சனி, 2 ஜூலை, 2016

நான், என் காதல், என் காதலிகள் – பகுதி 23: சிந்தனை பெரிதானால் செல்வம் பெரிதாகும்

நாமறிந்த உலகில் ஒளியைக்காட்டிலும் வேகமாக செல்லக்கூடிய ஒன்றில்லைஆயினும் அவ்வொளியும்கூட நாம் இமைகளைமூடிக்கொண்டால் வெளியேதான் நிற்கிறதுஆனால் பணம் மூளைக்குள் இறங்கிக் கனவிலும் நனவிலும் ஆட்டிப்படைக்கும் சக்திபெற்றுவிட்டதுபண்டமாற்றிலிருந்து பணமாற்றிற்கு வந்தது சந்தேகமின்றி மனிதனின் பெரும் பாய்ச்சல்தான்இன்று பணமன்றி ஓர்அணுவும் அசையாது


நிறைய பணம் வேண்டும் என்று உழைப்பவரை இன்று பேராசை பிடித்தவன் என்று யாரும் இகழ்வதில்லை மாறாக பெருமுயற்சிக்காரன் என்று போற்றுகிறோம். அப்படி முயற்சித்து வெற்றி பெற்றவர்களின் சூத்திரங்களையும் கற்க முயல்கிறோம். ராபர்ட் கியசாகி (69) என்ற நான்காம் தலைமுறை ஜப்பானிய-அமெரிக்கரும் அப்படியொரு பணம் சேர்க்கும் வழியறிந்த வல்லவர். அவர் பெற்ற இன்பத்தை - பொருளாதாரச் சுதந்திரத்தை - இவ்வுலகமும் பெறவேண்டும் என்று கடந்த இருபதாண்டுகளாக வரிசையாக புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறார். அவற்றில் இரண்டை நான் வாசித்திருக்கிறேன். இக்கட்டுரை அவற்றை முன்வைத்து எழுதப்பட்டது.

கியசாகி பொருளாதாரச் சுதந்திரம் என்றழைப்பது தினப்படியோ, வாராவாரமோ, மாதாமாதமோ வேலை செய்த சம்பளத்தில்தான் வாழ்க்கை நகரவேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லாமல் இருக்கும் நிலைமையைத்தான். இவர் உலகப்பணக்காரரல்ல; சொத்துமதிப்பு 80மில்லியன் டாலர்கள்தான். ஆனால் இன்று காலை எழுந்து மனம் விரும்பும் செயல்களைச்செய்ய அதிலிருந்து வரும் வருமானம் தாராளமாகப் போதும். பணம் சர்வவல்லமை வாய்ந்ததென்றால் அது தன்னைத்தானே பெருக்கிக்கொள்வதும் நியாயம்தான் அல்லவா?


இவருடைய Rich Dad Poor Dad புத்தகம் விற்பனையில் பல சாதனைகளைப் படைத்தது. சில ஆண்டுகளுக்குமுன் அதைப்படித்தபோது முதலீடு, வருமானம், கடன் போன்ற பொருளாதாரம் சம்பந்தப்பட்ட வார்த்தைகளின் மேல் தெளிவுகள் கிடைத்தன. பல சமயங்களில் சொற்கள் மிகவும் பழகிவிட்டதால் அதன் அடிப்படையான பொருளை அறியாமலே பயன்படுத்திக்கொண்டிருப்போம். கியசாகியின் அணுகுமுறையில் முக்கியமான அம்சம் அதிகப்படியான ஆசையைக்காட்டி, தாமதிக்காமல் உடனே பணத்தை அதில் போடுங்கள், இதில் போடுங்கள் என்று பரிந்துரைப்பதில்லை. எந்த உழைப்பும் தேவையில்லை, ஒரே மாதத்தில் மில்லியனராகலாம் என்றும் MLM-காரர்கள் போல் அடித்துவிடுவதில்லை. 

கண்மூடித்தனமான முதலீடு ஆபத்தானது. அப்படி கையைச்சுட்டுக்கொண்டோர் நம்மில் அனேகம். ஒரு முதலீடு எப்படி வருமானம் ஈட்டுகிறது என்கிற அடிப்படை தெரியாமல், அந்த முதலீட்டைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உணராமல், முக்கியமாக வரலாற்றில் எப்படியெல்லாம் எந்த முதலீடு ஏற்ற இறக்கங்களுக்கு ஆட்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் பொருளாதாரச் சுதந்திரம் அடைகிறேன் பேர்வழி என்று களத்திலிறங்குவது தற்கொலையே. மீண்டும் மீண்டும் கியசாகியின் புத்தகங்கள் வலியுறுத்துவது அந்த நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வதற்கான கற்றல் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கவேண்டும் என்பதைத்தான். 


பட்டம் பெற்று, பணியிற்சேர்ந்து, பதவிவுயர்வுகளைப் பெற்றுவருவதால் மட்டும் ஒருவரை financial literacy உள்ளவர் என்று சொல்லவியலாது. பெரும் பணக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் ஆகிய இருவர்தான் பொதுவாகக் குடும்பத்தின் முதலீடு, வருமானம், வரவு-செலவுத்திட்டம், எதிர்காலம் ஆகியவற்றைப்பற்றிப் பிள்ளைகளிடம் அறிமுகம் செய்கின்றனர். இதில் சிறிய அளவில் சுயதொழில் செய்பவர்கள் இதைப்பேசுவதே குடும்பம் நிலையான வருமானமில்லாமல் படும் கஷ்டத்தை விளக்கி, மாதவருமானம் பெரும் வேலையே நல்லது என்பதைப் புரியவைக்கத்தான். பெரும்பான்மையாக இருக்கும் மற்றவர்கள் பணத்தைப்பற்றிப் பிள்ளைகளிடம் பேசுவதையே பாவமாகக்கருதித் தவிர்த்துவிடுகிறார்கள். பள்ளிப்பாடங்களிலும் பணம் சேர்ப்பதன் முறைகள், வாய்ப்புகள் குறித்த எந்த அறிமுகமும் கிடையாது. 

இந்த சூழ்நிலை நமக்குத்தந்திருக்கும் ஒரே பாடம் - படி, வேலைக்குசேர், சம்பாதி, அதில் கொஞ்சம் சேமி, பதவிவுயர்வுகள் வரும், மேலும்கொஞ்சம் சேமி, மாதச்செலவுகளைத் திட்டமிடு, ஓய்வுபெறச் சேமி என்பதுதான். இச்சிந்தனை ஒரே நேர்க்கோட்டில் இருப்பதாலும், பெரிதாக ரிஸ்க் இல்லாததாலும், பெரும்பாலானவர்கள் செய்வதாலும், மற்ற பணமீட்டுமுறைகளைக் கற்க அவசியமில்லா சோம்பேறித்தனத்திற்கு தோதுவாக இருப்பதினாலும் இச்சாலை காலத்தால் சோதித்தறியப்பட்ட பொற்சாலையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் என்ன ஏதென்றே தெரியாமல், பொத்தாம்பொதுவாகக் கடன் வாங்குதல் கெட்டது; கடனட்டைகள் அவசியமில்லாதது போன்ற அரை உண்மைகளையும் ஏற்றுக்கொண்டுவிடுகிறோம்.

கியசாகி மூன்று விதமான (primary, secondary and tertiary) பணமீட்டும் அடிப்படைகளை முன்வைக்கிறார். இது அவர் க்ரிஸ் மார்ட்டென்ஸன் என்பாரின் புத்தகத்திலிருந்து பெற்றுக்கொண்டது. Primary wealth என்பது தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், நீர்மத்தங்கம் எனப்படும் பெட்ரோலியம் போன்றவை. Secondary wealth என்பது இக்கனிமங்களை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை உருவாக்குவதும், அவ்வுருவாக்கத்தில் ஈடுபடுவதால் ஈட்டப்படும் வருமானமும். Tertiary wealth என்பது பங்குகள், பாண்டு பத்திரங்கள் போன்ற தன்னளவில் மதிப்பற்ற ஆனால் ஊகத்தால் மதிப்பேற்றப்பட்ட விஷயங்கள். கியசாகியின் அணுகுமுறை primary மற்றும் secondary வளங்களை அடிப்படையாகக்கொண்டு வருமானம் ஈட்டுவதைத்தான். வாடகை வருமானம், தங்கம், வெள்ளியில் முதலீடு போன்றவற்றை சிலாகித்துப்பேசுகிறார். தன் சொந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார். தான் புத்தகங்கள் எழுதி அதன்மூலம் வருமானமீட்டுவதைச் சுட்டிக்காட்டி அறிவுசார் சொத்துகளின் மூலமான வருமானத்தையும் கவனத்தில் கொள்ளச்சொல்கிறார். 

உத்தரவாதமான வேலை (job security) என்ற சிந்தனையை மாற்றி பொருளாதாரச் சுதந்திரம் (financial freedom) என்ற எண்ணத்தை வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். கண்கள் எவ்வளவுதூரம் பார்க்கும் என்பது மூளையில் முடிவுசெய்யப்படுவதால் குறுகிய வட்டத்துக்குள் சிக்காத சிந்தனையோட்டம் பணம் சேர்ப்பதற்கு அடிப்படையானது. அப்போதுதான் கண்முன்னால் கிடக்கும் வாய்ப்புகள் துலக்கமாகத் தெரிய ஆரம்பிக்கும். 

எதையும் சிறு அளவில் செயல்படுத்திப்பார்த்து அதன் சாதக பாதகங்களை அறிந்துகொள்வது முதலீட்டில் ஒரு நல்ல முறை. இவ்வாறு செய்யாமல் எடுத்த எடுப்பில் பெரிய அளவில் தொழில் செய்ய இறங்கி, போட்ட முதலையும் தோற்றவர்களை 'அகலக்கால்' வைத்துவிட்டதாக ஊரில் சொல்வார்கள். இவரது சமீபத்திய புத்தகமான Second Chance-ல் முன்னூற்றைம்பது பக்கங்களை கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்று பகுதிகளாகப்பிரித்து, அதில் சுமார் 60% கடந்தகாலத்துக்கும், 10% நிகழ்காலத்துக்கும், மீதி 30% எதிர்காலத்துக்கும் ஒதுக்கியிருக்கிறார். கடந்தகாலத்தின் பொருளாதாரப்பாடங்களை எவ்வளவு துல்லியமாக அளந்து, பிரித்தறிந்துகொள்கிறோமோ அவ்வளவு துல்லியமாக எதிர்காலத்தை கணிக்கமுடியும் என்பது இவரது அசைக்கமுடியா நம்பிக்கை.


இவர் கணக்குப்படி 2016-ம் ஆண்டையொட்டி மீண்டுமொரு பொருளாதாரச்சுணக்கம் ஏற்படும், அது முன் வந்தவைகளைக் காட்டிலும் தீவிரமாக இருக்கும். எனக்குத்தோன்றுவது என்னவெனில் இவர் சொல்வது நடக்குமா நடக்காதா என்பது தவறான கேள்வி; நடந்தாலும் நடக்காவிட்டாலும் இதுபோன்ற மோசமான பொருளாதாரச்சூழ்நிலைகள் ஏற்பட்டால் - ஒருவேளை வேலையே போய்விட்டாலும் - எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று நம்மைக் கேட்டுக்கொள்வதே சரியான கேள்வி. கியசாகி சொல்வதுபோல் கடினமான கேள்விகளைக் கேட்காமல் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருப்பதை மாற்றிக்கொள்வதே மாற்றத்தின் முதற்படி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக