நண்பர்களே, இந்தியாவில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது, 18 தொகுதி இடைத்தேர்தல் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையும் களைகட்டத் தொடங்கிவிட்டது.
2013ல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் 10ஆண்டுகள் தொடர்ச்சியாக காங்கிரசு ஆட்சிக்கட்டிலில் ஆளும் கட்சியாக சர்வ பலத்துடன் இருந்ததால் Anti incumbency எனப்படும் மக்களின் எதிர்ப்பு மனநிலை பலமாக இருந்தபொழுதும், பாஜகவும் அதன் பிரதமவேட்பாளரான மோடியும் களத்தில் பின்தங்கியிருந்தனர்; ஊடகங்களில் மோடி வெறுப்புநிலை உச்சத்திலிருந்தது, மேலும் 2009 தேர்தலின் வெற்றிக்கு பிறகு அப்பொழுதைய மத்திய காங்கிரசு அமைச்சர் உதிர்த்த முத்து எங்களை அதிர்ச்சியடைய வைத்தது "எங்களின் கட்டுப்பாட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3000க்கும் மேற்பட்ட ஊடகங்கள் இருக்கின்றன" என்பதாகும்.
ஊடகங்கள் பாஜகவினருக்கும் குறிப்பாக மோடிக்கும் எதிராகவும் வன்மத்துடன் எழுதிதள்ளியது... ஆக களநிலவரங்களின் உண்மை நிலையை விளக்கி பொதுத்தன்மையுடனும் வெளிப்படையாகவும் சில கட்டுரைகளை 2013 செப்டம்பர் மாதவாக்கில் எழுதியிருந்தோம். அது பாஜக மற்றும் அதன் பிரதமவேட்பாளர் மோடி ஆகியோரின் விவாதிக்கப்படாத பக்கங்களை வெளிப்படுத்துவதாக இருந்திருக்கும் என நம்புகின்றோம்.
(நீங்கள் கூறலாம் அது பாஜக ஆதரவு நிலைப்பாடுனு.. ஹீஹீஹீ நாங்க எதுவும் சொல்லமுடியாது உங்க முன்முடிவினைப் பற்றி.. யோவ் குறிஞ்சியாரே நீர் முழுச் சங்கி என்பது தெரியும்வே....)
2014-மார்ச் மாதவாக்கில் களநிலவரம் மாறத்துவங்கியது, ஊடகங்கள் மக்களின் எண்ணப்பாட்டினை உணரத்துவங்கியிருந்தனர், மோடியும் பாஜகவும் அவர்களின் பேசுபொருள் ஆயினர்... அப்பொழுது காங்கிரசு மற்றும் அதன் இளந்தலைவர் ராகுல் காந்தியின் மீதும் வன்மத்துடன் எழுதத்துவங்கினர். குறிப்பாக பாஜகவினைச் சார்ந்தோரிடமிருந்து ராகுல்காந்தியின் மீது தனிப்பட்ட தாக்குதல் உச்சத்திலிருந்தது, அவரது அரசியல் நிலைப்பாட்டின் மீதோ அரசியல் கருத்துக்களின் மீதோ விவாதங்கள் நடைபெறவில்லை மாறாக தனிநபர் தாக்குதல் தொடங்கியது. அன்று இராகுல் காந்தியோடு இந்த தேசம் உரையாடவில்லை என்று எங்களுக்கு தோன்றியது. அவரது கருத்துக்களான
1. "அரசியலில் வாரிசுகள் அல்ல, இளம் புதிய தலைமுறைகள், சாமானிய மனிதர்கள் அரசியலில் ஆதரிக்கப்படவேண்டும்"
2. "இயற்கைக்கு எதிராக மனித குல முயற்சிகள் பெரும் ஆபத்தினை விளைவிக்கும், நதிநீர் இணைப்பு என்பது முகத்துவராங்களின் ஆதார மையமான நதியை நீர்த்துப்போகச்செய்யும்"
3. "எல்லோரையும் உள்ளடக்கிய ஆட்சி அமைப்பு என்பதாகட்டும்" என ராகுல்காந்தியினுடையப் பல கருத்துக்கள் விவாதிக்கப்படாமலேயே கிண்டலடிக்கப்பட்டது. அப்போதே ராகுல் காந்திதான் காங்கிரசின் எதிர்காலமாக இருப்பார் என குறிஞ்சி கணித்தது அவரின் நிலைப்பாட்டில் காணப்பட்ட, மற்ற ஊடகங்களினால் விவாதிக்கப்படாத கருத்துகளை குறிஞ்சி விவாதமாக்கியது.. (ஊரே காங்கிரசுக்கு எதிராக இருந்த சூழ்நிலையில் குறிஞ்சியில் காங்கிரசின் வெளிப்படுத்தப்படாத முகங்களை பற்றி கட்டுரை எழுதியிருந்தோம்... அப்ப நாங்க இப்ப காங்கிரசுக்கு ஆதரவா!! ஆமாவே நீர் ஆன்டி இந்தியன்தான்....)
ஆம்! ஊடகங்கள் எப்பொழுது அரசின் தவறுகளை கடுமையாக சுட்டிக்காட்டவும், நல்லவற்றினை ஒருசில வார்த்தைகளில் ஆதரித்தாலும் போதுமானது என்பதற்கினங்க ஆளும் அரசின் தவறுகளை சுளுக்கெடுக்கவேண்டும் என குறிஞ்சி முடிவு செய்திருந்தது, இருப்பினும் தனிப்பட்ட காரணங்களினால் தொடர்ச்சியாக எழுத முடியவில்லை, மேலும் ஆளும் அரசின் நடவடிக்கைகள் குறித்து பொருத்திருந்து சமயம் வரும்பொழுது எழுதுவோம் என எண்ணங்களை மாற்றியிருந்தோம். இப்பொழுது தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது எனவே இப்பொழுதுவாது ஆளும் அரசின் நடவடிக்கைகளில் சரி/தவறு என்னவென்பதை எங்கள் பார்வையின் அடிப்படையில் எழுதவேண்டியிருப்பது எங்களின் கடமை எனக் கருதி எழுதுகின்றோம். அரசின் நடவடிக்கைகள் அனைத்தினையும் விவாதப்பொருட்கள் ஆக்க முடியாவிட்டாலும் கூடுமானவரையில் முயலுகின்றோம். ஆட்சி இறுதியில் மோடி ரேங்க் கார்டு வெளியிடுவோம் என்று கூறியிருந்தார், செய்தாரா என்று தெரியவில்லை அதனால் என்ன நாம் வெளியீடுவோம் :)
பாஜகவின் தேர்தல் அறிக்கை என்ன சொல்லி இருந்தது, என்ன செய்திருக்கிறது... காங்கிரசின் தேர்தல் அறிக்கையோடும் ஒப்பீடு உண்டு..
மோடியின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் தேவையின்றி பிரச்சினையாக ஊதப்பட்டதாகவே குறிஞ்சி பார்க்கின்றது..
பாகிஸ்தானுக்கும், பர்மாவுக்கும் எதிராக முன்டாசு கட்டி நின்ற அரசாங்கம் சீனா என்றவுடன் பம்மியதாகவே தெரிகிறது, எல்லைப் பிரச்சினை மட்டுமல்ல வர்த்தக முரண்பாடுகளில் கூட சீனாவிற்கு எதிராக எந்த நிலைப்பாட்டினையும் ஆளும் அரசால் 56" சுவரினைக் கட்டியெழுப்ப முடியவில்லை என்றே தெரிகிறது, இதில் தேசபக்தி பற்றி பெரிதும் பேசும் கட்சியினால் சீனத்திலிருந்து வந்து குவியும் பொருள்களின் மோகத்தினை தடுக்கும் வழி தெரியவில்லையா...
மதிப்பெண்: (7/10)
இராணுவம் :
இராணுவம் ஒப்பந்தம்: 2g க்கு என்ன அளவுகோளை பாஜக வைத்ததோ அதே அளவுகோள் ரபேல் விமான ஒப்பந்தத்திற்கும் பொருந்தும் என்பதே குறிஞ்சியின் நிலைப்பாடு. அனுபவம் இல்லாத நிறுவனத்திற்கு 2G ஒப்பந்தம் வழங்கப்பட்டது முறைகேடு என்பது பாஜகவினுடைய வாதம், அதே நிலைப்பாடு ரபேல் ஒப்பந்தத்திற்கும் பொருந்தும். ஆக ரபேல் பாஜகவின் சறுக்கலே...
* மறைந்த முன்னாள் இராணுவ அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர், அமெரிக்காவின் பாதுகாப்பு துறையில் தூங்கி கொண்டிருந்த 28000கோடியை கண்டுபிடித்ததாக ஒரு செய்தி உலாவியது.
* ஒரே பதவி ஒரே சம்பள கோரிக்கையை நிறைவேற்றியுள்ளபொழுதிலும் அதிலுள்ள மேலும் சில குறைகள் களையப்படவேண்டும்.
மதிப்பெண்:(2/10) (ரபேல் பாஜகவின் 2G டப்பிங் வெர்சனே, இதனால் இங்கு மதிப்பெண் குறைகிறது)
அதானி, ரிலையன்சு ஆதரவு:
இது வெளிப்படையான குற்றச்சாட்டே... பாஜக ஆட்சிக்கு வரும்பொழுது 100 அதானி, அம்பானிக்களை உருவாக்குவோம் என்ற தோற்றத்தினை ஏற்படுத்தினர்.. ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு அவர்களுக்கு வெண்சாமரம் வீசவே நேரம் இல்லாமலிருக்கின்றனர். அம்பானியின் துவங்காத பல்கலைகழகத்திற்கு இந்திய அரசாங்கத்தின் சலுகைகள், அதானிக்கு ஆதரவாக ஆட்சியின் வளரச்சி திட்டங்களின் பங்கேற்பில் ஒதுக்கீடுகள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் ஆதாயத்திற்க்காக ஒதுக்குதல் காங்கிரசு ஆட்சியினை விட பெரும் வேகத்திலிருந்தது அதிர்ச்சியளிக்கும் விசயமே...
முதலாளித்துவற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டியது அரசின் கடமை ஆனால் முதலாளிகளுக்கு அல்ல என்பது குறிஞ்சியின் எண்ணம்.
மதிப்பெண்:(0/10)
வரி கட்டமைப்பு (ஜிஎஸ்டி அதன் குழறுபடிகள்) :
இதைப் பற்றிய தனி கட்டுரை ஏற்கனவே குறிஞ்சியில் வந்தது.ஜிஎஸ்டி பற்றிய விவரங்கள்
ஜிஎஸ்டியை மேலும் செவ்வேனே நிறைவேற்றி இருக்கலாம் என்பதுவே நமது எண்ணம்.
தமிழகம் சார்ந்த தொழில்கள் ஜிஎஸ்டி குளறுபடிகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டது கவலைக்குரியது மட்டுமின்றி, அதனை சரிசெய்யவேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பே..
மதிப்பெண்:(5/10) (ஜிஎஸ்டி SLOW PICKUP )
நிதி மற்றும் ஆர்பிஐ:
ஜன்தன் வங்கி கணக்கு (முன்பு காங்கிரசு ஆட்சியில் இதற்கு பெயர் Zero Balance account, ஆனால் வங்கி அதிகாரிகள் இதனை நமக்கு அறிமுகப்படுத்தவில்லை, காங்கிரசும் அவர்களை வலியுறுத்தவில்லை) இதன் மூலம் 28கோடிக்கும் அதிமான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டது; இன்றைய அளவில் 35கோடிக்கும் அதிகமான கணக்குகள் இருக்கின்றது. 2015ல் இந்த கணக்கு மூலம் 14000கோடி இருப்பு இருந்தது, ஆனால் அது 92000கோடி இருப்பாக மாறி இருக்கிறது, 2015ல் 51% கணக்குகளில் பூஜ்ய மதிப்பையே கொண்டு இருந்தது, ஆனால் இன்று அது 15% அளவிற்கே உள்ளது. இது இந்த அரசின் பிளாக் பஸ்டர் திட்டமாகும்.
* கருப்பு பணத்தினை அரசிடம் கணக்கு காண்பித்து, உரிய தண்டம் செலுத்தி தண்டனையிலிருந்து தப்பிக்க 2016 செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கியது; இதன் மூலம் 60000கோடி பணம் அரசின் கணக்கிற்குள் வந்ததாக தெரிகிறது.
* அவசர அவசரமாக இணையத்தில் பணப் பட்டுவாடாவிற்கேன அரசின் பீம் செயலி 2016 அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வளவும் சரியான திசையில் போனதாக தெரிந்த நிலையில்...
நவம்பர் 8 2016 அன்று பணமதிப்பிழப்பினை மோடி சரியாக 8மணிக்கு அறிவித்தார், அன்றிரவின் ஆரம்பத்தில் நடக்கவிருக்கும் விபரீதம் அறியாமல் நடுத்தர மக்களிடமும் , இளைஞர்களிடமும் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பினை பெற்றது. ஆனால் புதிதாக அச்சடித்த 2000ரூபாய் நோட்டினை ஏடிஎம் கருவிக்குள் வைக்க இயலாதது அடுத்த வந்த 3 நாட்களுக்குள் பெரும் அச்சத்தினை மக்களிடையே விதைத்தது. மருத்துவமனைகளிலும், பெட்ரோல் பங்குகளிலும், வங்கி வாசல்களிலும் மக்கள் அல்லாடியது மட்டுமின்றி, ஆளும் அரசிற்கும் இது பெரும் விபரீதம் என்று மெல்ல புரிவதற்குள், நிலைமை கையை மீறிவிட்டது. தனியார் வங்கிகளுக்கு புதிதாக அச்சடித்த பணம் சென்றதில் பெரும் கருப்பு பணம் மாறியதாக பத்திரிக்கைகளில் செய்தி வரத்தொடங்கியது. ஆளும் அரசு புதிது புதிதாக காரணங்களை அடுக்கியது, தொடக்கத்தில் மோடி மக்களின் மீட்பராவேன் என்றார் ஆனால் எதுவும் மக்களை மட்டுமின்றி ஆட்சியாளர்களையும் மீட்கவில்லை....
நமது கவலை எல்லாம் நடுத்தர, குறு நிறுவனங்களின் நிதி நிலைதான், பண மதிப்பிழப்பு அவர்களை நிலை குலையச் செய்தது என்பது உண்மையே...
கருப்பு பணம் ஒழிந்ததோ இல்லையோ மக்களின் சிறுவாட்டு பணம் காணாமல் போனது.. வேதனையை மக்கள் சுமந்தனர். அதற்குண்டான விலையே ஆளும் அரசு கொடுத்தே தீரும்...
இது பாஜக அரசின் தேவையில்லாத ஆணியே....
மதிப்பெண்: 0/10 (பணமதிப்பின் தோல்வி மற்ற வெற்றிகளுக்கு ஈடாகாது, ஆகவே பூஜ்ய மதிப்பெண்ணே)
ரிசர்வ் வங்கி, சுப்ரீம் கோர்ட், லோக்பால் அதிகார அமைப்பு குழப்பங்கள்:
ஆட்சி துவங்கியதிலிருந்து திட்டக் கமிசன் இரத்து செய்யப்பட்டு நிதி ஆயோக் வந்தது, ஆக புதிதாய் வந்தவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால், அப்படி எதுவும் எம் கண்ணுக்கு தெரியவில்லை..
தென் மாநிலங்களின் அதிகப்படியான வரிவருவாயை இந்தியாவின் பின் தங்கியிருக்கும் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்வது தவறில்லை, ஆனால் தென் மாநிலங்களின் புயல் போன்ற பேராபத்துகாலங்களில் இங்கிருக்கும் மாநிலங்களின் குரல் மத்தியிலிருப்பவர்களுக்கு கேட்டதாக தெரியவில்லை, இந்த காரணங்களில் பாஜக மட்டும் குற்றவாளியல்ல, காங்கிரசு காலங்களிலும் இது மாதிரியே நிதி குளறுபடிகள் தொடர்ந்த அனுபவங்கள் உண்டு என்றாலும், பாஜக சரி செய்யத் தவறியதாகவே தோன்றுகிறது.
ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் மாற்றம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தேர்ந்தெடுப்பு கொலிஜியம் முறைக்கு மாற்றப்படும் என ஏகப்பட்ட அக்கப்போர்கள்...
தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ள நிலையில் கடைசியில் லோக்பால் அமைக்கப்பட்டுவிட்டது...
எல்லா துறைகளிலும் முந்தைய ஆட்சியாளர்களின் தவறுகளை களையலாம், ஆனால் அவர்களின் சுவடே தெரியாமலிருக்க வேண்டும் என முயன்றதாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் சில துறைகளை தேர்ந்தெடுத்து அதில் முன்னேற்றத்தினை காட்டியிருக்கலாம். எதுவும் நல்லது நடந்த மாதிரி கண்ணுக்கு புலப்படவில்லை...
மதிப்பெண்: 0/10
வங்கி வாராக்கடன்:
ஆட்சிக்கு வந்தவுடனே வங்கி நிதிநிலை பற்றி வெள்ளை அறிக்கை விடுவர் என்று எதிர்பார்த்து ஏமாந்தோம்... பணம் வாங்கியவர்கள் அத்துணைபேரும் ஒடத் துவங்கிய உடன் இது எல்லாம் காங்கிரசு காலத்தில் வழங்கப்பட்ட கடன் என்று பழியை அவர்கள் மீது சுமத்தினர். அவர்கள் சரி இல்லை என்றுதானே உங்களை ஆட்சி கட்டிலில் அமர்த்தினோம் மிஸ்டர். மோடி.
வராக் கடன் மீட்பு சட்டம் கொண்டு வந்தது ஒரளவுக்கு ஆறுதல்.
மதிப்பெண்: 6/10
அன்னிய முதலீடு & உள்ளூர் வணிகர்களின் நிலை :
சில்லறை வணிகத்தில் 100% அன்னிய முதலீடுகளை ஆரம்பம் முதலே குறிஞ்சி எதிர்த்து வருகிறது. இணைய வணிகத்தில் காலங்கடந்தே அன்னிய நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்டின் (வால்மார்ட்) நிலை பிப்ரவரி 1 முதல் கட்டுப்படுத்தப்படுகிறது, அதுவும் அம்பானியின் ஆதாயத்திற்கே என்று கேள்வி..
மதிப்பெண்: 4/10
விவசாயம் * பாரதப் பிரதமர் பாசல் பீமா யோஜனா:
e-Nam: விவசாயக் கொள்முதல் அனைத்தும் இணையம் மூலமே நடக்கும் வண்ணம் கொண்டு சென்றது சாதனைதான். 16 மாநிலங்கள், 2யூனியன் பிரதேசங்களிலிருந்து 1.51கோடி விவசாயிகள், 121000 வியாபாரிகள் இந்த திட்டத்தின் மூலம் இணைக்கப்படுகின்றனர்.
பாரதப் பிரதமர் பாசல் பீமா யோஜனா: பயிர் காப்பீடு திட்டங்கள் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களின் கையில் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, காப்பீடு பொதுவாக இலாபம் தரக்கூடிய துறை என்ற வகையில் மட்டுமல்ல, பேரிடர் காலங்களில் பொறுப்புணர்ந்து நடக்கும் வண்ணம் அனைத்து வகையான அரசின் காப்பீட்டு திட்டங்களும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கைகளில்தான் இருக்கவேண்டும் என்பதுவே குறிஞ்சியின் நிலைப்பாடு. அந்த வகையில் இது சரிவே.
2015 வரை 77இலட்சம் பேர் பயிர் காப்பீட்டின் கிழிலிருந்தனர், மாற்றப்பட்ட திட்டத்தின் கீழ் 2016-17லில் 5.7கோடி பேர் இணைந்தனர், ஆனால் அரசின் நிர்வாக குழறுபடிகள், தாமதமான இழப்பீடு போன்றவற்றினால், 2017-18ஆம் வருடம் 4.87 கோடி பேரே இந்த திட்டத்தில் இணைந்தனர். 20%க்கும் மேலான சரிவு ஆட்சியாளர்களின் சரிவே...
மதிப்பெண்: 3/10
இந்தி திணிப்பு & நீட் குளறுபடிகள்:
காங்கிரசு ஆட்சி காலத்தில் நீட் வந்தாலும், தமிழகத்தினுள் இது பாஜக ஆட்சியில் வந்ததால் தமிழர்கள் மத்தியில் நீட் எதிர்ப்பு என்பது பாஜக எதிர்ப்பு ஆக பெரிதும் மாறியது. தமிழக அளவில் நீட் தேர்வினால் இளநிலை மருத்துவர்கள் எண்ணிக்கையில் இழப்பு எதுமில்லை, ஆனால் முது நிலை மருத்துவ இடங்கள் முழுவதும் (முன்பு 50% தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கிழே) மத்திய ஆட்சியின் கீழே சென்றது, விவாதப்பொருளாக இருக்க வேண்டியது இதுவே, இருப்பினும் மக்கள் மத்தியில் மொத்தமாக நீட் எதிர்ப்பு விதைக்கப்பட்டுவிட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் நீட் ஒழிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள், ஆனால் குறிஞ்சியின் நிலைப்பாடு முதுநிலை பட்டப்படிப்பு இடங்களை நீட் தேர்வுக்கு முந்தைய நிலைக்கு எடுத்து வரவேண்டும், அதாவது 50% இடங்கள் மீண்டும் தமிழக ஆட்சியின் கீழ் வரவேண்டும். மேலும் நீட் தேர்வுத்தாள் குளறுபடிகள், மொழிபெயர்ப்பு தவறுகள் என மாணவர்களின் மத்தியில் பரவி இருக்கும் அச்சம் போன்றவற்றையும் மத்திய அரசு கவனத்தில் எடுத்து செயல்பட்டிருக்கலாம்.
சாலை, தொடருந்து, வங்கி அறிவிப்புகளில் இந்தி திணிப்பு மற்றும் தமிழகத்தினை சார்ந்த பொதுதுறை நிறுவனங்களில் வட இந்தியர்கள் திணிப்பு என அனைத்து மட்டங்களிலும் திட்டமிட்டு நடந்ததாகவே பார்க்கப்படுகிறது. அரசின் திட்டப்பெயர்க்ளை திட்டமிட்டு இந்தியில் வைக்கப்படுவதாக தோற்றம் எழுகின்றது. இது மோடி மற்றும் பாஜகவினருக்கு தமிழகம் போன்ற மாநிலங்களில் கடும் பின்னடவை தேர்தலில் ஏற்படுத்தும்.
குறிப்பிட்ட குடும்பத்தின் பெயரை திட்டங்களுக்கு வைப்பதில்லை என்பது ஆறுதல்தான்.
மதிப்பெண்: 1/10
அரசின் நிர்வாகம் & மத்திய அமைச்சர்களின் செயல்பாடு:
குறைவான அமைச்சகம் ஆனால் அதிகப்படியான நிர்வாகம் என்ற கோட்பாடு மோடி என்ற ஒற்றை மனிதரை சுற்றி முடிந்தது, தோல்வியே என்பேன். பணமதிப்பிழப்பு முதல் பாலக்கோடு தாக்குதல் வரை மோடிதான் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
சமூக வலைத்தளங்களில் குறிப்பிடத்தகுந்த அமைச்சர்களின் (சுஷ்மா, பியுஷ், பிரபு) செயற்பாடு திருப்திகரமாக இருந்தது என்றாலும், வரும் முன்னரே செயல்படுவது சாலச்சிறந்தது என்ற வாசகத்திற்கு ஏற்ப தொடருந்துகளில் சரியாக தூய்மைப் பணியை மேற்கொள்ளாமல், சமூகவலைத்தளங்களில் சுட்டிக்காட்டிய பிறகு நடவடிக்கை எடுப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
சில மத்திய அமைச்சர்களின் தேவையற்ற பதில்கள் குழப்பத்தினை விதைத்தது, தமிழகத்தினை அடிப்படையாக கொண்ட பெண் மத்திய அமைச்சர் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கித்தரப்படும் என அவருக்கு சற்றும் சம்பந்தமில்லாத துறைகளில் மூக்கை நுழைத்து அரசிற்கு கெட்டப்பெயர் வாங்கித் தந்தார்.
இங்குதான் திரு.ப.சிதம்பரம் அவர்களின் நேர்காணலை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும், அவரிடம் பாலகோட் தாக்குதல் வெற்றிகரமாக நடந்திருக்குமா என்று கேட்கப்பட்ட குதர்க்கமான கேள்விக்கு அவரது தெளிவான பதில்: நானும் பொது மக்களில் ஒருவனே, என்னிடம் அரசிடம் இருக்கும் எந்த தகவல் குறிப்புகளும் இல்லை ஆதலினால் தாகுதல் வெற்றிகரமாக நடந்ததா இல்லையா என்று என்னால் அறுதியிட்டு கூறமுடியாது, ஆனால் நமது இராணுவத்தினரால் தாக்குதல் நடைபெற்றது என்பதை உறுதியாக கூற இயலும் என்றார். இதுதான் ஒர் பெரும் தலைவரின் அழகான பதிலாக இருக்க முடியும், எல்லா நேரங்களிலும் நமக்கு பதில் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை ஆனால் அதனை எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்பது நிச்சயம் வெற்றிகரமான அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்கவேண்டும்.
மதிப்பெண்: 3/10
கடைசி பந்து சிக்சர் :)
ஆட்சியின் தொடக்ககாலம் முதலே குறிஞ்சியின் கணிப்பு என்பது, இந்த ஆட்சியின் கடைசி நொடிகளில் மோடி சாதி என்ற அஸ்திரத்தினை எடுப்பார் என்பதே.. அந்த வகையில் நம்மை அவர் ஏமாற்றவில்லை ... நாம் ஒபிசியை இரண்டாக பிளந்து தமிழகத்தில் உள்ளவாறு எம்பிசி என்ற ஒதுக்கீட்டினை கொண்டு வந்து சமரில்லா சமூக நாயகன் அவதாரம் எடுப்பார் என்றிருந்த வேளையில் வட இந்தியாவில் 30% மக்களைக் கொண்டிருக்கும் மராத்தா, ஜாட், ரெட்டி, நாயுடு, கப்புஸ், கவுடா, நாயர், , ராஜ்புத், படேல், பனியா, சிங் மற்றும் பிராமின் என்று இடஒதுக்கீட்டின் கிழ்வராத மக்களின் நெடும் போராட்டத்தின் (தமிழகத்தினைத் தாண்டி பார்த்தா அவங்க போராட்டம் தெரியும், திராவிட கண்ணாடி போட்டா தெரியாது.. அவிங்க நோகாம நோன்பு கஞ்சி குடிச்ச மாதிரிதான் தெரியும்) விளைவாக பொருளாதார அடிப்படையில் பத்து சதவீத இடஒதுக்கீட்டினை அளித்தார்.
இதே வேளையில் ஐஐடி, அமைச்சகங்கள் என்ற முக்கிய துறைகளில் ஒபிசி மற்றும் எஸ்சி, எஸ்டி பங்களிப்பு குறைவான நிலையில் உள்ளதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு சமூகநீதியை நிலைநாட்டும் வண்ணம் அங்கு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம் கட்டுப்படுத்தவேண்டும் என்பது குறிஞ்சியின் எண்ணம்.
இதே போன்று தமிழ்நாட்டின் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னேறிய வகுப்பினர் என்று கூறப்படும் பிராமின், நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை போன்ற சாதிகளிலிருந்து பங்கெடுத்துக்கொள்வது குறைவதையும் கணக்கில் கொள்ளவேண்டும், திராவிட கட்சிகள் இதற்கு பதில் கூறுவார்களா?
(யோவ் நீ மோடிக்கு மார்க் போடுறீயா, இல்ல திராவிட கட்சிகளுக்கு போடறீயா, மூடிட்டு இருக்கனும்.. இல்ல கயிதை.. போதும் நிறுத்திக்கிறேன் மோடி பக்கம் போவோம்.. ஹேய்ய் மோடியே ...)
மதிப்பெண்: 6/10
கட்டுமானம்:
மின்சாரம்: பாஜகவினர் சொல்லிய வண்ணம் 100% மின்சாரம் தேசம் முழுவதும் விரைந்து கொடுக்கப்பட்டது. காங்கிரசு அரசின் வேகத்தில் சென்றிருந்தால் 2024வரை காத்திருக்கவேண்டிய நிலை இருந்திருக்கலாம். ஆயினும் காங்கிரசு அரசின் காலத்தில் 80% கிராமங்களுக்கு மின்சார வசதி கொடுத்ததையும் கணக்கில் கொள்ளவேண்டும். மின்சார தடம் செல்ல முடியாத இடங்களில் சோலார் பேனல் மூலம் மின்சாரம் கொடுத்ததாக பாஜக பதிவு செய்கிறது. இது போன்ற மாற்று முயற்சி பாராட்டத்தக்கதே.
சாலை : நிதின் கட்காரி தலைமையில் சாலைத்துறை அமைச்சக அதிகாரிகள் வெகுநாட்களாக கிடப்பிலிருந்த திட்டங்களை முடுக்கிவிட்டதன் விளைவு, காங்கிரசே (திரு.ப.சிதம்பரம்) இந்தத் துறையின் சாதனைகளை ஒத்துக்கொண்ட பிறகு நாம் மூடிக்கிட்டு இருக்கனும்...
ஆனா எட்டு வழிச் சாலையும் இவரின் கீழ்தான் வருகிறது...
கங்கை நீர்வழித்தடம் பெரிய முன்னேற்றமாக பார்க்கப்பட்டாலும், குறிஞ்சி சுற்றுச்சுழலியல் அடிப்படையில் அந்த திட்டத்தினை எதிர்க்கிறது... இப்போ மாரிதாசு நம்மை அர்பன் நக்சல் என்பாரோ...)
பாரதப்பிரதமர் உஜ்வாலா யோஜனா (ச்சீய் ஒரு பேராவது வாய்க்குள்ளே நுழையுதா): மகளிருக்கு கேஸ் அடுப்பு கொடுக்கும் திட்டம், 5 கோடி பேருக்கு மேல் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் மக்கள் தொடர்ச்சியாக கேஸ் சிலிண்டரை தொடர்ச்சியாக வாங்கினால்தான் வெற்றி.. மாத வருமானம் 8ஆயிரம் உள்ள குடும்பம் எப்படி 1000ரூ கேஸ் சிலின்டருக்கு செலவு செய்யும் ?? அதுவும் மாற்று எரிபொருளான விறகு எளிதில் கிடைக்கும்பொழுது???
இங்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்கள் கடந்த வருடம் சராசரியாக 3 கேஸ் சிலிண்டர் மட்டும் வாங்கியதாக தகவல் பதிவு செய்கிறது. இதுவே தமிழக குடும்பத்தின் ஆண்டு கேஸ் சிலிண்டர் சராசரி 9 ஆகும். ஆக இந்த திட்டமும் முன்யோசனையுடன் நிறைவேற்றப்படவில்லை... ஹே ஹேய்ய்ய்ய்!!!
.
பாரதப்பிரதமர் அவாஸ் யோஜனா: வீடு கட்டும் திட்டம், 79 இலட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் 16இலட்சம் பயனாளிகள் விட்டினை கட்டி முடித்ததாகவும் அரசின் குறிப்பு கூறுகிறது, ஆனால் எங்களிடம் இதனை பரிசோதிக்கு தரவுகள் போதுமானதாக இல்லை ஆக, ஆக :) இதை இப்பொழுதைக்கு மதிப்பீடு செய்ய இயலவில்லை.
மதிப்பெண்: 5/10
தூய்மைப் பாரதம் & கங்கை நதியின் சுத்தம்:
பாஜக அரசின் அருமையான முன்னோடியான திட்டம்... ஆங்காங்கே சில காமெடிகளை பாஜக தலைவர்கள் செய்திருந்தாலும், இது வெற்றிகரமான திட்டமே ஆகும். ஆனாலும் இதன் முன்னேற்றத்தின் வேகம் குறைவாகவே உள்ளது.
மதிப்பெண்: 4 /10
மேக் இன் இந்தியா, ஸ்மார்ட் நகரங்கள்:
இவற்றில் அரசின் செயற்பாடுகள் மெதுவாகவே இருக்கும் என்று தெரியும், ஆயினும் அரசு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினை பெற வில்லை என்பதாகவே குறிஞ்சி பதிவு செய்கிறது.
ஸ்மார்ட் சிட்டி: இங்குதான் காங்கிரசு தனது தேர்தல் அறிக்கையை 2014ல் "ஸ்மார்ட் நகர் பகுதிகள்" என்று கவனமாக பதிவு செய்ததை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது, பாஜகவோ "ஸ்மார்ட் நகரம்" என்று கூறி மக்களிடையே அதீத ஆவலுக்கு வழி வகுத்துவிட்டது, பின்னர் அதுவே குழியும் பறித்துவிட்டது என்போம். :)
ஆனால் அரசாங்கம் ஸ்மார்ட் நகரங்களுக்கு நிதி ஒதுக்கி வேலையைத் தொடங்கியதாக தெரிகின்றது. பார்போம் அதன் வெற்றியை எதிர்காலத்தில்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மொபைல் போன்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டாலும், அது முற்றிலும் சீன நிறுவனங்களின் தயாரிப்பே, அரசின் தோல்வி அப்பட்டமாகத்தெரிகின்றது. ஆயினும் இராணுவ தளவாட உற்பத்திக்கு என்று பாதுகாப்பு பாதை என குறிப்பிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகளுக்கு ஆதரவு கொடுப்பதும் கவனத்திற்குரியதே.
மதிப்பெண்: 3/10
ஆயுஷ்மான் பாரத் சிகிச்சை காப்பீடு திட்டம்:
ஆட்சியின் கடைசிகாலக் கட்டதில் கொண்டுவரப்பட்ட பெரும் திட்டமாகும். 10கோடி குடும்பங்களை இந்த திட்டத்தின் கீழ் இணைக்கவிருப்பதாகவும், 15000 மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் கிழ் உள்ளதாகவும் தெரிகிறது. அரசியல் காரணமாக மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்திலிருந்து பின்வாங்கியது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தரவுகள் போதுமானதாக இல்லை. எனவே இப்பொழுதைக்கு மதிப்பெண் பட்டியலுக்கு உட்படுத்தவில்லை...
மதிப்பெண் : (--)
நேரு எதிர்ப்பு, காங்கிரசு எதிர்ப்பு:
கடந்த கால தவறுகளுக்கு காங்கிரசின் மீதும் நேரு மீதும் பழிபோடுவதை வழக்கமாக வைத்திருக்கும் இந்த அரசாங்கம், அவர்களின் சாதனைகளை மதிப்பதில்லை என்பது பெரும் அதிர்ச்சிகரமானது. நேரு என்ற பெரும் தலைவரின் கனவே இன்று மோடி பெரிதும் கொண்டாடி தமிழகத்தில் துவக்கிவைக்கும் AIIMS போன்ற நிறுவனங்களும், பாலக்கோடு தாக்குதலுக்கு துல்லியமாக வரைபடம் கொடுக்கும் ISRO போன்ற நிறுவனங்களும் ஆகும். நேருவும் சில நேரங்களில் சறுக்கலாம் ஆனால் அவரின் சில தோல்விகளுக்கு அவரை விமர்சிப்பது என்பது நம்மை எவ்விதத்திலும் முன்னோக்கி எடுத்துச் செல்லாது.
வலுவான எதிர்கட்சியே வலுவான ஜனநாயகத்தினை அமைக்கும் என்பதை ஆளும் கட்சியாளர்கள் புரிந்துகொள்வார்களா..
ஹிந்துத்வா, பசு பாதுகாப்பு, சிறுபான்மையினர்: இங்கு பாஜகவினர் தோற்று விற்றதாகவே பார்க்கின்றோம்.
மதிப்பெண் : 0 / 10
ஜீம்லா, காவிரி & அதிமுகவின் டாடி மோடி:
பாஜகவினர் பரப்பிய பொய் போட்டாஷாப்புகள் அரசிற்கு கெட்டபெயரையே வாங்கித்தந்தது...யோவ் இது எப்படியா ரேங்க் பட்டியலில் வந்தது...
வேலை வாய்ப்பு, முத்ரா கடன் திட்டங்கள் பற்றிய தெளிவான கருத்துக்கள், புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை, இதற்க்கும் பாஜகதான் காரணம் என்கிறார்கள், பொறுத்திருந்து பார்ப்போம்.
காவிரி பிரச்சினை: நதி நீர் வாரியம் அமைப்பது போன்றவற்றினை தேர்தல் பிரச்சினையாக்கியது, இதற்கு காங்கிரசினையும் பொறுப்பாளியாக்கவேண்டுமென்பதினால் மதிப்பெண் பட்டியலில் தவிர்த்து விடுகின்றோம்.
தாயில்லா குழந்தைகளுக்கு டாடியா இருக்க நினைச்சது குற்றமா என்று மோடி கேட்கலாம், ஆனால் மக்கள் இந்த ஆட்சி மோடியின் தயவினாலே ஆட்சியில் இருப்பதாக பார்க்கின்றனர். ஆக பாஜகவினருக்கு பெரும் சறுக்கலே..
அடுத்து எதிர் கட்சிகளின் தேர்தல் சின்னம் வரை குளறுபடி பண்ணனுமா மோடி அவர்களே.. தமிழக மக்களை நீங்கள் இப்படி எல்லாம் குழப்பி விட முடியாது, குறிஞ்சியே உங்களுக்கு 100 மதிப்பெண் கொடுத்தாலும் மக்களை ஏமாற்ற முடியாது...
எது எப்படியோ மக்கா 18ஆம் தேதி ஒட்டுப்போடுங்க... ஆளும் அரசு சொல்லும் வண்ணம் சாதனைகள் மக்கள் மனதில் பதிந்தால் 23ம் தேதி மே மாதம் மீண்டும் பாஜக ஆட்சி ஏறலாம், இல்லையெனில் காங்கிரசு அல்லது 3வது அணியின் தலைமையில் ஆட்சி மாறலாம்...
வாழ்த்துக்கள் வாக்காளர்களே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக