இக்கட்டுரை குறித்து முதலில் இரண்டு விஷயங்கள்; ஒன்று, இக்கட்டுரையில் வரும் குறட்பாக்கள் வேண்டுமென்றே கட்டுரை எழுதுவதற்காக வலிந்து சேர்க்கப்பட்டவை அல்ல. வாசித்ததும் அல்லது காதால் யாரோ சொல்லக் கேட்டதும் ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தி மனதில் தங்கியவை. ஒருவேளை அது மற்ற வாசகர்களுக்கும் பயன்படுமானால் அல்லது ஆர்வத்தைக் கிளறிவிடுமானால் ஏன் அதைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்ற அடிப்படையில் வந்தவைதான். அவற்றிலெங்காவது சொற்பிழை, பொருட்பிழை இருக்குமானால் அது முழுக்க என்னுடையதே. இரண்டாவது, நோக்கம். இக்கட்டுரைத்தொடரின் அனைத்துகட்டுரைகளின் நோக்கமும் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளருக்கோ எழுத்து வகைக்கோ பெருமைசேர்ப்பதற்கோ, இதுதான் சிறந்தது என்று வாதிட்டு நிறுவுவதற்காகவோ, குறைகண்டு நிராகரிப்பதற்காகவோ அல்லாமல் பொதுவாக வாசிப்பு எவ்வாறெல்லாம் பலநிலைகளில் அணுக்கமாக மேம்படமுடியும் என்பதை இலக்காகக்கொண்டவைதாம். அவ்வகையில் இக்கட்டுரையைப் பொறுத்தவரை வள்ளுவரும் மற்றொரு நூலாசிரியர் அவ்வளவுதான். இனி உள்ளே நுழைவோம்.
விஷ்ணு வாமனனாக வந்து விஸ்வரூபமெடுத்து இரண்டே அடிகளில் உலகத்தை அளந்தகதை நமக்குத்தெரியும். வள்ளுவர் அவ்வளவு அவசியப்படாது என்று கருதி ஒன்றேமுக்கால் அடிகளில் அவ்வேலையைச்செய்துவிட்டதாக ஒரு பேச்சு உண்டு. பள்ளியில் மனப்பாடப்பகுதிகளாக இருந்த குறட்பாக்களை நெட்டுரு போட்டதின் விளைவாக ஆர்வமேதும் ஏற்பட்டுவிடவில்லையாயினும், இரண்டு நிகழ்ச்சிகள் பதினைந்துவயதுக்குள்ளாகக் குறளைப்பற்றிய ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. முதலாவது, பள்ளி ஆண்டுவிழாவுக்குப் அழைக்கப்பட்டிருந்த ஒருவரின் பேச்சு. யாரென்று பெயர் சரியாக நினைவிலில்லை. அது தேவர்மகன் திரைப்படம் வெளியாகி விடலைகள் 'ஃபங்க்' வைத்து அலைந்துகொண்டிருந்த காலம். அவர் திருக்குறளைப்பற்றிப் பேசப்போன ஓரிடத்தில் ஒருவன் ஃபங்க்குடன் எழுந்து 'வள்ளுவர் எழுதாத விஷயமே இல்லை என்கிறீர்களே என் ஃபங்க்கைக்குறித்து என்ன எழுதியிருக்கிறார்?' என்று கேட்டதாகவும் அதற்கு அவர்,
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்
(உலகம் பழிக்கும்படியான செயல்களைச் செய்யாவிட்டாலே போதும். நீள்முடி வளர்த்தோ அல்லது முற்றாக மழித்தோ வெளிப்புறமாகச் சிறப்பான அடையாளங்களை கைக்கொண்டு எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை)
என்ற குறளை பதிலாகச்சொன்னதாகவும் சொல்லிக் கைதட்டல்களை அள்ளியது. இரண்டாவது, என் தாத்தா ஒருவரிடம் 'வள்ளுவர் நம்ம எல்லாரையுமே அறிவில்லாதவர்னு சொல்றார்' என்ற பீடிகையுடன்,
அறிவுடையார் ஆவதறிவார் அறிவிலார் அஃதறி கல்லாதவர்
(வரப்போவது இன்னதென்பதை அறிந்தவர்களே அறிவுடையவர்கள். மற்றவர்களை அப்படிச்சொல்லவியலாது)
குறளைப்பற்றிச் சொல்லி அங்கிருந்து திருக்குறளல்லாத இன்னபிற பழந் தமிழ்ப்பாக்களுக்கும் முன்பின்னாகப் பாய்ந்து எப்படியெல்லாம் இதைப்பொருள்கொள்ளலாம் என்று விளக்கிக்கொண்டிருந்தது. ஆவது எது என்பதை வரையறுப்பதில் சூட்சுமம் அடங்கியிருந்தது. மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறுவதற்கும், பள்ளிச்சுவர்களின் வெளிப்புறம், பேருந்தின் உட்புறம் ஆகியவற்றில் சம்பிரதாயமாக எழுதப்படுவதற்கும்தான் குறள் என்ற எண்ணம் விலகத்தொடங்கி அதில் நடைமுறை வாழ்க்கைக்கு நேரடிச்சம்பந்தம் இருப்பதாக ஒரு பொறி அங்கே விழுந்திருக்கலாம். நம் அனைவருக்குமே அதுபோல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கவும்கூடும்.
இளையராஜா சுமார் ஐயாயிரம் திரையிசை மெட்டுக்களை அமைத்திருந்தாலும் அதிலொரு ஐந்து சதவீதப்பாடல்களே (சொந்த அனுபவம்) நம் காதுகளில் அடிக்கடி விழுந்துகொண்டிருக்கும். அதுபோலவே சராசரித் தமிழ் வாசகர் சுமார் ஐம்பது ஐம்பத்தைந்து குறட்பாக்களை திரும்பத்திரும்ப பல்வேறு வழிகளில் சந்திக்கின்றார் என்பது என் குத்துமதிப்பான கணக்கு. இங்கு சராசரி வாசகருக்கு நான் கொள்ளும் பொருள் திருக்குறளுக்கென்றுத் தனியாக நேரமொதுக்கி வாசித்திராமல் மற்ற இலக்கிய வாசனைகளின் ஊடாக மட்டுமே சந்தர்ப்பவசத்தால் குறட்களைச் சென்றடைபவர். 1330க்கு ஐந்து சதவீதம் என்பது சுமார் 65 வராதா என்று கேட்காதீர்கள். இன்பத்துப்பாலின் 250 பாக்களும் பேசப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அனேகமாக நமக்கு வாய்ப்பதில்லை; சுவர்களிலும் பேருந்துகளிலும் எழுதப்படுவதுமில்லை. எனவே அவற்றை நீக்கிவிட்டுக்கணக்கிட்டால் விடை சுத்தமாக இருக்கும். பழகிப்போன குறட்பாக்களிலும் அபூர்வமான தரிசனங்கள் பொதிந்திருப்பது உண்மையெனினும் பழகியதோஷத்தினால் அவற்றின்பொருளைக் கவனமாகப் பார்க்கத்தவறிவிடுவது ஒரு பிரச்சனை. மீண்டும் மீண்டும் ஒரே குறட்பாக்கள் எதிர்ப்படுகையில் குறளின் எல்லை இவ்வளவுதான் என்ற தோற்றத்தையும் அவை ஏற்படுத்திவிடுகின்றன. இது இன்னும் பெரிய பிரச்சனை, தெரியாததைத் தெரிந்ததுபோல் நினைக்கவைத்து விடுவதால்.
எந்தபாதிப்புமில்லாமல் சாதாரணமாகத் தாண்டிப்போய்விட்ட சில குறட்பாக்கள் சில நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பின்னணியில் நன்றாக மனதில் தைக்கிறது. போலிச்சாமியார்களின் லீலைகள் அம்பலமாவது தொடர்ந்து நடந்துவருகிறது. அம்மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில்,
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
(தவக்கோலத்தில் மறைந்துகொண்டு இம்மாதிரி வேலைகளில் ஈடுபடுவது பறவைகளைச் சிக்கவைக்க புதரில் மறைந்துகொண்டு வேடன் வலையைச் சிமிழ்த்து காரியத்தை முடிப்பதைப்போல் இருக்கிறது)
என்ற குறள் தட்டுப்பட்டு என்னைச் சிந்தனையில் தள்ளியது. இக்காரியம் காலகாலமாக - குறைந்தது சுமார் இரண்டாயிரம் வருடங்களாக - செய்யப்பட்டுவருவதை இக்குறள் நமக்குச்சொல்வது ஒருபக்கம். எந்தவித கேமரா வசதிகள் இல்லாதிருந்த காலத்திலும் எப்படியோ குட்டுவெளிப்பட்டுப்போய் போலிகள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது மற்றொருபக்கம். உண்மை எப்படியோ முட்டிமோதித்தன்னை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக்கொள்கிறது, நேரத்தோடோ காலம்தாழ்ந்தோ. ஆனால் என்றென்றைக்குமாக அதை மறைத்துவைக்கவியலாது என்பது இக்குறளில் மறைந்திருப்பதாகப்பட்டது. மேலு ம் சிமிழ்த்தல் என்ற வார்த்தையும் ஈர்த்தது. கண் சிமிட்டுதல் என்பதிலுள்ள விரைவும் நேரடியான ஒப்பீடும் மறைந்திருந்து பறவைகளின்மேல் வலையை மின்னலென இழுத்துமூடுவதில் இருக்கிறது. சிறுவயதில் நான் இதை நேரடியாகக்கண்டதுண்டு என்பதால் உவமை நயம் சிலிர்ப்பாக இருந்தது.
தன் சொந்த விருப்பு வெறுப்புகள், கருத்துச்சாய்வுகளுக்குத் தக்க மொத்த குறட்களையும் வளைத்துவிடமுயல்வதின் விளைவாகக் குறள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும். நாத்திகர்களும் குறளை முன்வைப்பதால் அவர்கள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் பாக்களுக்கு வேறுபொருள்கொள்ள முயல்வதுண்டு. உதாரணமாக ஆதி-பகவன் என்போர் வள்ளுவரின் தாய்-தந்தையாக இருக்கக்கூடும் என்றும் ஆகவே தாய்-தந்தையரை ஆதாரமாகக்கொண்டதே படைப்பு (உலகு) என்றுதான் அக்குறள் சொல்வதாக நிறுவமுயல்வார்கள். அதுபோலவே சில நேரெதிரிடையான பொருள்கொண்ட குறட்பாக்கள் இவற்றை எழுதியது ஒரே ஆள் அல்ல என்ற வாதத்தை முன்வைப்பவர்களுக்குப் பயன்படுகிறது. உதாரணமாக,
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
(மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்)
என்று சொல்லிவிட்டு,
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்
(என்னதான் கற்பினும் விதிப்படி எந்த அளவுக்கு அறிவு மேம்பட வேண்டுமோ அவ்வளவுதான் மேம்படும்)
என்றும் சொல்வதால் இரண்டில் எது உண்மை என்ற கேள்வி கிளைத்துவிடும். எதுஎப்படியாயி னும் வாசிப்பவருக்கு ஒற்றைப்படையாக எதையும் பரிந்துரைக்காமல், சிந்திக்கவைத்து மேன்மேலும் தேடல்கள் வழியாகத் தன்சொந்தமுடிவுகளுக்கு வரச்செய்வதே சிறந்ததொரு நூலுக்கிலக்கணம் என்ற அடிப்படையில் இம்முரண்பாடுகள் குறள் வாசிப்பை மேலும் பொருள்பொதிந்ததாகவே ஆக்குகின்றன. இருவெவ்வேறு குறட்பாக்கள் ஒன்றையொன்று பொருளில் மறுப்பதொரு பக்கமென்றால் ஒரே குறளில் வார்த்தைகள் எவ்வாறு பிரிக்கப்பட்டு பொருள்கொள்ளப்படுகின்றன என்பதைப் பொறுத்தும் பொருள் அடியோடு மாறிவிடும் இடங்களும் அனேகமுண்டு. உதாரணமாக,
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
இக்குறள், 'தெய்வத்தால் ஆகாதபோதும் தான் செய்துவிடக்கூடிய முயற்சியை உயர்த்திப் பேசுகிறது' என்று பொதுவாகப் பொருள்கொள்ளப்படுவதுண்டு. ஆனால் 'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி, தன் மெய்வருத்த அது கூலிதரும்' என்று பிரித்து தெய்வம் நமக்காக முயற்சிசெய்யாது ஆனால் நாம் முயலும்பட்சத்தில் அதற்கான கூலியைத்தரும் என்று தெய்வத்தின் உயர்வைக் கீழிறங்கவிடாதபடிப் பொருள்கொள்வாரும் உளர். ஆனால் முயற்சியின் உயர்வுகளைப் பேசும் அதிகாரத்தில் கடவுளின் உயர்வு இரண்டாமிடம்தான் என்பதில் தெளிவுகொண்டால் இப்பிரச்சனைகள் வாசகருக்கு எழாது.
குறளில் நம்மை மலைத்துப்போகச்செய்யும் நுணுக்கமான செய்திகள் நிறையவே உண்டு. முதல் உதாரணமாக,
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து
(அதிகாரம் உள்ளவர்கள் சபையில் இருக்கும்போது பக்கத்திலிருப்பவர் காதுகளில் குசுகுசுவென்று பேசுவதையும் பிறகு சேர்ந்து சிரிப்பதையும் முற்றாகத் தவிர்த்துவிட வேண்டும்)
இது மன்னரைச்சேர்ந்தொழுகல் என்ற அதிகாரத்தில் இருக்கிறது. மன்னர் என்பதை நம் அலுவலக உயரதிகாரி என்றும் சபை என்பதை டிபார்ட்மெண்ட் அல்லது மார்னிங் மீட்டிங் என்றும் புரிந்துகொண்டால் இக்குறள் நாளையிலிருந்து வேலையிடத்தில் மிகக்கவனமாக இருக்கவேண்டிய ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்கிறது.
இரண்டாம் உதாரணம், எனக்கு தினசரி உதவியாக இருக்கும் ஒரு குறள், எல்லா வேலைகளிலும். இது ஒரு செக் லிஸ்ட்.
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்
(ஒரு வேலையைச்செய்யத் தேவையான பணம், வழிமுறை/கருவி, ஆகக்கூடிய நேரம்/நல்ல சந்தர்ப்பம், செய்யப்படும் வேலையின் டீடெய்ல்ஸ், வேலை நடக்கும் இடம்/தகுந்த இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கிடமின்றி யோசித்துக்கொண்டால் செயல் சிறக்கும்)
சமீபத்தில் நீயா நானாவில் திருக்குறள் குறித்து பேசப்பட்டது. திருக்குறளை வாசிக்கவிழையும் அனைவரும் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி இது. எங்கிருந்து தொடங்குவது என்பதில் வரும் குழப்பத்தில்தான் பெரும்பாலான நல்ல செயல்கள் தொடங்காமலே நின்றுபோகின்றன. இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற பேச்சுக்கள் பலப்பல தொடக்கப்புள்ளிகளைக் கொண்டிருந்தன. பல நுட்பமான விஷயங்களும் பேசப்பட்டன. ஒருமுறை பார்த்துவிடுங்களேன். இணைப்பு இங்கே :
இவ்வொன்றரை மணிநேர நிகழ்வில் எத்தனை குறட்பாக்கள் பேசப்படுகின்றன என எண்ண நினைத்தேன்; எண்ணவும் தொடங்கினேன். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே வேறு எதையோ எண்ணிக்கொண்டே எண்ணிக்கையை விட்டுவிட்டேன். நீங்கள் பார்க்கும்போது குறட்களை எண்ணிப்பாருங்கள், அவற்றை எண்ணியும் பாருங்கள்.
இறுதியாக, வாழ்த்துக்கள் மட்டுமல்ல இன்றும் நாம் பயன்படுத்தும் ஒரு வசையும் குறளிலுள்ளது என்ற செய்தியுடன் இக்கட்டுரையை முடிக்க நினைக்கிறேன்.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை
(தங்கள் நிலையிலிருந்து தாழ்ந்துவிட்ட மனிதர்கள் தலையிலிருந்து வீழ்ந்துவிட்ட முடிக்கு ஒப்பானவர்கள்)
அச்சுஅசலான அதேபொருளில் ஒருவரைத் தரம்தாழ்த்தித் திட்டுவதற்கு இவ்வார்த்தையே இன்று(ம்) அதிகம் புழங்கப்படுவதாக எனக்கொரு கணிப்புண்டு. அவ்வார்த்தையின் பல்வேறுவடிவங்கள், பயன்பாடுகள் ஆராய்ச்சிக்குரிய ஒன்று. இவ்விடம் அதற்குத் தோதுப்படாததால் தமிழ்ச்சொலவடைகளின் வாசிப்பின்பம் குறித்து ஏதும் எழுதநேர்ந்தால் அங்கு அலசுவோம்.
அடுத்த கட்டுரையிலும் இன்னும் கொஞ்சம் குறள் வாசிப்போம்.
- சிவானந்தம் நீலகண்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக