திங்கள், 3 ஆகஸ்ட், 2015

குடி உயர குடியைக் குறைப்போம்...

  "டாஸ்மாக்" என்ற நான்கெழுத்து இன்று கழகங்களுக்கிடையே கலகமாக மாறக் காரணாமாயிற்று. இதனை தோற்றுவித்து வளர்த்தெடுத்ததில் இரண்டு கழகங்களுக்கும் சரி சம பங்கு உள்ளது.

                                               (படம் நன்றி: கூகுளாண்டவர்)

இன்றைய அரசியல் களத்தின் தீவிரத்தின் பின்னணியில் ஒட்டரசியல் உள்ளது என்றபொழுதிலும், இன்றைய ஜனநாயக அரசியலின் நிலைமை இதுவே, ஆக யாம் இப்பொழுதாவது அரசியல் கட்சிகள் போர்கொடியை தூக்கியதே நலம் எனப் பார்க்கின்றோம்.

ஏன் மதுவை ஒழிக்கவேண்டும்?
தமிழகத்திற்கு மது ஒன்றும் புதிது அல்ல, காலம்காலமாகவே மது அருந்தியவர்கள்தானே தமிழர்கள் என்ற வாதம் ஒருபுறம்.  ஆனால் இன்றைய சூழ்நிலை முன்னெப்பொழுதும் இருந்ததுமில்லை என்பதை அடித்துக் கூறமுடியும். 

முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாய் மதுக்கடைகள் இருக்கும், குடிப்பவர்களும் தர்மசங்கடத்துடனே குடித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களும் அரிது எனக்கூறமுடியாது எனினும் அது முறைகேடான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இன்றளவில் சாராய்க்கடைகளை அரசாங்கமே ஏற்று நடத்துவதின் மூலம் குடிக்கும் மக்களிடையே எந்தவிதமான குற்றஉணர்ச்சியும் இல்லை. 

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பொதுப் பேருந்துகளில் மது அருந்திவிட்டு ஏறினால், நடத்துனர் மற்றும் பயணிகள் அருவெறுப்புடன் நடத்துவர்,  ஆனால் இன்று எல்லா பேருந்துகளிலும் மதுவின் நெடியுடனே பயணம் செய்கின்றோம்;  பயணிகளும் நடத்தனரும் ஒதுங்கிச் செல்கின்றனர் என்பதன் மூலமே டாஸ்மாக்கின் முழுவீச்சும் நமக்குப் புரியவரும், அதனால் பெண்களும், குழந்தைகளும் அனுபவிக்கும் தொல்லைகள் ஏராளம். 20 வருடங்களுக்கு முன்பு  இளம் தலைமுறைகள் ஏதாவது நண்பர்களின் திருமண பார்ட்டி என்று, அனைவரும் தூங்கிய பிறகு யாருக்கும் தெரியாமல் வாங்கி வந்து எப்பொழுதாவது குடித்தனர், ஆனால் இன்றைய வரும் தலைமுறை எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி குடிப்பழக்கத்திற்கு எளிதில் ஆளாகிறார்கள். 

கள்ளச்சாராயம் தொல்லை குறைந்திருக்கிறது என்கிறார்கள், இவர்கள் காய்ச்சுவது அய்!? விற்பது நல்ல சாராயமா என்பது கேள்வி, நமக்கு எதுக்கு பொல்லாப்பு... 

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்பதுபோல் அரசாங்கத்தினை எதிர்பாராமல் குடியை நம் சகோதரர்களே கைவிடுவது நல்லது.

கள்ளுண்ணாமை பற்றி வள்ளுவப் பெருந்தகையும் ஒர் அதிகாரம் எழுதி வைத்துச் சென்றுள்ளார் :) தமிழர்களைத் திருத்தவே முடியாது என்பது அவருக்கு அப்பொழுதே தெரிந்திருக்குமோ...

பாரிசை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Organization for Economic Cooperation and Development (OECD)-ன் அறிக்கை  பின்வருமாறு கூறுகிறது. 1992 முதல் 2012 வரை 20வருடங்களுக்குள் இந்தியாவின் குடிப்போர் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 40 நாடுகள் கொண்ட அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் ரஷ்யா, எஸ்டோனியாவை அடுத்து இந்தியா மூன்றாவதாக முன்னேறியுள்ளது, பின்தொடர்ந்து சீனா, இசுரேல், பிரேசில் வருகிறது.  அந்த அறிக்கை 4சதவீதம் தினக் குடிகாரர்கள் என்றும், விரைவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை எட்டிவிடும் என்றும் கூறுகிறது. அவ்வ்வ்வ்... எத்தனை கைப்புள்ளங்க படுக்கையறையில் அடி வாங்கப் போறாய்ங்களோ, விடுறா விடுறா இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில் சகஜம்பா...

தமிழகத்தில் 6823 மதுக்கடைகள் உள்ளது, அதாவது இன்றைய நிலையில் ஏழு கோடி மக்கள் தொகையில் ஒவ்வொரு 10500 பேருக்குக்கும்  ஒரு சாராயக்கடை, மேலும் தமிழகத்தின் ஒட்டுமொத்த பரப்பளவான 130,000சகிமீட்டருக்கு, 20சதுரகிமீட்டர் சுற்றளவில் ஒருகடை என்ற வீதத்தில் உள்ளது.

நம்மை விட பெரும் குடிகாரர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த கேரளாவில் 700சொச்சம் கடைகளே உள்ளது (3.5கோடி மக்கள்தொகை) அதாவது 45000 பேருக்கு ஒரு சாராயக்கடை. அதையும் 2023ம் ஆண்டு வாக்கில் முழுவதும் குறைக்கப் போறாங்களாம், ஏற்கனவே அங்கே விற்கும் சாராயத்திலே ஆல்கஹாலின் அளவை குறைத்துவிட்டார்கள் என்று சேட்டன்கள் புலம்புகின்றனர்...

இப்ப கூறுங்க மக்களே டாஸ்மாக்கின் நெடி எப்பூடி என்று...

கொஞ்சம் மது, கொஞ்சம் அரசியல்:

2011ல் நமது எதிர்கட்சி நண்பர்கள் நம்மிடம் கோபப்பட்டனர், அவர்கள் தேர்தலில் வீழ்த்தப்பட்டதற்க்காக. குறிஞ்சியின் எண்ணம் மட்டுமில்லை, அவர்களது அதிகாரப்பூர்வ வளைத்தளத்திலேயே 96முதல் 01 வரை இருந்த கழக ஆட்சிதான்  கழக ஆட்சியினுள் சிறந்தது என்பதனை   அவர்களே ஏற்றுக்கொண்டு, அவர்களது பெரும்பாலான சாதனைகள் அந்த வருடங்களிலே செயற்படுத்தியதாய் ஒத்துக்கொண்டுள்ளனர்.  பின்ன நம்ம மேல பாஞ்சா எப்புடி உடன்பிறப்புகளே... சரி ப்ரியா விடு மாமூ... அடுத்ததபா பார்த்துக்கலாம்...

மின்சாரத்திற்க்காக மட்டுமில்லை மதுவிற்கு எதிராகவும்தான் அன்றைய ஆட்சி எதிர்ப்பினை சம்பாதித்தது.

இரண்டொரு வாரங்களுக்கு முன்னர் எதிர்கட்சியினரின் முதல்வர் வேட்பாளரும் நம்ம பிரதமர் மாதிரி தேர்தல் வாக்குறுதிகளை இளைஞர்களிடம் கேட்டார், அதில் நமது நண்பர்களும் மதுவிலக்கு, ஊழல், வேலைவாய்ப்பு, கல்வி போன்ற திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தனர். அதுக்குப்பிற்குதான் தல வேகமெடுத்தது என்பது எமது எண்ணம்..

உடனே ஆளுங்கட்சி நண்பர்கள் மீண்டும் எதிர்கட்சி முத்திரையை எம்மீது குத்தாதீர்கள் நாங்க எப்பொழுதும்... சோத்துக்கட்சிதான் :)

01 முதல் 06 வரை இருந்த அதிமுக ஆட்சியும் அதுபோன்றே சிறப்பாக செயற்பட்டு வந்தது, லாட்டரி ஒழிப்பு போன்ற திட்டங்கள் நிறைவேறியது இந்தக் காலக்கட்டத்தில்தான் என்பதை நியாபகப்படுத்துகின்றோம். அப்பொழுது கசானாவை நிரப்ப எதிர்கட்சிகள் கோலேட்சிய மணல் குவாரி, டாஸ்மாக் போன்ற திட்டங்கள் அரசின் வசமாகியது. 2006ல் ஆட்சி வீழ்ந்தவுடன் பெரிய அம்மா, சின்ன அம்மாவுடன் தங்கஆலையினில் பங்குதாரராக இருந்ததினால்தான் ஆட்சிக்கு கெட்டபெயர், அதனால்தான் வீழ்த்தப்பட்டோம் என்று கோபப்பட்டதாக உறுதி செய்யமுடியாத தகவல் ஒன்று உழாவியது... எது எப்படியோ அடுத்த வந்த ஆட்சி மதுவை படிப்படியாக குறைப்போம் என்பதை செயற்படுத்த தவறியதால் 2011ல் மீண்டும் இழந்த ஆட்சியை பிடிக்க முந்தைய ஆட்சியின் செயற்பாடுகள்தான் காரணமாயிற்று; புரியவேண்டியவர்கள் புரிந்தால் சரி...

இன்றும் ஆட்சியிலில்லாமல் எதிர்கட்சி வரிசையிலிருக்கும் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் நீண்ட காலமாக தலைமையிடத்தில் தொடர்ந்து இருப்பதால் எந்த ஆட்சி வந்தாலும் அரசின் திட்டங்களின் மூலம் அவர்களின் வணிக லாபம் அதிகமாகவே இருக்கும்வகையில் பார்த்துக்கொள்வர். அந்த வகையில் டாஸ்மாக் சப்ளையிலும் அவர்களின் பங்கு 50சதவீதத்துக்கும் மேலே. ஆனால் வழக்கம்போல் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் அவர்தம் மதுவிலக்கு அரசியல் அறிவிப்பால், இன்றைய தமிழினத்தின் ஆதங்கம் ஒட்டுமொத்தமாய் ஆளுங்கட்சிக்கு எதிரானதாய் மாறிப்போகச் செய்துள்ளார்,  அந்த வகையில் அவர் மதுஒழிப்பு அரசியலில் இன்று முன்னனியிலே உள்ளார்.  

இது புரியாமல் ஆளுங்கட்சி நண்பர்களும் அவர்தம் வலையிலேயே வீழ்ந்து, டாஸ்மாக்கிற்கு சாதகமாக பேசி வருவதால் நடுநிலையாளர்களிடம் எதிர்ப்பினையே சம்பாதித்துவருகிறார்கள். நேற்று இந்தப் பிரச்சினையை அரசியல்களமாக்கினார் ஒரு தலைவர், உடனே அவர் சிகரெட் பிசினஸ் பண்றாரு, அவரு யோக்கியமா என்கிற டயலாக்கு எல்லாம் அவரை வேண்டுமாயின் அரசியல் களத்தில் வீழ்த்தும் அது ஒருபொழுதும் உங்களுக்கு உதவாது,  நீங்கள் செய்யவேண்டியது நிதர்சனத்தினை உங்களது தலைமையிடத்து கொண்டுசெல்வதுதான் நண்பர்களே... பின்பு நீங்களும் எதிர்கட்சி நண்பர்களைப் போன்று ஆட்சி போனபிறகு நட்டநடுநிலைசென்டர்களாகிய எங்களைத் திட்டாதீர்கள் :)

ஒரேடியாக மதுவிலக்கு இன்றையளவில் சாத்தியமில்லை என்பது உண்மையே, ஆனால் தமிழகத்திற்கு 1450 மதுக்கடைகள் போதுமென்போம். சுமார் 100கிமீட்டர் சுற்றளவிற்க்கு (அ) தோராயமாக 50000 மக்கள்தொகைக்கு ஒரு கடை என்றளவிற்கு கொண்டுவருவோம். மதுவின் விலையையும் ஏற்றி, மதுக் கொள்ளவைக் குறைப்போம்.

சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை நம்ம நெட்டிசன்கள் கொட்டினர், அதில் டாஸ்மாக் வருமானம் அரசின் செலவில் 5சதவீதம் மட்டுமே என்று, அப்புறம் எதுக்குப்பா அத பிடிச்சி தொங்கிக்கிட்டு பெண்களிடமும் கெட்ட பெயர் சம்பாதிக்கனும்... விட்டுவிடுங்க.. யார் ஆட்சியில் இருந்தாலும், வந்தாலும் மதுவின் தாக்கத்தினை கட்டுப்படுத்துங்கள், வரும் காலம் வாழ்த்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக