் உச்சத்திற்கு சென்றது.. அதற்கு பின்வரும் காரணங்கள் தமிழகத்தின் பார்வையில் முதன்மையாக இருந்து வந்தது...

தமிழகம் சார்ந்த கவன ஈர்ப்புகள்

குற்றச்சாட்டு 1: காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைவதை கர்நாடகா தேர்தலை காரணம் காட்டி ஒத்திபோட்டதை தமிழக மக்கள் ரசிக்கவில்லை
குறிஞ்சியின் பார்வை : காவிரி ஆறு தமிழர்களின் உணர்வுபூர்வமானது என்பதால் இது இளைஞர்களை எளிதில் மோடிக்கு எதிராக திருப்ப இயல்பாக இருந்தது. பிற்பாடு காவிரி ஆணையம் அமைக்கப்பட்டாலும் "GO BACK MODI" முழக்கம் வெற்றிகரமாக தமிழகத்தினில் விதைக்கப்பட்டுவிட்டது.
குற்றச்சாட்டு 2: பின்வந்த ஒகி புயல், கஜா புயல் இரண்டு சமயங்களிலும் மோடி தமிழக நிவாரண பணிக்கு வரவில்லை
குறிஞ்சியின் பார்வை : மோடி என்ற ஒற்றை நபரைச் சுற்றித்தான் பாஜக அரசின் பிம்பம் கட்டமைக்கப்படுவதால் மோடி இதற்கான விலையையும் கொடுத்தாக வேண்டும்.
Qn கோயிந்து: நிவாரண வண்டி என்ற பெயரினில் ஒரு வெற்று வண்டி மோடி படம் ஒட்டப்பட்டு வந்ததாக செய்தி வந்தச்சே, அது உண்மையா?
குற்றச்சாட்டு 3: நீட் மருத்துவ நுழைவு தேர்வு விவகாரத்தில் அதீதமான எதிர்ப்பினை தமிழக பத்திரிக்கையாளர்களாலும், இளைஞர்களாலும் தமிழக அளவில் எழுப்பப்பட்டது;
குறிஞ்சியின் பார்வை: தமிழக அளவில் இந்தப் பிரச்சினையை திறமையாக கையாளாத ஆளூம் மத்திய, மாநில அரசுகளூம், நிர்வாக கோளாறுகளும், மேலும் தேவையற்ற வகையினில் மத்திய மந்திரி அளித்த வாக்குறுதியும் இதற்கான காரணமாகப் பார்க்கப்பட்டது.
Qn கோயிந்து: உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு வழக்கினில், தமிழக அரசிற்கு எதிராகவும், நீட் தேர்விற்கு தடை விதிக்கப்படகூடாது என்று தேசியக்கட்சியின் தமிழகப் பிரபலமொருவரின் மனைவி வழக்காடியதெல்லாம் தமிழக பத்திரிக்கையாளர்களால் கேட்க முடியாதா..
குற்றச்சாட்டு 4: ஆளும் தமிழக அரசிற்கு முழுமையான கேடயமாக இருப்பதாக மோடி சர்க்கார் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
குறிஞ்சியின் பார்வை: இது தமிழக மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Qn கோயிந்து: மோடி எங்க டாடி-ன்னு ஒர் அமைச்சர் சொன்னாரேப்பா...
குற்றச்சாட்டு 5: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, ஹைட்ரோகார்பன், கெயில் குழாய், எட்டு வழிச் சாலை, குளச்சல் துறைமுகம், கூடன்குளம் அணுமின்நிலையம் போன்ற உணர்வுமிக்க பிராந்திய பிரச்சினைகளில் மத்திய மாநில அரசுகள் மிருகத்தனமாக நடந்துகொண்டது.
குறிஞ்சியின் பார்வை: நாடெங்கிலும் இதுபோன்று தொடர்ச்சியான பிரச்சினைகளை மற்ற பிராந்தியங்கள் சந்தித்திருக்குமா என்று எமக்கு தெரியவில்லை, ஆகையால் இது தமிழக மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Qn கோயிந்து: 2019 தேர்தல் முடிந்தபிறகு எதிர் தரப்பினைச் சேர்ந்த தேசியகட்சியின் தமிழக தலைவர் எட்டு வழிச் சாலை நிறைவேற்றப்படும் என சொன்னதாக செய்தி வந்ததே.. மெய்யாலுமா..

தேசிய அளவிலான கவன ஈர்ப்புகள்

குற்றச்சாட்டு 1 :மோடி அதிகமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.
வட இந்திய பார்வை: மோடி இந்தியாவின் பிம்பத்தினை வெளிநாடுகளில் கட்டமைக்கிறார், அவர் வெளிநாடு செல்லும்பொழுது பத்திரிக்கையாளர்களை கூட்டிச் செல்லுவதை தவிர்க்கிறார், அதன்மூலம் வரும் செலவினை குறைக்கிறார். இதற்கு முன்பிருந்த பிரதமர்கள் வெளிநாடு செல்லும்பொழுது அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களை மட்டும் சந்திப்பர், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாட்டு வாழ் இந்தியர்களை மட்டுமின்றி சிங்கப்பூர், சவுதி போன்ற நாடுகளில் பணியாற்றும் கூலித்தொழிலாளிகளையும் நேரடியாக சந்திக்க தொடங்கினார்...
Qn கோயிந்து: சிங்கப்பூர் & சவுதியிலிருந்துதான் GO BACK MODI டிரெண்ட் ஆச்சினு சொன்னாங்க....
குற்றச்சாட்டு 2: மோடி பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லைபா
வட இந்தியப் பார்வை: மோடி மான்கிபாத் நிகழ்ச்சியின் மூலம் மாதந்தொரும் மக்களோடும், மாணவர்களோடும் தொடர்பிலிருந்தார். ஹிந்தியில் பேசியதால் அவர்களால் எளிதில் அவரை தொடர முடிந்திருக்கலாம். மோடி எளிய சாலையோரம் உள்ள டீக்கடைக்காரர், துப்புரவு தொழிலாளி முதல் சரித்திர நாயகர்களான சோழர் போன்ற பிராந்திய நிகழ்வுகளை தொடர்புபடுத்தி பேசியதும் அவர்களை அவரோடு தொடர்பில் வைக்க இயல்பானது. மோடி எந்த திட்டத்திலும் அவர் பெயரினையோ அல்லது அவர்தம் கட்சி தலைவர்கள் பெயரினையோ, முந்தைய காங்கிரசு அரசு அதனது தலைவர்களின் பெயரில் திட்டத்தினை அமல்படுத்தியதை போன்று செயற்படுத்தவில்லை என்பதும் வட இந்தியர்களால் தெளிவாக உணர முடிந்திருந்தது...
Qn கோயிந்து: இங்கே நாமதான் திராவிடஸ்தான் பெயரில்தானே திட்டங்களை வைப்போம்.. அப்ப சரி நமக்கு இது புரியாது
குற்றச்சாட்டு 3: மோடி விலையுயர்ந்த வைர சட்டையினை அணிந்தார்.
வட இந்தியப் பார்வை: மோடி பிரதமர் ஆனது முதல் அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து பரிசுப்பொருட்களும் ஏலத்திற்கு விடப்பட்டு அதன் தொகையானது இந்திய மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணநிதி திட்டத்திற்கு வழங்கப்பட்டே வந்தது என்பதால் அது அவர்களை திசை திருப்பவில்லை, மேலும் இந்த 10லட்ச ரூபாய் சட்டையும் கோடி கணக்கில் ஏலத்திற்கு எடுக்கப்பட்டு நிவாரணநிதியில் சேர்க்கப்பட்டது. குறிஞ்சி: மோடி குஜராத் முதல்வராக இருந்தபொழுது பெறப்பட்ட பரிசுப் பொருட்கள் 22கோடிக்கு ஏலம் விடப்பட்டு குஜராத் பெண் குழந்தைகள் கல்வி திட்டத்திற்கு 22கோடி அளிக்கப்பட்டிருந்தது.
Qn கோயிந்து: முந்தைய பெண் ஜனாதிபதி அவருக்கு வந்த பரிசுப் பொருட்களை அவர்தமது சொந்த உபயோகத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பியதாக ஒரு தகவல் உலாவுகிறதே.. மெய்யாலுமா

குற்றச்சாட்டு 4: மோடி உச்சநீதிமன்றம், ஆர்பிஐ போன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்துகிறார்.
வட இந்தியப் பார்வை : 2013ல் திரு.ரகுராம்ராஜன் காங்கிரசு அரசினால் ஆர்பிஐ கவர்னராக நியமனம் செய்யப்படுகிறார், இந்த தேர்தலில் காங்கிரசு வென்றால் அவர் நிதி அமைச்சராவர் என்ற செய்தியின் தொடர்ச்சி உங்களுக்கு புரியாமல் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு புரிந்தே இருந்துள்ளது.
Qn கோயிந்து: ஏம்பா இதற்கு முன்னால் காங்கிரசும் இதைச் செய்யவில்லையா.. திரு. மன்மோகன்சிங் அவர்களே அந்த வழிதானே.. இதுல மோடி மட்டும்தான் நிறுவனங்களை நொறுக்குகிறார் என்பது கேலிக்கூத்து, காங்கிரசு செய்யும்பொழுது மட்டும் ஊடகங்களும், அறிவாளிகள் எனத் தங்களை சொல்லிக்கொள்பவர்களும் வாய்மூடி இருந்தனர்.
குற்றச்சாட்டு 5: ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு
வட இந்தியப் பார்வை : மோடி நல்ல எண்ணத்தினால் இந்த திட்டங்களை கொண்டு வந்தார், அரசு அதிகாரிகளால்தான் திறம்பட செயல்படுத்த முடியவில்லை
Qn கோயிந்து: யோவ் இதக்கு நான் என்ன சொல்றது.. ஆனாலும் இங்கே தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் வைரம் விற்கப்பட்டு பணமாக மாற்றினாங்களாமே மெய்யாலுமா...
குற்றச்சாட்டு 6: மோடி அம்பானி, அதானி மற்றும் உயர்சாதி, மேட்டு குடிகளுக்குதான் வேலை செய்கிறார்.
வட இந்தியப் பார்வை : மோடி அரசுக்கு முன்பு பத்ம விருதுகள் பெரும் பத்திரிக்கையாளர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் என்று உயர் சாதியினருக்கு மற்றும் மேட்டுக்குடிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தன. மோடி அரசில்தான் பத்ம விருதுகள் உண்மையிலே சமூகத்திற்கு பங்காற்றும் எளிய நபர்களுக்கும் வழங்கப்படும் விதமாக மாற்றியமைக்கப்பட்டது.
Qn கோயிந்து:2019ல் சின்னப்பிள்ளை அம்மாளுக்குலாம் பத்மசிறீ விருது வழங்கினாங்கதான்... 1999ல் வாஜ்பாயி கூட அவர் காலில் விழுந்தாருல்லா...
குற்றச்சாட்டு 7: மோடி எதுவுமே செய்யவில்லை, இருண்டகாலம் இது!
வட இந்தியப் பார்வை : ஜன்தன் வங்கி கணக்கு, கேசு அடுப்பு, மின்சார வசதி, நேரடியாக நிவாரண பணம் வங்கிக்கு செலுத்துதல், விலை குறைந்த LED பல்புகள், விலை குறைந்த மருந்துகள், கழிப்பறைகள் என ஒவ்வொரு இந்தியர்களும் அவரோடு தொடர்பிலிருந்தனர்.
குறிஞ்சி: தமிழகம் வங்கி கணக்கு, மின்சார வசதி போன்றவற்றில் வட இந்தியாவை விட முன்னனியிலிருந்ததால், வட இந்தியாவில் இந்த திட்டங்கள் ஏற்படுத்திய தாக்கம் நமக்கு புரியவில்லை.
Qn கோயிந்து: போங்க பாசு விலையில்லா பொருட்களை நாங்க எப்பவோ கொடுத்துக்கிட்டு இருக்கோம்...
குற்றச்சாட்டு 8: பாஜ அரசமைந்தால் கலவரம் வரும், சாதி மத சண்டை ஏற்படும்.
வட இந்தியப் பார்வை: 2014-19 பெரும் கலவரம், குண்டு வெடிப்பு ஏதுமின்றி முடிந்தது.
குறிஞ்சி: தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அறிவாளிகள் எனப்படுவர்கள் பொதுவுடமைச் சிந்தாந்தப் பிண்ணனியிலிருந்து வந்தவரகள் அல்லது ஊடகங்களினால் தூக்கிப்பிடிக்கப்பட்டவர்கள். அவர்களின் முன்முடிவுகள் அப்படியே இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.. ஆனால் உண்மை எப்பொழுதும் தகத்தகாய கதிரவனாய் பிரகாசிக்கும். மாட்டிறைச்சி பிரச்சினை என்பது அங்கு காங்கிரசு மற்றும் பாஜக இருபுறமும் தூக்கிப்பிடிக்கின்றனர் என்பதே உண்மை, இங்கு நமது மீடியாக்களில் காட்டப்படுவது போன்று அது பாஜக மட்டும் செய்வதில்லை என்பதே களநிலவரம்.
Qn கோயிந்து : தமிழ்நாட்டில் அறிவாளிகள் எனப்படுவர்கள் திராவிட சிந்தாந்தம் பேசுபவர்கள்தானே... தமிழ்நாட்டில் கூட இப்படிப்பட்ட பேஸ்புக் பிரபலங்கள் கம்பு சுத்திக்கொண்டிருக்கின்றனர்.
குற்றச்சாட்டு 9: பாஜக EVM வாக்குப்பதிவுகளை மாற்றிடும், Exit poll போலி
குறிஞ்சி: EVM மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறோம், எந்த அறிவியல் கருவிகளையும் நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே அதன் விளைவாக இருக்கமுடியும். அரசியல் காரணங்களுக்காக தேர்தல் ஆணையம் மீது சேற்றினை வீசிச் செல்வதை அனுமதிக்க முடியாது. சமீபத்திய தேர்தல் முடிவுகளில் VVPAT எனப்படும் வாக்குப்பதிவு சீட்டுகள், EVM வாக்கு இயந்திரங்களையே பிரதிபலிக்கிறது.
Qn கோயிந்து : குறிஞ்சியும் opinion poll நடத்தினிங்களாமே.. அதனோட ரிசல்ட் நீங்களே வைச்சிக்கிட்டா எப்படி? வெளியே விடுறது..
குறிஞ்சி : ஹாஹா!.. நாங்கள் நடத்திய "opinion poll" முடிவுகளை வெளியிடுவதில்லை என்பது நண்பர்களின் முடிவு. ஆனால் நாங்க நடத்திய கணிப்புகளின் பிண்ணணி  பற்றி வேறு கட்டுரையில் விரிவாகச் சொல்ல விரும்புகிறோம். இது Data science பற்றிய எங்கள் கன்னி முயற்சி.
நமது நடுநிலை நண்பர்கள் exit poll எப்படி, எப்பொழுது நடத்தப்பட்டது என்ற கேள்வியை பேசுபுக்கில் எழுப்பியிருந்தனர். கடந்த காலங்கள் போன்று வினாத்தாள் கொடுத்து யாருக்கு ஆதரவு அளிப்பீர்கள் "டிக்" செய்யுங்கள் என்றெல்லாம் இப்பொழுது கேட்கப்படுவதில்லை, ஏனெனில் அவ்வாறு வெளிப்படையாக கேட்டால் மக்கள் உண்மையைச் சொல்வதில்லை. இப்பொழுதெல்லாம் மக்களோடு மக்களாக இயல்பாக பழகி அவர்களின் எண்ண ஒட்டங்களைப் பதிவு செய்கின்றனர். இதிலும் விதிவிலக்குகள் இருக்கலாம்.

குறிஞ்சியின் பார்வை

தமிழகம் சார்ந்த பிரச்சினைகளில் தமிழக பாஜகவினர் போதியளவிற்கு களநிலவரத்தினை பிரதிபலிக்கவில்லை என்பதே எமது பார்வை.
எம் தமிழக நண்பர்கள் தமிழக அளவிலிருந்த பிரச்சினை மற்றும் மோடி எதிர்ப்பின் காரணமாக மீண்டும் பாஜக அரசு வராது என்று நம்பத்தொடங்கியிருந்தனர். இந்தியாவும் அவர்கள் வழியினை பின்தொடர்வர் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகளில் மோடியின் மீது மாற்றுப் பார்வை இருந்தே வந்துள்ளது என்பதனை குறிஞ்சி மிகநெருக்கமாக கவனித்து வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக