கடந்த ஏழெட்டு மாதங்களில் மூன்று புத்தகங்கள் எம்ஜிஆர் தொடர்பாக வாசித்தேன். முதலில் வாசித்தது 'நான் ஏன் பிறந்தேன்?' என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதை. 1970-72 காலகட்டத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. எம்ஜிஆர் அப்போது தன் ஐம்பதுகளின் மத்தியிலும், சினிமாவில் உச்சத்திலும், திமுகவின் முக்கிய அடையாளமாகவும் இருந்த நேரம். முதலமைச்சராகக் கருணாநிதி இருந்த நேரம். கழுத்தில் சுடப்பட்டதால் ஒன்று உயிர்போய்விடும் அல்லது பேசமுடியாது என்ற எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி மீண்டு(ம்) வந்திருந்த நேரம். நூலின் உரிமை யாருக்கு என்ற வழக்குகள் தீர்ந்து சமீபத்தில் இரு பாகங்களாகப் புத்தகமாக வெளியானது. இரண்டாவதாக வாசித்தது 'The Image Trap' என்ற தலைப்பில் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய எம்ஜிஆரின் திரைப்பட-அரசியல் பிணைப்பைக் குறித்து ஆராயும் புத்தகம். இறுதியாக 'வாத்யார்' என்ற தலைப்பில் ஆர்.முத்துக்குமார் எழுதிய எம்ஜிஆரின் வரலாறு. இப்புத்தகங்கள் ஒட்டுமொத்தமாக எம்ஜிஆர் என்ற மிகவும் பரிச்சயமான பெயரை அவ்வளவாகத் தெரிந்திராத செய்திகள்மூலம் ஒரு கலவையான மனிதராகக் காட்டுகின்றன. அதைப் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
எம்ஜிஆர் சுயசரிதையை இவ்வளவு வெளிப்படையாகத் தன் வாழ்வில் நிகழ்ந்த விஷயங்களை அலசி ஆராய்ந்து எழுதியிருப்பார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நிறைய விரிவான வாதங்களுடனும் பல இடங்களில் பொருத்தமான திருக்குறள் மேற்கோள்களுடனும் எழுதுகிறார். 15-16 வயதில் வாடகைக்குக் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் பெண்ணைக் காதலிக்க முயன்று, 'நீங்க மலையாளி நாங்க தமிழ் அதெல்லாம் சரியாவராது' என்று அந்தப்பெண் சொல்லிவிட்டதாம். குதிரையேற்றம் பழகுதலின் நுணுக்கங்களைக்கூட கற்றிருந்தவர் சைக்கிள் ஓட்டத் தெரியாமல் இருந்து பின்னர் கலைவாணர் ஓட்டச் சொல்லிக் கொடுத்தது, உடலில் அதிக வலுவிருந்தும் கோபத்தின் காரணமாக சமயோசித புத்தியின்றி கலைவாணரிடம் மல்யுத்தத்தில் தோற்றது என்று ஆச்சரியமும் சுவாரஸ்யமும் கலந்த செய்திகள் நிரம்ப உண்டு. சில சம்பவங்கள் புதிராக இருக்கின்றன. உதாரணமாக அண்ணா அமெரிக்காவில் சிகிச்சைக்காகச் செல்ல பம்பாய் விமான நிலைய அறையிலிருந்தபோது அவரைக்காணச் சென்ற எம்ஜிஆரிடம் ஓர் ஆங்கிலப் புத்தகத்தின் அட்டையைப் பிய்த்துக் கொடுத்து இவரிடமே இருக்கட்டும் என்று மற்றவர்களிடம் சொன்னதாக எழுதியிருக்கிறார். அது என்ன புத்தகம் என்பதை எழுதவில்லை. எதனால் அப்படி அண்ணா செய்தார் என்பதும் இவருக்குப் புரியவில்லையாம். ஒரே காட்சிக்குப் புராண நாடகங்களில் எப்படி ஓவராக்டிங் செய்து நடிக்க வேண்டும், சமூக நாடகங்களில் எவ்வாறு இயல்பாக நடிக்க வேண்டும் என்றெல்லாம் எழுதும் இவரா தமிழ் சினிமாவின் தலையெழுத்தை எம்ஜிஆர் ஃபார்முலாவுக்குள் தள்ளியது என்ற ஆச்சரியம் உண்டாகாமலில்லை.
1957ல் நடிப்பில் சிறந்தவர் எம்ஜிஆரா, சிவாஜியா என்று ஒரு போட்டி வாக்கெடுப்பு வாசகர்களிடம் நடத்திய குமுதம் இதழைக் கண்டித்து இரண்டு திலகங்களுமே குமுதம் ஆசிரியருக்குக் கடிதமெழுதியது நூலில் இருக்கிறது. 1971ல் இதை எழுதிய எம்ஜிஆர் 13 வருடங்களாகியும் இன்னும் குமுதம் திருந்தவில்லையென்று குறிப்பிடுகிறார். கலைஞருக்கும் இவருக்கும் பிரச்சனை இருப்பதாகச் சிண்டுமுடியும் வேலையைக் குமுதம் செய்துவந்ததாகக் குறிப்பிட்டு இவ்வாறு எழுதுகிறார். எல்லா இடத்திலும் கலைஞரைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். ஆனால் அடுத்தவருடமே (1972) திமுகவிலிருந்து விலக்கப்படுகிறார். ஆக குமுதம் எழுதியது உண்மையே என்பது தெரிகிறது. இது எம்ஜிஆர் சுயசரிதத்தில் எழுதியதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையே என்ற நம்பிக்கையை வாசிப்பவர்க்குக் கிடைக்காமற் செய்துவிடுகிறது. தனக்குத் தலை வழுக்கையாகி விட்டதாக வெளிவந்த செய்திகளை மறுக்கிறார். அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் (1969) தொப்பி அணியாமல் நிஜத் தலைமுடியுடன் (52 வயது) கலந்து கொண்டதைச் சொல்கிறார். நம்பியாரை, கண்ணதாசனை, எம்.ஆர்.ராதாவைப் பற்றியெல்லாம் கொஞ்சமே எழுதியிருக்கிறார். பின்னால் விரிவாக எழுதுவேன் என்று ஆங்காங்கே சொல்லிச் சென்றவர்க்கு எதிர்பாராத விதமாகத் தொடரை நிறுத்தும் நிலை வந்துவிட்டதாலும் இருக்கலாம். திமுகவிலிருந்து விலக்கப்பட்டவுடன் 1972ல் கடைசிக் குறிப்பு நிறைவுபெற்று விடுவதால் ஜெயலலிதாவைப் பற்றி ஒரு வார்த்தைகூட இந்தச் சுயசரிதத்தில் எங்கும் இல்லை.
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கறாராக எம்ஜிஆர் ஆட்சிக்காலம் தமிழகத்தின் இருண்டகாலம் என்று வர்ணித்துவிடுகிறார். சினிமாவையும் நிஜத்தையும் எம்ஜிஆர் விஷயத்தில் பிரித்துப் பார்த்திராத அடிமட்ட மக்களுக்கு சினிமாவில் செய்ததற்கு நேர்மாறானவற்றையே தன் அரசின் மூலம் செய்தார் என்பது பாண்டியனின் முடிவு. பல விஷயங்களால் இந்த முடிவுக்கு வருகிறார். சினிமாவில் மீனவர்களில் ஒருவனாகவும் விவசாயியாகவும் (படகோட்டி, விவசாயி, மீனவ நண்பன்) வந்து அவர்களுக்காகப் போராடியவர் அரசதிகாரத்தில் இருந்தபோது அவர்களின் போராட்டத்தைத் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒடுக்க உத்தரவிடத் தயங்கவில்லை என்பது ஒன்று. அனேக படங்களில் குடிகாரர்களைத் திருத்திவிட்டு நிஜத்தில் டாஸ்மாக் என்ற அரசு நிறுவனத்தை மதுவிற்பனை செய்ய அமைத்ததார் என்பது மற்றொன்று. அதோடு விடவில்லை. 1980-81ல் அரசின் வருமானத்தில் சுமார் 15% சாராய, கள் விற்பனையின் கலால் வரி மூலமாக (இவற்றைப் பருகும் பெரும்பாலானவர்கள் ஏழைபாழைகள்) வந்ததையும் ஆனால் 5%க்கும் குறைவான வருமானமே விவசாய அல்லது மற்ற நிலங்களின் (இவற்றை வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள்) வரியிலிருந்து வந்ததையும் குறிப்பிட்டு, எம்ஜிஆரின் அரசு ஏழைகளுக்கெதிரான ஆனால் வசதிவாய்ப்புள்ளவர்களுக்குச் சாதகமான அரசு என்கிறார். மேலும் கேரளாவுக்குச் சாராய சப்ளை செய்து அதில் ஐந்து கோடி ரூபாய் ஊழலும் செய்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் விசாரிக்க 'ரே கமிஷன்' அமைக்கப்பட்ட கதையை முத்துக்குமார் புத்தகம் சொல்கிறது. இந்த இடத்தில் அவர் சுயசரிதையில் இளமையில் தீவிரமான காந்தியவாதியாகத் தான் இருந்ததையும், ஒருநாள் தன் வீட்டில் மதுப்புட்டி ஒன்று இருந்ததற்காகத் தற்கொலை செய்துகொள்ள முயன்றதையும் பதிவுசெய்திருப்பது நினைவில் மீண்டது.
சொந்தவாழ்வில் கூட சினிமாவில் செய்ததைப் பின்பற்றவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு. திரைப்படங்களில் ஏகபத்தினிவிரதனாக வரும் எம்ஜிஆர் நிஜவாழ்வில் இரண்டாம் மனைவி (சதானந்தவதி) உயிருடன் இருந்தபோதே மூன்றாவதாக (ஜானகி) ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்தது விமர்சிக்கப்படுகிறது. ஆனால் சுயசரிதையில் இதற்கு ஒரு நேர்மையான பதிலை எம்ஜிஆர் தருகிறார். திருமணத்திற்குப் பின் சதானந்தவதிக்கு முதல்கரு கலைந்ததும் உடல் தேறுவதற்காக ஏதேதோ சிகிச்சை முறைகளில் முயன்றும் முடியாத நிலையில், பின் காசநோய் கண்டுபிடிக்கப்பட்டு கரு உருவானால் அவர் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர் எச்சரித்து முற்றாக உடல்தொடர்பு கூடாது என்று சொல்லிவிட்டதால், இயற்கையின் உந்துதலால் வழிதவறிப் போய்விடாமலிருக்கவே ஜானகியை ஏற்றதாக எழுதுகிறார். தன் முதல் மனைவி தங்கமணி அகால மரணமடைந்தது, இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தது, பின் ஜானகியையும் வாழ்க்கைத்துணையாக ஏற்கவேண்டிய அவசியம், பலதாரமணத் தடைச்சட்டம் உட்பட அவற்றால் ஏற்பட்ட சிக்கல்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கி எழுதுகிறார். எதையும் மழுப்பிவிட முயலாத நேர்மையான எழுத்துக்களாகவே எனக்குத் தோன்றியது.
என்னைப்போல் எண்பதுகளின் தொடக்கத்தில் பிறந்து, அரசுப்பள்ளியில் பயின்றவர்களுக்கு நினைவிருக்கும். எம்ஜிஆர் என்ற பெயர் பள்ளிக்கூடத்தோடு ஒன்றியிருந்தது. எம்ஜிஆர் சீருடை, எம்ஜிஆர் காலணி, எம்ஜிஆர் சத்துணவு. அவர் தன் சொந்தக்காசில் அனைத்தையும் கொடுப்பதாகத்தான் இது மாணவர்கள் மனதில் பதிந்தது. அவரின் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும் அப்படித்தான் புரிந்தது. எம்ஜிஆர் ஒரு வள்ளல் என்று பொதுப்புத்தியில் பலவிதமாக நிறுவப்பட்டதை பாண்டியன் விளக்குகிறார். அண்ணா ஒருபடி மேலே சென்று வள்ளல்கள் என்று சொல்லப்பட்டவர்கள்கூட உதவி தேவைப்பட்டால் அல்லது கேட்கப்பட்டால்தான் செய்தார்கள் ஆனால் எம்ஜிஆர் கேட்காமலே உதவும் வள்ளல்களின் வள்ளல் என்று பேசியதைக் குறிப்பிடுகிறார். 'எப்போதும் கொடுத்தே சிவந்த கரங்கள் இன்று உங்களைக் கும்பிட்டுக் கேட்கிறது' என்று முத்தாய்ப்பாக ஓட்டுகளைச் சிந்தாமல் சிதறாமல் பெறவே இந்த முஸ்தீபுகள் செய்யப்பட்டது என்பது விமர்சனம். மேலும் வீடிழந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் சொந்தக் காசில் வழங்குவதாக அறிவித்துவிட்டு நிறைவேற்றாததையும் குறிப்பிட்டு வள்ளல் என்பது போலிப்பிம்பமே என்றும் நிறுவ முயல்கிறார். ஆனால் முத்துக்குமார் புலிகளுக்கு முதலில் இரண்டு கோடிகள் பிறகு ஐந்து கோடிகள் எம்ஜிஆரின் சொந்தப்பணம் தரப்பட்டதாக எழுதுகிறார். ஆக இந்தவிஷயத்தில் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. ஒருவேளை இரண்டுமே உண்மையாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறையும் மறுப்பதற்கில்லை.
மதுரைவீரன் கதை, முத்துப்பட்டன் கதை, சின்னநாடன் கதை போன்ற தெருக்கூத்துகளில் அடிமட்ட மக்களின் பிரதிநிதிகளாக அக்கதைகளின் நாயகர்கள் நீதிகேட்டுப் போராடி ஆனால் இறுதியில் கொலையுண்டு போவதைக் குறிப்பிடும் பாண்டியன், எம்ஜிஆர் படங்கள் அவரைக் கீழ்மட்ட மக்களின் பொதுப்புத்தியில் அந்த நாயக வரிசையின் நீட்சியாக ஆனால் இம்முறை வெல்லப்பட அல்லது கொல்லப்பட முடியாதவராக அமைப்பதில் வெற்றி பெற்றதாக எழுதுகிறார். தகுந்தாற்போல் நிஜத்திலும் கழுத்தில் சுடப்பட்டும் பிழைத்துக் கொண்டார். சிறுநீரகப் பழுதிலிருந்தும் பிழைத்துக் கொண்டார். ஆகவே திரைப்படங்களில் கண்டதுபோல் நிஜ வாழ்விலும் எம்ஜிஆருக்கு மரணம் வராது என்று நினைத்துவிட்ட ரசிகர்கள் பலர். தான் அடிமட்ட மக்களில் ஒருவன் என அவர்களை நம்பவைக்கும் அதேநேரம் தான் அவர்களிலிருந்து மேம்பட்டவன் என்பதையும் உணர்த்தியதே எம்ஜிஆரின் சூட்சுமம் என்கிறார் பாண்டியன். அதாவது அடிமட்ட மக்களில் ஒருவராக நடித்தபோதும் இவர் மட்டும் அந்த கூட்டத்தில் கல்வியறிவு பெற்றவராக இருப்பார். மற்றவர்கள் அடி வாங்கிக் கொண்டு அடங்கிப் போனால் இவர் அடங்க மறுப்பார். திருப்பியடிப்பார். மேல்குடிப் பெண்கள் இவரைத் தேடி வந்து விரும்புவார்கள். அடிமட்ட மக்களுக்கு நீதியோ, நல்வாழ்வோ தேவையில்லை. அவர்களுக்குத் தேவை இவை ஒருநாள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை மட்டுமே. அதைப் பங்கமில்லாமல் வழங்கும் சூத்திரமே எம்ஜிஆரின் படங்கள் என்று பாண்டியன் சொல்லி முடிக்கிறார். அவர் மரணமடைந்ததும் இந்த நம்பிக்கை தகர்ந்த்தைத் தாங்க முடியாமலேயே இம்மக்கள் வன்முறைகளிலும் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்வதிலும் இறங்கினார்கள் என்பதும் இவர் தியரி. எம்ஜிஆர் ஆட்சியிலும் ஊழல் நடக்கிறது, லஞ்சம் வாங்கப்படுகிறது, எதுவும் மாற்றமில்லாமல் அப்படியேதான் நடக்கிறது என்பதை அவர்கள் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்ததும் நம்பிக்கை தகரக்கூடிய அபாயத்தின் காரணமாகவே என்பதை நாம் சேர்த்துக்கொள்ளலாம். உண்மை இதில் எத்தனை சதவீதமோ ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருத்தமான வாதம்தான். ஆட்சியின் எல்லாத் தவறுகளும் எம்ஜிஆருக்குத் தெரியாமல் நடப்பதாகவே அடிமட்ட மக்கள் நினைக்க விரும்பினர். யாராவது பத்திரிகை நிருபர்கள் கிராமத்தில் லஞ்சம், ஊழல் குறித்து விசாரிக்கச் சென்றாலும் இவர் எம்ஜிஆர் அனுப்பிய ஆளாக இருக்கக்கூடும் என்றே நம்ப விரும்பினர்.
பாண்டியனின் ஆராய்ச்சி முடிவிலுள்ள 'நம்பிக்கை அளிப்பதை' ஒருவகையில் ஆமோதிக்கும் விதமாக, தன் வாத்யார் நூலுக்கு 'ஆயிரம் தன்னம்பிக்கை நூல்கள் தராத உத்வேகத்தை எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு தந்துவிடும்' என்ற tag line-ஐ அட்டையில் கொடுத்திருக்கிறார் முத்துக்குமார். எம்ஜிஆர் பிறப்பில் ஆரம்பித்து புத்தகம் 2009ல் வெளியானபோது இருந்த அன்றைய அதிமுகவின் நிலைவரை சுருக்கமாக அனைத்தையுமே எழுத முயற்சித்துள்ளார். ஆய்வு செய்வது நூலின் நோக்கமில்லாததால் வரலாற்றைப் பதிவுசெய்ததோடு விட்டுவிட்டார். நிறைய செய்திகள். தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றவிருப்பதாக அறிவிப்பார். ஆனால் பிறகு அதைப்பற்றிச் செய்திகள் வராது. முதல்வராக இருக்கும்போதே படமும் நடிக்கப்போவதாக பூஜையும் போட்டார். ஆனால் திடீரென்று படம் கைவிடப்பட்டு விட்டது. இன்னும் நிறைய. ஆனால் அறிவித்தது ஏன்? பிறகு கைவிட்டது ஏன்? யாருக்கும் தெரியாது. அதுதான் எம்ஜிஆர் என்பதே முத்துக்குமாரின் எம்ஜிஆர் பாத்திரப்படைப்பு. அதே சமயம் சுயசரிதையில் வாசிக்கமுடிகிற எம்ஜிஆரது சாதுரியமாக வாதம் செய்யும் திறமையையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். நெருக்கடி நிலையின் போதும் இந்திராவை ஆதரித்த எம்ஜிஆர் இந்திரா சிக்மகளூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கும் நெருக்கடி நிலைக்கும் ஆதரவாகப் பேசியவிதம் பிரமிப்பானது. இனி அவர் வார்த்தைகளில்; "நெருக்கடி நிலையை அவர் செயல்படுத்தியபோது நாட்டில் கட்டுப்பாடும் ஒழுங்கும் சீராக இருந்தன. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்திரா காந்தி ஜனநாயகப் பண்பைக் கைவிட்டவரல்ல. இன்னும் ஓராண்டுக்காலம் ஆட்சியில் இருக்கலாம் என்ற உரிமை அவருக்கு இருந்தது. ஆனாலும் பொதுத் தேர்தலை அறிவித்தார் இல்லையா? மேலும் ஒழுங்காக ஜனநாயகப் பண்பு தவறாமல் நடந்த தேர்தல் அது. இந்திராகாந்தியே தோற்றுப்போனது இதற்கு சாட்சி அல்லவா?"
எம்ஜிஆரும் சரி அவருடைய திரைப்பட, அரசியல் வெற்றியும் சரி நிச்சயம் ஆராயப்பட வேண்டியவையே. இவை தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் கணிசமானவை, ஆழமானவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக