பேராசிரியர் ஜெயக்குமாரின் 'Be at the table or Be on the menu' புத்தகம் ஒரு முழுமையான சுயசரிதை அல்ல; அவரது சொந்த வாழ்க்கையின் சில தகவல்களையும், முப்பதாண்டுகள் நீண்ட பொதுவாழ்வின் குறிப்பிடும்படியான நிகழ்வுகளையும் கொண்டது. புத்தகத்தின் துணைத்தலைப்பாக 'A Singapore Memoir' என்று குறிக்கப்பட்டிருப்பதிலிருந்து அவரது நோக்கம் பலகாலகட்டங்களில் சிங்கப்பூருடனான தன் பொதுவாழ்வின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதே என்பது தெரிகிறது.
1939ம் ஆண்டு சிங்கப்பூரில், ஏழைக்குடும்பமொன்றின் ஏழுகுழந்தைகளுள் ஒருவராகப்பிறந்தவர் சண்முகம் ஜெயக்குமார். குடும்பத்தின் மோசமான பொருளாதார நிலை இவரது அண்ணன்களைக் கல்வியைக்கைவிட்டு, வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்ற தள்ளிவிட்டிருக்கிறது. உடன்பிறப்புக்களின் தியாகங்களை வீணடித்துவிடாத ஜெயா, சட்டப்படிப்பு முடித்து 1964ல் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிற்றுவிக்கச் சேர்ந்தார். பத்தே ஆண்டுகளில் அத்துறையின் தலைவராக உயர்ந்தவர் 1974 முதல் 1980 வரை அப்பதவியிலிருந்தார். பிறகுதான் மக்கள் செயல் கட்சியின் வழியாக அரசியற்பிரவேசம். அதன்பிறகு வந்த முப்பதாண்டுகளில் சட்ட அமைச்சர், வெளியுறவு அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகிய முக்கியப்பொறுப்புகளை வகித்தார். 2011ல் தன் ஓய்வை அறிவித்தபோது துணைப்பிரதமராகவும் இருந்தார்.
புத்தகம் முழுக்க களிநயமிக்க நிகழ்ச்சிகள் விரவிக்கிடக்கின்றன. 1962ல் சிங்கப்பூர் மாணவர் சங்கத்தின் பிரதிநிதியாக இவர் ஈராக் சென்றபோது நடந்த ஒரு சம்பவமும் அதில் ஒன்று. ஈராக்கின் குடிநுழைவு அதிகாரிகள் இவரது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) அவர்களிடம் விட்டுச்செல்ல அறிவுறுத்தியுள்ளார்கள். அவர்களிடம் தந்துவிட்டதற்கு ஆதாரமாக ஜெயா ரசீது ஒன்று தருமாறு கேட்டுள்ளார். கடுப்பாக ஈராக்கிய அதிகாரி, 'ஒருவேளை உங்கள் கடவுச்சீட்டு தொலைந்துபோனால் ஈராக் கடவுச்சீட்டு ஒன்று தந்துவிடுகிறோம்' என்றிருக்கிறார்!
ஜெயா சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவராக இருந்தபோதுதான் மாணவர் சேர்க்கையின் ஒரு பகுதியாக நேர்காணல் செய்வதை அறிமுகப்படுத்தியுள்ளார். இது விமர்சனத்துக்குள்ளானது. ஏனெனில் மதிப்பெண்கள் புறவயமானவை (objective), ஆனால் நேர்காணலின் முடிவு மதிப்பீடு செய்பவரைப்பொறுத்தது (subjective). தன் முடிவில் உறுதியாக இருந்த ஜெயா, வெறுமே மதிப்பெண்கள் மட்டும் ஆங்கிலத்தை எவ்வாறு மாணவர் கையாள்கிறார் என்பதை கணிக்க உதவாது என்று சுட்டிக்காட்டி, சட்டப்பயிற்சிக்கு ஆங்கிலப்புலமை இன்றியமையாதது என்றிருக்கிறார். இன்றும் நேர்காணல் நடப்பிலுள்ளது. அதேநேரத்தில் மாணவர்களுக்குத் தேவையான உதவியைத் தேடிச்சென்று செய்பவராக ஜெயா சிலாகிக்கப்படுகிறார். புகழ்பெற்ற கிரிமினல் வழக்குரைஞர் சுபாஸ் அனந்தனும் இவரது மாணவராக இருந்து இவரிடம் உதவிபெற்றவர்தான்.
அரசியலில் நுழையலாமா வேண்டாமா என்று ஆரம்பகாலத் தயக்கம் ஆட்டிப்படைத்ததாக எழுதும் ஜெயா முதன்முறை ம.செ.க-வின் அழைப்பைத் தட்டிக்கழித்துள்ளார். ஆனால் இரண்டாம்முறையாக அவர்கள் கட்சியில் சேர அழைத்தபோது நாட்டுக்காகக் கடமையாற்ற வேறு நல்வாய்ப்பு கிடைக்காது என்று முடிவெடுத்து பொதுவாழ்வில் இறங்கியிருக்கிறார். இன்று சிங்கப்பூர் சட்ட அமைச்சராகப் பதவிவகிக்கும் கா.சண்முகமும் இவரது மாணவரே. தன்னைப்போலவே தன் மாணவர் சண்முகமும் அரசியலில் பங்கேற்கத் தயங்கியதைப் புரிந்துகொண்டு அவரை மெல்ல மனமாற்றம் செய்து களத்திலிறக்கிவிட்டிருக்கிறார் ஜெயா. சிங்கப்பூர் இந்தியச்சமூகம் சட்டப்படிப்புகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் பிற துறைகளிலும் முன்னுக்குவர முயற்சிசெய்ய வேண்டும் என்றும் இவர் வலியுறுத்துகிறார்.
சட்ட அமைச்சராகத் தனக்கு ஆத்மதிருப்தி அளித்த விஷயங்களாக மூன்று சட்டவரைவு திருத்தங்களைக் குறிப்பிடுகிறார்; தொகுதிசாரா பாராளுமன்ற உறுப்பினர் உருவாக்கம் (NCMP), குழுப்பிரதிநிதித்துவ தொகுதிகள் உருவாக்கம் (GRC) மற்றும் நேரடியாகத் தேர்வுசெய்யப்படும் அதிபர் (Elected Presidency). இன்னொரு முக்கியமான சட்டமாக மத நல்லிணக்கம் பேணும் சட்டத்தை உருவாக்கியதைச் சொல்கிறார். இவையனைத்துமே சிங்கப்பூரின் அடையாளங்களாக ஆகியிருக்கின்றன. இச்சட்டங்கள் ஒவ்வொன்றும் உருவாக்கப்படவேண்டிய பின்புலம், அவசியம் ஆகியவற்றை ஜெயா விவரிக்கையில் வெகுவாக மெச்சிக்கொள்ளப்படும் சிங்கப்பூரின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பின்னால் எவ்வளவு தீர்க்கமான சிந்தனைகள் இருக்கின்றன என்பதை உணரமுடிகிறது.
மரணதண்டனைக்கு ஆதரவாகப் பேசும் ஜெயா, குறிப்பாக போதைப்பொருட்கள் கடத்தலைக் குறைக்க இது அவசியம் என்று வாதாடுகிறார். சிங்கப்பூரின் அமைவிடம் போதைப்பொருட்கடத்தலுக்கு சாதகமான அம்சமாக இருக்கும்வேளையில், ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலனை முன்னிறுத்தி யோசிக்கையில், தனிமனித உயிரை எடுப்பது சரியா என்ற கேள்வி பின்னுக்குத் தள்ளப்படுவதை விளக்குகிறார். மரணதண்டனை, பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள் போன்ற விஷயங்களில் சிங்கப்பூரைக் குறைகூறும் நாடுகளின் இரட்டைவேடத்தையும் சில உதாரணங்களோடு அம்பலப்படுத்துகிறார். ஐக்கிய நாடுகளில் சபையில் இதுபோன்ற விஷயங்களில் அரசியல் உள்நோக்கத்துடன் சில நாடுகள் மற்ற நாடுகளை விமர்சிப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
சிங்கப்பூரில் 1986ல் நியூ வேர்ல்ட் ஹோட்டல் இடிந்தது மற்றும் 1991ல் SQ117 விமானக்கடத்தல் ஆகியவை ஜெயாவின் விவரிப்பில் வாசிக்க படபடப்பாகவும், அவற்றை அரசின் சார்பாக இவர் கையாண்ட விதத்தைப் பார்க்கையில் பெருமையாகவும் இருந்தது. எப்போதுமே நல்ல முடிவுகளை எதிர்பார்ப்பதும் அதேசமயத்தில் மோசமான முடிவுகளுக்கும் முழுமையாகத் தயார்நிலையில் இருப்பதும் சிங்கப்பூரின் தாரக மந்திரம். இவரைப்போன்றவர்கள் அதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்துக்காட்டிவிடுகிறார் கள். அந்த விமானக்கடத்தல் சம்பவத்தில் சிறப்பு அதிரடிப்படையினரை விமானத்தை ஆக்ரமிக்க உத்தரவிட்டது ஜெயாதான். நூற்றுக்கணக்கான உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தாமதமும்சரி, விரைவான முடிவும்சரி சிலபல பின்விளைவுகளை உண்டாக்கும் என்பதால் எல்லாவிதமான முடிவுகளுக்கும் மனதளவில் ஒத்திகை பார்த்தபடி இருந்திருக்கிறார். நல்லவேளையாக அதிரடிப்படையினர் சிறப்பாகச் செயல்பட்டு மூன்றே நிமிடங்களில் நான்கு கடத்தல்காரர்களையும் கொன்றது மட்டுமின்றி விமானப்பணியாளர்களுக்கோ, பயணிகளுக்கோ உயிரிழப்பின்றி முடித்துவைத்தனர்.
ஜெயாவின் ஓய்வுக்கு பிரதமர் லீ சியன் லூங் வாசித்தளித்த நன்றி மடலில் இவ்விரு சம்பவங்களின்போதும் அவரது செயல்பாடுகளை மெச்சியதுடன், குறுகிய கால அவகாசத்தில் சரியான முடிவுகளை எடுத்து உயிர்ச்சேதத்தைக் கட்டுப்படுத்தியதற்காக நிரம்பவே புகழ்ந்துரைத்தார். மறைந்த லீ குவான் இயூ அவர்களும் ஜெயா சிங்கப்பூருக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பு கணிசமானது என்பதையும், மேலும் பல ஆண்டுகளுக்கு முழுமையான ஆற்றலுடன் செயல்பட உடற்திறமிருந்தும் அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு ஓய்வுபெற்றதையும் குறிப்பிட்டிருக்கிறார். லீயின் மின்னஞ்சல் இன்னூலின் பிற்சேர்க்கையில் இடம்பெற்றுள்ளது. ஜெயா சிங்கப்பூரின் மூன்று பிரதமர்களுடனும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
சட்டத்திற்குக் கட்டுப்படாத சூதாட்டங்களை ஒழிக்க மிகக்கடுமையான நடவடிக்கைகளை இவர் எடுத்தபோது கொலைமிரட்டல்கள் நிறைய வந்துள்ளன. ஆகவே கைத்துப்பாக்கி ஒன்றைக் கொஞ்சகாலம் கைவசம் வைத்திருந்திருக்கிறார். ஆனால் 'துப்பாக்கி தன்னைக்காப்பது ஒருபுறமிருக்க தான் துப்பாக்கியைக் காவல்பார்ப்பது பெரும்பாடாக இருக்கிறது' என்று திரும்ப ஒப்படைத்துவிட்டார். எல்லா சூழ்நிலைகளிலும் ஒரு துப்பாக்கி தன்னைக் காப்பாற்றிவிடமுடியாது என்று சமாதானம் அடைந்ததாகச் சொல்கிறார். ஆனால் சிங்கப்பூர் தராதரம் பார்க்காமல் அனைவருக்கும் பாதுகாப்பளிக்கும் நாடாக இருப்பதில் அவர் கொண்டிருந்த வலுவான நம்பிக்கையும் அம்முடிவுக்கு ஒரு காரணம். கற்றலையும் கற்பித்தலையும் தன் இயல்பாகக்கொண்ட ஜெயா தற்போது 76 வயதிலும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் ஆலோசனைக்குழுவிலும், தனிப்பட்ட முறையில் சட்டவல்லுனராகவும் தொய்வின்றி பணியாற்றிவருகிறார். இவரது ஓவியத்திறமையும் அபாரமானது.
(ஜெயக்குமாரின் ஓவியங்களில் ஒன்று)
சிங்கப்பூருக்குக் களங்கங்களாக அமைந்துபோன மாஸ் செலாமத்தின் சிறைதப்பல், சில குடிநுழைவுச் சோதனை சொதப்பல்கள், லிட்டில் இந்தியக் கலவரம் மற்றும் சில உயரதிகாரிகள் அளவிலான ஊழல்கள் ஆகியவற்றைத் தயங்காமல் விளக்கிப்பேசியிருக்கும் ஜெயா, சிங்கப்பூரர்கள் ஒருபோதும் 'பாதுகாப்பு எல்லாம் நல்லவிதமாகத் தானாக நடக்கும்' என்று நம்பி அசட்டையாக இருந்துவிடலாகாது என்பதற்கு நினைவூட்டிகளாகவும் அவற்றை முன்வைக்கிறார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக