வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

நான், என் காதல், என் காதலிகள் - பகுதி 15 : பாரதி - சித்தனா? பித்தனா?

மகாகவி, முண்டாசுக்கவி போன்ற சில அடைமொழிகள், சாதிகள் இல்லையடி பாப்பா, தேடிச்சோறு நிதந்தின்று போன்ற சில கவிதைகள், ஆங்கிலேயருக்கு பயந்து புதுச்சேரியில் வாழ்ந்தார், யானையால் மிதிபட்டு இறந்தார் போன்ற ஒற்றைவரி வரலாற்று(?)ச் செய்திகள் ஆகியவற்றால் மட்டுமே இளம் தலைமுறையால் அறியப்பட்டிருந்த பாரதியை ஒரு துடிப்பான ஆளுமையாகப் பரவலாகத் தமிழ் மக்களிடம் அறிமுகப்படுத்தியதில் முக்கியப் பங்கு பாரதி திரைப்படத்துக்கு (2000) உண்டு. அடிக்கொருதரம் பாரதி பெருமையைப் பேசி அவர் யார் என்பதைத் தேடி வாசித்துப்பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தை வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு உண்டாக்கியதில் ஜெயகாந்தன் மற்றும் ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களுக்கும் கணிசமான பங்குண்டு.

ரா.அ.பத்மனாபன் எழுதிய 'சித்திர பாரதி', வ.ராமஸ்வாமி எழுதிய 'மகாகவி பாரதியார்' மற்றும் செல்லமாள் பாரதி எழுதிய 'பாரதியார் சரித்திரம்' ஆகிய மூன்று நூல்களைக் கடந்த மூன்று வருடங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வாசிக்க நேர்ந்தது. மேலும் காலச்சுவடு வெளியிட்ட பாரதி-125 இதழ், பாரதி ஆர்வலர்கள் மற்றும் கடும் விமர்சகர்கள் பலரும் எழுதிய தனிக் கட்டுரைகள் ஆகியவற்றை வாசிக்க வாசிக்க பாரதி மெல்ல மெல்ல வரலாற்றின் அதிமனிதனாக அல்லாமல் பலமும் பலவீனமும் கலந்து உயிர்த்துடிப்புள்ள மனிதனாகச் சிந்தையில் எழுந்து வந்தார். அதை முடிந்தவரை descriptive ஆகவும் analytical ஆகவும் பதிந்துவிட முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம். முன்குறிப்பிட்ட மூன்று பாரதி நூல்களைப் பற்றியும் அதை எழுதியவர்கள் குறித்தும் முதலில் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

சித்திர பாரதி (1957) நூல் '220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கைவரலாறு' என்ற உபதலைப்புடன் அதிகம் தெரிந்திராத சம்பவங்களுடனும் ஒளிப்படங்களுடனும் தொகுக்கப்பட்டுள்ளது. பாரதியின் நாற்பது வயதுக்கும் குறைவான (1882-1921) ஆனால் வீரியமிக்க வாழ்க்கை ஒரு சித்திரமாக மனத்திரையில் விரியும்படி எழுதப்பட்டுள்ளது. கடந்த வருடம் தன் 96ம் வயதில் மறைந்த ரா.அ.பத்மனாபன் பாரதி ஆய்வில் ஒரு முன்னோடி. பாரதியின் சமகாலத்தவர்களைத் தேடித்தேடித் தகவல்கள் சேகரித்தது முதல் அவரது எழுத்துக்களைத் தொகுத்தது வரை இவர் பங்கு முக்கியமானது.


'மகாகவி பாரதியார்' (1943) எழுதப்பட்டது வ.ரா. என்றறியப்பட்ட வ.ராமஸ்வாமியால். பாரதியின் சிஷ்யர். அவருடன் புதுச்சேரி வாசத்தின் (1908-18) கடைசி சுமார் மூன்று வருடங்களிலிருந்து கூடவே இருந்தவர். காந்தியவாதி. சுதந்திரப் போராட்ட வீரர். தமிழ்ப் பற்றாளர். உரைநடையைப் படிக்கப் படிக்கத் திகட்டாமல் எழுதும் வித்தை இவரிடமுள்ளது. காந்தியை யாரும் இடைஞ்சல் செய்யாமல் பார்த்துக்கொள்ள வாசலில் காவலுக்கு நின்ற இவரைத்தான் பாரதி 'என்ன ஓய்' என்று விலக்கியபடி உள்ளே புகுந்து 1919ல் காந்தியின் போராட்டத்துக்கு ஆசீர்வாதம் செய்தார். 

'பாரதியார் சரித்திரம்' எழுதிய செல்லமாள் பாரதிக்கு பாரதியின் மனைவி என்ற அறிமுகம் போதுமானது. 14 வயது பாரதிக்கு 7 வயதில் திருமணம் முடிக்கப்பட்டு 32 வயதில் விதவையாக இரு பெண் குழந்தைகளுடன் விடப்பட்ட வாழ்வில், 25 ஆண்டுகள் பாரதியின் மனைவியாக வாழ்ந்ததாகக் கணக்கு சொல்லலாமே தவிர மற்றபடி அதிக இடர்களையே சந்தித்திருக்க வேண்டும். 'எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கணவர்' என்று விசனப்படுகிற செல்லம்மா 'அவர் என் பொருட்டுப் பிறந்தவரல்ல என்பதை நான் பின்னால்தான் உணர்ந்து கொண்டேன்' என்றும் எழுதுகிறார். இந்த உணர்வு வந்தபின்னரே இப்புத்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும். பாரதியை மகா புருஷராக உயர்த்திப் பிடிக்கும் விதமாகவே இவர் எழுத்துக்கள் அமைந்துள்ளன. ஆயினும் மற்ற இரு புத்தகங்களில் பதிவாகாத சில விஷயங்கள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

பாரதியின் குணாதிசயங்களைப் படிப்படியாக ஆராய்வோம். முதலில் பணம் என்ற விஷயத்துக்கும் பாரதிக்கும் உள்ள தொடர்பைப் பார்க்கலாம். பாரதியின் தந்தை சின்னச்சாமி மிகுந்த அறிவாளியாக இருந்தும் அத்தனையையும் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் வீணடித்தார் என்பது பாரதியின் கோபம் என்று செல்லம்மா பதிவு செய்கிறார். ஆக அறிவுச் செயல்பாடுகளால் செல்வம் சேர்ப்பது என்ற கருதுகோளில் பாரதிக்கு உவப்பில்லை என்பது தெரிகிறது. இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். அவ்வளவு அறிவாளியாக இருந்தும், கவனமாகப் பணம் சேர்ப்பதில் குறியாக இருந்தும்கூடத் தந்தை இறுதியில் பணத்தைப் பலவிதமாக இழந்தே வந்ததைப் பார்த்து பணம் சேர்ப்பது என்பது முற்றிலுமாகத் தன் இயல்புக்குப் பொருந்தாத ஒரு காரியம் என்ற முடிவுக்கும் மிக இளவயதிலேயே பாரதி வந்திருக்கக்கூடும். எட்டயபுரம் ராஜா கொடுத்த 500 ரூபாயில் 485 ரூபாய்க்கு மூட்டை மூட்டையாகப் புத்தகங்கள் வாங்கிவிட்டு 15 ரூபாயை செல்லம்மா கையில் கொடுப்பதிலேயே அவரது போக்கு தெளிவாகப் புரிகிறது. சுமார் நூறாண்டுகளுக்கு முன் பவுன் 15 ரூபாய். இன்றைய கணக்குக்கு சுமார் ஆறரை லட்ச ரூபாய் உங்களுக்குக் கிடைத்தால் அதில் இருபதாயிரம் ரூபாயை மட்டும் மனைவியிடம் கொடுத்துவிட்டு மீதிப் பணத்துக்கு புத்தகங்கள் வாங்குவதை நினைத்துப் பாருங்கள். 'அழியும் செல்வத்தைக் கொடுத்து அழியாச் செல்வத்தை வாங்கி வந்திருக்கிறேன்' என்றும் கூறியுள்ளார். 

ஒரு வகையில் பணம் கையில் வந்தாலே பதட்டம் கூடிவிடும் ஒருவராக இருந்திருக்கிறார். உடனடியாக அதை எப்படியாவது செலவழித்துவிடுவது ஒன்றே அவரது குறிக்கோளாக இருந்திருக்கிறது. புத்தகங்கள் வாங்குவது, பதிப்பித்து வெளியிடுவது, விலையுயர்ந்த துணிகள் எடுத்துத் தைக்கத் தருவது, தையற்கூலியாகக் கேட்டதைக் காட்டிலும் மூன்று பங்கு தருவது, மற்றவர்களுக்குக் கேட்காமலே பணம் தருவது போன்ற சம்பவங்களை ஆதாரமாகக் காட்டலாம். பணமுள்ளவர்கள் அறிவுச் செயல்பாடுகளைப் பராமரிக்க வேண்டியது கடமை என்றும் அவர் நினைத்திருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாகப் பண வசதியை வைத்து மனிதர்களின் தரத்தை மதிப்பிடுகிறார்களே என்றொரு தருணத்தில் கடுப்பாகிக் கையில் பையிலிருந்த பணத்தையெல்லாம் வீதியில் வீசியெறிந்த சம்பவம் பாரதியின் பணப்பதட்டத்தை சந்தேகத்துக்கு இடமின்றி விளக்குகிறது. ஏனெனில் மனிதர்களின் குணத்துக்காகப் பணத்தை வெறுப்பது தர்க்கரீதியாக அவசியமில்லாதது. ஆகப் பணம் கையிலில்லாமல் வாழ்வது பாரதி வலிந்து தேர்ந்தெடுத்துக்கொண்ட ஒன்று. இன்னும் எவ்வளவு பணம் கிடைத்திருந்தாலும் அவர் அப்படியே வாழ்ந்திருப்பார் என்று சொல்லத் துணியலாம். வசதியாக வாழக்கூடிய அளவுக்குப் பல இடங்களிலிருந்தும் பாரதிக்குத் தொடர்ந்து பணம் வந்ததற்கான பதிவுகள், பாரதி செய்த பெரும்படியான செலவுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில் தமிழ் மண் ஒரு மகாகவியைப் பணத்துக்கு அலையவிட்டது என்ற கூற்று வலுவாக மறுக்கக்கூடிய ஒன்றே.


பணத்துக்கு அடுத்ததாக பயம் என்ற விஷயத்துக்கும் பாரதிக்கும் உள்ள தொடர்பைப் பார்த்துவிடுவோம். திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலைக்குக் குடும்பத்தினருடன் சென்றிருந்தபோது எல்லா மிருகங்களையும் கட்டித் தழுவவேண்டும் என்று விடாப்பிடியாக கவனிப்பாளரிடம் வாதாடி கரடி உட்பட அனேக மிருகங்களிடம் செய்துமிருக்கிறார். "ஏய் மிருகராஜா, நான் கவிராஜன் வந்திருக்கிறேன்" என்று சிங்கத்தின் பிடரியைக் கோதியிருக்கிறார். அதை உறுமச்சொல்லி வேடிக்கை பார்த்திருக்கிறார். குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிங்கத்தின் வாயில் கை வைப்பதை மட்டும் தவிர்த்துக் கொண்டாராம். இது நடந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையிடம் அடிபடுட்டு உடல் நலம் தேறிய பின்னரும் 'முதலில் யாரென்று தெரியாமல் அடித்துவிட்டது. இல்லையென்றால் அதன் காலடியில் அவ்வளவு நேரம் கிடந்தும் ஏன் அது என்னை மிதிக்கவில்லை?' என்றுதான் சொல்லியிருக்கிறார். அன்று யானை கொஞ்சம் சரியில்லை என்பது தெரிந்தேதான் அதன் அருகில் சென்றிருக்கிறார். தன் பசியைப் பொருட்படுத்தாது பறவைகள் பசியைப் போக்கியது, கழுதைக் குட்டியைக் கொஞ்சியது போன்ற சம்பவங்களையும் மேற்கூறிய சம்பவங்களையும் இணைத்து ஒட்டுமொத்தமாக வாயில்லா ஜீவன்களிடம் அன்பாக இருந்தார் என்ற முடிவுக்கும் வரலாம். அதைவிட இன்னொருபடி மேலேயும் போகலாம். அதாவது சிங்கம், கரடி, யானை போன்ற காட்டு விலங்குகளுக்கும் கழுதை, பூனை, பறவைகள் போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கும் இடையே பெரிய வேறுபாடுண்டு. அனைத்தையும் ஒன்றுபோல் பாவித்துப் பழகியதால் உயிர்பயம் பாரதிக்குக் குறைவாகவே இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வரலாம்.

ஆனால் சிறை செல்ல பயந்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. அதனாலேயே மீண்டும் மீண்டும் தன் மீதான கைது வாரண்டை ரத்துசெய்ய வேண்டுகோள் கடிதங்களை அரசர் முதல் அதிகாரிகள் வரை எழுதியிருக்கிறார். மெலிந்த தேகஸ்தராக இருந்தாலும் உடலை உறுதி செய்வதற்கு எப்போதும் முயன்று உடற்பயிற்சிகள் செய்து வந்திருப்பதாலும், உயிர்பயம் இல்லாததாலும் சிறைகளின் கடின உழைப்போ அல்லது சித்திரவதைகளோ பயமுறுத்தியிருக்காது என்று நம்ப விழைகிறேன். மாவீரன் நெப்போலியனுக்குப் பூனையைப் பார்த்தால் பயம் என்பார்களே அதுபோல சிறிய அல்லது மூடிய அறைகளில் பயப்படும் claustrophobia இருந்திருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் செல்லம்மாவின் ஒரு செய்தி இன்னுங்கொஞ்சம் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது. அதாவது பாரதி சுதந்திரத்தின் காதலர். சிறையில் அது பறிக்கப்பட்டு விடுவதை அவரால் தாங்க முடிந்திருக்காது என்பதே அவர் பாரதியின் சிறைபயத்துக்குக் கொடுக்கும் காரணம். ஒரு சம்பவத்தை இங்கு பொருத்திப் பார்க்கலாம். ஒரு நாள் கைகளை மடக்கிக்கொண்டும் இன்னொரு நாள் கைகளை விறைப்பாக வைத்துக்கொண்டும் பாரதி வினோதமாக நடந்துசெல்வதற்கு விளக்கம் கேட்ட நண்பரைக் கோபத்துடன் கடிந்துகொண்டுள்ளார். அதாவது சுதந்திரம் என்பது பாரதியைப் பொறுத்தவரை முற்றுமுழுதான தனிமனித சுதந்திரம். 

ஒருவேளை இவருடைய வைதீக சம்பிரதாயங்கள் மற்றும் சாதிக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போக்கும்கூட அவை தனிமனித சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்பதால் உண்டானதாக இருக்குமோ என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. பணம் குறித்த வெறுப்பையும் எந்த வேலையிலும் நிலைக்காத தன்மையையும் கூட இங்கு தொடர்புபடுத்திப் பார்க்கலாம். அரசருக்குக் கவிபுனைவது அவருக்கு மகிழ்ச்சியான செயல்தான் ஆனால் அதைத் தன் இஷ்டத்துக்குச் செய்யவியலாமல் நிர்ப்பந்தத்தினால் செய்ய வேண்டியிருந்ததே 'நரஸ்துதி' பிடிக்காமல் வெளியேறிய காரணமாக இருக்கலாம். ஆகத் தன் அனைத்துக் கொள்கைகளுக்கும் மேலாகத் தான் சுதந்திரமாக நினைத்ததைச் செய்வதை வைத்திருக்கும் ஒருவர் அதற்கு ஆபத்து வரும்போது மற்ற கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டாவது அந்த ஆபத்திலிருந்து விடுபடுவது பரவாயில்லை என்று நினைப்பதை யாரும் புரிந்துகொள்ளலாம். ஆனால் அது அவரை வெறும் கவிஞர் என்ற அளவில் மட்டுமே உறுதிசெய்யும். அதற்கு மேல் அல்ல. முதல் உலகப்போர் (1914-18) எப்படியும் பிரிட்டிஷ்காரர்களுக்கு பிரச்சினை உண்டாக்கி இந்தியா சுதந்திரமடையும் என்பது பாரதியாரின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கிறது. பத்துவருட புதுச்சேரி வாசத்தை (1908-18) முடித்துக்கொண்டு நடப்பது நடக்கட்டும் என்று பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் திரும்ப பாரதி முடிவு செய்தது அவர் எதிர்பார்த்தபடி போர் முடியாததால்தான் என்பதை வ.ரா.வின் மூலம் அறியமுடிகிறது.

அடுத்ததாக சமூக சீர்திருத்தம், சாதி சமத்துவம், பெண் விடுதலை எல்லாம் கொதித்துப் பேசியவர் தன் மூத்த மகளுக்கு பால்ய விவாகம் செய்ததும், இரண்டாம் மகளை வேறொரு சாதிக்காரர் தன் மகனுக்குத் திருமணம் செய்யக் கேட்டபோது மறுத்ததும் இவர் outright hypoceite-ஆ, வெறும் ஊருக்கு உபதேசியா அல்லது வேறு ஏதும் சமாதானங்கள் பதிவுகளில் கிடைக்கிறதா என்று பார்க்கலாம். கணவனுக்குப் பத்தடி பின்னால் மனைவி நடந்துசென்ற காலத்தில் 'பைத்தியங்கள் போகின்றன' என்ற பேச்சுக்களுக்கு நடுவே சரிசமமாகத் தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றவன் நிச்சயம் பெண் விடுதலையைக் குறித்த ஒரு hypocrite ஆக இருந்திருக்க முடியாது. மூத்த மகள் பால்ய விவாக விஷயத்தில் முடிவெடுப்பதில் தன்னைப்போலவே தன் மனைவி மற்றும் குடும்பத்தினர்களுக்கும் சம உரிமை இருப்பதாக பாரதி கருதியிருக்கலாம் ஆகவே விருப்பமில்லாவிட்டாலும் பெரும்பான்மை முடிவுக்கு இணங்கிவிட்டதாக ஒரு சமாதானம் கொள்ளலாம். வேறு சமாதானங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாம் மகள் விஷயத்தில் கிடைக்கிறது. நாராயணபிள்ளை என்ற இவருடைய நண்பர் தன் மகனுக்கு இவர் மகளைத் திருமணம் செய்யக் கேட்டதும் கோபம்கொண்டு, 'உனக்கு சாதி மறுப்பில் ஆர்வம் உண்மையென்றால் உன் மகனுக்கு ஒரு பறைச்சியைக் கல்யாணம் செய்துவை' என்று ஆவேசப்பட்டுவிட்டு பாரதி வீடு திரும்புகிறார். இந்த நாராயணபிள்ளை ஊரில் பெரும் செல்வந்தர். அவ்வூர் கோயில் அர்ச்சகரின் மனைவியைத் தன் வீட்டில் வைத்து 'பராமரித்து' வந்தாராம். அர்ச்சகரும் பெரிய இடத்து வம்புக்கு பயந்து கண்டும் காணாததுபோல் அனுசரித்து வாழ்ந்து வந்திருக்கிறார். அதுதான் இன்று தன் பெண்ணையே மருமகளாக்க அவருக்கு தைரியம் வந்த காரணமென்றெண்ணி அந்த அர்ச்சகரைப் பிடித்து அறைந்திருக்கிறார். பிரச்சனை பெரிதாகிவிட்டது. நாராயணபிள்ளை உரிமம் பெற்றுத் துப்பாக்கி வைத்திருப்பவர் என்று அறிந்ததும் இரவோடிரவாக கடயநல்லூரிலிருந்து காலிசெய்துவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றுவிடுகிறார்.



மீண்டும் சென்னை நண்பர்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்ததன் காரணமாகச் சென்னை சென்றதாக செல்லம்மா மழுப்பிவிட்ட இந்த இடம் சித்திரபாரதியில் விளக்கமாக இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கிடைப்பதாக நான் முன்னர் குறிப்பிட்ட சமாதானம் என்னவெனில் நாராயணபிள்ளைக் குடும்பத்தின் வரலாறு. அதாவது இன்னொருவர் மனைவியைத் தன் வீட்டில் அழைத்து வந்து வைத்துக் குடும்பம் நடத்தும் பண்புள்ள ஒரு குடும்பத்தில் ஒருவேளை அவர் ஐயராகவே இருக்கும்பட்சத்தில் கூட பாரதி தன் மகளைத் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டிருக்க மாட்டார் என்று வாதிடலாம். மேலும் சாதி வேற்றுமை பாராட்டமாட்டேன் என்ற போர்வையில் தன்னைவிட சாதி அடுக்கின் உயர்தட்டில் இருப்பவர்களையே குறிவைத்து சொந்தமாக்கிக் கொள்ளுவதையும் பாரதி கண்டு கோபமடைந்தார் என்றும் அவர் பதிலை எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்தது பாரதியின் சில குணாதிசயங்கள். அதில் ஒன்று காறித்துப்புவது! உரக்கப் பாடிக்கொண்டு தான் தங்கியிருந்த வீட்டில் கண்ட இடங்களில் காறித்துப்புவது வழக்கமாம். ஒருமுறை தன் மகளை எங்கோ வெளியில் செல்ல அழைக்க, பெண்கள் வெளியில் செல்லக்கூடாத இந்த நேரத்திலா என்று அவள் தயங்க, ஓங்கி ஒரே அறை. அதைத் தடுக்கவந்த மைத்துனருக்கும் சின்ன மாமனாருக்கும் காறித்துப்பல். பின்னர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டாராம். அதே நேரம் தன்னைத் தந்திரமாகப் பொய்சொல்லி அழைத்துச் சென்று போலீஸில் சிக்கவைக்க முயற்சித்தவரிடம் கூட சகஜமாகப் பழகும் 'பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே' குணமும் இருந்திருக்கிறது. அதாவது ஞானிக்கும் பித்தனுக்கும் இடையே ஒரு மெல்லியகோடுதான் என்பார்களே அந்தக்கோட்டின் மீதுதான் பாரதியின் முழுவாழ்க்கையும் ஆடி அடங்கியிருக்கிறது. அபின், கஞ்சா போதைப்பழக்கம் - சித்தர் போல் வாழ்ந்த - குள்ளச்சாமியார் என்பவரிடம் பயின்றிருக்கிறார். அதன் காரணமாகத் தன்னையும் ஒரு சித்தராகவே பாரதி கருதியிருக்கக்கூடும். கவிதை நினைத்தபடி வரவில்லையென்றால் தரையில் காலை ஓங்கி உதைத்துக்கொண்டு 'சொல்லாழி வெண்சங்கே' என்று கதறுவது. பின் சரியாக அமைந்துவிட்டால் அந்த போதையுடன் லாஹிரி வஸ்துக்களையும் ஏற்றிக்கொண்டு தன்னை மறந்து கடற்கரையில் இரவு முழுதும் படுத்துவிடுவது. இதெல்லாம் பாரதி புதுவையிலிருந்த பத்து வருடத்தில் என்றாவது சில நாட்கள் மட்டும் நடந்ததல்ல என்பது மட்டும் துலக்கமாகத் தெரிகிறது. இன்று நாம் கொண்டாடும் பாரதியின் கவிதைப் படைப்புகள் இக்காலகட்டத்தில் போதைக்கு நடுவே பிறந்ததுதான். பன்னிரு ஆழ்வார்கள் சேர்ந்தும் மொத்தமாக நாலாயிரம் பாடல்கள்தானா? நானொருவனே பாடுகிறேன் ஆறாயிரம் பாடல்கள் என்று சங்கல்பம் செய்துகொண்டு நாற்பது நாட்கள் மௌன விரதமிருந்து இயற்றிய பாடல்கள் மொத்தம் 66 மட்டுமே. அதோடு வேகமும் தணிந்துவிட்டது. இவரது மௌன விரதமும் விசித்திரமானது. அதாவது பாடல்கள் மட்டும் பாடுவார். வேறு பேச்சுக்கள் பேசமாட்டார். தேவைப்பட்டால் எழுதிக்காட்டுவார். பாரதிக்கு இளவயதிலேயே தலை முற்றிலுமாக வழுக்கையாகிவிட்டிருக்கிறது. இதை மறைக்கவே வால்விட்ட தலைக்கட்டு. ஆனால் நெருங்கிய நண்பர்கள்,  உறவினர்கள்கூட வழுக்கைத் தலையை பார்க்க முடியாதாம். தலைக்கட்டு, கருப்பு கோட்டுடன் குளியலறைக்குச் சென்று அதே தோற்றத்தில் மீண்டும் வெளியேறுவாராம். புதுச்சேரியிலிருந்து ஒருமுறை மீசையை வழித்துவிட்டு, தலைக்கட்டை எடுத்துவிட்டு போலீஸுக்கு எந்த சந்தேகமும் வராமல் சென்னை வந்து சென்றிருக்கிறார்.

இறுதியாக பாரதியின் தமிழ்க்காதல். அது சொல்லிலடங்காதது. 'தமிழனை விட அதிக அறிவிலும் வலுவிலும் வேறொருவன் இருப்பதில் எனக்கு சம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் வேறொருத்தி அழகாயிருந்தால் மனம் புண்படுகிறது' என்றெல்லாம் எழுதுகிறார். ஆங்கிலத்தில் கடிதமெழுதும் தன் தம்பிக்கு 'தப்புத் தப்பாய் எழுதினாலும் தமிழிலேயே எழுது' என்று அறிவுறுத்துகிறார். 'என்னைப்பற்றிக் கவலைப்படாதே. அந்த நேரத்தில் முடிந்தால் கொஞ்சம் தமிழ்ப்படி' என்று மனைவிக்கு எழுதுகிறார். "ஓம்" என்ற வார்த்தைக்கு நிகராக ஒரு தமிழ் வார்த்தையைக் கண்டுபிடிக்க பெருமுயற்சி செய்திருக்கிறார். கணக்கு போடச்சொன்னால் கணக்கு, மணக்கு, ஆமணக்கு என்று சொல்லிச் சிறுவயதில் பாரதி கணக்கை வெறுத்ததாக அநேகமாக நாம் அனைவருமே படித்திருப்போம். அது பாதி உண்மை போல் தெரிகிறது. எந்த வார்த்தைக்கும் இயற்கையாக அதன் சந்தச் சொற்களை உச்சரித்துக் கொண்டே இருப்பதுதான் அவர் சிறுவயது பழக்கமாம்.  பாரதியின் தந்தை பையனுக்கு மூளை கலங்கிவிட்டதோ என்று கவலைப்படுமளவுக்கு அந்தப்பித்து இருந்திருக்கிறது. அப்படித்தான் கணக்கு, மணக்கு, ஆமணக்கும் பிறந்திருக்கும் என்பது என் ஊகம். எனவே கணக்கு மட்டுமல்ல, தமிழைத்தவிர அக்காலத்தில் வேறு எதுவும் பாரதிக்குப் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. வ.ரா தன்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடத் தொடங்கியதும் கடுப்பான பாரதி, தமிழன் இன்னொரு தமிழனிடம் தமிழில் பேசும் காலம் என்று வருமோ என்று மனமுடைந்து பேசியிருக்கிறார்.

பாரதி பூணூல் போட்டு பிராமணராக்கிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கனகலிங்கம், பாரதியின் நண்பர் பரலி.சு.நெல்லையப்பர் மற்றும் பாரதியின் மகள் ஆகியோரும் அவரவர் கோணங்களிலிருந்து தாங்கள் அறிந்த பாரதி வரலாற்றை எழுதியிருப்பதாகத் தெரிகிறது. அப்புத்தகங்களையும் வாசித்தால் பாரதியின் ஆளுமையை அதன் குறை நிறைகளுடன் இன்னுங்கொஞ்சம் முழுமைக்கு நெருக்கமாகப் புரிந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. பாரதி மகாகவியா இல்லையா என்பதில் இன்னும் விவாதங்கள் இருந்தாலும் அவன் சித்தனைப்போல் வாழ்ந்த ஒரு மகா தமிழ்ப்பித்தன் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக