'கோ.சாரங்கபாணியும் தமிழ்முரசும் - இன்றைய பார்வை' (2016) என்ற நூலில் அதன் ஆசிரியர் பாலபாஸ்கரன், இவ்விருநூற்றாண்டுக்கால சிங்கப்பூர் இந்தியர் வரலாறு எட்டு ஆளுமைகளின் வாழ்க்கையைப் பேசாமல் முழுமையடையாது என்கிறார்; அவர்கள் நாராயணபிள்ளை, சி.கு.மகுதும் சாயபு, டாக்டர் வீராசாமி, பி.கே.நம்பியார், மூனா காதர் சுல்தான், உ.ராமசாமி நாடார், கோ.சாரங்கபாணி, எஸ்.ஆர்.நாதன் ஆகியோர். இந்த பின்னணியில்தான் கோ.சா.வின் வரலாறு முக்கியத்துவம் பெறுகிறது. கோ.சா.வைப்பற்றி 'சிங்கப்பூர்-மலேசியத்தந்தை தமிழவேள் கோ.சாரங்கபாணி' (2013) என்ற தலைப்பில் ஜே.எம்.சாலி எழுதியுள்ள புத்தகமும் மேற்குறிப்பிட்ட பாலபாஸ்கரன் புத்தகமும் ஒன்றையொன்று நிறைவுசெய்பவையாக இருக்கின்றன. இந்நூல்கள் அணுகுமுறையில் வேறுபட்டவையாக இருப்பினும் எந்த முன்னறிதலும் இல்லாமல் கோ.சா.வைப்பற்றி வாசிக்க நுழைபவர்களுக்குத் தேவையான சித்திரம் இவ்விருநூல்களிலும் கலந்துகட்டி கிடைக்கிறது.
திருவாரூரில் பிறந்து, மெட்ரிகுலேஷன் படிப்பு முடித்து, இருபது வயது இளைஞனாக 1924ல் சிங்கப்பூர் வந்து, முப்பதாண்டுகள் கழிந்ததும் 'தமிழவேள்' என்ற பட்டம் (1955) பெறும் நிலைக்கு உயர்ந்தது நிச்சயம் கோ.சா.வின் சாதனைதான். வேள் என்றால் சிறந்த ஆண் என்று பொருள்சொல்கிறார் கவிஞர் மகுடேசுவரன். நடிகரிற்சிறந்தோன் நடிகவேள், தமிழரிற்சிறந்தோன் தமிழவேள். தன்னையும், குடும்பத்தினரையும், சுற்றத்தினரையும் உள்ளடக்கிய சாதாரண வட்டத்தைத்தாண்டி தமிழ் பேசும் அனைவர் முன்னேற்றத்தையும் குறித்த வலுவான அக்கறை ஒருவருக்கு ஏற்பட்டிருந்தாலன்றி இவ்வுயர்வு சாத்தியப்பட்டிருக்காது. ஐம்பதாண்டுகள் சிங்கப்பூரில் வாழ்ந்து 1974ல் உயிர்நீத்த கோ.சா.வின் வாழ்வு சிங்கப்பூர் வரலாற்றின் முக்கியத்தருணங்களோடும் இரண்டறக்கலந்தது. அவ்வரலாற்று வாழ்வின் குறிப்பிட்ட சில சாதனைகளையும் அதன் தொடர்பான விமர்சனங்களையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.
தமிழர்களுக்கு ஒற்றுமையால் விளையும் நன்மைகளைக் கருத்திற்கொண்டு அனைத்துத்தமிழரையும் - மொழி அடிப்படையில் - ஒன்றுபடுத்தும் முயற்சி எவ்வளவு கடினமானதென்று எவரும் புரிந்துகொள்ளவியலும். இம்முயற்சியில் துணிந்து ஈடுபடும் எவரும் இவருக்கு இதன்பின்னால் வேறு நோக்கங்கள் இருக்குமோ என்ற மற்றவர்களின் சந்தேகத்துக்கு ஆட்படுவது இயற்கை. அவ்வச்சத்தை எந்த அளவுக்கு வெற்றிகரமாகப் போக்கமுடியுமோ அந்த அளவுக்கே ஒருவர் தமிழரின் பொதுநலன் காணவிழைபவராக அதிகஎண்ணிக்கையிலான தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவார். கோ.சா. இச்சிக்கலை ஓரளவுக்குத் திறம்படவே கையாண்டிருப்பதாகப் பார்க்கமுடிகிறது.
ஈ.வே.ரா.வின் பகுத்தறிவுக்கொள்கைகளால் கவரப்பட்டிருந்தாலும், அவற்றைத் தமிழர்களின் ஒற்றுமை என்ற தன் பெரிய நோக்கத்திற்கு அதிக ஊறுவிளைவித்துவிடாத அளவில், சடங்கு சம்பிரதாயங்களில் சீர்திருத்தம் என்றுதான் பெரிதும் முன்வைத்திருக்கிறார். இவருடைய தமிழ்முரசில் அன்று கோலாலம்பூரிலிருந்து நடத்தப்பட்டுவந்த தமிழ்நேசனை பிராமணப்பத்திரிகை என்றும் பிராமணர்களைத் தீவிரமாக வசைபாடும் கட்டுரைகளையும் மற்றவர்கள் எழுத அனுமதித்திருக்கிறார். ஆனால் இவரது சொந்த கட்டுரைகள் பெரும்பாலும் தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்தையும் மற்ற சமூகங்களுடன் சமஅந்தஸ்து பெறுவதையுமே அடிப்படையாகக் கொண்டிருந்திருக்கின்றன.
உதாரணத்திற்கு, 1936ல் எழுதிய தமிழ்முரசு தலையங்கமொன்றில் இவ்வாறு எழுதுகிறார் கோ.சா; "".....வீட்டில் மலாய், ஆங்கிலம் பேசுகின்றனர். தமிழ் பேசுவதே கௌரவக்குறைவென நினைக்கின்றனர். வயிற்றுப்பாட்டிற்கென இங்கு வந்து வாழும் தமிழ் மக்களின் நிலையோ இரண்டு ஆட்டில் ஊட்டிய குட்டி மாதிரியிருக்கிறது. அவர்களுக்கு இங்கு குடியேறி வாழவும் பிரியமில்லை. இந்தியாவிற்குப்போனால் அங்கேயே தங்கிவிடவும் எண்ணமில்லை. அவர்களின் போக்கோ பணம் சம்பாதிக்க வேண்டுமென்றே ஒரே போக்கொழிய சமூக நிலையைப் பற்றிய கவலையே இல்லை. கிராணிமார் கூட்டம் காலமெல்லாம் இறகோட்டித்தீரவேண்டியது. தொழிலாளிகளோ காலமெல்லாம் குறுக்கெலும்பொடிய உழைத்துத்தீரவேண்டியது. இத்தகைய நிலைமையிலுள்ள தமிழர்களை சீர்திருத்த முனையும் சீர்திருத்தவாதிகளுக்கு விளையும் தொல்லையும் வசவும் கொஞ்சநஞ்சமல்ல."
தமிழர் சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை கோ.சா. மீது விமர்சனம் வைக்கலாமென்றால் அது அவர் இந்து மதத்தின் பண்டிகைகளில் நடக்கும் சடங்குகளை மட்டுமே எதிர்த்துள்ளதுதான். ஆனால் இச்சடங்குகள் இந்து மதத்திற்குத் தொடர்பில்லாதவை என்று தன் வாதத்தில் தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளதையும் பார்க்கமுடிகிறது. ஓரிடத்தில் 'அன்றைய மலாயாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ்முரசின் வாசகர்களில் நாற்பது சதவீதம்பேர் இந்திய முஸ்லிம்கள். அதனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு இசைவான தகவல் சாதனமாக தமிழ்முரசை அவர் இயக்கிவந்தார்' என்கிறார் ஜே.எம்.சாலி. பிராமண எதிர்ப்பு, இந்து வழிபாட்டு முறைகள் எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய சமூகத்துடன் வலுவான நட்புறவு என்ற அளவில் அது கிட்டத்தட்ட ஈ.வே.ரா. வழி சீர்திருத்தமே. போருக்குப்பிறகு இவ்விஷயத்தில் மென்மையான போக்கை கோ.சா. கடைபிடித்ததும் தெரியவருகிறது. சூழல் வெகுவாக மாறிவிட்டதாக கோ.சா. கொள்ளும் சமாதானம் யோசிக்கச்செய்கிறது.
சுமார் நாற்பது தமிழ் பத்திரிகைகள் தொடங்கப்பட்டு சொற்ப ஆயுளில் மறைந்துபோன முன்வரலாறுள்ள அன்றைய மலாயாவில், 1935ல் வெறும் முப்பத்திரெண்டு வயதில் தைரியமாகத் தமிழ்முரசை அவர் வாரப்பத்திரிகையாக ஒரு காசு விலையில் தொடங்கியதும், படிப்படியாக அதன் விற்பனையைப்பெருக்கி, தினசரியாக்கி, அதிகபக்கங்களாக்கி, லாபமில்லாமல்போனாலும் தமிழரின் குரலாக தொடர்ந்து ஒலிக்கச்செய்தது எந்த அளவுகோலின்படியும் ஒரு பெருஞ்சாதனை. கடந்த எண்பதாண்டுகளில் பல சிக்கல்களைச் சந்தித்தபோதும் முரசு இன்றும் ஒரே சிங்கப்பூர் தமிழ் நாளிதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது.
முரசு வெளியீட்டை ஒட்டிய கோ.சா.வைப்பற்றிய விமர்சனம் ஒன்று கிடைக்கிறது. ஜூலை 1963 முதல் ஜூலை 1964 வரை ஒருவருடகாலம் முரசு நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் முரசு நிறுத்தப்பட்டது அதுவே முதன்முறை. காரணம் அச்சுக்கோர்ப்பாளர்கள் கூலி உயர்வு கேட்டது. வழக்கில் நீதிமன்றத்தில் வென்றாலும் தொழிலாளர் நலத்தைப் பெரிதும் பேசிவந்தவர் இப்படிச்செய்ததேன் என்ற கேள்வி வரலாற்றில் தொக்கி நிற்கிறது. இன்னொருபுறம் 1963-64 சிங்கப்பூர் அரசியலில் அதிமுக்கியமான காலகட்டம். சிங்கப்பூரையும் உள்ளிட்ட மலேசியா உருவாகி ஆளும் மக்கள் செயல் கட்சி தமிழர்களிடம் தொடர்புகொள்ள சாதனமில்லாமல் தவித்திருக்கிறது. இதைப்பயன்படுத்தி ஏப்ரல் 1964ல் தமிழ்மலர் என்ற நாளிதழ் முரசுக்கு மாற்றாகப்பிறந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஒருவருடம் முரசை கூலி உயர்வை முன்னிட்டு நிறுத்தியது வரலாறு எழுத வருபவர்களுக்குப் புரிந்துகொள்ளக்கடினமாக இருக்கிறது. அந்த இடைவெளிக்குப்பிறகு முரசு தன் மிடுக்கையும் பெருமையையும் சமூகத்தோழமையையும் இழந்து இன்றுவரை தள்ளாடுவதாக பாலபாஸ்கரன் கருதுகிறார்.
தமிழர் சீர்திருத்தச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டதில் முக்கியப்பங்காற்றியதும் அதன் செயலாளராகப் பொதுவெளியில் பிரச்சாரம் செய்ததும் கோ.சா.வின் மற்றொரு பாராட்டத்தக்க பணியாக அறியப்படுகிறது. பிறப்பின் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பாகுபாடுகளைப் போக்குவது, தமிழ்ப்பெண்களின் சமூக மேம்பாடு மற்றும் சம உரிமை, சிக்கனத்தையும் மதுவிலக்கையும் போதித்தல் போன்ற உன்னதமான கொள்கைகளைக்கொண்ட சங்கமாக அது தன் பணிகளைத்தொடங்கியது. ஆனால் அது போதிய ஆதரவைப்பெறவில்லை. நாற்பதாயிரம் தமிழர் எண்ணிக்கைகொண்ட அன்றைய சிங்கப்பூரில் சங்கம் ஆயிரம் பேரைமட்டுமே சேர்க்கமுடிந்தது. அதிலும் ஊக்கமாகச்செயல்பட்டோர் ஒரு நூறுபேர்களே. சங்கம் தொடர்பான கோ.சா. மீதான விமர்சனம் பேச்சு அதிகமாகவும் செயல்பாடுகள் குறைவாகவும் இருந்தன என்பது.
சிங்கப்பூரில் குடியுரிமை பதிந்துகொள்வதற்கான அவசியத்தை விளக்கிப்புரியவைத்து ஆயிரக்கணக்கில் தமிழர்களை ஏற்கச்செய்தது, தமிழ் மொழியைப் பல்கலைக்கழகத்தில் இடம் பெறச்செய்ய பிரதமர் லீ குவான் இயூவிடம் கொள்கை அளவில் சம்மதம் பெற்றது போன்ற விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட பல நன்மைகளைத் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்துவிட்டுப்போயிருக்கிறார் கோ.சா. என்பது வரலாற்றின் பக்கங்களிலிருந்து புலனாகிறது. அவர் மறைந்து சுமார் நாற்பதாண்டுகள் கழிந்தபின் இந்த இரண்டு காத்திரமான நூல்கள் - அதுவும் வெறுமே புகழ்மொழிகளுடன் கழிந்துவிடாமல் - வெளியாகியுள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். சிங்கப்பூரின் இன்றைய தலைமுறைக்கு இருநூறு வருடத் தமிழர் வரலாற்றின் கனத்தை உணரவைக்கவேண்டியது பெரும் பொறுப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக