சிறுகதைகளை அனுபவிப்போம்
முன்னொருகாலத்தில் ராணுவத்தினால் ஆளப்பட்ட ஓர் ஐரோப்பிய தேசத்தின் தலைமைக்கு திடீரென ஒரு சந்தேகம்; ஏதேதோ புத்தகங்கள் எழுதி அதை நூலகங்களில் அடுக்கிவைத்துள்ளார்களே, அவற்றில் ராணுவத்தின் பெருமையைக் குலைக்கும் வகையில் ஏதும் இருந்தால் என்ன செய்வது? என்பதே அது. ஒரு தளபதியை அழைத்து அவர் தலைமையில் ஒரு ராணுவவீரர்கள் அடங்கிய குழுவை இதைக்கண்டுபிடிக்கும் பணியில் அமர்த்துகிறது தலைமை. குழு அந்த நாட்டிலேயே பெரிய நூலகத்துக்குச்சென்று வேலையை ஆரம்பிக்கிறது. எங்கிருந்து தொடங்குவது என்று புரியாமல் உத்தேசமாக ஆளுக்கொரு பகுதியாக வாசிக்கத்தொடங்கும் அவர்கள் அவற்றில் அனேக புத்தகங்கள் தங்கள் எதிரிகளைப் புகழ்ந்தும் தங்கள் சித்தாந்தங்களுக்கு எதிராகவும் எழுதப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். தினமும் அங்கிருந்து எத்தனை புத்தகங்கள் சோதிக்கப்பட்டன, அவற்றில் எத்தனை தரம்பிரித்து முத்திரையிடப்பட்டன என்றெல்லாம் தலைமைக்குத் தகவல்கள் பறந்துகொண்டிருந்தன. தலைமையும் நல்லவேளையாக இந்த சிந்தனை நமக்கு வந்ததே என்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.
நாட்கள் செல்லச்செல்ல படிக்கவேண்டிய புத்தகங்கள் கூடிக்கொண்டே வருவதுபோல் தோன்றியதே தவிர குறைகிற மாதிரி தெரியவில்லை. பிறகு கொஞ்சநாளில் அவர்களுக்குள் எது ஆபத்தான புத்தகம் என்று முத்திரையிடுவதில் ஒருமித்த கருத்து நிலவவில்லை. ஒருவர் சொன்னதை இன்னொரு புத்தகத்தை மேற்கோள்காட்டி மற்றொருவர் மறுக்க ஆரம்பித்தார். இன்னொருவர் இரண்டுமே தவறு என்று மூன்றாவதாக ஒன்றை வலியுறுத்திப்பேசினார். எல்லாமே தவறுபோல் சிலநேரமும் எல்லாமே சரிதான் என்று சிலநேரமும் அவர்களுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. கொஞ்சம்கொஞ் சமாக அவர்கள் அறிக்கையனுப்பும் வேகம் குறைந்து சிலமாதங்களில் முற்றாக நின்றுபோனது. கொடுத்த வேலை முடிவை நெருங்கிவிட்டதாக யூகித்துக்கொண்ட தலைமை அவர்களை வேலையை முடித்துக்கொண்டு இறுதி அறிக்கை தயாரித்துக்கொண்டு வருமாறு உத்தரவிட்டது. தளபதியும் குழுவும் சென்றபோது அறிக்கையை வாசித்துக்காட்ட தளபதிக்குத் தலைமை உத்தரவிட்டது.
அப்போது தளபதி வாசித்த அந்த அற்புதமான அறிக்கை அதுவரை விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஆபத்தானவை என்று ஒதுக்கப்பட்ட அத்தனையையும் - ஒரே நேரத்தில் - ஆதரித்தும் எதிர்த்தும் பேசியது. ஒட்டுமொத்த மானுடசமுதாயத்தின் வரலாற்றையும் தொட்டும் தொடர்ந்தும் பேசியது. அதிகாரத்தினால் ஏற்படும் அனாவசியமான போர்களை ஏளனம் செய்தும் அதேசமயம் போர்களில் மக்களின் தியாகத்தை புகழ்ந்தும் என்று என்னென்னவெல்லாமோ பேசியது. ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த தலைமை பொறுமையிழந்து தளபதி மேற்கொண்டுவாசிப்பதை நிறுத்தினார். ராணுவ விசாரணைக்கு அனுப்பி அவர்களைப்பதவி நீக்கம் செய்ய நினைத்த தலைமை அது வேறுபிரச்சனைகளுக்கு வழிகோலலாம் என்பதால் 'பணியாற்றிக் கொண்டிருக்கையில் மூளைக்கோளாறு' ஏற்பட்டுவிட்டதாக அவர்களை ஓய்வுபெறச்செய்தது. அதன்பின் அவர்கள் பெரும்பாலும் தங்கள் நேரத்தை நூலகங்களிலேயே கழிக்க ஆரம்பித்தார்கள், சாதாரண உடையில்.
இதை வாசித்ததும் உள்ளுக்குள் ஒருவிதமான நெகிழ்ச்சி உண்டானால் நீங்கள் ஏற்கனவே சிறுகதையை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். சிறுகதை அடிப்படையில் ஒரு நல்ல கவிதையைப்போன்றது அல்லது ஓர் ஒளிப்படத்தைப் (photograph) போன்றது. சில ஒளிப்படங்கள் ஒரேயொரு வினாடியில் காலத்தைத் தன்னுள் உறையச் செய்திருந்தாலும் அதை மணிக்கணக்கில் நம்மைப் பார்க்கச்செய்துவிடுகிறது; வீட்டில் சட்டமிட்டு மாட்டிக்கொள்ளச் செய்துவிடுகிறது. கணிணித்திரையிலோ கைப்பேசித்திரையிலோ தனக்கென ஓர் இடம்பிடித்துவிடுகிறது. அதை ஆராய்வது தனிப்பட்ட அனுபவம். அனுபவிப்பது அனைவருக்கும் பொதுவான அனுபவம். ஆகவே சிறுகதையின் உட்பொருளை, மறைபொருளை, அழகியலை, அமைப்பை, நுணுக்கத்தை எதையும் இக்கட்டுரை ஆராயப்போவதில்லை. மேலே நீங்கள் வாசித்தது இடாலோ கால்வினோவின் நூலகத்தில் ஓர் தளபதி (A General in the library) சிறுகதையின் என் ரத்தினச் சுருக்கமான தமிழாக்கம். முழுமையான தமிழாக்கம் 'குள்ளநரிகளும் அராபியர்களும்' என்ற தலைப்பில் வெளியான உலகச்சிறுகதைகள் தமிழாக்க நூலிலுண்டு. அதில் தமிழாக்கியவர்கள் வ.கீதாவும் எஸ்.வி.ராஜதுரையும்.
இக்கட்டுரைத்தொடரின் முதல் பாகத்தில் ஏன் வாசிக்கவேண்டும் என்பதற்குப் பலகாரணங்களை சொல்லிக்கொண்டு வருகையில், எழுத்து எவ்வாறு தினசரி வாழ்வின் சம்பவங்களில் நாம் எளிதாகத் தவறவிட்டுவிடக்கூடிய தருணங்களைப் படம்பிடித்து அதை நிதானமாக அனுபவிக்க ஏதுவாக வாசகனுக்கு அமைத்துத்தருகிறது என்பதை கு.அழகிரிசாமியின் இரு படைப்புகளில் வரும் சம்பவங்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்; அவ்விரண்டும் சிறுகதைகளே. அதற்காக சிறுகதைகளை அனுபவிப்போம் என்று ஒரேவரியில் நிறுத்தி நழுவினால் எப்படி? கொஞ்சமாவது உள்ளேபுகுந்து அதன் சில தன்மைகளையாவது ஆராயக்கூடாதா? என்றுகேட்பவர்கள் அக்கட்டுரையை வாசிக்கலாம். அந்தக்குற்றம் அதில் - வேண்டுமென்றே - கொஞ்சம் விரிவாகவே செய்யப்பட்டுள்ளது; கவிதையைக் கட்டுரையாக எழுதும் குற்றம் அது. புனைவு வாசிப்பைக்குறித்து ஏற்கனவே எழுதிவிட்டுப் பிறகு சிறுகதைக்கெனத் தனியாக என்ன எழுத இருக்கிறது? என்ற கேள்விக்கும் இந்த அடிப்படை வித்தியாசம் ஓரளவுக்கு பதிலிறுக்கும். மேலும் நாவல்களில் வெளிநாட்டுக்கதைகளை நம்மை ஊன்றி வாசிக்கமுடியாமற் செய்துவிடும் சில கலாச்சார அம்சங்களின் பாதிப்பு சிறுகதைகளில் இயல்பாக ஆகக்குறைந்த அளவிலிருப்பதும் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவதும் இதன் மற்றொரு சாதகமான அம்சம். வாசிப்புப்பழக்கம் இல்லாமலிருந்தால் நூற்றுக்கணக்காண பக்கங்களுக்கு நீளும் நாவல்கள் தொடக்கத்திலேயே மலைப்பைத்தருவது இயற்கை. அதேநேரம் அடையவேண்டிய இலக்கிய அனுபவத்துக்குப் பங்கமில்லாமல் சுமார் பத்தே பக்கங்களில் அம்'மலை'ப்பை 'சிறு'உளியாகி சன்னஞ்சன்னமாக உடைத்துவிடுவனவே இச்சிறுகதைகள். முதற்கட்டுரையில் வாசிப்புத்தூண்டில் போட சிறுகதைகளை எடுத்துப்பேசியதும் இதன்பொருட்டே.
கடந்த பத்தாண்டுகளாக நாத்திகச் சிந்தனைகளைக் கைக்கொண்டு தன்னில் பகுத்தறியும் அறிவுமலர்ச்சி ஏற்பட்டுவிட்டதாக உணரும் அவ்வூரைச்சார்ந்த பலரில் அவரும் ஒருவர்; கொஞ்சம் பெரும்புள்ளி என்பதால் அவ்வூர் பகுத்தறிவுவாதிகளின் தலைவரும்கூட. அவருக்கொரு மகன். ஒரே மகன். குழந்தையிலிருந்தே அவனுக்கொரு பிரச்சனை. எக்காரணம்தொட்டும் விசும்பி ஓங்கி அழஆரம்பித்தால் சட்டென்று மூர்ச்சையாகி சிலபல கணங்களுக்குப்பின்னேதான் நினைவு திரும்பும். இதனால் பெரும்புள்ளி அவனை அழவிடுவதே இல்லை; கேட்டதெல்லாம் கொடுத்துக்கொண்டிருந்தார். ஒருமுறை யானையை வீட்டுக்குள் வரச்சொல்லி அழ ஆரம்பித்ததால் நிலைக்கதவைப் பெயர்த்து உள்ளே அழைத்துவந்த வரலாறுகூட உண்டு. அந்தமகன் காய்ச்சலில் படுக்க, அனைத்து முதல்தர வைத்தியங்களும் எடுபடாமற் போகிறது. நிலைமை கவலைக்கிடமாக ஆகிறது. பெரும்புள்ளியின் தாய் ஒரு பக்தசிரோன்மணி. உயிரைக்காத்தால் திருப்பதி பெருமாளுக்கு அழைத்துவந்து மொட்டைபோடுகிறேன் என்று வேண்டிக்கொள்கிறாள். கொள்கைக்கும் அறிவுமலர்ச்சிக்கும் பொருத்தமில்லாமலிருப்பினும் பெரும்புள்ளி - மகனின் உயிரைக் கருத்திற்கொண்டு - எதற்கும் உடன்படும் நிலையில்தான் இருந்தார். ஒருவழியாக மகனுக்கு ஜூரம்விட்டது.
வெளியே தெரியாமல் எப்படியாவது பிள்ளையை அழைத்துச்சென்று திருப்பதியில் மொட்டைபோட்டுவிடுவதற்கான முஸ்தீபுகளில் பெரும்புள்ளி இறங்கினார். யாருக்கும் தெரியாமல் ஒரு காரில் ஓட்டுனர், தான், மகன் ஆகிய மூவர்மட்டும் திருப்பதிசென்று காரியத்தை முடித்துவர முடிவுசெய்து, அதுபோலவே சென்று திருப்பதியில் இறங்கினார்கள். மொட்டைபோட அமரச்சொன்னால் மகன் அடம்பிடிக்கிறான். என்னென்னவோ தாஜாபண்ணியும் கத்தியை நாவிதர் கையிலெடுத்தாலே ஆர்ப்பாட்டம் செய்து குதிக்கிறான். கடைசியில் ஒரு பேரத்திற்கு வருகிறான்; ஓட்டுனரும் தந்தையும் முடியிறக்கிக்கொண்டால் தானும் செய்துகொள்வதாக. இல்லையென்றால் அழ ஆரம்பித்துவிடுவான்போல் தோன்றியதால் வேறுவழியில்லாமல் அவர்களும் மொட்டை போட்டுக்கொள்கிறார்கள். இவர்கள் செய்யமாட்டார்களென்று நினைத்துச்சொன்னானோ என்னவோ மீண்டும் சம்மதிக்கமறுத்து அதகளத்தை ஆரம்பிக்கிறான். பொறுமையிழந்த பெரும்புள்ளி வல்லந்தமாக அமரச்செய்து வேலையை முடிக்கப்பார்க்கையில் திமிறியதிமிறலில் லேசாக பிள்ளைக்குத் தலையில் ஒரு கத்திச்சிராய்ப்பும் விழுந்துவிடுகிறது. நாவிதரும் இப்போது பின்வாங்குகிறார். மகன் அழுகையில் மூர்ச்சையடைகிறான்.
ஐய்யய்யோ முதலுக்கே மோசமாகிவிடும்போல் தெரிகிறதே என்று புள்ளி பதறுகிறார். கடவுளுக்கு வேண்டிக்கொள்ளத் தாய் அருகிலில்லையே என்று தன் பகுத்தறிவு நிலையை நொந்துகொள்கிறார். கோவிந்தா காப்பாத்துப்பா என்று நாவிதர் கையுயர்த்திக் கூப்பாடுபோட மகனுக்கும் நினைவு திரும்புகிறது. அனைவரும் ஆசுவாவசமடைகிறார்கள். எல்லாம்போதுமடா சாமி என்று ஊர் திரும்புகிறார்கள். வேண்டுதலை சரிவர நிறைவேற்றமுடியாததால் தெய்வக்குத்தமாகிவிடுமோ என்று புள்ளியின் தாய் அஞ்சி உள்ளூர் அர்ச்சகரிடம் கேட்க, தந்தையே மகனுக்காகத் தலைகொடுத்துவிட்டதால் ஒன்றும்குறையில்லையென்று சமாதானம் சொல்லி மேலும் ஒரு சகஸ்ரநாம அர்ச்சனையைப் பரிந்துரைக்கிறார். விஷயம் ஊருக்குள்பரவ, எப்படி வெளியே 'தலை'காட்டுவதென்று தெரியாமல் பகுத்தறிவுப்புள்ளி வீட்டில் முடங்குகிறார். சகபகுத்தறிவாளர்கள் தலைவரின் நிலையை வருத்தத்துடனும் கிண்டலுடனும் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவர் அடுத்த தலைமைக்கான பிரச்சனையை இப்படித்தீர்த்துவைக்கிறார்; "தலைவர் காலம் முடிஞ்சுபோச்சு. சுலபமா கொள்கையில பின்வாங்கிட்டாரு. உயிரே போனாலும் மொட்டைபோட மாட்டேன்னு திருப்பதிபோயும் திரும்பிவந்த இளவரசனே இனி நம் தலைவன்".
கரிச்சான் குஞ்சின் 'இளவரசு' என்ற சிறுகதையின் இச்சுருக்கத்தையும் மேற்கொண்டு என் பகுத்தறிவைக்கொண்டு ஆராயாது உங்கள் அனுபவத்துக்கே விட்டுவிடுகிறேன். ஒரே கறிகாய்களைக்கொண்ட குழம்பு என்றபோதும் ஒருசிலரின் கைப்பக்குவம் கூடுதல் ருசியை அளிப்பதுபோல இலக்கிய அனுபவமும் சமைப்பவர்களைப் பொறுத்து மாறுபடும். சாம்பிள் பார்த்து நமக்குப்பொருத்தமானவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனுபவிக்கச் சிறுகதைகள் வசதியானவை. ஒருசிலரை முன்னுரையிலேயே கண்டுகொள்ளலாம், இவர் நம் ஆள் என்று. 'காஞ்சனை' சிறுகதைத்தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன் அப்படி என்னைக்கவர்ந்ததுண்டு, இந்த வரியைப்படித்ததும்; 'என்ன நீங்கள் பேய் பிசாசையெல்லாமா நம்புறீங்க என்று என்னைக்கேட்டார். நான் நம்பலை ஆனா பயமாயிருக்கே என்று பதில் சொன்னேன்'. இதற்கு நேர்மாறாக சிலரை நடுவிலோ அல்லது கடைசி வரியிலோதான் கண்டுகொள்ளமுடியும். உதாரணமாக நாஞ்சில் நாடனின் 'பாம்பு' சிறுகதை. 'பாம்பு' கதை ஒரு தமிழ்த்துறை பேராசிரியரின் அறைக்குள் புகுந்துவிடும் ஒரு பாம்பு பொழுதுபோகாமல் அவருடைய ஆய்வுக்கட்டுரைகளைப்படித்து கடுப்பாகி, தமிழுக்குச்செய்த சேவையாக இருக்கட்டும் என்று நினைத்து, 'வக்காளி வரட்டும்' என்று காத்திருந்ததாக முடித்திருப்பார். அசோகமித்திரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையையும் சொல்லலாம். வயித்துப்பாட்டுக்காக ஓர் உன்னதமான புலிவேஷம்கட்டுபவன் அசல் புலிமாதிரியே நடித்துக்காட்டியபின் ஏதாவது வேஷம் கொடுங்கள் என்று ஒரு சினிமாகம்பெனிக்காரர் காலில் விழும்போது 'அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்' என்று எழுதியிப்பார். அந்த இடத்தில் வாசிக்கும் யாருக்கும் மனதுபிசைபடும்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தமிழின் விதவிதமான போக்குகளைக்கொண்ட நல்ல சிறுகதைகளை ஒருமுறை பட்டியல்போட்டார். அதில் புதுமைப்பித்தன் முதல் பாஸ்கர் சக்தி (எம்டன் மகன், வெண்ணிலா கபடி குழு உட்பட சில படங்களுக்கு வசனமெழுதிய அதே பாஸ்கர் சக்திதான்) வரை சுமார் எழுபது தமிழ் எழுத்தாளர்களின் கதைகள் இருந்தன. சிறுகதைகளை அனுபவித்துதான் பார்ப்போமே என்று நினைப்பவர்கள் இங்கிருந்து தொடங்கலாம். தேடும் வேலையைக்கூட வைக்காமல் இவ்வலைமனை அத்தனைக் கதைகளையும் தெளிவாகத் தட்டச்சி இலவசமாக அளிக்கிறது.
ரேண்டமாக ஏதாவதொன்றை எடுத்து வாசித்துதான் பாருங்களேன். யாருக்குத்தெரியும், எதுவும் நடக்கலாம். நூலகத்தில் தளபதியை நினைவிற்கொள்ளுங்கள்!
- சிவானந்தம் நீலகண்டன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக