திங்கள், 14 ஜனவரி, 2019

சுதேசி நுண்செயலி & ரூபே & நேவிக்

இந்தியாவிலே முற்றிலும் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நுண் செயலி (மைக்ரோ ப்ராசசர்) குறித்த செய்திகளை கடந்த வருட கடைசியில் பார்த்திருப்போம். "சக்தி" செயலாக்கம் என்ற திட்டத்தின் கீழ் ஐஐடி - சென்னையைச் சார்ந்த ஆசிரிய-மாணக்கார் குழுவினரால் இந்த வெற்றி சாத்தியமாகி உள்ளது, அவர்களுக்கும் இதற்கு நிதியுதவி செய்த இந்திய அரசிற்கும் வாழ்த்துக்கள்.

சண்டிகரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) குறைக்கடத்தி ஆயவகத்தில் (எஸ்.சி.எல்.) 180nm தொழில்நுட்பத்தில் "சக்தி நுண்செயலியானது" உற்பத்திசெய்யப்பட்டது. இதுவே இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு மற்றும் தயாரிக்கப்பட்ட முதல் RISC V நுண்செயலியாகும் என்று IIT-M தெரிவித்துள்ளது.

இந்த சுயசார்பு நுண்செயலி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியின் மூலம் வெளிநாட்டினைச் சார்ந்த நிறுவனங்களை சார்ந்திருப்பது குறையும், மேலும் வன்பொருள் மூலம் பரவும் ட்ரோஜ்ன்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். இந்த சுயசார்பு நுண்செயலியின் மூலம் இந்திய அரசின் இராணுவ, அணு உலை மற்றும் அரசின் நிறுவனங்கள் மூலோபாய அனுகூலமடையும்.

வருங்காலத்தில் பொருட்களின் இணையம்(Internet of Things) பெரிதும் வளரும் என எதிர்பார்க்கப்படுவதினால், வன்பொருட்களான உணரிகள்(Sensor), கணினிகள், திறன்பேசிகள் (Smart Phone), பிணைய கருவிகள் (Network devices, such as Router) போன்றவற்றில் நுண்செயலிகளின் தேவை அதிகரிக்கும். வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்து நாம் இருப்பதால் இந்திய ரூபாய் மதிப்பு பெரிதும் இறங்கும். இந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்த சுயசார்பு கண்டுபிடிப்பு பெரிதும் உதவும்.

வாஷிங்மெசின் போன்ற கருவிகளை இயக்க 180nm தொழில்நுட்பமே போதுமானது.


Ricecreek:
கடந்த ஆகஸ்டு 2018ல், இன்டெல் நிறுவனத்தின் அமெரிக்க உற்பத்தி நிலையத்தில் 300 நுண்செயலிகள் "Ricecreek" என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டு லினக்சு இயங்குதளத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.



180nm தொழில்நுட்பம்:
மூர் விதிப்படி ஒவ்வொரு இருவருடங்களுக்கு ஒருமுறை குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை இருமடங்காகும். அதன்படி தற்போதை நுண்செயலி சந்தை நிலவரமானது 22nm தொழில்நுட்பத்திலுள்ளது. 1999-2000 வருடங்களில் சரவதேச நிறுவனங்கள் 180nm தொழில்நுட்பத்தினை பயன்படுத்தியது. இப்பொழுது இந்தியாவிலேயே சுயசார்புடன் 22nm தொழில்நுட்பத்தில் நுண்செயலி வடிவமைக்க முடியும், ஆனால் அதனை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் இஸ்ரோ ஆய்வகத்தில் கிடையாது. நீங்கள் கேட்பது புரிகிறது, வருடாந்திர பாதுகாப்பு அறிக்கையாக இந்திய அரசு பல இலட்சம் கோடிகளை ஒதுக்குகின்றது, அவ்வாறாக இருப்பின் ஏன் நம்மால் புதிய இயந்திரங்களை வாங்க முடியாதா? வல்லரசுகள் நமக்கு அந்த தொழில்நுட்பம் கிடைப்பதை விரும்புவதில்லை, ஆதலினால் இந்தியா 20வருட பழைய உபயோகப்படுத்தப்பட்ட இயந்திரங்களையே சந்தையில் வாங்க இயலும். ஆக இருபது வருடங்களுக்கு பிந்தைய தொழில்நுட்பத்தினை வைத்துக்கொண்டே இஸ்ரோ இந்த பாய்ச்சலை செலுத்துகின்றது, என்பதன் மூலம் ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்ளலாம்.


டிரான்சிஸ்டர்கள் அமைப்பானது வழங்கி, கதவம், திரட்டி ஆகிய மூன்று அமைப்புளை உள்ளடக்கியது. இதில் கதவம் பகுதியின் அளவினையை தொழில்நுட்பமாக குறிக்கிறோம். 180nm தொழில்நுட்பத்தினோடு ஒப்பிடும்பொழுது 22nm தொழில்நுட்பம் அளவில் சிறியதாக இருப்பதால் குறைவான மின்சக்தியில் எளிதில் மின்துகள்களை கடத்தும், மேலும் விரைவாகவும் கடத்தும்.


ரூபேயின் வெற்றி :


ரூபே குறித்த ஏற்கனவே குறிஞ்சியில் வந்த கட்டுரையை படிக்க இங்கு சுட்டுக...

2014ல் அறிமுகப்படுத்தப்பட்ட "ரூபே" சுதேசி பரிவர்த்தனை கட்டண அமைப்பானது பெரும் பாய்ச்சலாக இன்று சர்வதேச நிறுவனங்களான விசா, மாஸ்டர் கார்டுகளை பின்னுக்கு தள்ளியுள்ளது. 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட "பீம்" என்ற ஒருங்கிணைந்த சுதேசி கட்டண தளத்துடன்(UPI) இணைந்து ரூபேயானது இந்திய சந்தையில் 60 சதவீதத்தினை பிடித்துள்ளது.

நன்றி : திஹிந்து பிசினஸ்லைன்


இதன் மூலம் பரிவர்த்தனை கட்டணங்களின் லாப விகிதங்கள் இந்திய வங்கிகளையே சாரும், மேலும் நமது பணம் வெளியே செல்வது பெரிதும் குறைக்கப்படுகிறது.

நேவிக்:

கார்கில் போரின் பொழுது இந்திய துருப்புகள் பாகிசுதான் துருப்புகளின் இடம் சார்ந்த விவரங்களை அமெரிக்க அரசிடம் கேட்டபொழுது அவர்கள் அந்த தகவல்களை பகிர மறுத்தது, இந்திய அரசிற்கு பின்னடைவாக கருதப்பட்டது. எனவே இந்திய அரசாங்கம் சுய சார்புடன் இந்திய இடஞ்சுட்டி அமைப்பினை ஏற்படுத்த விரும்பினர். இந்தியாவிலிருந்து 1500கி.மீ சுற்றளவில் இந்த இடஞ்சுட்டி அமைப்பு செயற்படும். இராணுவ தகவல்களுக்காக 5மீ தொலைவிலும், பொது பயன்பாட்டிற்கு 10மீ தொலைவிலும் தகவல்களை தருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.



முதலில் இந்த திட்டம் 7 செயற்கைகோள்களுடன் 2015ன் இறுதியில் செயல்பாட்டிற்கு வருமாறு திட்டமிடப்பட்டது, ஆனால் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இரு செயற்கைகோள்களின் தோல்வி மற்றும் சில நிர்வாக காரணங்களினால் இந்த வருடம் 2018 செப்டம்பர் பயன்பாட்டுக்கு வந்தது.


வருங்காலத்தில் GPS போன்று உலகம் முழுவதற்க்குமான வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 24 செயற்கைகோள்களுடன் 20மீ தொலைவில் தகவல்களை தருமாறு இயங்கி வருகிறது.

வரும் வருடங்களில் திறன்பேசிகளில் நேவிக் வசதிகள் இடம் பெறலாம்.


பொங்கல் வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக