சுபாஸ் அனந்தன் என்ற பெயர் கேள்விப்படாத சிங்கப்பூர்வாசிகள் இருக்கமாட்டார்கள். நீதித்துறை வட்டாரங்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை உழைத்து உருவாக்கியவர். கிரிமினல் வழக்குகளைக் கையாள்வதில் ஆகத்திறமையான வழக்குரைஞர் என்று பெயர்பெற்றவர். சுமார் 2500 வழக்குகளைத் தன் வாழ்நாளில் இவர் கையாண்டிருக்கிறார். எந்த வழக்கிற்கும் விவரங்களைக் குறித்துக்கொண்டுபோய் வாதிட்டது இல்லை. அவ்வளவு அபாரமான நினைவாற்றல். இதில் ஒருமுறை நீதிபதி தீர்ப்பில் செய்த கோளாறையும் சுட்டிக்காட்டி அதில் பிழைதிருத்தம் செய்திருக்கிறார். இறுதி ஆண்டுகளில் உடல் நலம் மோசமடைந்தபோது, வேண்டுமென்றால் அமர்ந்த நிலையிலேயே வாதங்களை எடுத்து வைக்கலாம் என்று நீதிபதிகளால் வழங்கப்பட்ட சலுகையை ஏற்கமறுத்த சுபாஸ், அப்படியொரு நிலை வந்தால் அன்றோடு தன் வாதாடுவதை நிறுத்திக்கொள்வேன் என்று சொல்லிய அசாதாரண தொழில்பக்தி உள்ளவர்.
தன் 67ம் வயதில் 2015ல் மறைந்த இவர் 1947ல் கேரளத்தில் பிறந்தவர். இவருக்கு ஒரு வயதாவதற்குள்ளேயே பெற்றோர்கள் அன்றைய பிரிட்டிஷ் காலனியான சிங்கப்பூருக்குப் பணியின் நிமித்தம் புலம்பெயர்ந்துவிட்டார்கள். பிறகு வளர்ந்தது, படித்தது எல்லாம் சிங்கப்பூரில்தான். பெற்றோர்கள் இவரை மருத்துவராக்க ஆசைப்பட்டு சென்னைக்கு அனுப்பினாலும் சென்னையோ மருத்துவமோ தனக்குத் தோதுப்படாது என்று படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு சிங்கப்பூர் திரும்பியவர். பிறகு சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். வழக்குரைஞரான ஆரம்பகாலத்தில் போலீஸாரிடம் முறைத்துக்கொண்டதால் இவரை வேண்டுமென்றே நிழல் உலகத்துடன் தொடர்புள்ளவர் என்று ஒன்பது மாதங்கள் சிறையில் தள்ளியிருக்கிறார்கள். பிறகு நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டது மட்டுமின்றி அதிகாரத்தைத் தவறாகப்பயன்படுத்திய போலீஸ் அதிகாரிக்குப் பணிநீக்கமும் கிடைத்திருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பொய்வழக்கென்று புரியாமல் ஏற்கனவே சிறையிலிருந்த உண்மையான நிழலுலக குழுக்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பிரச்சனை வரும்போது இவர் 'வக்கீல் தாதா' என்பதால் இவரை நாடுவதும் இவரும் அவர்களைச் சமாதானப்படுத்தி வைப்பதும் நடந்திருக்கிறது!
தேசிய பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் என்ற முறையில் இவருடைய பேச்சும் அதைத்தொடர்ந்த நேர்காணலும் அடங்கிய நிகழ்ச்சி 2011ல் அதே பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை நேரடியாகக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சுபாஸ் ஒரு மகத்தான ஆளுமை என்பதை நன்கு உணரமுடிந்தது. ஒரு கேள்விக்குக்கூட அவர் சுற்றி வளைத்து பதில் சொல்லவில்லை. நம்பர் ஒன் வழக்குரைஞராக இருப்பதன் ரகசியம் என்ன என்ற கேள்விக்கு, 'நான் நம்பர் ஒன்னா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒருவேளை அது உண்மையென்றால் அதன் ரகசியத்தை உங்களிடம் வெளிப்படுத்த விரும்பவில்லை' என்று சொல்லிக் கலகலப்பூட்டினார். இக்காணொளி முழுமையாக யூட்யூபில் கிடைக்கிறது. அவரது பெயரை ஆங்கிலத்தில் (Subhas Anandan) யூட்யூபில் தேடினால் முதலில் கிடைக்கும் காணொளியும் இதுவே. கைது செய்யப்படுபவர்கள் தீர்ப்பு வருவதற்கு முன்னரே போலீஸாரால் குற்றவாளிகளாக நடத்தப்படும் விஷயங்களை சுபாஸ் விளக்கிக்கொண்டிருந்த இடத்தில் பேட்டி கண்ட சதாசிவம்கூட 'இவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறீர்களே, இதனால் ஏதும் உங்களுக்குத் தொல்லைகள் எழாதா?' என்று வினவினார். 'நான் இங்கு சொன்னதையெல்லாம் இரண்டு வருடத்துக்குமுன் புத்தகமாகவே எழுதி வெளியிட்டிருக்கிறேன். இதுவரை அப்படி ஏதும் எழவில்லை' என்று அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்தார் சுபாஸ். அந்த பதிலே அவரது The Best I Could புத்தகத்தை வாசிக்கத்தூண்டியது.
சாதாரணமான குடும்பத்தில் பிறந்த சுபாஸ் தன் திறமையால் மட்டுமே பணமும் புகழும் சம்பாதித்தவர். இவரின் வாத நுணுக்கங்கள் பிரமிக்கச் செய்பவை. உதாரணத்துக்கு ஒன்று. அரைக்கிலோ போதைப்பொருள் கடத்தியதால் மரணதண்டனை விதிக்கப்பட இருந்த ஒருவருக்கு 'pure cannabis more than 500g' என்றிருந்த சட்டத்தின் வரியில் 'pure' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, குற்றவாளி கொண்டுவந்தது முற்றிலும் சுத்தமான கஞ்சா அல்ல என்பதை நிரூபித்து ஓர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். எந்த மோசமான குற்றத்தைச் செய்த ஒருவனுக்கும்கூட திருந்திவாழ ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும் என்பது சுபாஸ் தனக்குத்தானே வகுத்துக்கொண்ட கொள்கை. அதில் இறுதிவரை விடாப்பிடியாக இருந்திருக்கிறார். முன்னாள் கைதிகள் மறுவாழ்வுக்கும் கல்விக்கும் உதவிசெய்யும் 'மஞ்சள் நாடா நிதி' கூட சுபாஸ் மறைவிற்குப் பிறகு அவரது பெயரில் வழங்கப்படுகிறது என்பதை வைத்துப் புரிந்துகொள்ளலாம், இவர் குற்றவாளிகளின் மறுவாழ்வு குறித்துக் கொண்டிருந்த அக்கறையை. எந்த வழக்கையும் மறுக்காமல் ஏற்கும் சுபாஸ் அதேநேரம் ஒப்புக்கொண்டுவிட்ட ஒரே காரணத்துக்காக நடத்திமுடித்தே தீரவேண்டும் என்கிற கறாரான கொள்கையில்லாதவர். கட்சிக்காரர் ஒத்துழைப்பு குறந்தாலோ அல்லது தன்னால் இனி கட்சிக்காரருக்குப் பயனேதுமில்லை என்ற நிலை வந்தாலோ வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டும் வந்திருக்கிறார்.
முன்னாள் சட்ட அமைச்சர் பேராசிரியர் ஜெயக்குமார் அவர்களின் சமீபத்திய புத்தகத்தில்கூட (Be at the table or Be on the menu) சுபாஸ் பற்றிய குறிப்பு உண்டு. சுபாஸ் ஜெயக்குமாரின் மாணவர். சட்டக்கல்வி முடிந்தபின் எந்த வழக்குரைஞரிடமும் பயிற்சிக்கு சேராமல் காலம் கடத்திக்கொண்டிருந்த சுபாஸை அழைத்துத் தன் நண்பரிடமே சேர்த்துவிட்டிருக்கிறார். அப்போது அவர் தன் நண்பரிடம் தொலைபேசியில் சுபாஸைப்பற்றிக் கூறிய அறிமுக வார்த்தைகள்; "திறமையானவன் ஆனால் அடிக்கடி ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொள்வான்". ஜெயக்குமாரின் அந்த நண்பர் பின்னாளில் சிங்கப்பூர் தலைமை நீதிபதியான ச்சான் ஸெக் ஸியோங். ஜெயக்குமார் சொன்னதைப்போல சுபாஸ் தன் பள்ளி, கல்லூரி நாட்களில் நடந்த பல சம்பவங்களை விவரிக்கையில் அதில் வம்புவழக்குகள் நிறைந்தே இருக்கின்றன.
அடிக்கடி ஊடகங்களில் வெளிப்பட்ட சுபாஸ் ஒரு விளம்பரவிரும்பி என்ற விமர்சனம் இருந்தது. ஆனால் பொதுவாக கிரிமினல் வழக்குகள் மீது மற்ற வழக்குகளைக் காட்டிலும் மக்கள் கொள்ளும் ஆர்வமும், ஊடகங்கள் அவற்றை மேலும் பிரபலப்படுத்துவதுமே அவ்வழக்குகள் தொடர்புடைய வழக்குரைஞர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகக் காரணம் என்று விளக்குகிறார் சுபாஸ். தான் வாங்கிய முதல் விலையுயர்ந்த காரில் தந்தையை அழைத்துச்சென்ற போது தந்தை காரின் குளிரூட்டியை நிறுத்திவிடச் சொன்னாராம். காரணம் கேட்டதற்கு அதிகம் பெட்ரோல் செலவாகும் என்று சொல்லியிருக்கிறார். உங்கள் மகனால் இன்று அதற்கான கூடுதல் செலவைச் சமாளிக்கமுடியும் என்று சொல்லித் தந்தையை சுபாஸ் சமாதானப்படுத்தியது போன்ற நெகிழ்ச்சியான நிகழ்ச்சிகளையும் நூலில் எழுதியிருக்கிறார்.
சிறந்த விளையாட்டு வீரராக நல்ல உடல்நலத்துடன் பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்த சுபாஸ் பின்னாளில் புகைப்பழக்கத்துக்கு ஆளானார். ஒரு நாளைக்கு எழுபது சிகரெட்டுகள் வரை புகைத்துக்கொண்டிருந்ததால் உடலின் அனைத்து பாகங்களும் மெல்லப் பழுதடைந்து அனைத்து வியாதிகளும் படிப்படியாக வந்துசேர்ந்தன. இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்பிலும், தினசரி சுமார் 25 விதமான மருந்துகளை உட்கொண்டும், வாரத்துக்கு மூன்றுமுறை 4 மணி நேரம் நீளும் டயாலிஸிஸ் செய்தும்தான் வாழ்நாட்களை நீட்டிக்கவேண்டியிருந்தது. அந்நாட்களில் அவர் சொல்லச்சொல்ல எழுதப்பட்ட அவரது இரண்டாவதும் இறுதிப்புத்தகம் It's easy to cry. இன்னூல் வெளியானபோது பரபரப்பாக விற்பனை ஆனதுடன் நூலகங்களில் இருந்த அனைத்து பிரதிகளும்கூட இரவல் வாங்கப்பட்டுவிட, முன்பதிவு செய்து காத்திருப்போர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வந்தது. சுபாஸின் வாழ்க்கைக்கும் வார்த்தைகளுக்கும் சிங்கப்பூர்வாசிகள் அவ்வளவு மதிப்பளிக்கிறார்கள்.
'கலங்குவது எளிது' என்று தலைப்பிடப்பட்ட இப்புத்தகத்தில் தனது வழக்குரைஞர் தொழில் ஒன்றே வாழ்க்கையென்று சதாசர்வகாலமும் அதிலேயே செலவிட்டதை நொந்துகொள்கிறார். உடல் நைந்துபோன காலத்தில் தான் ஒருகாலத்தில் முன்னுரிமை அளித்திராத குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களே ஆதரவாக இருப்பதை உணர்ந்து இவர்களை முன்பு உதாசீனப்படுத்திவிட்டோமே என்று வருந்துகிறார். ஒன்றை இழந்துதான் ஒன்றைப்பெறவேண்டுமென்றால் எதை இழந்து எதைப்பெறுவது என்பது குறித்து கவனம் கொள்ளச்சொல்கிறார்.
எதையும் நேரடியாக உடைத்துப்பேசும் இவரது போக்கு தொழில்ரீதியாக நிரம்ப உதவியுள்ளதை இன்னூலில் காணமுடிகிறது. நீதிபதிகளின் பொறுமையைச்சோதிப்பது என்றுமே இவரது வழக்கமாக இருந்ததில்லை. ஒரு நல்ல பாயிண்டை எடுத்துக்கொண்டு அதையே சுற்றிச்சுற்றிப் பேசி நீதிபதிகளுக்குப் 'புரிய'வைப்பது வழக்குரைஞர்களின் வாதத்தில் வழக்கமான முறைமையாக இருக்கையில் இவர் அதே கால அளவில் தன் வாதத்துக்குச் சாதகமான அதிக பாயிண்ட்களை துண்டுதுண்டாக உடைத்துப்பேசிவிடுவதைத் தன் பாணியாகக்கொண்டு - நீதிபதிகளின் ரத்த அழுத்தம் ஏறாமல் பார்த்துக்கொண்டு - நல்லபெயரெடுத்திருக்கிறார்.
வளர்ந்துவரும் கிரிமினல் வழக்குரைஞர்கள் தங்கள் பணி உயிருடன் விளையாடும் ஆபத்துள்ளது என்பதை முற்றாக உணர்ந்து செயல்பட அறிவுறுத்துகிறார். இவர் அதைக் கடைசிவரை கவனமாகக் கடைப்பிடித்துவந்ததையும் காணமுடிகிறது. நீதிபதியொருவர், 'எந்த நம்பிக்கையும் இல்லாக வழக்குகளுக்கும்கூட சஞ்சலத்தை உண்டாக்கும் கூரிய வாதங்களை முன்வைப்பவர் சுபாஸ்' என்கிறார். நூறு சதமான முயற்சிகளும் தன் கிரிமினல் வழக்கில் செய்யப்பட்டாக வேண்டும் என்பதற்கு சுபாஸ் சொல்லும் காரணம் கவனிக்கத்தக்கது; வழக்கை வெல்வதோ தோற்பதோ ஒருபுறமிருக்க, ஒருவேளை கட்சிக்காரருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டால், அது தன் வாதத்தின் குறைகளால்தான் என்று தெரியவந்தால் அந்த குற்றவுணர்ச்சியை வாழ்நாள் முழுக்கச்சுமக்க வேண்டியிருக்கும் என்பதே தன் உழைப்புக்குக்காரணம் என்கிறார். ஏழைபாழைகளுக்கு காசுவாங்காமல் வாதிடுவதைக் கடைசிவரை கைக்கொண்டிருந்தவர் அவர். ஒரு சாதாரண கார்ப்பொரேட் வழக்குரைஞர் தனக்கிணையான ஒரு கிரிமினல் வழக்குரைஞரைக்காட்டிலும் அதிக ஊதியம் எளிதாகப்பெற்றுவிடக்கூடும் என்பதை எழுதும் இவர் ஆனால் அவற்றுக்கிடையேயான மனதிருப்தி ஒப்பிடமுடியாதது என்கிறார்.
இவர் கட்டாய மரணதண்டனைச் சட்டத்துக்குத்தான் எதிரியேயொழிய மரணதண்டனைக்கே அல்ல. சில குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை மட்டுமே நீதிபதி வழங்கவேண்டும் என்பது சிங்கப்பூரில் சட்டம். இம்முறையில் நீதிபதியின் கைகள் சட்டத்தால் கட்டப்பட்டுவிடுகின்றன என்பது இவர் வாதம். கடந்த நாற்பதாண்டுகளில் இச்சட்டங்களில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி தான் நம்பிக்கையுடனிருப்பதாக எழுதிகிறார். இம்மாற்றங்களிலும்கூட இவரது பங்கு பெரிதே.
கடவுள் இருப்பதாக நம்பும் இவர் அதேசமயம் கடவுள் நல்ல நீதிமான்தானா என்பதைச் சந்தேகிக்கிறார். மற்றவர்களுக்கு உதவிசெய்தே வாழும் சிறப்பான மனிதர்களும் மரணத்தருவாயில் படும் தாங்கொணாத்துயரங்களைக் கண்டபின் இந்த சந்தேகம் வலுக்கிறது இவருக்கு. இவர் சில நீதிபதிகளின்மேலும் சட்டத்தை மனிதாபிமானமில்லாமல் வரிக்குவரி பின்பற்றுவதாகக் கடுமையாக விமர்சித்தவர், கடவுளை விமர்சிப்பது குறித்து ஆச்சர்யப்பட ஏதுமில்லை. நீதிபதிகளின் தீர்ப்புகளின் நீளத்தையும் இவர் விமர்சித்ததுண்டு. இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேவையில்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் தீர்ப்பெழுதி, அதை யாரும் வாசித்துப்புரிந்துகொள்ள வழியில்லாமற்செய்துவிடுவதும், சிங்கப்பூரில் சிலசமயம் தண்டனைக்கான தேவையைக்கூட விளக்காத சின்ன தீர்ப்புகள் வருவதையும் எடுத்துக்காட்டி திருத்திக்கொள்ளச் சொல்கிறார்.
இன்னூலில் குறிப்பாகச் சொல்லப்பட்டிருக்கும் இவரது வழக்குகள் அனைத்தும் வாசிக்கவேண்டியவையே. வீம்புக்காக வழக்குத்தொடர்ந்து அதில் பணத்தையும் நேரத்தையும் கணக்கின்றிச்செலவிடும் சிங்கப்பூரர்கள் இருக்கும்வரை இங்கு வழக்குரைஞர்கள் கவலைப்படவேண்டியதில்லை என்றெழுதும் இவர் இவ்வழக்குகள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதைக் குறிப்பிடுகிறார். சில சமயங்களில் கவனமின்றி உதிர்க்கும் சில வார்த்தைகள் உயிருக்கு உலை வைத்துவிடும் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு வழக்கும் இன்னூலில் உண்டு.
சட்டம், நீதித்துறையில் சிங்கப்பூர் பிறந்தகாலம்தொட்டே வலுவான ஆதிக்கம் செலுத்திவரும் இந்திய இனத்தவரின் சாதனைகளில் சுபாஸ் சந்தேகமில்லாமல் மற்றுமொரு சிகரம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக