ஞாயிறு, 27 ஜனவரி, 2019

ஜிஎஸ்டி விளக்கம்


ஜிஎஸ்டி பற்றிய விவரங்கள் தமிழில் எளிதில் கிடைக்காததால் வணிகர்களுக்கு புரியும் வண்ணம் எழுதும் ஒர் முயற்சி, வரவேற்பு இருந்தால் தொடராக வரும்.


ஜிஎஸ்டியின் வரலாறு:


* 1980களின் கடைசியில் திரு. இராஜீவ் காந்தி அரசாங்கத்தில் திரு.விபிசிங் அவர்கள் நிதியமைச்சராக இருந்தபொழுது இந்தியாவில் வரிக்கு வரி என்ற கொடும் கொள்ளைக்கு முடிவு கட்ட முடிவு செய்தனர், திரு.விபிசிங் அவர்கள் அறிமுகப்படுத்தியதே MODVAT ஆகும். அது மத்திய அரசின் EXCISE DUTY போன்றவற்றினை கட்டுப்படுத்தியது.  அப்பொழுதும் ஆரம்பகட்டத்தில் கடும் குழப்பம் நிலவியது.

* 1990களில் ஆட்சியில் இருந்த நரசிம்மராவ்-மன்மோகன் சிங் இரட்டையர்கள் மத்திய அளவில் அதனை சிறிது மாற்றியும் மேம்படுத்தியும் VAT என அறிமுகம் செய்தனர்.

* 1999ல் ஆட்சியில் இருந்த திரு.வாஜ்பேயி அவர்களின் ஆட்சியில் மூன்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் திரு.ஐஜி படேல், திரு பீம்லால் ஜலான் மற்றும் திரு சி.இரங்கராஜன் ஆலோசனையின் பேரில், "ஒரே தேசம் ஒரே வரி" என்ற வாசகத்திற்கு ஏற்ப ஜிஎஸ்டி வரியினை அமலுக்கு கொண்டு வர கம்யூனிச கட்சியினைச் சார்ந்த மேற்கு வங்க நிதி அமைச்சர் திரு. அசிம் தாசுகுப்தா தலைமையில் வாஜ்பேயி கமிட்டி அமைத்தார்.

* 2005ல் திரு மன்மோகன்சிங் ஆட்சியில், திரு. ப சிதம்பரம் அவர்கள் நிதி அமைச்சராக இருந்தபொழுது மாநிலங்களின் விற்பனை வரியானது(SALES TAX) வாட் அமைப்பிற்கு(STATE VAT) மாற்றப்பட்டது.

2010ல் ஜிஎஸ்டி வரி நாடும் முழுவதும் அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு வெளியானது, ஆனால் அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முழு ஒப்புதலை  பெற இயலவில்லை.


ஜிஎஸ்டி vs வாட்??

மாநிலங்களுக்கிடையே ஒவ்வொரு பொருட்களுக்கும் வெவ்வேறு வித்தியாசத்தில் வரிவிதிப்பு இருந்தமையால், பொருள் பதுக்கல், கள்ளத்தனமாக அடுத்த மாநிலங்களில் விற்பனை செய்தல் போன்றவற்றினால் அரசின் வரிவருவாய் பாதிப்படைந்தது.

உதாரணமாக தமிழகத்தில் சிகரெட் 30% வாட் வரி விதிப்பில் இருந்தபொழுது கர்நாடகத்தில் 20% வாட் வரிவிதிப்பு இருந்தமையால் தமிழகத்தின் கள்ள சந்தையில் கர்நாடகாவிலிருந்து சிகரெட் குவிந்தது, இது தமிழக அரசின் வரி வருவாயில் பாதிப்பினை ஏற்படுத்தியது. ஜிஎஸ்டி இதற்கு முடிவு கட்டும்விதமாக இருக்கும் எனத் தெரிந்தது.

ஜிஎஸ்டி வரியானது பொருட்களுக்கு மட்டுமின்றி சேவைகளையும் ஒரே வரிக்குள் உள்ளடக்கியது.


2014ல் திரு நரேந்திர மோடி ஆட்சியில், திரு அருண்ஜெட்லி ஜிஎஸ்டி முன்வடிவனை வைத்தபொழுது மாற்றங்களை எதிர்கட்சிகள் கோரியது. இறுதியில் ஜிஎஸ்டி 2017 ஜீலை 1ல் திரு.பிரணாப் முகர்ஜி அவர்களினால் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது.

அரசியல் பார்வையாளர்களின் கணிப்புகளின்படி எதிர்கட்சிகள் ஆட்சியின் கடைசி கட்டத்திலே ஜிஎஸ்டி வரி சட்டமுன்வடிவுக்கு ஒப்புதலை அளித்தனர், எதிர்கட்சிகளின் எதிர்பார்ப்புகளை ஆட்சியாளர்களும் பொய்யாக்காவில்லை... ஆம்!! எளிதில் அமல்படுத்தவேண்டிய மாற்றத்தினை சொதப்பி கடும் அதிருப்தியை ஆட்சியாளர்கள் சம்பாதித்தனர். அறிமுகநிலையில் ஏன் இவ்வளவு குழப்பம் ஏற்பட்டது என புரியவில்லை, தெளிவாக இதை அறிமுகப்படுத்தியிருக்கலாம்.


என்ன செய்திருக்கலாம்:


  1. ஓவ்வொரு பொருட்களுக்கும் ஜிஎஸ்டிக்கு முந்தைய மறைமுக வரிகளின் மொத்த தொகை, ஜிஎஸ்டியில் உத்தேசிக்கப்பட்ட வரியின் தொகை என தெளிவாக ஆட்சித்தலைவரின் படத்தோடு நொடிக்கொரு முறை விளம்பரம் செய்திருக்கலாம்
  2. முதலில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் வாட் வரிவிதிப்பு காலத்திலே உத்தேசிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி அமைப்புகளை அமல்படுத்தி பிரச்சினைகளை கண்டறிந்திருக்கலாம். (குறைந்தப்பட்சம் மென்பொருட்கள் பிரச்சினையாவது குறைந்திருக்கும்.

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"
என்ற குறளின் படி நடந்தனை மறப்போம்..., வரிவிதிப்பினில் தெளிவு இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட விலைஏற்றம், வரி அதிகரிப்பு மற்றும் ஜிஎஸ்டி வலைத்தள குழப்பம் என ஆரம்பத்தில் அனைத்துமே சொதப்பலாகவே இருந்தது, இதனால் வணிகர்களும் மக்களும் அடைந்த பிரச்சினை சொல்லி மாளாது.


தமிழக ஆட்சியாளர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வந்த பிறகு தமிழக வரி வசூல் அதிகரித்திருப்பதாக பத்திரிக்கையில் பேட்டி கொடுத்திருந்தனர். எமது நண்பரின் தகவலானது ஆச்சரியத்தினை அளிக்கும் விதமாக இருந்தது... முறைப்படுத்தப்பட்ட வணிகம் இந்தியாவிலேயே தமிழக அளவில் அதிகம்; மற்றொன்று தமிழக ஆட்சியாளர்கள் தமிழகம் சார்ந்த வணிகங்களின் விவரங்களை எடுத்துச் சொல்லி வாட் வரி விதிப்பு இருந்த அளவிலேயே ஜிஎஸ்டி வரி விதிப்பினையும் அமல்படுத்த தவறியதால் அதிக வரிவிதிப்புக்கு தமிழகம் சார்ந்த தொழில்கள் உள்ளானது.

* இந்திய அளவில் 50% பின்னலாடை நிறுவனங்கள் தமிழக நிறுவனங்கள் ஆகும், ஜிஎஸ்டியின் ஆரம்ப கட்டத்தில் 18% வரி விதிப்பு மற்றும் 4% ஊக்கத்தொகை இரத்து போன்ற காரணங்களினால் பின்னலாடை துறை பெரும் சரிவினை சந்தித்தது. பங்களாதேஷ், வியட்நாம், இந்தோனேசியா நாடுகளை விட இந்தியாவில் பின்னலாடைத் தொழிலாளர்களின் ஊதியத் தொகை அதிகம் ஆதலால் ஊக்கத்தொகையின் மூலமே தொழில்முனைவோர்கள் மற்ற நாடுகளின் கடும் போட்டியைச் சமாளித்துக்கொண்டிருந்தனர்.

இந்த மாற்றங்களினால் உலகலாவிய அளவில் இந்திய பின்னலாடை துறை சரிவினை சந்தித்தது, மேலும் குசராத் மாநில் தேர்தலில் சூரத்தினை சார்ந்த பின்னலாடை நிறுவனங்களின் எதிர்ப்பு ஆகியவற்றுக்கு பிறகு ஆளும் அரசு சுதாரித்துக்கொண்டு வரி விதிப்பு இறக்கம் மற்றும் ஊக்கத்தொகை அளித்தது போன்றவற்றின் காரணமாக மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.


* அகர்பத்தியின் முறைப்படுத்தப்பட்ட வணிகம் இந்தியாவிலேயே தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழக அளவில் அதிகம். வாட் வரிவிதிப்பின் கீழ் 0% வரி விதிப்பிலிருந்த ஊதுபத்தி ஜிஎஸ்டி-யில் 12% ஆனது. ஊதுபத்தியின் உற்பத்தி தமிழக வடமேற்கு மாவட்டங்களில் வீட்டுத் தொழில் ஆகும்.

* 5000 கோடி தொழிலான சிவகாசி பட்டாசு ஆனது வாட் வரி விதிப்பின் கீழே 14.5%மும், ஜிஎஸ்டியில் 28%மும் ஆகும். உடனே composition scheme, ஒரு கோடிக்கு மேலே போனால்தான் ஜிஎஸ்டி வரி அது இதுனு சொல்லீடாதிங்க... சரி உங்க கணக்கினையே எடுத்துக்கொள்வோம்..

1996-97ல் விற்பனையானது 30இலட்சத்துக்கு மேலே போனால்தான் மத்திய அரசின் 12.5% சுங்க வரி, 2007-08ல் ஒருகோடி விற்பனைக்கு மேலே போனால்தான் சுங்கவரி என்று உயர்த்தப்பட்டது, ஆயினும் காலத்திற்கு ஏற்ப சுங்கவரி மாற்றியமைக்கப்படவில்லை ஆதலால் நிறுவனமானது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வெவ்வேறு நிறுவனங்களை ஏற்படுத்தி வரி ஏய்ப்பு செய்ய முற்பட்டனர் எனபதை ஒத்துக்கொள்கிறோம் ஆனால் அவர்களின் லாப விகிதம் குறைவு மேலும் சீன பட்டாசுகளின் ஊடுறுவல் அவர்களை நிர்பந்தித்ததையும் நாம் மறக்கலாகாது. தமிழக அளவில் 861 நிறுவனங்களில் 42 நிறுவனங்கள் மட்டுமே சுங்க வரி செலுத்தும் நிறுவனமாக இருந்தது.

மேலும் நீங்கள் கேட்கலாம் ஜிஎஸ்டி என்பது விற்பனை வரி ஆயிற்றே, மூலப்பொருட்களின் மீது செலுத்தப்படும் வரியை விற்பனையின் பொழுது வாடிக்கையாளர்களிடம் வாங்கலாமே என்று... பட்டாசு செலவில் 30% மட்டுமே மூலப்பொருட்களுக்கு தேவைப்படும் 70% மனித சக்திகளுக்கு ஊதியமாகவே செல்லும் நிலையில் இது கடினம். குறைந்தபட்சம் ஒர் தொழிற்சாலை எத்தனை பேரின் வாழ்வாதாரத்திற்கு வேலையின் மூலம் உதவி புரிகிறது என்பதனை அறிந்த கொள்ள முற்படவேண்டும். குறைந்தபட்சம் ஒர் தொழிற்சாலை எத்தனை பேரின் வாழ்வாதாரத்திற்கு வேலையின் மூலம் உதவி புரிகிறது என்பதனை அறிந்த கொள்ள முற்படவேண்டும்.

20லட்சத்திற்கு கீழே ஜிஎஸ்டி கிடையாது எனக் கூறலாம், ஆனால் 20லட்ச விற்று முதலில் இந்த தொழிலை நடத்த முடியாது, 75இலட்சம் வரை மாநிலங்களூக்குள்ளே விற்பனை செய்தால் 2% கூட்டு வரி மட்டுமே என்ற விதியும் இந்த தொழிலுக்கு பொருந்தாது.. ஏனெனில் சிவகாசி வெடிக்கு வட இந்தியாவிலேயே பெரும் சந்தை உண்டு..
கடைசியாக சுற்றுச்சூழல் மாசு என்று நீதி மன்றமும் பட்டாசு வெடிப்பதற்கு விதித்த கட்டுப்பாடுகள் இப்படி பட்டாசு தொழிலின் அவல நிலையை சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் கட்டுரையின் பேசு பொருள் இதுவல்ல என்பதால் இத்துடன் நிறுத்திகிறோம்...


சரி சரி விடுங்க நமக்கு எதுக்கு அரசியல், பெரிய இடத்து பொல்லாப்பு...

ஜிஎஸ்டி வந்த புதிதில் எவ்வளவு குழப்பம் சொதப்பல் இருந்தாலும் இப்பொழுது மெதுவாக தெளிவு அடைகின்றது.


ஜிஎஸ்டி எண் விளக்கம்:
இது 15 இலக்க எண் ஆகும்.
* முதல் இரு இலக்கம் மாநில ஜிஎஸ்டி குறியீட்டினையும்,
* அடுத்த பத்து இலக்கம் தனிநபர் அல்லது நிறுவனத்தின் நிரந்தர கணக்கு எண் எனப்படும் PAN-இலக்கினையும்,
*13வது இலக்கமானது குறிப்பிட்ட நிரந்தர கணக்கு எண்ணின் கிழ் இந்த மாநிலத்தில் பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையையும்,
* 14வது இலக்கம் நிரநதரமாக z ஆகவும்,
* 15வது கடைசி இலக்கம் முந்தைய 14 இலக்கங்களின் சரிபார்ப்பு குறியீடு ஆக இருக்கும்.

GST NO
















நிரந்தர கணக்கு எண்ணின் விளக்கம்:
இது பத்து இலக்க எண் ஆகும்.
  • முதல் 3 எழுத்துக்கள் சீரற்றதாக இருக்கும்.
  • 4 வது எழுத்து ஆனது நபர் அல்லது குழுவின் தன்மைக்கு தக்கவாறு பின்வருமாறு இருக்கும்
    A — Association of Persons (AOP)
    B — Body of Individuals (BOI)
    C — Company
    F — Firm ( Partnership, வணிக நோக்கத்துக்காக இருவர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து நடத்துவது)
    G — Government, அரசாங்கம்
    H — HUF (இந்து கூட்டுக் குடும்பம்)
    L — Local Authority
    J — Artificial Juridical Person
    P — Individual (PROPRIETOR, தனி நபர்)
    T — Trust (AOP)
    E – LLP (Limited Liability Partnership)

    • 5 வது எழுத்து பெயரின் இரண்டாம் பகுதியின் முதல் எழுத்தினை கொண்டிருக்கும்.
    • 6 முதல் 9 வரையில் எண்களின் வரிசையானது சீரற்றதாக இருக்கும்.
    • 10 வது எழுத்து முதல் ஒன்பது எழுத்து அல்லது இலக்கங்களின் சரிபார்ப்பு குறியீடு ஆகும்.








ஜிஎஸ்டி வரி அமைப்பு எப்படி செயற்படுகின்றது?

ஜிஎஸ்டி வரி அமைப்பு எப்படி செயற்படுகின்றது












*





* ஒவ்வொரு விற்பனையாளரும் தாங்கள் இந்த மாதம் செய்த விற்பனையின் தகவல்களை, அடுத்த மாதம் பிரதி தேதி 10க்குள் ஜிஎஸ்டி தளத்தில் ஜிஎஸ்டி-1 என்ற கோப்பின் கீழ் பதிவு செய்யவேண்டும்.


* உங்களிடம் பொருளை வாங்கியவர்கள் ஜிஎஸ்டி-2A ன் கீழ் நீங்கள் பதிவு செய்த விவரங்களை பார்க்கலாம்.

* உங்களிடம் பொருளை வாங்கியவர்கள் ஜிஎஸ்டி-2ன் கீழ் தாங்கள் வாங்கிய பொருட்களின் விவரங்களை பதிவு செய்வதின் மூலம் ஒப்புதல் அல்லது மறுப்பினையோ தெரிவிக்கலாம்.


* உங்களிடம் பொருளை வாங்கியவர்கள், விற்பனை செய்யப்பட்டதாக கூறும் விவரங்களில் ஏதேனும் மாற்றங்களை குறிப்பிட்டிருந்தால் விற்பனையாளர் அதுகுறித்த தகவல்களை ஜிஎஸ்டி-1Aன் கீழ் பார்க்கலாம், மேலும் அதுகுறித்த தமது ஒப்புதலையோ அல்லது மறுப்பினையோ பதிவு செய்யலாம்.


* விற்பனையாளரும், வாங்கியவரும் விற்பனை விவரங்களை ஒத்துகொண்ட நிலையில் பிரதிமாதம் 20ஆம் தேதியில் ஜிஎஸ்டி-3 ஆனது ஜிஎஸ்டி வரி விவரங்களுடன் உருவாக்கப்படும்.

Ref:
*https://en.wikipedia.org/wiki/Goods_and_Services_Tax_(India)
*https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-budget-2018-19-gst-helped-tn-lower-fiscal-deficit-panneerselvam-says/articleshow/63312421.cms
https://timesofindia.indiatimes.com/business/india-business/textile-industry-cheers-lowering-of-gst-rate-on-job-work/articleshow/59957066.cms
*https://www.financialexpress.com/economy/gst-impact-on-textiles-subsidy-for-garment-makers-cut-to-xs-size-as-government-reduces-benefits-under-remission-of-state-levies/786243/
https://www.thehindu.com/news/national/karnataka/12-gst-on-agarbathi-will-affect-industry/article18573203.ece
* https://www.thehindu.com/news/cities/Madurai/crackers-units-appeal/article19241022.ece

Note: சான்றுகளுக்காக மட்டுமே பத்திரிக்கையின் வலைதள குறிப்புகள் இடப்படுகின்றன. பெரும்பாலான தகவல்கள் களத்திலிருந்தே பதிவு செய்யப்படுகின்றது.

Thanks: GST Portal of Govt of India for various information.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக