ஞாயிறு, 14 ஜூன், 2015

நான், என் காதல், என் காதலிகள் - பகுதி 12 : பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் - அரவிந்தன் நீலகண்டன்

The meaning of history is also in its purpose என்றொரு வாக்கியம் சமீபத்தில் ஒருவரின் முகனூல் நிலைத்தகவலாக வந்து யோசிக்கவைத்தது. இதைச் சொன்னவர் Michel-Rolph Trouillot என்ற மானுடவியல் பேராசிரியர். 'வரலாற்றின் பொருளும் அதன் பயன்பாட்டில்தான் இருக்கிறது' என்று முதலில் எனக்கு வசதியானபடி இவ்வாக்கியத்தைத் தமிழில் எழுதிக்கொள்கிறேன். நிற்க.

மதம், புரட்சி இயக்கங்கள், சித்தாந்த அரசுகளின் உலக வரலாற்றில் பொதுவாக மீண்டும் மீண்டும் ஒன்றைக்காணலாம். இது அபாண்டம், பொய்ப்பிரச்சாரம், இப்படியெல்லாம் நடக்கவேயில்லை என்பது எந்த குற்றச்சாட்டுக்கும் உடனடி எதிர்வினையாக இருக்கும். மறுக்கவேமுடியாத அளவுக்குப் பரவலாக உண்மைகள் வெளிவரும்போது ஏதோ சிறிய அளவில் சில விதிவிலக்கான சம்பவங்களை out of proportion-ல் பேசுகிறார்கள் என்ற அளவில் ஒதுக்கித்தள்ளப்படும். ஆண்டுகள் உருண்டோடியபின் உண்மை பல அரசியல், சொந்த காரணங்களுக்காகக் காலம் கடந்து வெளியாகும்போது அது அறிவுஜீவிகள் மட்டத்தில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்துவதைத் தவிர வேறு ஏதும் பெரிதாகச் சாதாரண மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாமல் மங்கி மறைந்துவிடும். ஆனால் ஆசிரியரின் கம்யூனிஸத்தைக் குறித்த விமர்சனம் இந்தக்கடைசி நிலையிலும் இருபிரிவான வாதங்கள் உண்டு என்பதை நிரூபிக்கிறது!



அதாவது நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை என்பதுபோல் கம்யூனிஸ்ட் ஆட்சிகளின்போது நடந்த அழிவுகளுக்குக் காரணம் தலைவர்களான தனிப்பட்ட மனிதர்களே; அதற்குக் கம்யூனிஸம் என்ற சித்தாந்தம் பொறுப்பேற்பது நியாயமில்லை என்று ஒருவாதம். தனிமனிதர்கள் காரணமென்றால் அதெப்படி உலகத்தின் அத்தனைக் கம்யூனிஸப்புரட்சி அரசுகளும் ஒரே மாதிரி அழிவைக்கொடுத்தன? ஒரு நிகழ்தகவு நியாயமாவது வேண்டாமா? ஒன்று கம்யூனிஸம் எனும் சட்டகத்துக்குள் வரும் யாரையும் சித்தாந்தவிதிகள் இப்படிச்செயல்பட மாற்றுகின்றன அல்லது இந்தச் சித்தாந்தம் ஏற்பது அப்படிச் செயல்படுத்துபவர்களைத்தான். எது எப்படியாயினும் இது கம்யூனிஸம் எனும் சித்தாந்தத்தின பிழைதான் என்பது மறுவாதம். ஆசிரியர் வரலாற்றிலிருந்து தரவுகளையெடுத்து வாதிடுவது இந்த இரண்டாம் வகைக்கு.

கம்யூன் (commune) என்ற வார்த்தை அழகானது. மக்களோ குடும்பங்களோ அனைத்தையும் பகிர்ந்துகொண்டு ஒன்றாய் வாழும் ஓர் அமைப்பு என்பது இதன் அகராதிப்பொருள். இயைந்திருத்தல்தான் அதன் வேர்ப்பொருள். அது இணைந்திருத்தலாக மாற்றம்பெறுவதே ஒரு வீழ்ச்சிதான். ஏனெனில் பலாத்காரம் மூலமும் இணைந்திருக்கச்செய்ய முடியும். இக்கம்யூன் வாழ்க்கையைச் சித்தாந்தப்படி வலியுறுத்துவதால் முற்றிலும் நியாயமாகவும் கவர்ச்சிகரமாகவும் யாருக்கும்படும் கம்யூனிஸம், பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்போது எப்படி அதை முன்னெடுத்த சர்வாதிகாரத் தலைவர்களால் - கூட்டுவாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு நேரெதிரான - அச்சத்துடன் கூடிய அழிவுப்பாதைக்குள் ஒவ்வொருமுறையும் புதுப்புது விளக்கங்களுடன் இட்டுச்செல்லப்பட்டது என்று தகவல்களுடன் வாதிட்டு நிறுவமுயல்கிறார் ஆசிரியர். 

அதிகாரம், அடக்குமுறை, அநியாயம் ஆகியவை கண்முன் தெரிந்தாலும் இதெல்லாம் தற்காலிகம்தான்; விரைவில் முடிந்து ஏதோ ஓர் இறுதி அற்புதம்  நிகழ்ந்துவிடத்தான் போகிறது; அது எளிய மக்கள் அனைவரையும் வர்க்கபேதமற்ற ஒரு பொன்னுலகிற்கு இட்டுச்செல்லப்போகிறது என்று நம்பியோர் - இன்றும் நம்புவோர் - பலர். அதற்கான சாத்தியக்கூறுகள் உண்மையிலேயே இருந்து எங்காவது வரலாற்றில் துரதிருஷ்டவசமாகக் கைநழுவி விழுந்துவிட்டனவா அல்லது கம்யூனிஸம் காலத்தால் காலாவதியாகவேண்டிய கருதுகோள்தானா என்ற கேள்விக்கும் விடையாக ஆசிரியர் பல கோணத்திலிருந்தும் வாதங்களை அடுக்குகிறார்.

Everybody's business is nobody's business என்ற வழக்கு நிதர்சனமானது. அனேகமாக நம்மில் அனைவருமே தத்தம் வாழ்வனுபவத்தில் கண்டிருக்கக்கூடும். தொழில் நிறுவனங்களில் 'பாதுகாப்பு நம் அனைவரின் பொறுப்பு' (safety is everybody's responsibility) என்ற வாக்கியம் தென்படும்போது எனக்கு லேசாக உதறல் எடுக்கும். 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' கூற்றிலும் இதே பிரச்சனைதான். கம்யூனிஸத் தத்துவத்தில் இது இயல்பாகவே நிகழ சாத்தியக்கூறுகள் நிரம்பியிருப்பது மிகப்பெரிய பலவீனம். சீனக் கூட்டுவிவசாயப் பண்ணைகளில் கால்நடைகளும் பொதுவுடைமை ஆனதும், 'முன்பெல்லாம் எங்கள் வீட்டில் பசு இறந்தால் எல்லாருக்கும் வருத்தம். ஆனால் கூட்டுப்பண்ணையின் பசு இறந்தால் எங்கள் எல்லாருக்கும் கொண்டாட்டம். சாப்பிட இறைச்சி கிடைக்குமே'. ஆசிரியர் கொடுத்திருக்கும் இந்த சீன வரிகள் இதை நிரூபிக்கின்றன. படிப்படியான வளர்ச்சியின் மூலமான மாற்றத்தை உதாசீனப்படுத்தும் 'புரட்சி' என்பது மற்றொரு பெரிய பலவீனம். இதனால் அடிப்படையில் இருபெரும் பிரச்சனைகள் கிளம்புகின்றன; முதலாவது, சீரான மாற்றத்தில் நம்பிக்கை இல்லாததால் 'நீ என்பக்கம் இல்லையேல் எதிர்ப்பக்கம்' என்ற வகையில்தான் ஒரு குறிப்பிட்ட தேதியில் நல்லவர்-கெட்டவர்களைப் பிரிக்கவேண்டியிருக்கிறது. இதற்கான அளவுகோல்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அமைந்துவிடுகின்றன. இரண்டாவது, ஒரே ஒரு புரட்சிதான் இருக்கமுடியும் என்பதால் மீண்டும் புரட்சி நடந்துவிடாமலிருக்க சர்வாதிகாரம் இயல்பான தேவையாகிவிடுகிறது. 

(இடமிருந்து மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ)

பதினொன்று அத்யாயங்களில் என்னை மிகவும் கவர்ந்தது 'அறிவியலும் மார்க்ஸியமும்' என்ற தலைப்புடையது. மார்க்ஸிய சித்தாந்தமே பிழையில்லாத ஒரே உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டியிருப்பதால் மற்ற எல்லா சிந்தனைகளையும் - குறிப்பாக அறிவியல் முன்னேற்றங்கள் - இந்த அமிலச் சோதனையைக்கொண்டு சோதித்துப்பார்த்தே அதன் தரத்தை லெனினும், ஸ்டாலினும், பிற தலைவர்களும் முடிவுசெய்தார்கள் என்பது ஆச்சரியாக இருந்தது. வெப்ப இயக்கவியலின் இரண்டாம்விதி (second law of thermodynamics) கூட இந்த இரும்புப்பிடிக்குத் தப்பவில்லை என்பது வியப்பின் உச்சம். ஐன்ஸ்டைனின் சார்புக்கோட்பாட்டிலும் கைவைக்க யோசித்திருக்கிறார்கள். அணுகுண்டு ஆராய்ச்சியைக் கைவிடவேண்டியதிருக்கும் என்றவுடன் பொறுத்துக்கொள்ளப்பட்டதாம். நல்லவேளையாக இச்சித்தாங்கள் எதுவும் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்கள் அனுப்பும் ஆராய்ச்சியில் குறுக்கிடவில்லை போலும். ஆரம்பத்தில் ஸ்புட்னிக் (1957) தொடங்கி இப்போட்டியில் சோவியத்தின் கைதானே ஓங்கியிருந்தது, அமெரிக்கா மனிதனை நிலவில் இறங்கச்செய்யும் (1969) வரை. மரபணுவியல் சுத்தமாக ஒதுக்கப்பட்டு பாசிசப்பொய் என்று அறிவிக்கப்பட்டதாம். காரணம் புறச்சூழல் மட்டுமே எல்லாவற்றையும் மாற்றாது என்ற அடிப்படை மரபணு உண்மையை மார்க்ஸியம் ஏற்காததுதான். மாவோ இன்னும் ஒருபடி மேலேபோய் ஒரே இனச் செடிகள் வர்க்கப்போராட்டத்தில் ஈடுபடாது என்பதைச் சித்தாந்தத்தின் மூலமாகக் கண்டுபிடித்து நெருக்கமாகப் பயிரிட்டு அதிகவிளைச்சலைப் பெருக்க ஆணையிட்டுள்ளார். பலவிதமான இனங்களை ஒன்றுடனொன்று கலந்து பயிர்செய்வதே விளைச்சலுக்கு உகந்தது என்பது நிரூபணமான அறிவியல் உண்மை.

இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு இருக்கும் சித்தாந்தம் Vs தேசிய உணர்வு குழப்பங்களையும் அவற்றின் அடிப்படைச் சிக்கல்களையும் எடுத்துப்பேசியிருக்கிறார். சக கம்யூனிஸ நாடுதானே என்று ஆயுத, தொழில்நுட்ப விஷயங்களில்கூட பரிவு காட்டாமல் சோவியத் அரசு சீனாவிடமிருந்து கறாராகப் பணம் கறந்துகொண்டதைக் குறிப்பிடும் ஆசிரியர், மார்க்ஸின் வெளிப்படையான இந்து மற்றும் இந்திய வெறுப்பு, ஹிட்லருடன் ஸ்டாலின் சித்தாந்தங்களைத் தூரவீசிவிட்டுக் கைகுலுக்கிக் கொண்டது, இந்தியாவின் மீதான சீனப்படையெடுப்பு போன்ற விஷயங்களில் நியாயமான நிலையிலிருந்து பேசாமல் இந்தியக் கம்யூனிஸ்டுகள் சித்தாந்த ஒற்றுமை அடிப்படையில் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்குப் பரிவு காட்டுவதை ஆசிரியர் விமர்சிக்கிறார். சுதந்திரப் போராட்டத்தின்போது சோவியத்திடமிருந்து ஆணைகளைப் பெற்றுச்செயல்பட்டதையும் சமீபத்தில் ரகசியம் நீக்கப்பட்ட ஆவணங்களை மேற்கோள்காட்டிச் சாடுகிறார். புத்தகம் 2011-ம் ஆண்டின் இறுதிவரையிலான தகவல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதை எழுதும்போது ஞாபகம் வந்த மற்றொன்று. வரலாற்றில் பாகிஸ்தானால் ஏற்பட்ட தொல்லைகளின் போதெல்லாம் பங்களாதேஷுக்கு இந்தியா எவ்வளவோ உதவிகள் செய்திருந்தும் - தற்போது செய்துகொண்டிருந்தும் - கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இந்தியாவை வெல்லவேண்டுமென்றே கணிசமான பங்களாதேஷ்காரர்கள் விரும்புவதாகச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இது அவ்விளையாட்டை இந்து Vs முஸ்லிம் போராக எடுத்துக்கொண்டு பாகிஸ்தானைத் தங்கள் சார்பில் முஸ்லிம் பிரதிநிதியாகக் கருதிக்கொள்வதால் வரும் விளைவு. தேசத்தை மதம் பின்னுக்குத்தள்ளிவிட்ட தருணம்.

சில இடங்களில் ஆசிரியரின் எழுத்துமுறை ரசிக்க வைத்தது. கம்யூனிஸ்டுகள் சோவியத்தில் குலாக்குகள் (பொதுவாக நிலவுடைமையாளர்கள்) என்போரைச்  சமூகத்தின் எதிரிகளாக முன்வைத்தனர். இது திராவிடக்கழகத்தினர் பிராமணர்களையும், ஹிட்லர் யூதர்களையும் ஒட்டுமொத்தமாக முத்திரைகுத்தியது போன்றது என்று விளக்குகிறார். சோவியத் எப்படி தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு உதவுவதுபோல் முன்வந்தாலும் நிலைமையைப் பயன்படுத்தி பலமடங்கு அதிகப்பணம் கறந்துகொண்டது என்பதை விளக்கபருபவர் சோவியத் ஒரு 'பொருளாதார இரட்டைத்தம்ளர் முறை'யை வைத்திருந்ததாக எழுதுகிறார். ஒவ்வொரு பத்தியின் இறுதிவாக்கியத்தின் மேல் குறிக்கப்பட்டிருக்கும் எண்கள், 'இது நான் சொல்லவில்லை. அவரே சொல்லிவிட்டார்' என்று வாசிப்பவரிடம் நம்பிக்கையைக் கோரி நிற்கின்றன. குறிப்புகள் எடுக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் மட்டும் 26 பக்கங்களுக்குக் கடைசியில் இணைக்கபட்டுள்ளது. மதத்தை முன்வைப்பவன் மார்க்ஸுக்கு எதிராகத்தான் பேசுவான் என்று ஒரே வரியில் ஒதுக்கிவிட்டுப் போய்விடுவார்கள் என்பதற்காக நிறைய மெனக்கட்டிருப்பது தெரிகிறது. பெரும்பாலும் கம்யூனிஸத் தலைவர்களிடமிருந்தும் சித்தாந்தவாதிகளிடமும் இருந்தே தகவல்களை எடுத்து எதிராக வாதிடும் உத்தி. 'ரிக் வேதத்தில் இந்த ஸ்லோகத்தின் பொருள் இன்னது. நான் சொல்லவில்லை; வேதம் சொல்கிறது. இப்ப என்ன சொல்கிறீர்கள்?' என்பார்களே நம் கடவுள் மறுப்பாளர்கள் அதே வழிமுறை. 

இன்றைய தேதியில் சீனா, வடகொரியா, லாவோஸ், வியட்னாம், கியூபா என்று ஒருகைவிரல்களுக்குள் அடங்கிவிடக்கூடிய அளவுக்கு மார்க்ஸிய-லெனினிய-மாவோவிய சித்தாந்த ஆட்சியைப் பின்பற்றும் நாடுகள் சுருங்கிவிட்டதால் ஆசிரியர் 'கம்யூனிஸத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்' என்று கடைசி அத்யாயம் எழுதுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அந்நாடுகளிலும்கூட விவாதிக்கக்கூடிய அளவில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ மூலச்சித்தாந்தங்களில் இருந்து வெகுவான மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்பட்டுவிட்டன. எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல், வளர்ச்சி-வீழ்ச்சியைத் தாண்டி, இன்றைய சூழ்நிலையில் 'எல்லோரும் சமம், உழைப்புச்சுரண்டல் கூடாது, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும், இருப்பது அனைவருக்கும் பொது' போன்ற எண்ணங்கள் பொதுவாகக் கம்யூனிஸச் சிந்தனைகளாகப் பார்க்கப்படுவதே கம்யூனிஸத்தின் வெற்றி. குறிப்பாகச் சீனாவில் பெண்கள் அடைந்த சமத்துவமும், கடந்த தலைமுறையைவிட ஒப்பீட்டளவில் கிடைத்துள்ள அதிக சுதந்திரமும் கம்யூனிஸ்ட்களையே சாரும், யார் எத்தனை குழந்தைகள் பெறவேண்டும் என்பதை அரசு முடிவுசெய்தாலும்கூட.

இப்போது முதல் பத்தியில் சொன்ன வரலாற்றின் 'பொருளுக்கு' வருவோம். வரலாற்றில் அதிகபட்சமாக சம்பவங்கள் மட்டும்தான் உறுதியாகக் கிடைக்கும். காந்தி சுடப்பட்டுக் கொல்லப்பட்டார் என்பதுபோல. இதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதற்கு ஆயிரம் பாடபேதங்கள் எப்போதும் இருக்கும், அது யாரால் சொல்லப்படுகிறது என்பதைப்பொறுத்து. எல்லோருமே 'ஆதாரங்களை'க் காட்டுவார்கள். வாசிப்பவர் சொந்த அனுபவத்தைக்கொண்டுதான் உண்மை அனேகமாக இங்குதான் இருக்கக்கூடும் என்று யூகித்துக்கொள்ளவேண்டும். சரி...அப்படி ஓர் வரலாற்று உண்மையை எப்படியோ ஓரளவு துல்லியமாகக் கண்டுகொள்வதாகவே வைத்துக்கொள்வோம். என்ன பயன்? அதற்கு George Santayana பதிலளிக்கிறார்; கடந்தகாலத்தை நினைவிற் கொள்ளாதவர்கள் அதை எதிர்காலத்திலும் சந்திக்க விதிக்கப்பட்டவர்கள் (Those who cannot remember the past are condemned to repeat it)!



பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் 
கிழக்கு பதிப்பகம்
பக் : 312
விலை : ரூ.160

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக