வெள்ளி, 18 நவம்பர், 2016

நான், என் காதல், என் காதலிகள் - பகுதி 27 : நுவல் சிறுகதைத்தொகுப்பு விமர்சனம்


அறிவியல் சோதனைகளின் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்கையில் ஆதிக்கக்காரணி (dominant factor) ஒன்றைக் கண்டுபிடிப்பார்கள். ஒரு விளைவுக்குப் பலகாரணிகள் இருந்தாலும் அவற்றில் ஏதாவது ஒன்றின் பங்களிப்பு தனித்து, குறிப்பிடத்தகுந்ததாக இருக்கும். அதுவே ஆதிக்கக்காரணி. அது சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கலாம். ஒவ்வொரு இலக்கியப்படைப்பும் - குறிப்பாகச் சிறுகதைகள் - தம்முள் ஓர் ஆதிக்கக்காரணியைக் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். வாசிக்கும்போது வாசகரிடத்தில் விஞ்சி நிற்பதும், வாசித்து பலகாலம் சென்றபின்னும் அவர் நினைவில் எஞ்சி நிற்பதும் இந்த ஆதிக்கக்காரணியின் தாக்கமே. அதை அடிப்படையாகக்கொண்டு படைப்பை விமர்சிப்பது பொருளுள்ளதாகத் தோன்றுகிறது.

நுவல் 2010ல் வெளியான சிறுகதைத்தொகுப்பு. எல்லாக்கதைகளும் சிங்கப்பூரை கதைக்களனாகக் கொண்டவை.


முதல் கதை 'முகடுகள்'. காமாட்சி மோசமான மறதியால் தானும் அவதியுற்று குடும்பத்தினரையும் படுத்துகிறார். ஒருநாள் மகனும் மருமகளும் அறைக்குள் இருப்பதை மறந்து, விக்ஸ் பாட்டில் எடுக்க கதவைத்திறந்து உள்ளே போக, அங்கே அவர்கள் நெருக்கமாக இருப்பதைப்பார்க்க நேருமளவுக்கு பிரச்சனை முற்றியபின் அவரை ஸ்டுடியோ அப்பார்ட்மெண்ட்டில் குடிவைக்கிறார்கள். அங்கு வந்துசேரும் பாக்கியம் என்ற இளம்பெண் காமாட்சிக்குப் பணிவிடைகள் செய்து, ஹாலில் படுத்துக்கொள்வதாகக் கேட்டுக்கொண்டு அதற்கு மாத வாடகையும் தருகிறார். ஆனால் பாக்கியம் கள்ளக்குடியேறி என்பது காமாட்சிக்குத் தெரியாது. ஒருநாள் போலீஸ் காமாட்சி, பாக்கியம் இருவரையும் கைதுசெய்கிறார்கள். காவல் நிலையத்தில் காமாட்சி தன் பிள்ளைகளிடம், "என்னை ஏன் போலீஸு பிடிச்சுட்டு வந்திருக்கு? நானாச்சும் பரவால்ல வயசானவ. பாக்கியம் வயசுப்புள்ள. அதையும் பிடிச்சுகிட்டு வந்திருக்காங்களே. என்ன கொடுமை இது? இதைக் கேட்பாரே இல்லையா? அந்தப்பிள்ளையையும் பார்த்து ரெண்டுவார்த்த ஆறுதலாப் பேசுங்கையா" என்று அழுவதுடன் கதை முடிகிறது.

மறதிமிகுந்த கிழவி, இருகுழந்தைகள் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமையன்று ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது, அறைக்கதவைத் தாழிடாமல் உள்ளே ராஜூவும் அவர் மனைவியும் நெருக்கமாக இருந்த சம்பவத்தை வாசிக்கும்போது அச்சூழலை இயல்பாக நம்பமுடியவில்லை. 'வயசானவளைப் போலீஸ் பிடித்தால் பரவாயில்லை' என்று காமாட்சி ஏன் சொல்லவேண்டும்? அவருடைய கலக்கமும் செயற்கையாக இருக்கிறது. கதையின் முக்கியமான இவ்விரண்டு இடங்களும் வாசகரின் நம்பிக்கையைப் பெறுவதில் தோற்கிறது. மேலும் சில இடங்களிலும் 'இப்படி நடக்குமா?' என்ற கேள்விகள் வாசிப்பவருக்கு வந்தபடியே இருக்கின்றன. இக்கதையின் ஆதிக்கக்காரணி நம்பகத்தன்மையின்மை.

அடுத்த கதை 'மிதவை'. இளமையில் கணவனை இழந்தவள் செல்வி. ஒரு குழந்தை உண்டு. அவள் வீட்டில் வாடகைக்குத் தங்கவரும் மாரிமுத்து பிறகு அவளின் கணவன்போலவே ஆகிவிடுகிறான். ஆனால் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. காலப்போக்கில் அவனால் செல்விக்குத் துன்பம் மட்டுமே எஞ்சுகிறது. போதையில் அடி, உதை, பிலிப்பினோக்காரியை வீட்டுக்கே அழைத்துவருவது, வருமானத்தை தானே அழித்துவிடுவது என்று அவன் செயல்கள் மோசமாகின்றன. செல்வி வீட்டுவேலைக்குப்போய் பணத்தேவையைச் சமாளிக்கிறாள். விக்டர் என்ற அறுபது வயதான, திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்துவரும் ஒருவரின் வீட்டுக்கு வேலைசெய்யப் போகிறாள். விக்டர் செல்வியின் குழந்தையை டாக்டரிடம் கூட்டிப்போவதுமுதல் மாரிமுத்துவை போலீஸ் துணையுடன் இவள் வீட்டிலிருந்து விரட்டிவிடுவதுவரை செல்வியின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டுவருகிறார். இவளுடைய சமையலும், வீட்டுப்பராமரிப்பும், காய்ச்சலில் விழுந்தபோது கனிவான கவனிப்பும் விக்டருக்கும் அந்த வயதில் தான் முன்பு வெறுத்த குடும்பவாழ்வின் மீதான பிடிப்பைத் துளிர்க்கச்செய்துவிடுகிறது. ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில், ஏதோ ஒரு வேகத்தில், இருவருக்கும் இடையே கலவி நடந்துவிடுகிறது. முடிந்ததும் விக்டர் குலுங்கிக்குலுங்கி அழுகிறார். ஆனால் செல்வி தன் உடம்பை செருப்பாக தைத்துப்போட்டாலும் அவர் செய்த உதவிகளுக்கு ஈடாகாது என்றும் நன்றிக்கடனை எப்படி திருப்பித்தருவது என்று தவித்திருந்தேன் என்றெல்லாம் சொல்லி என்று அவரைத் தேற்றுகிறாள். விக்டர் ஓர் உறுதியான முடிவோடு எழுந்து நிற்கிறார். அந்த ஆண்மையின் கம்பீரம் புரியாமல் செல்வி திகைத்துப்போய் நிற்பதாகக் கதைமுடிகிறது.

கதையைப் படித்ததும் கு.அழகிரிசாமியின் 'இரு சகோதரர்கள்' கதை நினைவில் மீண்டது. அக்கதையில் பலகஷ்டங்களுக்கிடையே தனக்குக் கல்வியை அளித்த அண்ணன் குடும்பத்துக்கு தன் வாழ்க்கையையும் வருமானத்தையும் அளித்து நன்றிக்கடனைத் திருப்பிவிட முடிவுசெய்து, திருமணம் செய்துகொள்ளாமல் அவர்களோடே வாழும் தம்பி. ஒரு நாள் ஏதோவொரு கணநேர மிருக உந்துதலில் அண்ணன் மனைவியைக் கட்டிப்பிடித்துவிடுகிறான். ஒருகணம்தான். அவள் ஸ்தம்பித்துப்போய் மரக்கட்டையாய் நிற்கிறாள். அவனும்தான். அந்த ஒரு கணநேர மௌனக்காட்சியை மனக்கண்ணில் பார்க்கும் வாசகரின் உடலில் லேசான நடுக்கம்பிறக்கும். அந்த கணம் வாசகருக்குள் நிமிஷங்களாக நீளும். ஆழமான கேள்விகளை எழுப்பும். கதைமாந்தர்கள் கலங்கி, நடுங்கி நிற்பதோடு சரி. ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை.

இரு சகோதரர்களில் வரும் அக்காட்சியின் முடிவில், இருவரும் கூனிக்குறுகி நிற்கையில், 'மானுடம் வென்றதம்மா' என்ற சிலிர்ப்பு எழுந்தது. ஆனால் மிதவை காட்சியின் முடிவில் விக்டரின் உதவிகளை ஒரு தட்டிலும் தன் உடலை மறுதட்டிலும் சுலபமாக வைத்துவிடும் செல்வியைப் பார்த்ததும் 'மானுட மதிப்பீடுகள் வீழ்ந்ததம்மா' என்ற ஆயாசம்தான் எழுகிறது. ஒருவேளை மாரிமுத்துவிடமும் நன்றிக்கடனுக்காகத்தான் தன்னை சமர்ப்பித்திருந்தாளோ என்ற கேள்வியை எழுப்பிவிடுகிறது செல்வியின் அந்த நன்றிக்கடன் பேச்சு. மேலும் தொட்டுவிட்ட பெண்ணையே திருமணம் செய்துகொள்ள உறுதியான முடிவெடுப்பதுதான் ஆண்மையின் கம்பீரம் என்ற அர்த்தம் வருமாறு முடித்திருப்பது மிகவும் கவலைக்குரிய இலக்கியச்சிந்தனை. இக்கதையின் ஆதிக்கக்காரணியும் அதுதான்.

அடுத்த கதை உற்றுழி. மூன்று பெண்கள். அதில் இருவர் எழுத்தாளர்கள். ஒருவர் தமிழில் எழுதுபவர். அசைவம், மது சாப்பிடாதவர். கணவருடன் இணங்கி குடும்பத்துடன் வாழ்பவர். மூத்த எழுத்தாளர்களை மதிப்பவர். கெட்ட வார்த்தைகள் பேசாதவர். மற்றவர் வேற்றுமொழியில் புகழ்பெற்ற 'முற்போக்கு' எழுத்தாளர். மூன்றாமவர் இம்முற்போக்கு எழுத்தாளரின் தோழி. அவரும் முற்போக்குதான். முற்போக்குகள் இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து இருப்பதே கிடையாது. இவ்விருவரும் தமிழ் எழுத்தாளரின் முற்கூறிய பண்புகளுக்கு நேரெதிரான குணங்களை உடையவர்கள். இவர்கள் மூவரும் உணவகத்தில் சந்திக்கும் அன்று இவ்விரு முற்போக்குகளும் மதுவருந்திவிட்டு, ஆண்களையும் அவர்களுக்குத் அடங்கிப்போகும் பத்தினிவேஷம்போடும் பெண்களையும் காதுகூசும் வார்த்தைகளால் திட்டிப்பேசி, அசைவம் சாப்பிட்டு, பேரரின் கையில் முத்தமிட்டு, துப்பட்டா நழுவியதையோ ஆடையில் சிறுநீர் நனைந்திருப்பதையோ உணராமல் அடிக்கும் கூத்துகளைப்பார்த்து - அன்று உடல்நலமும் அவ்வளவு சரியில்லாத நிலையில் - குமட்டிக்குமட்டி வாந்தி எடுக்கிறார் அந்தத் தமிழ் எழுத்தாளர். அதோடு கதை முடிகிறது.

நல்ல குணங்கள் மட்டுமே கொண்ட ஒரு பாத்திரம். முற்போக்கு என்றபெயரில் மோசமான பழக்கங்கள், நடத்தைகளை உடைய இரண்டு பாத்திரங்கள். கதையின் முதலடி முதல் ஈற்றடிவரை இந்த சித்திரம் தெள்ளத்தெளிவாக உருவாகி நிறைவதால், எது நல்லது எது கெட்டது என்று வாசகருக்கு எடுத்துக்காட்டும் நீதிக்கதை இது. நீதிக்கதைக்கு விமர்சனம் தேவையில்லை. இப்பாத்திரங்கள் தங்களுக்குள் நல்லதுகெட்டது குறித்த விவாதம் - அதற்குத் தோதான களன் இருந்தும் - ஏதும் செய்யாததால் எனக்கும் விமர்சனம் ஏதும் இல்லை.

அடுத்த கதை தாகம். தாரிணி மாதவிடாயின் போது படும் அவஸ்தைகளை கண்முன் கொண்டுவரும் கதை என்று ஒருவரியில் பொழிப்புரை எழுத எனக்கு மனமில்லை. வயதுக்கு வந்த காலத்திலிருந்தே மாதாமாதம் அனுபவித்து வருவதுதான் என்றாலும் பழகிப்போச்சு என்று அவளால் ஏற்றுக்கொண்டுவிடமுடியாத அளவுக்கு உக்கிரமான வலியையும், வேதனையையும், எழுந்து நிற்கவியலாத பலகீனமும், அந்த நிலையில் உண்டாகும் தாகமும், எது மாயை எது நிஜம் என்று பிரித்தறிய இயலாத மயக்க நிலையும் வார்த்தைகளில் வடிக்கப்பட்டுள்ளன. கடுந்தாகத்தில் இருக்கும்போது சில்லென்ற தரையில் அமர்வதுகூட ஆறுதலாக இருக்கிறது என்று மிகநுட்பமான உணர்ச்சிகள் வெளிப்பட்டிருக்கும் கதை.

சு.வேணுகோபால் 'நித்தியகண்டம்' என்ற கதையில் மாதவிடாய் அவஸ்தைகளை எழுதியிருப்பதாக வாசித்திருக்கிறேன். ஆனால் அக்கதையை வாசித்ததில்லை. ஜெயமோகனின் 'பெருவலி' கதை நினைவுக்கு வந்தது. கோமல் சுவாமிநாதன் புற்றுநோயால் ஏற்பட்டிருந்த வலியை அணுவணுவாக விவரிக்கும் கதை அது. ஆனால் கோமல் சுவாமிநாதனை வலியை வென்றவராகக் காட்டும் சித்திரம் அதில் உருவாகி வருகிறது. ஆகவே அவ்வலியின் துயரிலிருந்து ஓரளவு தன்னை வாசகர் மீட்டுக்கொண்டுவிடக்கூடும். கோமல் ஏதோ சித்தபுருஷர்போலும் என்று வணங்கிவிட்டு நகர்ந்துவிடவும்கூடும். அந்த இடத்தில் கதையின் மையம் வலியிலிருந்து கோமலுக்கு நகர்ந்துவிடுகிறது. அந்தவகையில் தாகம் இன்னும் சிறப்பானது. தாரிணி சாதாரணமான பெண். வலியை வெல்லாதவள். வாசகருக்கு நெருக்கமானவள். நாஞ்சில்நாடன் சிங்கப்பூர் வந்திருந்தபோது என்னதான் ஓர் ஆண் பிரசவவலியை பாவித்துக்கொண்டு எழுதினாலும் ஒரு பெண் எழுதுவதற்கு சமானமாக வராது என்றார். அக்கூற்றுக்கு ஆதாரமாக நிற்கிறது தாகம். இக்கதையை வாசித்த ஆண்கள் அதன்பின்னர் மாதவிலக்கு என்ற வார்த்தையில் இருக்கும் விலகல் மனநிலையைத் தாண்டி, வேறான கனிவுணர்ச்சியுடன்தான் அச்சொல்லை அணுகுவார்கள் என்பது நிச்சயம். இக்கதையின் ஆதிக்கக்காரணி ரசவாதம்.

அடுத்த கதை நுகத்தடி. மனநிலை பிறழ்ந்த பெண்கள் பராமரிக்கப்படும் இல்லத்தில் ஒருமுறை அவர்களைக்கண்டு ஆழமாக பாதிக்கப்படும் மாலதி, அதன்பிறகு மாதம் ஒருநாள் அவர்களுக்குத் தின்பண்டங்களும் மற்ற சிலபொருட்களும் கொடுப்பதை வழக்கமாக வைத்துக்கொள்கிறாள். அவருடைய கணவர் அதற்கு ஆதரவாக இருக்கிறார். வசந்தி என்ற பெண்ணும் தொடர்ந்து துணைசெய்கிறாள். அங்கு கொண்டுபோய் இறக்கிவிடும் வாடகைக்காரோட்டியும் காசு வாங்க மறுத்துவிடுகிறான். மனநிலை பிறழ்ந்த பெண்கள் எல்லோரையும் (சீன, மலாய், இந்திய) லக்‌ஷ்மிகள் என்றுதான் மாலதி சொல்கிறார். அவர்களும் தங்களை அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள். பெற்றோர்களோ, உடன்பிறப்புக்களோ, கணவன்மார்களோ இவர்களைக் கைவிட்டிருக்கிறார்கள். மாலதியுடன் லக்‌ஷ்மிகள் அனைவருக்கும் உரையாட ஏதாவது இருக்கிறது. தங்களுக்கு என்னென்னவேண்டும் என்றும் கேட்கிறார்கள். ஒரு லக்‌ஷ்மி அலங்கோல உடையுடன் ஓடிவந்து மாலதியிடம் தோடு வேண்டும் என்று கேட்கிறாள். அன்று லக்‌ஷ்மிகளைப் பார்த்துவிட்டு வீடுதிரும்புபவர் கணவரைக் கட்டிக்கொண்டு 'லக்‌ஷ்மிகள், லக்‌ஷ்மிகள்' என்று விம்மும்போது ஓடாமல் நின்றிருந்த கடிகாரம் 'டாண் டாண்' என்று அலறுவதாகக் கதைமுடிகிறது.

கதையை வாசித்ததும் வாசகருக்கு ஓர் இரக்கம் எழுகிறது, லக்‌ஷ்மிகள் மேல் அல்ல மாலதியின் மேல். கதை அடையவிரும்பிய இலக்கு அதுதான் என்றால் வெற்றி கிட்டிவிட்டது. 'சல்லிக்காசு பெறாத விஷயங்களுக்கெல்லாம் விழா எடுத்தல், விருந்து, கேளிக்கை, உல்லாசப்பயணம் என எதற்கெல்லாமோ பணம் செலவழிக்கிறோம்' என்று மாலதி சிந்திப்பது அவருடைய உணர்ச்சிவசப்படும் தன்மைக்கு மாறாக தர்க்கபூர்வமானதாக இருக்கிறது. அவருடைய அத்தனை உருகல்களாலும்கூட வாசகரை ஊடுருவித் தைக்க மாலதியால் இயலவில்லை. ஆசிரியரின் ஒரு நேர்காணலில் இக்கதை தன் நேரடி அனுபவம் என்று சொல்லியிருந்ததை வாசிக்கநேர்ந்தது. முழுமையான கற்பனையைக்கூட நிஜம்போலவே கண்முன் நிறுத்தி வாசகரை அசைத்துப்பார்க்கும் சக்திகொண்ட சிறுகதை வடிவத்தில், கண்டுணர்ந்த நேரடி அனுபவம் ஒன்று உதிரி செய்திகளாக, ஒன்றமுயலாதபடி அமைந்துவிட்டது சோகம்தான். கதையின் ஆதிக்கக்காரணி மேம்போக்கான பரிதாப உணர்ச்சி.

அடுத்த கதை மின்மினி. சோமசேகர் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். 32 வயதாகியும் திருமணம் செய்ய விருப்பமில்லாதவன். மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வேலை நிமித்தமாக வந்தவன் ஒருமாதம் தங்க ஓர் அறையை வாடகைக்கு எடுக்கிறான். அவ்வீட்டின் ஓனர் லிம் அவ்வறையில் உள்ள வித்தியாசமான நிலைக்கண்ணாடி ஒன்றிடம் உயிருள்ள பொருள்போலவே உரையாடுகிறார். சேகரையும் அதை கவனமாக பார்த்துக்கொள்ளச் சொல்கிறார். பிறகு சேகருக்கு தனியாக இருந்தாலும் அந்த அறையில் யாரோ தன்னை பார்ப்பது போலவே இருக்கிறது. உடலில் ஏதோ ஒன்று ஏறி இயக்குவதை ஒரு சிறிய கணத்தில் அவன் உணரநேரிடுகிறது. பிறகு ஒரு திருப்பத்துடன் கதைமுடிகிறது.

கதை நகரும்போக்கில் சேகருக்கு ஸ்கிசோப்ரெனியா எனப்படும் Multiple Personality Disorder இருக்குமோ என்று வாசகர் ஊகிக்க அனேக வாய்ப்புகள் உண்டு. அதைப்பயன்படுத்தி இக்கதை மேலெழுந்துவருகிறது. கதைக்குக் கையுமில்லை காலுமில்லை என்று கிராமத்தில் சொல்லப்படுவதை நாம் கேட்டிருக்கலாம். அந்த இலக்கணத்தை - நவீன இலக்கியத்தில் - பயன்படுத்த நல்ல சாத்தியங்களை இயல்பாகக் கொண்டிருப்பவை அமானுஷ்யக்கதைகள். இக்கதையில் அமானுஷ்யத்தின் பிடியிலிருந்து விடுபட்ட சேகருக்குக் கடவுள் நம்பிக்கையும் திருமணத்தில் ஆர்வமும் வருவதாகக் கதை முடியும்போது வாசகருக்கு ஏமாற்றம்தான். கதை புதுமையான, சுவாரஸ்யமான வளர்ச்சியையும் ஆனால் சப்பென்ற முடிவையும் கொண்டிருக்கிறது. மின்னிமறைந்துவிடும் நீடிக்காத தாக்கமே மின்மினியின் ஆதிக்கக்க்காரணி.

மேலும் ஏழு சிறுகதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. சோறு, நுவல், நண்டு, நாசிலெமாக், காக்காய் பொன், நயம்பட உரை, விரல் ஆகியவை. இவற்றில் மூன்று கதைகள் (நாசிலெமாக், நயம்பட உரை, விரல்) இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இலக்கியப்பணிக்கோ, அலுவலகப்பணிக்கோ அல்லது உடலுழைப்புப்பணிக்கோ வருபவர்களுக்கு புத்திசொல்லித் திருத்துவதாக அமைந்துள்ளவை.

நயம்பட உரை கதையில் சிங்கப்பூர் எழுத்தாளர்களை மதிக்காத கேரளத் திரைக்கதை ஆசிரியனின் திமிரை சிங்கப்பூரின் சமூகக்கதாசிரியன் ஒருவன் தன் அறிவையும், திறமையையும் காட்டி கிட்டத்தட்ட அடக்குகிறான். "பின்னவீனத்துவத்தில் அதிமுக்கியமான theory of modern short stories-க்கான சிறப்புவகுப்பில் தெரிவுசெய்யப்பட்ட எழுத்தாளர் நான்" என்று நேரடியான பிரச்சாரக் கதையாகவும் இது இருக்கிறது. மற்ற சிங்கப்பூர் எழுத்தாளர்களையும் - அவர்கள் பகுதி நேரத் தொழிலாக இலக்கியம் படைத்தபோதும் - தரமான படைப்புகளைத் தந்ததாக அந்த கேரளத்திரைக்கதை ஆசிரியனிடம் சில உதாரணங்களைக்கொண்டு நிரூபிக்கிறார் அந்த சிங்கப்பூர் சமூகக்கதாசிரியர். அதன்பின் அவர்களுக்குள் நட்பு மலர்கிறது. கதையின் தலைப்பு இந்த இடத்தில் வாசகருக்கு மேலதிக ஆராய்ச்சியில்லாமல் அடுத்த கதைக்கு நகர துணைசெய்கிறது.

நாசிலெமாக் கதையில் இங்குள்ள பெண்களை ஒழுக்கமில்லாதவர்களாக நினைக்கும் தமிழகத்திலிருந்து வந்த ஒருவனின் லட்சணத்தை அவனுக்கே முகத்திலறைந்தாற்போல் காட்டித்தருகிறாள் ஒரு சிங்கப்பூர் தமிழ்ப்பெண். இவன் சாலையில் எச்சில் துப்புகிறான், குப்பைபோடுகிறான், காபியைக்கூட சப்பி சாப்பிடக்கூடாது என்கிறான், டுரியான், நாசிலெமாக் போன்றவை அவனுக்கு பிடிப்பதில்லை, தன்மானமின்றி எப்போதும் அவள் காசில் கூச்சமின்றி சாப்பிடுகிறான். அவனுடைய எல்லா குறைகளையும் ஏற்றுக்கொண்டு அவனுடைய காதலுக்காகத் தன்னை அதிக பிரயாசையுடன் தகவமைத்துக்கொள்கிறாள் அந்த சிங்கப்பூர் தமிழ்ப்பெண். அனால் அவன் சிங்கப்பூர் பெண்களுடன் சும்மா சேர்ந்துசுற்றலாம் என்று மட்டும்தான் நினைக்கிறான் அவர்களோடு வாழத்தயாரில்லை என்று தெரிந்ததும் அவன் முகத்தை அவனுக்குக்காட்டிவிட்டு விலகிவிடுகிறாள். அதாவது அவன் தனக்கானவன் என்று நினைக்கும்போது அவன் குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை. தனக்கில்லை என்று ஆனவுடன் அக்குறைகளையே காரணம்காட்டி அவனை ஒதுக்கிவிடுகிறாள். உள்ளூர்த் தமிழ்ப்பெண்களுக்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு அவர்களை சுயநலவாதிகளாகக் காட்டிவிட்டிருக்கிறது கதை. மேலும் ஆர்ப்பாட்டமான சம்பவங்களுடன் வாசகர் முன்வந்து மையக்கருத்திலுள்ள - பொதுப்புத்தியில் படிந்துபோன - செய்திக்காக ஏற்றுக்கொள்ளும்படி கோரிநிற்கும் கதை. அக்கோரிக்கையை வாசகர் நிராகரித்துவிடுவார் என்று தோன்றுகிறது.

விரல் கதையில் தமிழகத்திலிருந்து வந்த கட்டுமானத்துறை தொழிலாளிக்கு விபத்தால் பணியிடத்தில் விரல் துண்டிக்கப்படுகிறது. இன்ஷுரன்ஸ் பணத்தை பெற்றுக்கொடுத்துவிட்டு, அவருடைய சூப்பர்வைசர், தானாக நடந்த விபத்துக்கும், ஏற்படுத்திக்கொண்ட விபத்துக்கும் தனக்கு வித்தியாசம் தெரியும் என்றும் இனி அப்படி செய்யாதே என்றும் அறிவுரை சொல்கிறார். அதைக்கேட்டதும் அண்ணே..அண்ணே என்று அந்தத்தொழிலாளி அழுவதாக அக்கதை முடிகிறது. கடும் அதிர்ச்சியளித்த கதை இது. எந்த இளம் தொழிலாளியும் இப்படிச் செய்யவிரும்பமாட்டான் என்றே நினைக்கிறேன். கதைப்படியேகூட அத்தொழிலாளி மாதாமாதம் காசு அனுப்பினால்தான் ஊரில் அடுப்பு எரியும் நிலை இருப்பதாக வருகிறது. அந்த நிலையில் வருமோ வராதோ என்ற சந்தேகத்துக்குட்பட்ட இன்ஷுரன்ஸை நம்பி தன்னை ஊனப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்க அவனுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. வேலையிட விபத்துகளை ஒரு புதியகோணத்தில் பார்த்துவிட கதை முடிவுசெய்ததா என்பது தெரியவில்லை. ஆனால் அது ஆபத்தான கோணம் என்பது மட்டும் தெரிகிறது.

மற்ற நான்கு கதைகளான சோறு, நுவல், நண்டு, காக்காய் பொன் ஆகியவற்றைக் குறித்து விரிவாக விமர்சிக்க இங்கு அவசியமில்லை என்று தோன்றுகிறது. அவற்றின் ஆதிக்கக்காரணிகளும் ஏற்கனவே குறிப்பிட்ட மற்ற கதைகளுள் ஒன்றுதான், தாகம் நீங்கலாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக