வியாழன், 9 ஏப்ரல், 2015

யார் குற்றவாளி?


முதலில்...


 ஆந்திர வனப்பகுதியில் சுமார் 20 தமிழகத்தொழிலாளர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு குறிஞ்சியின் கடுமையான கண்டனங்கள். ஆந்திர முதல்வர் சந்திரபாபுவுக்கும்  செம்மர கடத்தல் மாஃபியாவுக்கும் இடையில் நடக்கும் போரில் அறிந்தோ அறியாமலோ குற்றம் செய்த கூலித்தொழிலாளர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் சுட்டுக்கொல்லப்படுவது கடுமையான மனித உரிமை மீறலாகும். தமிழக அரசு நஷ்ட ஈடு மட்டும் வழங்கி இந்த விஷயத்தை மூடி விடாமல் தேசிய மனித உரிமை ஆணையத்துடன் இணைந்து இந்த விவகாரத்தில் நடந்த உண்மைகளை வெளியில் கொண்டு வர வேண்டும்.

 அடுத்து 

     ஏன் செம்மரத்தை வெட்டுகிறார்கள், அதை ஏன் கடத்துகிறார்கள் என்று தெரியுமா? ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் செம்மரங்கள் அதிக அளவில் வளர்கிறது. இந்த செம்மரத்தில் இருந்து மருந்துகள், இசைக்கருவிகள், மரச்சாமான்கள் ஆகியவை செய்யப்படுகின்றன. அதனால் இந்த செம்மரங்களுக்கு சீனாவில் மவுசு அதிகம். இந்தியாவில் ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ செம்மர கட்டை சீனாவில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ரேடியம், யுரேனியம் ஆகியவற்றை தயாரிக்கவும் செம்மரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. அணு உலையில் செம்மரக் கட்டைகள் குறைந்த அளவில் தான் பயன்படுத்தப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பூடான் வழியாக சீனாவுக்கு செம்மரக் கட்டைகள் அதிக அளவில் கடத்தப்படுகிறது. (நன்றி: http://tamil.oneindia.com/news/tamilnadu/why-do-people-smuggle-red-sandalwood-224277.html)
 

  இப்போது சற்று திறந்த மனதுடன், உணர்ச்சிவசப்படாமல் என்ன நடந்தது என்பதை ஆராய்வோமா? 

 ஆந்திர திருமலை வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக்கடத்தி சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குக் கடத்துவதும் அதில் கிடைக்கும் வருமானத்திற்காக (ஒரு நாளைக்கு 2000 முதல் 5000 வரை என்கிறார்கள்) தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் மரம்வெட்டும் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்வதும் பல வருடங்களாக நடக்கும் விஷயம். 2003ல் திருமலையில் நடந்த குண்டுவெடிப்பில் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு உயிர்தப்பினார். நக்சல்கள்தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்ற கருத்து நிலவினாலும், அப்போது இந்த செம்மரக் கடத்தல் வியாபாரத்தில் கொடி கட்டிப்பறந்த ஒரு தாதாதான் காரணம் என்பதும் அந்த தாதாவை ஒழிக்க தீர்மானம் எடுத்த சந்திரபாபு நாயுடு இப்போது முழு அதிகார பலத்துடன் அதில் இறங்கியுள்ளார் என்பதும் காஞ்சி சங்கரராமன் கொலை விஷயத்தில் கைதான குற்றவாளியான - இப்போது உயிருடன் இல்லை - அப்பு தாதா வரை இந்த கடத்தலில் பணம் சம்பாதித்தவர்கள் என்பதும் அதிகார, காவல் மட்டங்கள் அறிந்த ஒன்று. ஆமாம், இந்த விவகாரம் ஒரு பெரிய கடல். இதில் பலியான 20 பேர் சிறு நத்தைகள் மட்டுமே.



   இந்த செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களுடன் ஆந்திர காவல்துறையினர் சண்டை போடுவதும், அவர்களை கைதுசெய்வதும், சுட்டுக்கொலை செய்வதும் பல வருடங்களாக நடக்கும் ஒன்று. இதில் மரம் வெட்டும் கூலித்தொழிலாளர்களாக பெரும்பாலும் எல்லையோர தமிழகக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுவது தெரிந்தும் தமிழக அரசு இத்தனை நாள் கண்ணை மூடிக்கொண்டிருந்ததும் உண்மை. இதில் திமுக அதிமுக வித்தியாசமில்லை. வழக்கம்போல அலட்சியம்.

  சந்திரபாபு நாயுடு சென்ற வருடம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் செம்மரக் கடத்தல்காரர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டது. கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு பலரக ஆயுதங்களும், குற்றவாளிகளை சுட்டுப்பிடிக்கும் உத்தரவும் வழங்கப்பட்டதுடன் தமிழக, ஆந்திர எல்லையோர கிராமங்களுக்கு அந்தந்த மாவட்ட தமிழகக் காவல்துறையினருக்கும் இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டது. கூலித்தொழிலாளர்கள் இதை அலட்சியப்படுத்தி விட்டு தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். இதைத் தடுக்க வேண்டிய நம்மாட்களுக்கு ரத்தத்தில் ஊறிய அலட்சியம். 



  சில மாதங்களுக்கு முன்னர் 5 தமிழகத் தொழிலாளர்களும், அதற்கு முன்பு இருவரும் என தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள்  ஆந்திரப் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னரும் நம்மாட்களுக்கு உறைக்கவில்லை. ஒட்டுமொத்த அரசாங்கமும் கோவில் கோவிலாக வெட்கமில்லாமல் தீச்சட்டி ஏந்தியும், மண்சோறு உண்டும் ஒரு ஊழல் குற்றவாளிக்கு விசுவாசம் காட்டி வந்தது. தமிழக மக்கள் பிழைப்பை அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்ற நினைப்பில் ஒரு பக்கம் வேண்டுதலும் இன்னொரு பக்கம் வசூல்களும் நடந்து வந்தது. மீண்டும் மீண்டும் அலட்சியம். 

 நமக்கு யாரையாவது குற்றம் சொல்ல மட்டுமே தெரியும். அதற்கு முன்னர் நாம் எப்படி தடுத்திருக்கலாம் என்பதை வசதியாக மறைத்து விடுவார்கள். இப்போதும் அதுதான் நடக்கிறது. இவ்வளவு பெரிய துப்பாக்கு சூடு நடத்தி ஆந்திரக்காவல்துறை கடுமையான எச்சரிக்கையை உணர்த்தியபிறகு இப்போதுதான் தமிழக எல்லையோர காவல்துறை விழித்தெழுந்து கண்காணிப்பை ஆரம்பித்திருக்கிறது. நியாயமாக இவ்வளவு பெரிய உயிரிழப்பைத் தடுக்கத்தவறியதற்காக தமிழக அரசு முதலில் மன்னிப்புக் கேட்டுவிட்டு பிறகு ஆந்திர அரசை மன்னிப்புக் கேட்க வலியுறுத்தவேண்டும்.



  ஆந்திர அரசின் நடவடிக்கையை ஆரம்பத்திலிருந்தே கூலித்தொழிலாளர்களுக்கு எடுத்துரைக்காமல் இருந்ததும், அவர்களின் தேவைகளை கேட்டறிந்து வாழ்க்கைத்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருந்ததும் நம் அரசின் தவறு. என்னதான் வருமானம் வந்தாலும் தம்மைப்போல் மரம் வெட்ட வந்தவர்கள் கைது செய்யப்பட்ட பின்பும், சுட்டுக்கொல்லப்பட்ட பின்பும் தொடர்ந்து இந்த சட்டவிரோதமான காரியத்தில் ஈடுபட்டு வந்தது நம் மக்கள் செய்த தப்பு. அப்படி தொடர்ந்து சென்றவர்களைக் கண்காணித்து தடுக்காமல் இருந்தது நம் காவல்துறையினரின் தப்பு. இப்படி அடுக்கடுக்காக நாம் செய்த தவறுகளை உணராமல் இன்று தமிழகத்தில் இருக்கும் ஆந்திர வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுப்பது மிகப்பெரும் தவறு. தமிழுணர்வை தேவையில்லாத விடயங்களில் தூண்டிவிடுவதே நமது இயக்கங்களின் வேலை. இதை சத்தமாக சொல்ல யாருக்கும் துணிவில்லை.


  சரி, ஆந்திராவின் மீது தவறே இல்லையா? அப்படி ஒன்றும் கிடையாது. யாரோ யார் மீதோ கொண்டிருக்கும் பகைக்காக, தன் கையில் அதிகாரம் இருக்கிறது என்கிற ஒரே காரணத்தை வைத்து, சட்டப்பூர்வமான முறையில் கூலித்தொழிலாளர்களைக் கைது செய்யாமல், அவர்கள் அடுத்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நன்றாகத்தெரிந்தும் இந்த மாபெரும் படுகொலையை - இது திட்டமிட்ட படுகொலை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது - ஆந்திரக்காவல்துறை மேற்கொண்டிருப்பது அவர்கள் நம் மீதும், நமது அரசாங்கத்தின் மீதும் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் என்று நன்றாகத் தெரிகிறது. ஆந்திர அரசு முதலில் செம்மரங்கள் எந்த வழியாக மாநிலத்தை விட்டு, இந்தியாவை விட்டு வெளியே போகிறது என்று வெளிப்படுத்த வேண்டும். கண்டிப்பாக பெரும்புள்ளிகள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். சந்திரபாபுக்கு துணிவும் நேர்மையும் இருந்தால் அவர்களை முதலில் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். 

  தமிழக அரசு மிக மிகக் கடுமையான முறையில் தன் எதிர்ப்பைத் தெரிவித்து மீண்டும் இது போன்றதொரு அத்துமீறல் எப்போதும் நடக்கக்கூடாத அளவில் எச்சரிக்கை விடுக்கவேண்டும். இப்போது ஆந்திரா மீது கோபப்படும் சாதாரணப்பொதுஜனம் முதல் ஆந்திர பேருந்து, நிறுவனங்கள் என்று தேடித்தேடி கல்லெறியும் போராட்டக்காரர்கள், இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் ஆள் வரை அடுத்த முறை திருப்பதி செல்வதற்கு முன் சிந்திக்கவேண்டும்.
   
    எப்போதும் எல்லாவற்றிலும் தமிழன் தமிழன் என்று உணர்ச்சிவசப்படாமல் முதலில் சரியான திசையில் சிந்திக்கத்தொடங்குவோம். தம் மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து நழுவாது தமிழக அரசு சரியான முறையில் செயல்படும் என்று நம்புவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக