சனி, 30 மே, 2015

நீங்க எவ்வளவு லஞ்சம் கொடுத்தீங்க...

என்னப்பா பார்க்கிறீங்க,  உங்க கணக்கு எம்மட இருக்குல்லா, சுமார் ரூ4400 கொடுத்திருக்கீங்க! என்னடா கேமிரா எதாச்சும் செட் பண்ணிப் பார்த்துருப்பானோ, இவனோட ஒரே தொல்லையா போச்சுனு பார்க்கீங்களா... நான் சொல்லலை இதனை இந்திய அரசாங்கத்தின் அமைப்பான NCAER (NATIONAL COUNCIL OF APPLIED ECONOMIC RESEARCH) அதன் சர்வேயில் கண்டறிந்திருக்கிறார்கள். 

சர்வேக்கு எடுத்துக்கொண்ட நகரங்கள் லக்னோ, பாட்னா, சென்னை, புவனேஸ்வர், ஹைதராபாத், புனே போன்றவற்றிலிருந்து 3192 நபர்களிடமும், கிராமபுறங்களில் 554 நபர்களிடமும் தகவல் சேகரித்துள்ளனர். பொதுவாக நகரத்தில் ரூ4400-ம், கிராமப்புறத்தில் ரூ2900-ம் லஞ்சமாக ஆண்டுதோறும் ஒவ்வொரு குடும்பமும் கொடுக்கின்றது.  

இந்த லஞ்சமானது பொதுவேலை, சமூகப்பாதுகாப்பு திட்டங்களில் பயன்பெறுதல், வேலை மற்றும் பணியிடமாற்றம், அனுமதி, சட்டம், குற்றம் மற்றும் போக்குவரத்து விதிமீறல் போன்றவற்றிற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

நகரம்:
நகரங்களில் சுமார் 18000ரூ தோராயமாக வேலை மற்றும் வேலையிட மாற்றத்திற்கு கொடுத்துள்ளனர். ரூ600 போக்குவரத்து காவலரிடம் லஞ்சமாக கொடுத்துள்ளனர். மேலும் லக்னோ, டில்லி, நொய்டா, ஹைதராபாத் மற்றும் பாட்னா நகரங்களிலிருந்து நடைபாதை வியாபாரிகளில் எடுக்கப்பட்ட மாதிரியில் தங்கள் ஆண்டு வருவாயில் சுமார் 13%ம் அதாவது மாதம் ரூ1100 லஞ்சமாக காவல்துறைக்கு கொடுக்கப்படுகின்றது. 



கிராமம் :
தமிழ்நாடு, உத்திரபிரதேசம், பீகார், ஆந்திரா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிலிருந்து சுமார் 359 கிராமாப்புற வீடுகளில் தகவல் சேகரிக்கப்பட்டது. பெரும்பாலும் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புதிட்டம், பொதுவிநியோகதிட்டம், சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயனாளிகள் தங்கள் உரிமையை பெற லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. 67சதவீத பயனாளிகள் வெளிப்படையாக லஞ்சத்தினை ஒத்துக்கொண்டுள்ளனர்.



ஒப்பந்ததாரர்கள் :
டில்லி, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகம், உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம், ஆந்திரா, பீகார் போன்ற 15க்கும் மேற்ப்பட்ட மாநிலங்களில் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் நடந்த சர்வேயில் 80 சதவீத ஒப்பந்ததாரர்கள் லஞ்சம் கொடுத்தால்தான் பணியை எடுக்கமுடியும் என்றும்; திட்டமதிப்பீட்டில் எட்டு சதவீதம் வரை லஞ்சமாக கொடுப்பதாக ஒப்புதல் அளித்துள்ளனர். கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட நபர்கள் 287 பேர் அதில் 231பேர் லஞ்சத்தினை வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளனர்.

மோடிஜியின் செல்லத்திட்டமான உற்பத்தி துறையிலும் (Manufacture sector) லஞ்சம் தலைவிரித்தாடுவதாக 93சதவீதம் பேர், அதாவது 180 பேரிடம் கணக்கு எடுக்கப்பட்டது அதில் 168பேர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

யார் இந்த சர்வேக்கு காரணம் ?
இந்திய அரசாங்கம் NCAER உடன் National Institute of  Public Finance and Policy & National Institute of Financial Management இணைந்து இந்தியாவில் கருப்புபணம் பற்றிய தகவல்களை இந்திய பாரளுமன்றத்தின் நிதிநிலை குழுவிடம் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர். உடனே எனது மோடிஜி நண்பர்கள் சட்டை காலரே தூக்குவீங்களே, பார்த்திங்களா எங்கஜீ யின் சாதனைனு...  

சாரிப்பா,  இது 2012ல் நம்ம மன்மோகன்ஜியின் அரசாங்கத்தினால் முடுக்கிவிடப்பட்ட நடவடிக்கை. சர்வே 2012ல் செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை நடந்து அதன் தகவல்கள் 2013ல் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, கடந்த வருடம் இதன் அறிக்கை நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது, இந்த வருடம் அறிக்கை குறித்து கருத்தறிய பல்வேறு அமைச்சகங்களிடம் அறிக்கையை அனுப்பிய பிறகே இந்த தகவல் வெளிவந்துள்ளது. 

எப்படி ஊழல் பணம் நம்மையும் பாதிக்கிறது?

லஞ்சப்பணம்  நேரடியாக பணமாக மட்டுமின்றி ரியல் எஸ்டேட், நகை, விலைமதிப்பற்ற கற்கள், பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் அரசியல் விளம்பரங்கள் போன்றவற்றில் அதிகாரப்பூர்வமாக கொடுக்கப்படுகின்றது. 

இதுகுறித்து ஒய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியிடம் கேட்டபொழுது வெளிநாட்டு வங்கிகளிடம் இருப்பதாக கூறப்படும் பணத்தினை அரசாங்கம் மீட்க மெனக்கெடவேண்டாம், இந்திய சந்தையில் புளங்கும் கருப்புபணத்தினை தடுப்போம் இந்தியா மீண்டெழும் என்றார். 

அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் அதிகாரப்பூர்வமற்ற லஞ்சப்பணத்தினை  பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கின்றனர். அரசுதிட்டங்களின் நிதி அறிக்கையில் சுமார் 10சதவீதம் லஞ்சமாக கொடுக்கவேண்டியிருப்பதாகவும் இதுவே சிலசமயங்களில் 20 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்று வேதனையுடன் ஒத்துக்கொண்டுள்ளார். லஞ்சம் காரணமாக இப்பொழுதெல்லாம் திட்ட மதிப்பீடு சுமார் 10சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இந்தவகையில் பொதுமக்களின் வரிப்பணம் அதிகாரப்பூர்வம்ற்ற வகையில் அரசியல்வாதிகளிடம் மடைமாற்றி விடப்படுவதாகவும் தெரிவித்தார்.

லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த புரிதல் பொதுமக்களிடம் எவ்வாறு உள்ளது  ?!

கடந்த முறை தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபொழுது ஒரு நண்பரிடம் பேசியபொழுது நம்மை அயற்ச்சியுறச்செய்த அவரது கூற்று "மகராசன் அவர் ஊழல் பண்ணினா என்ன இல்லாட்டி என்ன, நமக்குத்தான் தேர்தலின்போது ஒவ்வொரு வாக்குக்கும் ரூ1000 கொடுத்திடுறார்லா நம்ம பங்கு வந்திடுதுல்ல அப்புறம் என்னப்பா என்றார்", என்னமோ அரசியல்வாதிகள் அவங்க அப்பன் வீட்டு பணத்தினை எடுத்து நம்மகிட்ட கொடுக்கிற மாதிரி நண்பர் சொன்னார்.  

நன்கு சம்பாதித்து வரிப்பணம் கட்டும் படித்த வெள்ளைசட்டைக்காரர்களே அல்லது ப்ளூக்காலர்காரர்களே உங்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகின்றது. நியாமா பார்த்தா உங்களூக்கும் கோபம் வரனும், ஆனா வராது.

நடுத்தர மற்றும் ஏழை கோட்டாவில் வரும் நபர்களே உங்களது உரிமைப் பணத்தில்தான் சுரண்டல் நடக்கிறது. உங்கள் பெயரைக் கூறிக்கொண்டே இந்த நாட்டினை ஏமாத்துகிறார்கள். நியாமா பார்த்தா உங்களூக்கும் கோபம் வரனும், ஆனா வராது.

எனக்கு என்னப்பானு இருக்கிற சமூக பொறுப்பாளிஸ்களே உங்க டவுசருக்கும் வேட்டுவைய்ப்பாங்க அரசியல்வாதிங்க.. அதுக்குகாக உங்கள தெருவில் இறங்கி போராட சொல்லல, ஆனால் சமூக அரசியல் விழிப்புணர்வோடு கூடிய வரையில் நமது எதிர்ப்பினை பதிவு செய்வோம், கேள்வி கேட்போம், அதுக்கும் பயம்னா அரசியல் ஆயுதமாம் வாக்குதனை பயன்படுத்தி, எந்த வேட்பாளரும் சரியில்லையெனில் குறைந்தபட்சம் 49ஒ-க்கு வாக்களியுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக