வியாழன், 16 ஜூலை, 2015

நான், என் காதல், என் காதலிகள் - பகுதி 13 : பூமிக்கடியில் இரண்டரை மாதங்கள்!


சிலி நாட்டில் கடந்த 2010ம் வருடம் முப்பத்திமூன்று சுரங்கத்தொழிலாளர்கள் 69 நாட்கள் பூமிக்கடியில் சிக்குண்டு பின் பத்திரமாக மீட்கப்பட்டதின் துல்லியமான பதிவு இப்புத்தகம். புத்தக ஆசிரியர் ஜோனதன் ஃப்ராங்க்ளின் மட்டுமே ’மீட்புக்குழு’ வில் இடம்பெற்ற ஒரே பத்திரிகையாளர். ஆகவே இப்புத்தகம் first hand and authentic. ஒரு கதைச்சுருக்கம் போல எழுத மனமில்லாமல் சம்பவங்களூடே மனிதர்களின் அசாத்திய திறமைகள், சிக்கல்கள், பயம் போன்றவற்றைத் தொடர்சசியுடன் எழுத முயல்கிறேன்.



ஆகஸ்ட் 5ம் தேதி 2010 அன்று மதிய உணவுக்காக முப்பத்திமூன்று மைனெர்ஸும் அந்த 125 சதுரமீட்டர் அறையினுள் சேரும்தருணம், பூமி அசைந்தது. தரைமட்டத்திலிருந்து 1300 அடி தூரத்தில் சுரங்கவாய் தூர்க்கப்பட்டது. இவர்கள் அகப்பட்ட அறை இருந்ததோ 2300 அடியில். தலைக்குவந்தது?



சுரங்கத்தினுள் ஆண்டுமுழுதும் 32’C வெப்பமும், 95% ஈரப்பதமும்தான். பூமி பிளந்து விழுந்தவேகத்தில் சிறுகற்கள் தாக்கிய காயமன்றி வேறு காயமில்லை இவர்களுக்கு. பாறைக்கு வெடிவைப்பதும் தினசரி வேலைகளின் பகுதியென்பதினால், 1000 அடி மேலே நடந்து சென்று பாதையை அடைத்திருக்கும் பாறையை வெடித்துதகர்த்து வெளியேற முயற்சிக்கிறார்கள். இம்முறை அடைத்திருப்பது வெடிகளுக்கு அசையக்கூடியதில்லை என்பதை புரிந்துகொள்கின்றனர். பிற்பாடு ஒரு கணிப்பின்படி உலகின் ஆகச்சிறந்த தொழில்நுட்பத்தைக்கொண்டு ஒருவருடத்தில் அப்பாறையடைப்பைக் குடைந்து உள்ளேசெல்லலாம் என மதிப்பிட்டனர்!



சாப்பாட்டு அறையினுள் அவர்கள் கொண்டிருந்தது சில Tuna டப்பாக்கள், பால் சில லிட்டர்கள், கொஞ்சம் பிஸ்கட்டுகள். முப்பத்திமூவருக்கு கணக்கிட்டால் (கொஞ்சமாக சாப்பிட்டால்) இரண்டு நாளைக்கு மூன்று வேளைக்கும் வரும். தண்ணீருக்குமட்டும் கவலையில்லை. பாறைகளைத்துளையிடும் துரப்பணங்களுக்கு சுழற்சிசெய்யப்படும் ராக்ஷஸ தண்ணீர் அண்டாக்கள் நிறைந்திருந்தது. ஆனால் பலமாதங்களாக பயன்படுத்தி டீசலைக்குடிப்பதுபோன்றிருந்ததாம். இதைக்கொண்டுதான் அடுத்த 17 நாட்கள் அவர்கள் வாழப்போகிறார்கள் என்பதை அவர்களில் யாரும் அப்போது அறிந்திலர். எதிர்காலத்தைமட்டும் ஒருவன் அறிந்திடும் ஆற்றல்பெற்றால் சராசரி மனித ஆயுள் பாதியாகக்குறையும் என்றும் ’இறப்பு ஒரேயொருமுறை வருவது’ என்று சொல்லமுடியாது என்றும் நினைக்கிறேன்.



தகவல்தொடர்பு இல்லாத நிலையில் தரைமட்டத்திலிருப்போர், உள்ளே யாரும் பிழைத்தனரா? ஆம் எனில் எங்குள்ளனர்? எத்தனைபேர்? எந்தகேள்விக்கும் விடையின்றி தவித்தனர். சிலியின் அவசரமீட்புக்குழுவினர் உயிரைப்பணயம் வைத்து ’மூச்சுக்குழல்கள்’ போன்று செயல்பட்ட நீண்ட துளைகளின் வழியே ஆனமட்டும் இறங்கி சத்தமெழுப்பிப்பார்த்து பதிலேதும் வராததில் களைப்புற்றுத் திரும்பினர்.



சிலகுளறுபடிகளுக்குப்பின் உள்ளே சிக்குண்டோர் 33 பேர் என்பதை வருகைப்பதிவேட்டிலிருந்து நிர்வாகம் கண்டுபிடித்தது! சீனாவின் அசுரவளர்ச்சிக்கு தேவையான கனிமங்கள் சிலியிலிருந்து கடந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகவிலையில் ஏற்றுமதிசெய்யப்பட்டதன் லாபத்தில் ருசிகண்ட சுரங்கமுதலாளிகள் ’ஆபத்தானவை என்றும் லாபமில்லை என்றும்’ கைவிடப்பட்ட சுரங்கங்களை மீண்டும் தோண்டத்தொடங்கினர் என்பதும் அதற்காக மைனெர்ஸ் அதிகசம்பளம் வழங்கப்பட்டனர் என்பதும் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கமும் கண்டும்காணாமல் விட்டதும் சம்பவத்தின் பின்னால் இருக்கும் அரசியல்.



(அந்த முப்பத்து மூவர்)


விஷயம் கேள்விப்பட்ட அதிபர் பினேரா பதவிக்குவந்து நான்குமாதங்களே நிறைந்திருந்தன. அரசியலுக்குவருமுன் இவர் பொருளாதார பேராசிரியர். இப்பிரச்சினையில் முடிவு எதுவாயினும் ஒரு springboard வாய்ப்பு தன் அரசியல், மக்கள் செல்வாக்கை மேம்படுத்திக்கொள்ள இருப்பதை அவர் யூகித்திருக்க வேண்டும். அவரே நேரடியாக சுரங்க வள அமைச்சருடன் களத்தில் இறங்குகிறார். 2000 அடி ஆழ் துளையிட ஒரு பெரிய ட்ரில் ஏற்பாடுசெய்துவிட்டேன் என தெரிவித்த அமைச்சரிடம், “மகிழ்ச்சி, ஆனால் போதாது. இன்னும் உங்களால் எத்தனை துரப்பணங்கள் ஏற்பாடு செய்யமுடியுமோ செய்யுங்கள், விரைவாக” என பதிலிறுக்கிறார் பினேரா!



பினேரா பொருளாதார பேராசிரியர் என்றால் சுரங்க அமைச்சர் ’வால்மார்ட் போன்றதொரு’ பெரும் சில்லறைச்சாமான்கள் விற்கும் குழுமத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர். சம்பவம் நடந்த நான்காம் நாள் ’சொகரெட்’ என்ற இருபதாண்டு சுரங்க அனுபவமும் இதுபோன்ற மீட்பு வேளைகளில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டிருந்தவருமான அதிகாரியைக் கிட்டத்தட்ட கடத்திவந்து விமானத்தில் பினேரா சொன்னது “அவர்கள் இன்னும் உயிரோடிருந்தால், முப்பத்திமூவரின் ஆயுள் உங்கள் கையிலிருக்கிறது. அனைத்துவிதமான உதவிகளும் அரசாங்கம் உங்களுக்கு வழங்கும். உடனடியாக வேலையைத்தொடங்குங்கள்” என்பதாகும். அவரின் சம்மதம் கேட்கப்படவில்லை.



ஐந்தாம் நாள், ஆகஸ்ட் 10 ம் தேதி, சுரங்கவாசலின் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கிவிட்ட மைனெர்ஸின் குடும்ப உறுப்பினர்களின் காதுகளில் தேனாக பாய்ந்தது பூமியைத்துளைக்க ஆரம்பித்த துரப்பணங்களின் ஒலி. மூன்று துரப்பண மேடைகள் அமைக்கப்பட்டு 1300 அடிக்கும் 2300 அடிக்கும் இடையிலான மூன்று இடங்களில் சென்று சேருமாறு திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டன. குடும்பத்தினரின் ஆறுதல் என்னவெனில் உள்ளே எவரும் உயிரோடிருந்தால் துளையிடும் சத்தம் அவர்களுக்கு சக்தியை அளிக்கும் என்பது. வரைபடங்கள் மற்றும் NASA செயற்கைக்கோள்கள் உதவியுடன் துளைகள் அதன் இலக்குகளை நோக்கி பயணித்தது. இது ஒருபுறமிருக்க ஏழாம் நாள், அதிபரிடம் “அவர்கள் உயிரோடிருக்கும் வாய்ப்பு இரண்டு சதம்” என்றோர் அறிக்கை ஆராய்ச்சியாளர்களால் வழங்கப்பட்டது. இதனடிப்படையில் சுரங்கத்தின் அருகே ஒரு நினைவுச்சின்னம் திட்டமிடும் வேலையும் ரகசியமாகத் தொடங்கிற்று!



முதலில் 12 மணிநேரத்திற்கொருமுறை சாப்பிட்டவர்கள் பிறகு 24, 36 மணிநேரத்திற்கொருமுறைதான் சாப்பிட்டிருக்கிறார்கள். தலா ஒரு குளிர்பான மூடியின் அளவிலான tuna தான் கிடைத்திருக்கிறது. பெரும்பாலோர் நீர்யானை போன்ற பருமனுடன் இருந்தது ஒருவகையில் உதவியிருக்கிறது. கொழுப்பு சக்தியாக மாற்றப்பட்டிருக்கிறது. கழிவுகளுக்கு அங்கிருந்த அண்டாக்களைப் பயன்படுத்தி தினமும் அதை மூடி குகையின் ஆழப்பகுதிகளில் புதைத்துவிட்டிருக்கிறார்கள். உள்ளே கனரக இயந்திரங்கள் இருந்தது பலவகையிலும் அவர்களுக்கு உதவியிருக்கிறது. அவர்கள் தலையில் அணியும் டார்ச் விளக்குகள் முதல் செல்போன் வரை சார்ஜ் செய்வதற்கு “தேவையே கணுபிடிப்புகளின் தாய்” என்பதை மெய்ப்பிக்க அவர்களில் ஒருவர் அவ்வியந்திரங்களின் மூலம் நூதன வழிகண்டிருக்கிறார். விளக்குகளை அணைத்தும் போட்டும் தங்களுக்கான பகலிரவு சுழற்சிகளை உருவாக்கியிருக்கின்றனர்.




அவ்வளவாக கடவுள் நம்பிக்கை இல்லாதிருந்தோரும் அவர்களில் ஒருவர் ஆரம்பித்த தினவழிபாட்டுக்கூட்டத்தில் தினமும் பங்கேற்றனர். ஏதாவது முடிவுகள் எடுக்க பெரும்பான்மை (16+1) வாக்கு முறையைக்கையாண்டிருக்கிறார்கள். உணவு இருப்பு குறையக்குறைய, யாராவது முதலில் இறந்தால் நரமாமிசம் புசிக்க வேண்டியதிருக்கலாம் என்ற எண்ணம் அனைவருக்குமே இருந்தாலும் வெளிப்படையாகச்சொல்ல யாருக்கும் தைரியமில்லையாம்.



துளைச்சத்தம் கேட்டு மகிழ்வுற்ற மைனெர்ஸ் துளை தங்களை நோக்கித்தான் வருகிறதென்பதை சத்தத்தின் கூர்மையில் கண்டுகொண்டு, துரப்பணம் வந்தவுடன் தாங்கள் செய்யவேண்டுவதை பலமுறை பயின்றுபார்த்திருக்கின்றனர். ஆனால் துளை சிலமீட்டர்கள் தொலைவில் தள்ளிச்சென்றுவிட்டது. அப்டேட் செய்யப்படாத வரைபடமும், என்னதான் செயற்கைக்கோள் உதவியிருந்தாலும் தரைமட்டத்தில் சில அங்குலங்கள் நகர்ந்தால் கூட இரண்டாயிரம் அடிக்குமேல் (கீழ்?) கடும்பாறைகளைத் துளையிடும்போது ட்ரெஜக்டெரி சிலமீட்டர்கள் விலகிவிடும் என்பதும் காரணங்கள்.



மீண்டும் துளைகள் புதிதாகத்துளைக்கப்பட்டன. அவர்கள் பாதி இறக்கும் தருவாயில், உள்ளே புதையுண்டு பதினேழாம் நாள், ஒரு ஆப்பிள் அளவுக்கான துளை அவர்களைச்சென்றடைந்தது. “Eatamos bien en el refugio los 33” என்ற செய்தியை துரப்பணத்துடன் கட்டி அனுப்புகிறார்கள். மக்கள் ஆரவாரம். குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர்க்கதறல். மீட்புக்குழுவினர் உற்சாகம். ஆனால் இவர்கள் அனைவரையும் பத்திரமாக மேலே கொண்டுவர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்ற கணிப்பை யாரும் உண்மையென்று கருத விரும்பவில்லை. ஏதாவது சாப்பிட அனுப்புவார்கள் என்று உள்ளே காத்திருந்தவர்களுக்கு அந்த ஆப்பிள் சைஸ் துளை வழியே அடுத்த மூன்று நாட்களுக்குச்சென்றதெல்லாம் வெறும் திரவ உணவுதான். திட உணவு கொன்றுவிடுமாம்.



(உள்ளே 33 பேர் நலமாக இருக்கிறோம் என்ற செய்தியுடன் பினேரா)


நாட்கள் செல்லச்செல்ல ஒருபுறம் மீட்புக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் மனநல மருத்துவர்கள் இவர்கள் அனைவரும் உயிர்பயம் போய், உடல்சக்தியும் பெற்றுவிட்டால் உள்ளே இவர்களின் ஒற்றுமை குறைந்து வன்முறை ஏற்படும் வாய்ப்புகள் பிரகாசமெனக்கருதி, ஏதாவதொரு வேலையை இவர்களுக்கு உள்ளே அளித்தவண்ணம் இருந்திருக்கிறார்கள். ஒன்றரை மணிக்கொருமுறை துரப்பணம் உள்ளே வரும்போது சில பொருட்கள், உணவோ, மருந்தோ, மற்றதுவோ வரும். திரும்புகாலில் இவர்கள் உறவினர்களுக்குக்கடிதங்களோ தேவையான பொருட்களையோ எழுதியனுப்பலாம். உலகம் அவர்களுக்கு மூன்றங்குல அளவுக்குள் சுருங்கியிருந்தது. அவர்கள் சிகரெட்டுகள் கேட்டபோது மருத்துவர்கள் குழு வேண்டாமென பரிந்துரைக்க, "இஃது மீட்பு ஆபரேஷன், Quit smoking campaign அல்ல" என்றும் இதற்கதுநேரமுமல்ல என்றும் தலைமை மனநல மருத்துவர் உள்ளே (போதைமருந்துகள் வரை) கண்டும்காணாமல் புழங்கவிட்டிருக்கிறார். அவர் புகைப்பழக்கம் உள்ளவர். அவரின் இச்சலுகையில் மகிழ்ந்த மைனெர்ஸ் அவருடன் மிகவும் நெருக்கமாகி ஒரு கட்டத்தில் “இந்த பாட்டு போரடிக்கிறது. பாப்மார்லியின் ரெக்கே போட்டு அனுப்புங்கள்” என்ற ரீதியில் உள்ளேயிருந்து mp3 player களை அனுப்பியிருக்கின்றனர். “நான் அவர்களின் ரூம் சர்வீஸ்” என்றும் அந்தத்தலைமை மருத்துவர் ஒருமுறை கூறியிருக்கிறார்.



உள்ளே ஒரு சிறிய ப்ரொஜக்டர் அனுப்பப்பட்டு டிவி ஒளிபரப்பு துவங்கியதும் வந்தது வினை. சேனல்கள் பார்ப்பதில் பிரச்சனை உருவாகியிருக்கிறது. சன்னஞ்சன்னமாக உள்ளே இருப்பவர்களின் ஒத்துழைப்பு குறைய ஆரம்பித்தவுடன் மனநல மருத்துவர்கள் உணவுக்குறைப்பு, உள்ளே அனுப்பப்படும் பொருட்களுக்குத் தணிக்கை, ஒரே சேனல் போன்ற ’தண்டனைகளை’க்கையாண்டு மீண்டும் அவர்கள் ஒன்றாக இணைந்து உள்ளேயே மனநல மருத்துவர்களுக்கெதிரான போராட்டம் தொடங்கியவுடன் செய்த தந்திரம் வெற்றிபெற்றமைக்காக மருத்துவர்குழு மகிழ்வுற்றது! ஏலியன்ஸ் தாக்கினால் அமெரிக்காவும் அல்கொய்தாவும் ஒன்றிணைந்து போராடாதா என்ன?



செக்ஸ் தேவைகளுக்காக காற்றுத்தலையணைகள் போன்ற பொம்மைகளை அனுப்ப முதலில் யோசித்த மருத்துவர்கள், வேறேதும் பிரச்சனைகள் வரக்கூடுமெனக்கருதி பெண்களின் நிர்வாண ஒளிப்படங்களை மட்டும் அனுப்பியது. இதற்கிடையில் அவர்களில் சிலருக்கு மனைவிகளும் காதலிகளும் இருந்ததால் அவர்களிடையே ’மேலுலகில்’ பிரச்சனைகள் வந்தவண்ணம் இருந்தது. கிறிஸ்தவப்பாதிரிகள், “முப்பத்திமூவரல்ல, அவர்களோடிருந்து அவர்கள் உயிர்களைக்காப்பாற்றிய முப்பத்திநாலாம் மைனெர் கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம்” என்று குடும்ப உறுப்பினர்களை நல்வழிப்படுத்திக்கூட்டம் கூட்டிக்கொண்டிருந்தனர்.



கீழே, துளையிடும் தண்ணீர் வாரக்கணக்கில் ஒரு சுரங்கப்பள்ளத்தில் சேர்ந்து ஒரு மீட்டர் ஆழமும் ஐந்துமீட்டர் நீளமுமுள்ள நீச்சல்குளத்தில் மைனெர்ஸ் குளித்து மகிழ்ந்தனர். ஜெஃப் ஹார்ட் என்ற துளையிடும் புலி வந்தார், பல இன்னல்களுக்கிடையில், நாசாவால் டிசைன் செய்யப்பட்ட மீட்பு கேப்ஸூல் உள்ளே செல்லும் அளவுக்கான இரண்டடி விட்டமுள்ள துளையைப்போட்டார். மூட்டையைக்கட்டிக்கொண்டு கிளம்புகையில் வழிமறித்த பத்திரிகை நிருபர்களிடம் “நான் ஒரு டிரில்லர். நான் சொல்வது (என் உணர்வுகள்) உங்களுக்கு விளங்காது. வழியைவிடுங்கள்” என்று கிளம்பிவிட்டார்.  இதுஒருபுறமிருக்க, உலகளவில் இவ்விஷயம் பரவியதையடுத்து, “அந்த 33 வி.ஐ.பி க்களை விடுங்கள்; இந்த 250 வேலையிழந்தவர்களை கவனியுங்கள்” என்று சுரங்கம் மூடப்பட்டதால் வருமானமிழந்த ஊழியர்கள் போராட்டங்களைத்துவங்கினார்கள்.



ஒருவழியாக ’மீட்பு சமீபம்’ என்று மீட்புக்குழு உணர்ந்தபோது, அந்த நாள், அவர்கள் புதையுண்டு அறுபத்தி ஒன்பதாம் நாளாக இருந்தது. ஒவ்வொருவராகத்தான் அந்த கேப்ஸூல் வழியாக மேலே அனுப்பப்பட முடியும் என்ற நிலையில் உள்ளே அனைவரும் ’நான் கடைசியாக வருகிறேன்’ என்று கூறினர். விசாரித்த்தில் அனைவரும் மேலே சென்று ஒற்றுமையாகக்காட்சிதரும் அக்கணம் தன்னால் நிகழவேண்டுமெனக்கூறினர். தீரவிசாரித்ததில், ஆக அதிக நேரம் பூமிக்கடியில் புதைபட்ட கின்னஸ் சாதனை தனக்கே கிடைக்கவேண்டும் என்ற அவர்களின் ஆசை வெளிப்பட்டதும், கின்னஸ் அதிகாரிகளுடன் பேசி அனைவருக்கும் ஒரே நேரத்தைப்பதிவு செய்ய வழிசெய்யப்பட்டது. இதைப்படித்தவுடன் “மனிதன் அப்பத்தினால் மாத்திரம் உயிர்வாழ்வதல்ல” என்ற விவிலிய வாசகம் என் நினைவில் நிழலாடியது.



அவர்கள் உடல், மன ஆராய்ச்சிகளுக்குப்பிறகு, மருத்துவர்கள் அம்முப்பத்திமூவரையும் மூன்று பதினோர் பேர்கள் கொண்ட குழுக்களாக வகைப்படுத்தி மீட்பு வரிசைப்படுத்தும்போது வந்தது அரசியல். மைனெர்ஸ்களில் முப்பத்தியிருவர் சிலி நாட்டுக்காரர்; ஒருவர் பொலிவியர். அவரை முதலில் அனுப்பினால் அவரை வைத்து வெள்ளோட்டம் பார்த்தார்கள் என்ற பழியும்,  கடைசியில் அனுப்பினால் எக்கேடுகெட்டும் போகட்டும் என்று விட்டனர் என்ற பழியும் வருமெனக்கருதி ஐந்தாம் ஆளாக அனுப்பினர். மீட்புக்கு சிலநாட்கள் முதலே ஒரு வல்லுனர் குழுவே மேலே வந்தவுடன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் புகழை எப்படி தன்னிலையிழந்துவிடாமல் எதிர்கொள்வது என்று அந்த ப்ரொஜக்டெர் வழியே பயிற்சிகொடுத்துக்கொண்டிருந்தனர்.



கடைசியாக மீட்பு தொடங்குமுன் அவர்கள் கேட்டது ஷூ பாலீஷ். நான் ஒருமுறை இந்த கேப்ஸூலில் உள்ளே சென்று வருகிறேனே என்று ஆசைப்பட்ட அதிபர் பினேரா அருகிலிருந்த தன் மனைவியின் ஒரே முறைப்பில் அடங்கி மீட்புக்கு வழிவிட்டார். ஒவ்வொருவராக வெளியே கேப்ஸூலில் வைத்து இழுக்கப்பட்டனர், இரவில்தான் என்றாலும் மீடியா வெளிச்சம் பகலைக்காட்டிலும் மோசம் என்பதால் கருப்புக்கண்ணாடி அணிந்துதான் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். குடும்பத்தினரையும் அதிபர் பினேராவையும் கட்டியணைத்து மகிழ்ந்தபின் அருகிலுள்ள மருத்துவமனைக்குச்செல்ல தயாராக இருந்த ஹெலிகாப்டரில் மேலே கிளம்பியவுடன் அவர்கள் கீழே பார்த்தபோதுதான் அவர்களுக்கு அந்த மீட்பு மிஷனின் விஸ்தீரணம் தெரிந்தது. அவர்களால் தாங்கள் பூமிக்கடியில் பத்துவாரங்கள் கழித்ததையோ, உலகமே கைகோர்த்து அவர்களை மீட்டதையோ, இப்போது ஹெலிகாப்டரில் பறந்துகொண்டிருப்பதையோ நம்பமுடியவில்லை.



முப்பத்திமூவரையும் மருத்துவமனையில் சென்று பார்த்த அதிபர் பினேரா, “அதிபர் மாளிகை அதிகாரிகளுக்கும் உங்களுக்கும் காற்பந்து போட்டி வைப்போம். ஜெயிப்பவர்கள் மாளிகைக்கும் தோற்பவர்கள் சுரங்கத்துக்கும் செல்வோம்” என்று கலகலப்பூட்டினார். அந்தவார இணைய சர்வேயில் மக்களிடையே அவர் செல்வாக்கு கிட்டத்தட்ட இருபது சதம் இம்மீட்பையடுத்து உயர்ந்தது தெரியவந்தது.


மீடியா அழுத்தத்தைத் தாங்கமாட்டனர் என்று கருதி இருவரை மட்டும் சில நாட்களுக்குப்பிறகும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்காமல் ’செடேட்டிவ்ஸ்’ எனப்படும் சமநிலைப்படுத்திகளைக் (கொஞ்சம் அதிகமாகவே) கொடுத்து மனநல மருத்துவர்கள் உறங்கவைத்துக்’கவனித்ததில்’ கடுப்பான அவ்விருவரும் ’இதற்கு உள்ளேயே இருந்திருக்கலாம்’ என்று தலைமை மருத்துவரிடம் நொந்துபோய் தெரிவிக்க அவர் உடனடியாக மருந்துகளை நிறுத்தி அவர்களையும் டிஸ்சார்ஜ் செய்துவிட்டார். அதே புகை புகழ் மருத்துவர்தான்.


உள்நாட்டு பெரியதலைகள் பெரும்பணம் அனைத்து மைனெர்ஸூக்கும் அன்பளிப்பு அளித்தது மட்டுமின்றி சில திரைப்பட நிறுவனங்களும் பெரும்பணம் அவர்களை வைத்து படமெடுக்க தருவதற்காக முன்வந்துள்ள வேலையில், உள்ளே அடிதடி, ஹோமோசெக்ஸ் போன்ற ஏதும் நடந்ததாகச்சொன்னால் பொற்கிழி தர பத்திரிகை நிறுவனங்களும் முன்வந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல், “நாங்கள் மைனெர்ஸ். எங்களுக்கு அதுதான் வாழ்க்கை. அதுதான் தெரியும். மீண்டும் பழையபடி சுரங்க வேலைகளுக்கே செல்வோம்” என பெரும்பாலான மைனெர்ஸ் அறிவித்துள்ளனர்.



இதுபோன்ற சுரங்கங்களுக்கு இருவாசல்கள் அமைக்கவேண்டும் என்பதுமுதல் ’மூச்சுக்குழல்’களுக்குள் ஏணிகள் தொடர் செப்பனிடப்படவேண்டும் என்பன போன்ற எந்த பாதுகாப்பு விதிகளையும் செயல்படுத்தாதது மட்டுமின்றி, குறைந்தது ’சரி தப்புநடந்து போச்சு, பொறுப்பை நாங்க ஏத்துக்கிறோம்’ என்றாவது சொல்லி மீட்புக்குழுவில் முன்னால் நிற்க முன்வராமல் நழுவிய சுரங்க முதலாளிகள் மீது, இடவாகு பெயரில் சொன்னால், உலகமே கடுப்பாகியது. இன்னமும் சிலி நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக