ஞாயிறு, 31 மே, 2015

நான், என் காதல், என் காதலிகள் - பகுதி 11 : மோகமுள் (நாவல்) - தி.ஜானகிராமன்

அப்போது 17-18 வயதிருக்கும், முதன்முறையாக மாநிலமொழித் திரைப்படங்கள் வரிசையில்  ஞாயிறு மதியம் தூர்தர்ஷனில் வந்த தமிழ்ப்படங்களில் ஒன்றாக (ஞான ராஜசேகரனின் இயக்கத்தில்) மோகமுள்ளைப் பார்த்தபோது. கதையோ, வசனங்களோ, மயக்கும் பாடல்களோ (கமலம் பாத கமலம், சொல்லாயோ வாய்திறந்து, நெஞ்சே குரு நாதரின்), அதுவரை பார்த்திருந்த படங்களுக்கு முற்றிலும் மாறாக இயல்பாக இருந்ததோ (கலைப்படம்), அந்த வயதோ, இல்லை எல்லாமுமோ தெரியவில்லை; ஆனால் மறக்கமுடியாத பதிவுகள் மனதில் விழுந்திருந்தன. 15 வருடங்கள் கழித்து இப்போது அசல் கதையை வாசிக்கிறேன்.





ஒரு நாவல் திரைப்படமாக எடுக்கப்படும்போது திரைமொழிக்கேயுரிய இயல்பான சில எல்லைகளால் அது கட்டுப்படுத்தப்படும். இரண்டு உதாரணங்கள் தருகிறேன்; ரங்கண்ணா தம்புராவில் சுருதிசேர்ப்பதே நான்கைந்துபக்கங்கள் நாவலில் நீளும். அதை எப்படித்திரையில் காட்டமுடியும்? கடிகாரத்தில் நாலுமணியைக்காட்டிவிட்டு பிறகு நாலரைமணியைக்காட்டுவதால் அந்த ஐந்துபக்கங்களின் அனுபவத்தைத் தந்துவிடமுடியாது.


அடுத்தது நாவலில் மெல்லமெல்ல வாசகன் மனதில் உருவாகி வரும் கதாபாத்திரத்தோற்றம் Vs சடாரென ஒரு காட்சியில் தோன்றி நம் முகத்திலறையும் திரைநடிகர்களின் ஆளுமை. கோயம்புத்தூரிலிருந்து யமுனாவைப்பெண் பார்க்க நாவலில் வருபவர் எதைப்பார்த்தாலும் அதன் விலை என்ன என்றுபார்க்கும் குணமுள்ள, சீரியஸானவர். பாபுவின் உயிர்த்தோழனாகவரும் ராஜம் எதையும் நுணுகிநுணுகிப்பேசி எதையும் ஆராய்ச்சிபுத்தியோடு அணுகுபவர். இவ்விரு பாத்திரங்களுக்கும் திரைப்படத்தில் தேர்வுசெய்யப்பட்டவர்கள் முறையே வெண்ணிறஆடைமூர்த்தியும் விவேக்கும். வாசகனின் மனம் எப்படி ஏற்கும்? நாவலுடன் படத்தை ஒப்பிடுவதை இதோடு விடுகிறேன், இக்குறிப்பின் மையநோக்கம் அதைச்செய்வதல்ல என்பதால்.


இந்நாவல் வாசிப்பனுபவத்தின் தொகையை - ஆழ அகலத்தை, நுட்ப நுணுக்கத்தை, மொழியின் மேன்மையை, சிந்தனை வீச்சை - வார்த்தைகளில் வடிப்பது எனக்கு ஆகக்கடினமான செயலென்றாலும் வீம்புக்காகவாவது அழகான ஒரு மாலையை ஒவ்வொரு பூவாக பிய்த்துப்பிய்த்து 'சொன்னேன்ல இதுதான் இதுதான்' என்று காட்டிவிடவும் ஒரு வேகம் வருகிறது.


இடத்தையும் காலத்தையும் இப்படி சுருக்கிவிடலாம். நாவல் எழுதப்பட்டது 1955-56ல்; திஜாவின் 34ம் வயதில். கதையின் காலம் தோராயமாக இரண்டாம் உலகயுத்தம் ஆரம்பித்ததிலிருந்து காந்தி சுடப்பட்டுக்கொஞ்சகாலம் வரை; 1940-50 என்று கொள்ளலாம். கும்பகோணத்தையும் அதன் சுற்றுவட்டாரத்திலுமே பெரும்பாலான சம்பவங்கள் நடக்கிறது. மராட்டியக்குடும்பத்தில் வந்தவள் கதாநாயகி யமுனா என்பதால் கொஞ்சம் தஞ்சாவூரும் உண்டு. இறுதியில் 'கெட்டும் பட்டணஞ்சேர்' என்று ஆசிரியர் நினைத்தாரோ என்னவோ கிளைமேக்ஸ் சென்னையில். பாபுவின் நண்பன் ராஜம் காசிக்குப்போகிறான், டெல்லிக்குப்போகிறான் ஆனால் திஜா வாசகர்களை அங்கெல்லாம் அழைத்துச்செல்வதில்லை. அவ்வூர்களின் காலநிலைகளைமட்டும் மேம்போக்காகப் பேசிச்செல்லும் ஓரிருவரிகள்கொண்ட கடிதங்கள்மட்டும் நமக்கு வாசித்துக் காண்பிக்கப்படுகின்றன. அவ்வளவுதான்.


கதை மொத்தமும் பிராமண (அனைவருமே ஐயர்கள்தான், ஐயங்கார்கள் யாருமில்லை. கும்பகோணத்தில் சாரங்கபாணி, சக்கரபாணி என்று அனேகர் அருள்பாலித்தாலும் கும்பேச்வரனும், நாகேச்வரனும்தான் பேசப்படுகிறார்கள்) பாஷையில் இருந்தாலும் அந்தகாலத் தஞ்சாவூர்மாவட்டத்தில் புழக்கத்திலிருந்த வார்த்தைகளின் பதிவுக்காகவே இது ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம். என் தாத்தா பாட்டி தலைமுறை இவ்வார்த்தைகளை இயல்பாகப் பயன்படுத்தினார்கள். அவற்றை அனேகமாக மறந்துவிட்டிருந்த நிலையில் திஜாவின் புண்ணியத்தில் நினைவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுவிட்டன. அப்படி நாவலில் தட்டுப்பட்ட ஏகப்பட்ட வார்த்தைகளில் சிலவற்றை என் சொந்த வாக்கியங்களிலமைத்திருக்கிறேன், ஏதாவது விளங்குகிறதா பாருங்கள்; அந்தக் 'குறட்டில' நல்லா பூசு, 'செம்படத்தை' எடு, 'ஆளோடியில' போட்டிருக்கேன், எதச்சொன்னாலும் 'மேக்கரிச்சு' பேசிப்புடறான், நல்ல 'மேக்காத்து' காலம், 'கிடாவடி' நடக்குது...சத்தியமாகத் தமிழ்தான்!


நுண்கலைகளில் உக்கிரமாக இறங்கிவிடுபவர்கள் இயல்பாக அதீத அளவில் உணர்ச்சிவசப்படுபவர்கள் என்பது என் அபிப்ராயம். அத்தன்மையே அவர்களை தத்தம் கலைகளில் பரிமளிக்கச்செய்கிறது. இக்காரணம்பற்றி இசை, நடன, ஓவிய, சிற்பக்கலைஞர்களின் வாழ்வின் சம்பவங்கள் உலகின் எந்த மூலையிலும் எந்த காலத்திலும் நாடகத்தன்மையுடன் - சராசரிமனிதர்களின் பார்வையில் - இருந்திருப்பதையும் இருந்துகொண்டிருப்பதையும் காணலாம். புகழின் வெளிச்சத்தில் இவர்கள் தன்னை இழந்துவிடுகிறார்கள் என்ற தப்பபிப்ராயம் பொதுப்புத்தியில் உண்டு. அது சரியல்ல. அவர்கள் அப்படித்தான் இருந்தாகவேண்டும். வின்செண்ட் வான்கா மனச்சமனிலையிழந்து காதை அறுத்தெடுத்ததும், அருணகிரி வேசிப்பெண்களிடம் சரணடைந்ததும், தோடி ராஜரத்தினம்பிள்ளை சாராயத்தில் சரிந்ததும் தற்செயல்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு தங்களிடமிருந்தே தப்பித்துக்கொள்ள ஓரு கௌரவமான உபாயமுண்டு; பக்தியில் தன்னை இழந்துவிடுதல். நம் சங்கீதமும்மூர்த்திகள் சாதுர்யமாக இதனால்தான் தப்பித்துவிட்டார்கள் போலும். குடியில் மனைவியை மறப்பவர்களை எந்த அளவுக்குச்சமூகம் தாழ்த்துகிறதோ அதே விஷயத்தை பக்தியில் மூழ்கிச் செய்பவர்களை உயர்த்திப்பிடிக்கிறது.




மோகமுள்ளின் நாயகன் பாபு இசையின் உயரங்களைத்தொடக்கூடிய வரம்பெற்றவன். அறிவிலும் பஞ்சையில்லை. தன்னைவிட பத்துவயது மூத்த யமுனாவை நினைவிலிருந்து அகற்ற இயலாமல் தனக்கு வாழ்வில் வேறுஎதுவும் ஒரு பொருட்டில்லை என்று தன் இளமையை அழித்துக்கொள்ளும் அவனை இசைக்கலைஞன் பாத்திரமாகப்படைத்தது திஜாவின் மேதைத்தனம். அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட அவன் சூழ்நிலையிலேயே பிறந்துவளர்ந்த அவன் நண்பன் ராஜம் உணர்ச்சிவசப்படுவதில்லை. மனப்போராட்டங்களுக்காளாவதில்லை. முக்கியமாக இசையை ரசிப்பதோடு சரி. I'm convinced that the author has purposely left this characteristic contrast as subtext for his readers.


கதையில் பலருக்கும் க்ஷயரோகம் வருகிறது. க்ஷயம் என்றால் தேய்தல். எலும்பு தேய்ந்துபோவதால் இதற்கு இந்தப்பெயர். எலும்புருக்கி நோய், காசநோய் என்று அழைக்கப்படுவதும்(?) இதுதான். (கொசுறு 1: 'அக்ஷய'திரிதியை என்றால் தேயாத திரிதியை. அதாவது வளர்பிறை திரிதியை. அதாவது அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாள்). பாபுகூட கடைசியில் பசியால் இளைத்துத்துரும்பாக மதறாஸ் வரும் யமுனாவிற்கு க்ஷயரோகமோ என்று சந்தேகப்படுவதாக திஜா எழுதியிருந்ததால் அந்தகாலத்தில் இது நம்மூரில் அதிகம்போலும் என்று நினைத்துக்கொண்டே கூகுளைக்கேட்டால் இன்றும் உலகளவில் இந்தியா காசநோயில் முதலிடம் வகிப்பதைச்சொல்கிறது. வயதானவர்கள் யாராவது இருமிக்கொண்டிருந்தால் குழந்தைகளை அருகில்விடாதீர்கள். இது ஒட்டுவாரொட்டி வியாதி. (கொசுறு 2: இந்தியாபோய்விட்டு வந்த அடுத்த ஒருவருடத்திற்கு சிங்கப்பூரில் ரத்ததானம் செய்தால் அதில் 'NO PLT' என்றொரு ஸ்டிக்கர் ஒட்டுவார்கள். No platelets என்பதன் சுருக்கமாம். இந்த ரத்தத்திலிருந்து platelets எடுக்கவேண்டாம் என்பதுபொருள். இந்தப்பெருமை நமக்குக்காசநோயில் முதலிடம் வகிப்பதால் கிடைத்ததாகும்).


இன்னொன்றைச்சொல்லாவிட்டால் மோகமுள் என்ற உன்னதமான இலக்கியத்துக்கு மரியாதையில்லை. ஏனெனில் காலம்கடந்துநிற்கும் எந்த இலக்கியத்துக்கும் ஒரு நிகழ்காலமதிப்பு கிடைப்பது அதன் relevance-ன் பொருட்டே. யமுனாவுக்குத் திருமணமாகாமல் போவதன் முக்கியக்காரணம் அவள் தாயாரின் கலப்புத்திருமணம். மராட்டியவம்சத்தில் வந்த அவள் ஒரு அய்யரிடம் இரண்டாம்தாரமாக வாழ்க்கைப்படுகிறாள். கதைப்படி இரண்டுகுடும்பங்களும் தனித்தனியாக இருந்தாலும் அவர்களுக்குள் அன்யோன்யக் குறைச்சலில்லை, அய்யர் இறக்கும்வரை. பிறகு வறுமையின் பசியின் உந்துதலால் யமுனா ஒரு செல்வந்தருக்கு வைப்பாட்டியாக இருக்க ஒத்துக்கொள்ளவில்லை என்று தாய்க்கே மகளிடம் மனஸ்தாபம் வந்துவிடுகிறது. இந்த இடத்தில் ஒரு விஷயம். எந்த பிராமணர்கள் சாதி அமைப்பு அழுத்தம்பெற்றதற்கு காரணமாக சுட்டப்படுகிறார்களோ அவர்கள்தான் கலப்புசாதித்திருமணத்தை இன்றைக்கும் மற்ற சாதிகளைவிட அதிகஅளவில் செய்பவர்களாக இருக்கக்கூடும் என்பது என் கணிப்பு. என்னுடைய மிகச்சிறிய நட்புவட்டாரத்தில் மூன்று பிராமண நண்பர்கள் கலப்புசாதித்திருமணம் செய்திருக்கிறார்கள். விகிதாச்சார அடிப்படையில் இது மிகஅதிகம். சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான பத்ரி சேஷாத்ரியின் கட்டுரையும் இதைக்குறிப்பிட்டிருந்தது. இதற்கு ஒரு சர்வே எடுத்தால் பலர் வாயை அடைக்கலாம். திஜா எப்படியோ இதையும் சொல்லாமல் சொல்லிவிட்டதுதான் ஆச்சரியம்.


அறிவின் பாரம்பரியத்தில் வந்த பிராமணக் குடும்பங்களிடமும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஐம்பதாண்டுகளுக்குமுன்கூட அதிகம் விலகாமலிருந்ததுதான் ஆச்சரியம்; மோகமுள்ளில் காணப்படும் வயதான நோய்க்கிழவருக்கு பெற்றோர் வற்புறுத்தலால் வாக்கப்படுவதாகட்டும், யாரென்றே தெரியாத நிச்சயிக்கப்பட்ட கணவன் இறந்ததால் வாழ்வை விதவையாகவே கழிப்பதாகட்டும். அந்த விஷயத்தில் 'அறுத்துகட்டும்' பழக்கமுள்ள தீண்டப்படாமலிருந்த சாதிகள் எவ்வளவோ முற்போக்கு என்றுதான் சொல்லவேண்டும். என்னைப்பொறுத்தவரை இதற்கு கீழ்ச்சாதிகளில் பெண்கள் என்றுமே சம்பாதிப்பவர்களாக இருந்ததுதான் காரணமோ என்று யோசிக்கிறேன். ஏனெனில் இன்று நாடுகளின், கலாச்சாரங்களின் எல்லைகளைக்கடந்து  பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கும் விவாகரத்து, மறுமண அளவுகளுக்கும் நேரடித்தொடர்பிருப்பதைக் காணமுடிகிறது.


மோகமுள்ளில் சிக்கியுள்ள மானுட உளவியற்கூறுகளை முழுமையாக ஆராயவேண்டுமென்றால் முனைவர்பட்ட ஆராய்ச்சிதான் செய்யவேண்டும். ஓர் உதாரணம். Optimism Bias என்று ஒன்று உண்டு. அநேகமாக நம் அனைவருக்குமே உண்டு; அடிக்கடி வானூர்திகள் விபத்துக்குள்ளானாலும் அது நமக்கு நடக்காது என்று நம்புவது, புகை பிடிப்பவர்கள் ஒவ்வொருவருமே சகபுகைப்பவர்களைக்காட்டிலும் தனக்கு புற்றுநோய்வருவதற்கு கொஞ்சமேனும் வாய்ப்பு குறைவே என்று கருதுவது, எப்படியும் குழந்தை சுகப்பிரசவமாகத்தான் பிறக்கும் என்று நம்புவது, அவ்வளவு ஏன்? அனேக நண்பர்களின் ஐபோன் டிஸ்ப்ளே உடைபட்டபோது அது எனக்கு நடக்கவே நடக்காது என்று நினைத்திருந்தது (கடந்த வாரம் உடைத்தது), etc. மோகமுள்ளில் யார்கேட்டும் மசியாத சுந்தரம் தான் கேட்டால் ஒப்புக்கொள்வான் என்று பாபு நினைக்கிறான், ஐந்தாவதுவரையே படித்த தனக்கு பாபு வேலைவாங்கிக்கொடுப்பான் என்று யமுனா நினைக்கிறாள், தன்னிடம் சங்கீதம் கற்கவரும் சிஷ்யர்கள் யாரும் தான் கேட்டுக்கொண்டால் வித்தையைக்காசு சம்பாதிக்க இறக்கிவிடமாட்டார்கள் என்று ரங்கண்ணா நினைக்கிறார், யார்சொல்லியும் கல்யாணத்திற்கு இசைந்துவிடாத பாபுவை ரங்கண்ணாவைக்கொண்டு கரைத்துவிடலாமென்று வைத்தி நினைக்கிறார்...சொல்லிக்கொண்டே போகலாம்.


மோகமுள் மாதிரி ஒரு கதையை சுவாரஸ்யம் குன்றாமல் அறுநூற்றைம்பது பக்கங்களில் நீட்டிமுழக்கி எழுதிவிடுவதென்றால் அது ஜீனியஸ் என்பதைத்தவிற வேறில்லை. அந்த வேகத்தில் வந்த வெண்பா கீழே:




தோணவில்லை வேறேதும் தொட்டெடுத்து வாசிக்க
போனதில்லை இப்படிநான் போங்க - மனமுருகி
மோனநிலை எய்துதற்கு மோகமுள்ளைப் பாய்ச்சிட்ட
ஜானகிரா மன்ஜீ னியஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக