புதன், 17 ஆகஸ்ட், 2016

நான், என் காதல், என் காதலிகள் - பகுதி 24 : பெருமாள்முருகனின் நாவல்கள்

மாதொருபாகன்

ஆசிரியரிடமிருந்து இரண்டு அபுனைவுகள் (நிழல் முற்றத்து நினைவுகள், கெட்டவார்த்தை பேசுவோம்), ஏற்கனவே வாசித்திருந்தாலும் முதலில் வாசித்த புனைவு இதுதான். அபூர்வமாக தன் வலைதளத்திலும் நல்ல கட்டுரைகள் எழுதுகிறார் இத்தமிழ்ப்பேராசிரியர். 

ஒரு மொழிபெயர்ப்பு நாவலின் பிழை திருத்தத்திற்காக நண்பருக்கு உதவப்போனவர் அறைகலன் (furniture) என்ற வார்த்தையை அதில் கண்டு அறைக்கலன் என்பதே இயல்பாயிருப்பதாகக் கருதினாலும் இலக்கணப்படி எப்படி அதை நியாயப்படுத்துவது என்ற யோசனையில் மூழ்கியதையும், நண்பரும் அணிகலன் என்றுதானே எழுதுகிறோம் அணிக்கலன் என்று இல்லையே என்று கேட்க, மூன்று நாட்கள் மூளையைக்குடைந்துகொண்டே இருந்த அக்கேள்விக்கு இறுதியில் விடைகண்டதையும் (http://www.perumalmurugan.com/2014/04/14.html?m=1) படித்ததும் இவர் எழுத்துக்களின் மேல் ஆர்வம் மேலும் அதிகமாகி இவரின் புனைவுகளையும் வாசிக்க ஆர்வம் பிறந்தது.

முழுநேர எழுத்தாளர்களாயில்லாமல் - அதாவது வரும்படிக்கு எழுத்தை நம்பியிராமல் - இருப்பவர்களிடமிருந்தே தமிழுக்கு இனி தரமான இலக்கியப்படைப்புகள் கிடைக்கமுடியும் என்பது என் எண்ணம். விதிவிலக்குகள் இருக்கலாம். எதையோ எழுதியாகவேண்டிய கட்டாயமுமில்லை. எத்தனை பேருக்குப்பிடிக்கும் என்று யோசித்து தனக்குப் பிடிக்காததை எழுதவும் வேண்டியதில்லை. 

இந்நாவலில் திருச்செங்கோடு (திருச்செங்குன்றூர்) அருகே ஒரு கிராமத்தில் சுமார் எழுபதாண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு தம்பதி குழந்தை இல்லாததால் உளவியல் ரீதியாக படும் அவஸ்தைகள் மிகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் சொல்லப்பட்டுள்ளது. இக்குறைபோக்கும் பரிகாரங்கள் அனைத்தும் அர்த்தநாரீஸ்வர் குடிகொண்டிருக்கும் மலையையும், விழாக்களையும் சார்ந்தே இருப்பதால் மட்டுமல்லாமல் தன் மனைவியைத் தன்னில் பாதியாகக்கருதும் ஒரு முக்கிய பாத்திரமும் தலைப்பை பொருந்தச்செய்கின்றன.


கிராமவாழ்க்கையில் இன்றும் தொடரும் தீமை இதுதான். நகரத்தில் உள்ளதுபோல் யார் வீட்டுக்கோ வந்த திருடன் என்று தன்வேலையைப் பார்த்துக்கொண்டு போகாமல் வலியவந்து பலசமயங்களில் உதவும் கிராமத்தின் குணம் 'அது அவர்கள் சொந்தவிஷயம்' என்று எதையும் விடுவதுமில்லை. எல்லாவற்றையும் சீண்டிக்கொண்டும் நோண்டிக்கொண்டும்தானிருக்கும். நூலில் ஓரிரு இடங்களைத்தவிர மற்றஅனைத்து இடங்களிலும் அத்தம்பதிகள் தங்களுக்காகவல்லாமல் ஊர்வாயை மூடவே குழந்தைபெற முயற்சிப்பதையும், அதற்காக எதையும் செய்யத்துணிவதையும், நம் தமிழ்ச்சமுதாயச் சடங்குகள் எந்தளவுக்கு அவர்களை ஒதுக்குகின்றன என்பதையும் பதிவுசெய்துள்ளார்.

நாவலில் சொல்லும்படி விரிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் நான்குதான். வாசிப்பவர்க்கு சலிப்பு தட்டாமல் அவற்றின் மனப்போராட்டங்களை அற்புதமாக எழுதியிருப்பது ஆசிரியரின் சாமர்த்தியம்.



ஆளண்டாப்பட்சி

ஏழெட்டு வயதுவரை கதசொல்லு கதசொல்லு என்று பாட்டியைத்துளைத்தெடுத்தது இன்றும் என் நினைவில் உண்டு. எனக்குக் கதை சொல்ல ஆரம்பித்ததுமே அவருக்குத்தூக்கம் வந்துவிடும். என் மகளுக்குக் கதை சொல்கையில் இன்று அதுவே எனக்கும் நிகழ்கிறது. ஒரே கதையைத் திரும்பத்திரும்பச் சொல்வதுதான் காரணமா? வேறு காரணங்கள் உண்டா? தெரியவில்லை. சொல்லவந்த விஷயம் யாதெனில் என் பாட்டி சொன்ன பல கதைகளில் 'அன்றண்டுபட்சி' கதையும் ஒன்று. அது ஆளண்டாப்பட்சி என்பதைக் கால்நூற்றாண்டுகழித்து எனக்கு இந்நூற்தலைப்பு சொல்கிறது.

ஒருவரின் புனைவெழுத்தை முதன்முறைப் படித்ததும் இவெரெழுதிய அனைத்தையும் வாசித்துவிடவேண்டும் என்ற ஆவல் பிறந்தது எனக்கு இதுவரை மூவருக்கு; சுஜாதா, ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன். அந்தவரிசையில் தயக்கமில்லாமல் நான்காவதாக சேர்த்துவிடக்கூடியவர் பெருமாள்முருகன். ஆச்சரியமான ஒற்றுமையாக இவர்கள் அனைவருமே அற்புதமான கட்டுரையாசிரியர்களும்கூட. தமிழகத்தின் கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்குத் திசைகளிலிருந்து இவர்கள் வந்திருப்பதும் ஆச்சரியமான தற்செயல். 


நாவலில் நான்கு ஆண் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள ஒரு கொங்குக்கவுண்டர் குடும்பத்தில் அனைவருக்கும் திருமணமானபிறகு பரம்பரைச்சொத்தில் பாகப்பிரிவினை நடக்கிறது. கிட்ட இருந்தால் முட்டப்பகை என்ற வாக்கு பொதுவாக பொய்ப்பதில்லையே. கடைசிப்பிள்ளையான முத்துக்கு வழக்கப்படி உள்ளதிலேயே ஆகக்குறைவான பங்கு நிலத்தில் ஒதுங்குகிறது. தங்குவதற்கு வீடுமில்லை. அதைத்தொடர்ந்து நடக்கும் பல சம்பவங்களின் முடிவில் முத்து குடும்பத்துடன் வேறூருக்குப் புலம்பெயர்வதாக முடிவெடுத்து அதற்கான இடத்தைத்தேடிச்செல்வதும், வழியில் இயல்பாக நடக்கும் நிகழ்வுகளும், நிலம்வாங்கவும் பின் அதை விளைநிலமாக்கப் பிரயாசைப்படுவதும்தான் கதை. ஆசிரியரின் நாவல்களில் என்னை அதிகம் உள்ளிழுத்துக்கரைத்து அனுபவிக்கச்செய்தது இதுதான். 

யதார்த்தவாதம், மானுடவியல், புலம்பெயர்தல், கொங்குச்சாதிகளின் இனவரைவியல், வட்டாரமொழி வழக்குகள் என்று என்னென்னெமோ தலைப்புகளில் மொத்த நாவலையும் ஆய்வுக்கட்டுரைகளாக மாற்றிவிட்டாலும்கூட இத்தனை organic unity கிடைக்காதென்பதே புனைவுகளின் பலம்.




பூக்குழி

தருமபுரி இளவரசனுக்கு என்று முதல்பக்க சமர்ப்பணம் சொல்வதை வைத்து எதைப்பற்றிய நாவல் என்று ஊகிப்பது எளிது. கதை நடக்கும் காலம் நேரடியாகச்சொல்லப்படவில்லையென்றாலும் கிராமத்து அத்தியாயம் என்ற படம் அப்போதுதான் வெளியாகியிருந்தது என்ற வரியைக்கொண்டு 1980 என்று கண்டுபிடிக்கலாம். அது ஏனோ காதல் திருமணமும் கலப்புசாதித்திருமணமும் ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிள்ளைகள். 

கிராமத்தில் காதல் திருமணங்கள் கொண்டுவரும் பிரச்சனைகளை நான் நேரடியாகக்கண்டதுண்டு. இருவரும் மனமொத்து ஊரைவிட்டுப்போயிருந்தாலும் 'இழுத்துட்டு ஓடிட்டான்' என்பதே மரபு. ஒரு பெண் துணிந்து தனிப்பட்ட முறையில் ஒரு முடிவெடுத்திருக்கிறாள் என்பதைப் பேச்சளவில்கூட ஒத்துக்கொண்டுவிடக்கூடாது என்பதற்காக இருக்கலாம். 

காதல் ஜோடிகளும் வாழ்வதற்கு என்ன ஆவேசமாக முடிவெடுக்கிறார்களோ அதே வேகத்தில் உயிரைவிடவும் முடிவெடுப்பார்கள். பெற்றோர்களும் சரி, உறவினர்களும் சரி, ஊர்க்காரர்களும் சரி ஏதோ ஒருவகையில் தாங்கள் உதாசீனப்படுத்தப்பட்டதாகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவுமே பொங்கியெழுந்து எதிர்ப்பார்கள். நம்மால் இயலாததை இவர்கள் செய்துவிட்டார்களே என்ற கோபம்தான் முக்கியக்காரணி. கௌரவக்கொலை, நாடகக்காதல் போன்ற சொற்களெல்லாம் சமீபகாலமாக இப்பிரச்சினையின் அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கும் விபரீதமான வார்த்தைகள்.


இக்கதையில் கொஞ்சம் நகரம்போன்ற இடத்திலிருந்து தன் வீட்டிற்குத்தெரியாமல் காதலனைக் கணவனாக ஆக்கிகொண்டு அவனுடன் கிராமத்துக்குப் புலம்பெயரும் பெண்ணின் போராட்டங்கள் சொல்லப்பட்டுள்ளது. பையன் பெண்ணைவிடக் கொஞ்சம் மேல்சாதி. பொண்ணு நம்மசாதிதான் என்று பொய்சொல்லி ஊரைச்சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் அவன் வருகிறான். ஆனாலும் சந்தேகப்பட்டு ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். எப்படியும் சமாளித்து வாழ்ந்துவிடலாம் என்று வருபவர்கள் திணறுகிறார்கள். எதனுடைய வேரையும் தோண்டித்துருவிவிடும் கிராமத்தாட்கள் எப்படியோ விசாரித்து பெண் தாழ்ந்தசாதி என்பதைக்கண்டறிந்ததும் உலை கொதிநிலையை அடைந்துவிடுகின்றது. 

பெரும்பாலான சம்பவங்கள் நேரில் பார்த்தும், செய்திகளில் படித்தும், கேள்விப்பட்டும், சினிமாவில் பார்த்தும் பழகிப்போயிருப்பதால் நாவல் ஆழமாக பாதிக்கவில்லை. ஆனால் கிளைமாக்ஸ் நீண்ட நாட்களுக்கு நினைவில் நிற்கும்.

கங்கணம்

விரிவாக இவ்விணைப்பில் : http://kurinjinet.blogspot.sg/2015/05/10.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக