இந்த கட்டுரை அபுனைவு வாசிப்பை முன்னிறுத்தி எழுதப்படுவதால் அதற்காக எடுத்துக்கொண்டுள்ளது மைக்கேல் ஸேண்டலின் 'பணத்தால் வாங்க முடியாதது எது - சந்தைகளின் தார்மீக எல்லைகள்' (what money can't buy - the moral limits of markets) என்ற புத்தகம். இது தமிழில் இன்னும் வரவில்லை. தமிழில் நல்ல அபுனைவுகளே இல்லாததால் இதைத்தேர்ந்தெடுக்கவில்லை. எப்படி காவல்கோட்டம் நாவல் தன் பரந்துவிரிந்த கதைக்களனால் புனைவுவாசிப்பின் அம்சங்களை விளக்க உகந்ததாக இருந்ததோ அதே அடிப்படையில்தான் இன்னூலும் தேர்வுசெய்யப்பட்டது. பணத்தால் வாங்கமுடியாதது என்ன என்றவுடன் மெத்தையை வாங்கலாம் தூக்கத்தை வாங்கமுடியாது போன்ற வழக்கமான சொற்றொடர்கள் நினைவுக்குவரலாம். இவை பணத்தின் எல்லைகளை வரையறுத்து அதன் இயலாமையை எடுத்தியம்புகின்றன. ஆனால் இப்புத்தகம் அதோடு நின்றுவிடாமல் பணம் எந்த அளவுக்கு நம் மானுட சமூகத்தில் தார்மீக நெறிகளுடன் மல்லுக்கட்டி ஜெயித்துவிடமுடிகிறது என்பதைப் பலகோணங்களிலிருந்தும் வாதிக்கிறது.
அபுனைவு என்ற சொல் non-fiction என்பதன் மாற்றாகப் புழங்கப்பட்டாலும் இவ்வார்த்தை தமிழுக்கு அவ்வளவாகப் பொருந்தவில்லை என்பது உண்மை. நீங்க சைவமா? அசைவமா? என்பது உறுத்தல் இல்லாமலும், நீங்கள் வாசிப்பது புனைவா? அபுனைவா? என்று கேட்பது உறுத்தலுடனும் இருக்கிறது. மூலக்காரணம் யாதெனில் 'அசை' என்று தொடங்கும் சொற்கள் தமிழில் உண்டு. அசை என்பதே ஒரு சொல்தான். ஆனால் 'அபு' என்று தொடங்கும் சொற்களில்லை. கொஞ்சம் பக்கமாக அபூர்வம் இருக்கிறது; ஆனால் அதுகூட சம்ஸ்கிருதம். புனைவற்றது, புனைவிலி போன்ற வெவ்வேறு வார்த்தைகளை யோசித்தும் எல்லாவற்றிலும் ஏதாவது ஓர் இயல்பற்ற தன்மை தென்பட்டுக்கொண்டேயிருந்தது. எனவே இப்போதைக்கு அபுனைவு என்றே இருக்கட்டும்.
புனைவுகளில் இயல்பாக வாசிப்பவரை உள்ளெழுச்சி கொள்ளச்செய்யும் தருணங்கள் - எழுத்தாளரின் நுண்ணுணர்வுக்குத் தக்க - பயின்று வருவதுபோல் அபுனைவுகளில் வருவது அரிதுதான், ஆயினும் அறவே இல்லாமலில்லை. மலாலா, உ.வே.சா ஆகியோரின் தன்வரலாற்று நூல்களில் அத்தருணங்களை நான் அடைந்ததுண்டு. காந்தியின் கல்வி குறித்த கட்டுரைகள், நாஞ்சில் நாடனின் தீதும் நன்றும், நதியின் பிழையன்று நறும்புனலின்மை, காவலன் காவான் எனின் ஆகிய கட்டுரைகளிலும் அவ்வனுபவங்கள் வாய்த்திருக்கின்றன. சமீபத்தில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட ராய் மாக்ஸமின் உப்புவேலி நாவலின் இறுதிப்பகுதியில் அவ்வெழுச்சி உண்டானது. என்ன வெறும் உயிரற்ற தகவல்களின் தொகுப்புதானே என்று அபுனைவுகளை ஒதுக்கிவிடக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். Truth is stranger than fiction என்ற வழக்கையும் இங்கு கருத்தில்கொள்வோம்.
மைக்கேல் ஸேண்டலின் இந்த புத்தகத்தின் அடிப்படைக்கேள்வி ஓர் அபுனைவு அதை வாசிப்பவருக்கு எந்தவிதமான நேரடிச் சிந்தனைத்தாக்கத்தைத் தரமுடியும் என்பதற்கு நல்ல உதாரணம்; நாம் சந்தைப்பொருளாதாரத்தை பயன்படுத்திக்கொள்ளும் ஒரு சமூகமாக இருக்கவேண்டுமா அல்லது சந்தைச்சமூகமாக (எதற்கும் ஒரு விலையுண்டு என்ற பொருளில்) ஆகவேண்டுமா என்பதே அக்கேள்வி. ஒரு அபுனைவை சரசரவென்று வாசித்துவிட்டீர்களென்றால் அது ஆழமாக எழுதப்படவில்லை என்று கொள்ளலாம். நல்ல அபுனைவு தன் சராசரி வாசகரை பற்பல இடங்களில் சிந்தனைக்குள் தள்ளிவிடும்; எதிர்க்கேள்வியை உருவாக்கும்; வலையில் துழாவவிடும். மொத்தத்தில் தன்னை அவ்வளவு எளிதில் தாண்டிச்செல்லவிடாது. அபுனைவின் முக்கிய அம்சமான இந்த தடுத்தாட்கொள்ளும் தன்மைகொண்ட சிந்தனைத்தூண்டல்கள் குறித்து சில உதாரணங்கள் இன்னூலிலிருந்து பார்ப்போம்.
முதலில் வரிசையைப் பின்பற்றுதல். முந்துவோர்க்கு முன்னுரிமை என்பது உலகத்தின் அனைத்து நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கம். முதலாவதாக வந்து வரிசையில் காத்திருந்தவர் தன் நேரத்தை ஆகஅதிகமாக செலவழித்ததற்காக அவர் முதலில் சேவையைப்பெற்றுக்கொள்கிறார். நம் அனைவரின் நேரமுமே இவ்வுலகத்தில் ஒரு குறுகிய அளவுக்குட்பட்டது என்பதால் அதை வரிசையில் காத்திருக்க செலவழிப்பதற்கான மரியாதையாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். எனவே வரிசையை முந்துவது தவறு என்பதை இயல்பாகவே எந்த சிந்தனையுமில்லாமல் நம்மால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது. ஆனால் இப்புத்தகம் அதிவேக வரிசைகள் (express queue) இப்போது சாதாரணமாகிவிட்டன என்பதைச்சொல்லி நம்மைச் சிந்திக்கவைக்கிறது. இதை நாம் எப்படியோ காலப்போக்கில் சாதாரணமாக ஏற்றுக்கொண்டுவிட்டோம். நம்மிடம் பணமிருந்தால் விமான நிலையத்தில் பயணத்திற்கு நுழைவதுமுதல் தெய்வத்தின் சன்னிதானத்துக்குள் அருள்பெற நுழைவதுவரை விரைவாகச் செய்துகொண்டுவிட முடிகிறது. இதில் முக்கியமானது அதைச்செய்கையில் நமக்கு எந்தக்குற்றவுணர்ச்சியும் இல்லாததுதான். விரைவான சேவைக்கு அதற்கான விலையைக்கொடுத்துப் பெற்றுக்கொள்கிறோம் அவ்வளவுதானே? இதில் என்ன தார்மீக நெறிபிறழ்வு வந்துவிட்டது? என்று மேம்போக்காகப் போய்விடும் நம் பழக்கப்பட்ட மூளையை, நம் விரைவு என்பது உண்மையில் அதிகப்பணம் கொடுக்க இயலாதவர்களின் மேல் பணபலத்தால் திணிக்கப்படும் தார்மீகமற்ற தாமதம் என்பதை எண்ணவைக்கிறது ஓர் அபுனைவு.
இரண்டாவது இரத்ததானம். 'இது விலைமதிப்பற்றது' என்ற ஓர் உணர்வுதானே மானுடத்தின் பல செயல்பாடுகளை இன்னமும் பணத்தின் பிடிக்குள் சிக்காமற்செய்துவருகிறது. உடல் ஈடுசெய்துகொள்ளக்கூடிய இரத்ததானம் முதல் ஈடுகட்டவியலாத சிறுநீரகதானம் வரை 'தானமாக' இருப்பதால்தானே விலைமதிப்பற்றதாகிறது. ஆனால் இவற்றிலும் பணப்புழக்கத்தால் சந்தை மனநிலை ஊடுருவிவிட்டதை அதன் சாதகபாதகங்களுடன் பேசுகிறது இப்புத்தகம். உலக நல நிறுவனம் அனைத்து நாடுகளிலும் எப்படியாவது விலைக்கு இரத்தம் வாங்கப்படுவதை முற்றிலுமாகத் தவிர்க்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் அந்த அளவுக்குத் தானாக முன்வந்து - எவ்வித பணமோ பொருளோ பெற்றுக்கொள்ளாமல் - இரத்ததானம் அளிப்பதை செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச்சங்கத்தின் உதவியுடன் மக்களிடையே இரத்ததானத்திற்கான தார்மீகப்பொறுப்பை உருவாக்க முயற்சித்துவருகிறது. இதை 2020ம் ஆண்டுக்குள் சாதிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. நல்லசெய்தி யாதெனில், வளர்ந்த நாடுகளுக்குள்ளேயே ஒப்பிட்டால், விலைக்கு இரத்தம் வாங்கப்படும் நாடுகளைவிட (உதாரணம் அமெரிக்கா) முற்றிலும் தானமாகப்பெறப்படும் நாடுகளில் (உதாரணம் இங்கிலாந்து) அதிக எண்ணிக்கையில் மக்கள் இரத்ததானமளிக்க முன்வருவதாக Gift Relationship என்ற Richard Titmuss-ன் புத்தகத்தை மேற்கோள்காட்டி இன்னூல் வாதிக்கிறது. அதாவது ஒரு சாதாரண பொருள்போல இரத்தத்தைச் சந்தையில் வாங்குவது/விற்பது நின்றால் தன் தார்மீகக்கடமையைப் பணத்தின் வீச்சுக்கு அப்பால் நின்று மனமுவந்து செய்ய மக்கள் முன்வருகிறார்கள் என்பது நிரூபிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியோடு மனிதர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்று திருப்தியடைந்து இங்கே நிற்காமல் Gift Relationship நூலைப்பற்றி வலையில் துழாவும் ஒரு வாசகர் அது 1970ல் வெளியானதையும் இன்று 45 ஆண்டுகள் கழித்து நிலைமை என்ன என்பதையும் மேற்கொண்டு கண்டுபிடிக்கத் தேடலைத்துவக்கலாம். அங்குதான் அபுனைவு வாசிப்பின் மற்றொரு முக்கிய அம்சமான 'தேடலுக்கான உந்துதல்' உயிர்கொள்கிறது. அப்படித்தேட ஆரம்பிக்கும் ஒருவர் இன்றைய நிலை நேரெதிராகப் போய்க்கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளலாம். முற்றிலும் தன்னார்வலர்களிடமிருந்து விலையில்லாமல் தானமாகத்தான் இரத்தம் பெறவேண்டும் என்ற சட்டமுடைய ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள் இரத்தபிளாஸ்மாத் தேவைக்காக அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்துகொள்கின்றன. இதன் அர்த்தம் உள்நாட்டில் தன்னிறைவுகொள்ளும் அளவுக்குத் தன்னார்வலர்கள் கிடைப்பதில்லை என்பதே. அதாவது உள்நாட்டில் தனியொரு நபரிடம் விலைகொடுத்து இரத்தம்பெறுவது சட்டப்படி குற்றம். ஆனால் அதே உள்நாட்டுத் தேவைகளுக்காக கணிசமான பணம்கொடுத்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம்! இப்போது முரண் தெரிகிறது அல்லவா? ஒருவேளை இறக்குமதிசெய்வதற்கு ஆவதைவிட குறைந்தபணம் உள்நாட்டிலேயே விலைகொடுத்துவாங்கித் தன்னிறைவு பெறுவதற்கு ஆனாலும் ஆகலாம்; பணமாவது மிச்சப்படும் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்கமுடியாது. இப்போது நாம் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருப்பதைக்காணலாம். மனிதர்கள் எவ்வளவு பெரியமனதுடையவர்கள் என்ற புளகாங்கிதம் இப்போது கேள்விக்குறியாகிவிட்டது. இப்படி வாசிப்பவர் இரண்டு உண்மைகளுக்கிடையேகூட பந்தாடப்பட்டு 'இன்றைய உண்மை'யை நோக்கி நகரத்துவங்க ஓர் அபுனைவு வழிகோலும்.
மூன்றாவது குடியுரிமை. ஒரு நாட்டில் பிறந்தவர் இயல்பாக அந்நாட்டின்மீது தேசபக்தியுடனிருப்பது இயல்பு; அவர் அப்படி வளர்க்கப்படுகிறார். ஆனால் சிலகாரணங்களுக்காக ஒருவருக்கு வேற்றுநாட்டுக்குடியுரிமை அவசியப்படுவதாக இருக்கும்பட்சத்தில் எல்லா நாடுகளும் அதற்கான சட்டதிட்டங்களை வகுத்து வைத்துள்ளன. ஆனால் கடும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. நிச்சயமாக அது நியாயம்தான். ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் இதில்கூட பணமுள்ளவர்களுக்குக் குறுக்குவழிகள் உண்டு! பெல்ஜியத்தில் நுழைய சுமார் 500,000 டாலர்கள் போதும். ஏற்கனவே இருக்கும் தொழிலில் முதலீடாகவோ புதிதாக நிறுவனம் தொடங்கவோ இதை செலவழித்து நிரந்தரவாசியாகிக்கொள்ளலாம். பிறகு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு குடியுரிமைக்கு மனுச்செய்யலாம். அமெரிக்காவில் இதே விதத்தில் நுழைய சுமார் 650,000 டாலர்கள். இரண்டுவருடத்தில் பத்துபேராவது இப்பணமுதலீட்டால் வேலைவாய்ப்பைப் பெற்றார்கள் என்பதைக்காட்டி குடியுரிமைக்கு மனுச்செய்து பெற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் சிங்கப்பூர்க் குடியுரிமையை விரும்பும் பணம்படைத்தவர்கள் கொடுக்கவேண்டியது சுமார் 2.5 மில்லியன் டாலர்கள், முதலீடாகத்தான். உடனடி நிரந்தரவாசம், இரண்டாண்டுகளுக்குப்பின் குடியுரிமைக்கு மனு. இவையனைத்தும் சட்டபூர்வமான வழிமுறைகளே. சாதாரணமான ஒருவர் சுமார் பத்துவருடங்கள் செலவழித்துப் பலவித விதிமுறைகளையும் நிறைவுசெய்து தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம்கூட பணத்தின் கரங்களில் சமரசத்திற்கு வரமுடிகிறது. சந்தைக்கு தார்மீக எல்லைகள் உண்டா என்பது இப்போது அவ்வளவு எளிமையான கேள்வி அல்ல என்பதை நாம் உணரக்கூடும்.
நான்காவதும் இறுதியானதுமாக மனித உயிர் பிரிவதையும் வீணாக்காமல்(!) பணம் சம்பாதிக்கும் வழிகளில் ஒன்றாக ஆக்கிய 'கோலி' (COLI - Corporate Owned Life Insurance). ஆறேழு வருடங்களுக்குமுன் சில சட்டநெறிமுறைகளை அறிமுகப்படுத்தும் வரையில் பல அமெரிக்கக் கார்ப்பொரேட்களுக்கு பணம்கொட்டும் வழியாகக் கோலி இருந்திருக்கிறது. பணியமர்த்தப்படும்போது பக்கம்பக்கமாக எழுதப்பட்டு கையெழுத்து வாங்கப்படும் காதிதங்களில் உங்கள்மேல் கம்பெனி காப்பீடு எடுத்துக்கொள்ளும் என்பதும் இருக்கும். பிரீமியத்தொகையையும் கம்பெனியே செலுத்திவிடும். பிறகென்ன ஒன்றும் பிரச்சனையில்லையே என்று தோன்றலாம். ஆனால் ஊழியர் இறந்தால் காப்பீட்டுத்தொகை ஊழியரின் குடும்பத்துக்கல்ல, நிறுவனத்துக்குச்சென்றுவிடும். சுருக்கமாக ஒரு கணக்குப்போடலாம். அமெரிக்காவில் ஓர் ஆண்டுக்கு பத்தாயிரத்தில் ஒருவர் சாலைவிபத்தில் மடிகிறார் என்கிறது புள்ளிவிபரம். அதாவது பத்துலக்ஷம் பேருக்கு நூறுபேர். வால்மார்ட்டில் மட்டும் இருபது லக்ஷம்பேருக்கு மேல் வேலைசெய்கிறார்கள். தோராயமாக வால்மார்ட்டில் வேலைசெய்பவர்களில் ஆண்டுக்கு இருனூறுபேர்வரை விபத்துகளில் சிக்கி மட்டுமே உயிரிழக்கக்கூடும். மற்ற வியாதிகள் மூலமான அல்லது இயற்கையான ஆனால் எதிர்பாராத இறப்புகளையும் சேர்த்தால் கணிசமான எண்ணிக்கை வரக்கூடும். தன் ஊழியர்கள் ஒவ்வொருவர் பேரிலும் ஒரு மில்லியன் டாலர் காப்பீடு அந்நிறுவனம் வைத்திருந்தால்போதும் பிரீமியம்கட்டியதுபோக ஆண்டுக்கு சிலபல மில்லியன் டாலர்கள் வருமானம் தானாக வந்துகொண்டிருக்கும்!
காப்பீடு அந்நிறுவனம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அது ஏற்படப்போகும் உயிரிழப்பை எவ்வகையிலும் பாதிக்கப்படப்போவதில்லையே எனவே காப்பீடு எடுத்துக்கொண்டு யாராவது பணப் பலனடைந்துகொண்டுதான் போகட்டுமே என்ற சிந்தனை எந்த அளவுக்கு நியாயமானதாகத் தோன்றுகிறதோ அந்த அளவுக்கு நாமறியாமலே நம் தார்மீக எல்லைகள் சுருங்கி சந்தைப்படுத்தப்பட்டுவிட்டன என்பதை அறிந்துகொள்ளலாம். ஒருவழியாக, ஊழியர் இறப்பில் லாபமடைய வழியிருப்பதால் எப்படி ஒரு நிறுவனம் அவர் நலன்களைப்பேணுவதில் அக்கறைகொள்ளும்? இதில் conflict of interest வருகிறதே என்பதைச்சுட்டிக்காட்டி கோலி சட்ட விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சட்டத்தில் ஓட்டைகள் இருப்பதாகக் கருத்துகள் எழுந்தவண்ணமுள்ளன; அது தனிக்கதை.
நூலிலிருந்து வரிசையை முந்துவது, இரத்ததானம், குடியுரிமை, ஆயுள்காப்பீடு ஆகிய நான்கு சாதாரண/அசாதாரண விஷயங்களைப்பற்றி வாசிக்கையில் அவற்றால் தூண்டப்பட்டு மேற்கொண்டு அறிந்துகொண்டவைகளை மட்டுமே இங்கு உதாரணங்களாக எடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறேன். அப்புத்தகம் இதைப்போல் சுமார் நாற்பது - பத்து மடங்கு - தூண்டல்களைக்கொண்டது. ஓர் அபுனைவின் வீச்சு வாசகரிடத்தில் தோற்றுவிக்கக்கூடிய தேடல் பல அகமாறுதல்களுக்கு வழிவகுக்கக்கூடியது என்பதை ஓரளவுக்கு நிரூபிக்க முயற்சித்திருப்பதே இக்கட்டுரை அடைய நினைத்த இலக்கு. தார்மீக அடிப்படையில் பதவி விலகவேண்டும் என்ற அரசியற்கூற்றுகளை அடிக்கடிக்கேட்பதாலோ என்னவோ அவ்வார்த்தையின் மதிப்பு கொஞ்சம் மலினப்பட்டிருப்பதை உணரமுடிகிறது. எனவே குறைந்தது 'நாம் சந்தைப்பொருளாதாரத்தை பயன்படுத்திக்கொள்ளும் ஒரு சமூகமாக இருக்கவேண்டுமா அல்லது சந்தைச்சமூகமாக (எதற்கும் ஒரு விலையுண்டு என்ற பொருளில்) ஆகவேண்டுமா?' என்ற ஆதாரக்கேள்வி மனதில் நின்றுவிட்டால்கூட இவ்வாசிப்பு தன்னை வாசிப்பவரிடத்தில் ஓரளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாகவே கொள்ளலாம்.
அடுத்த கட்டுரையில் சிறுகதைகள் ஏற்படுத்தும் அசாத்தியமான வாசிப்பனுபவங்களைக் குறித்து அலசுவோம்.
- சிவானந்தம் நீலகண்டன்
- சிவானந்தம் நீலகண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக