வாசிப்பில் கதையின் முக்கியமான அம்சம் கற்பனையைத் தூண்டிக்கொண்டே இருப்பதுதான். 'வாசிப்பது எப்படி?' கட்டுரையில் விளக்கமாகப்பார்த்ததுபோல் வார் த்தைகள், வரிகள் கற்பனையால் உருவங்களாக, வடிவங்களாக, காட்சிகளாக மனத்திரையில் விழ ஆரம்பிக்கின்றது. இக்கற்பனையின் வீச்சே வாசிப்பவருடைய படைப்பூக்கத்தின் எல்லை. மனத்திரையில் விழும் இக்காட்சிகள் விரைவில் அங்கிருந்து மறைந்துபோய்விடாமல் ஆழமாகப்பதிந்து போகச்செய்வதுதான் கதையின் பிரதான பணி. தொடர்பு, தொடர்ச்சி, மெல்லிய உணர்ச்சி, சிந்தனையைத் தூண்டிவிட்டுவிடக்கூடிய ஒரு சின்ன தெறிப்பு இவற்றின்மூலம் எளிதா கக்கடந்து சென்றுவிடக்கூடிய ஒரு சாதாரண சம்பவத்தையும்கூட நம்மை ஒருகணம் நின்று கவனித்து பொருட்படுத்த வைத்துவிடுவதுதான் இக்கதையின் தன்மை; சிறப்பு.
ஒரு விஷயத்தை அல்லது கருத்தை இன்னொன்றுடன் தொடர்புபடுத்தியே நம் மூளை புரிந்துகொள்ளவோ நினைவிற்கொள்ளவோ செய்கிறது. இந்தத்தொடர்பு எவ்வளவுக்கெவ்வளவு இயல்பாகவும், உறுத்தாமலும் அதேசமயத்தில் உணர்ச்சிகளை துலக்கமாக எடுத்துக்காட்டும்வகையில் அமைந்திருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அக்கதையின் தரமும் மிகும். கதை என்னும் ஓர் அமைப்பு நம்மை வெற்றிகொள்வது இதனால்தான். எவ்வளவு ஆகச்சிறந்த தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்பட்டும், பிரம்மாண்டப்படுத்தப்பட்டும் கதை இல்லாத திரைப்படங்கள் குறைசொல்லப்பட்டு விமர்சிக்கப்படுவதும், காலத்தால் மறக்கப்பட்டுப் போய்விடுவதும் இதனால்தான். ஒன்றுக்குமேற்பட்ட வழிகளில் ஒவ்வொருமுறையும் புதிய கோணத்திலும் படைப்பூக்கத்துடனும் செய்பவரே ஒரு சிறந்த கதைசொல்லியாக வெளிப்படுகிறார். இந்தக்'கதை' எவ்வகையிலும் நம் அன்றாட வாழ்விலிருந்து விலகியிருப்பதுமல்ல. வேண்டுமென்றால் தெரிந்துகொள்ளலாம் இல்லையென்றால் விட்டுவிடலாம் என்று அசட்டையாக இருந்துவிடக்கூடியதுமல்ல. இரண்டு விஷயங்களைக் கவனிப்பதன்மூலம் இதை உணர்ந்துகொள்ளலாம்.
முதலாவதாக, குழந்தை இரண்டரை மூன்று வயதில் கதைகேட்க ஆரம்பிக்கும்போது உணர்ச்சிகலந்து வெளிப்படுத்தப்படும் புனைவுகளைமட்டுமே விளங்கிக்கொள்கிறது. ஒருவகையில் வாசிப்பை முதன்முதலில் ஆரம்பிக்கும் ஒருவருக்கும் இது பொருந்தும். மூளை இயல்பாக சோம்பேறித்தனமுடையது. உடல் உற்பத்திசெய்யும் சக்தியில் ஐந்தில் ஒருபங்கை அது எடுத்துக்கொள்கிறது. எனவே முடிந்தவரையில் அது வேலைசெய்யாமலிருந்து சக்தியை மிச்சம்பண்ணப் பார்க்கும்படியானது நம் உடலமைப்பும் பரிணாமமும். ஆகையால் எந்தப்புதிய விஷயத்திற்கும் அதைப் படிப்படியாகத்தான் பழக்கியாகவேண்டும். புனைவுகளின் உணர்ச்சி மிகுதியால் மூளை அவ்வளவு அதிகமாக உழைக்க அவசியமில்லாமலே உள்வாங்கிக்கொள்ளமுடியும். ஆகவே மூளையின் எதிர்ப்பும் குறைவாக இருக்கும். பிறகு அதைத் தாஜாபண்ணி அபுனைவுகளைக் கொடுத்து அதிகவேலை வாங்கிக்கொள்ளலாம். இது ஓர் உத்திதான். ஒரே உத்தி அல்ல. ஒருவருடைய அமுது இன்னொருவருக்கு பாஷாணம். எந்தவழி நமக்கு வேலைசெய்கிறதென்பதைக் கண்டுபிடிப்பதே ஓர் இனிய பயணம்.
இரண்டாவதாக, பெரும்படிப்புகள் படித்துவிட்டு அனுபவஸ்தர்கள் நிறைந்திருக்கும் ஒரு கார்ப்பொரேட் தலைமை அலுவலர்களின் கூட்டத்தில்கூட கதைகள் வழியாகத்தான் ஒருவர் தான் சொல்லவந்ததை வீரியத்துடன் சொல்லிப் புரியவைக்கமுடிகிறது. 2014ல் மட்டும் ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ மாத இதழில்,
1. நன்றாகக் கதை சொல்வது எப்படி?
2. உங்கள் மூளை ஏன் நன்றாகக் கதைகேட்கிறது?
3. கதைசொல்லல் ஏன் தொழில் மேலாண்மையின் ஆகச்சிறந்த உத்தி?
4. கதைசொல்லலின் ஒதுக்கிவிடவேமுடியாத பயன்பாடு
5. புள்ளிவிபரங்கள் கதையோடு பிணைவதால் எப்படி பளிச்சென வெளிவருகிறது?
6. உங்கள் பிரசண்டேஷனை ஒரு கதைபோல் வடிவமையுங்கள்
என்று ஆறுகட்டுரைகள் (மேலும் இருக்கலாம், நான் பார்த்தது இவ்வளவே) வந்திருந்தன. முக்கியமாக கவனிக்கவேண்டியது இக்கட்டுரைகள் பாமரர்களை நோக்கி எழுதப்பட்டவை அல்ல; மேலாளர்களுக்கும் தங்கள் தொழிலில் உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கும் இன்னும் சிறப்பாக பங்களிப்பது எப்படி, மேன்மேலும் வளர்ச்சியடைவது எப்படி என்று சொல்வதற்காக எழுதப்பட்டவை.
இவ்விரண்டு விஷயங்களைச் சேர்த்துப்பார்த்தால் ஒன்று விளங்கிவிடும். மூளை முழுமையாக வளர்ச்சியடைந்திராத நிலையில் ஒரு குழந்தைக்கும் கதை தேவைப்படுகிறது, மூளைபலத்தால் தங்கள் துறைகளில் சிறந்துவிளங்கக்கூடிய அறிவார்ந்த வயதுவந்தோருக்கும் கதை அவசியமாகிறது. வாசிப்பு ஒருவகையில் அதுகடந்துவரும் 'கதை'களினூடேதான் தன் பலத்தை உருவாக்கிக்கொள்கிறது; தன் பங்களிப்பை வாசிப்பவருக்குத் தருகிறது. புத்துணர்வாசிப்பு ஓரளவுக்குப் பழகியபின் மூளை இயல்பாகவே தன்னிடம் வந்தடையும் விஷயங்களைத் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்ளத் தயாராகிவிடுகிறது. இது ஒரு புதியவிஷயமாகவோ, ஆற்றலும் கவனமும் தேவைப்படும் ஒன்றாகவோ இருக்காமல் இயல்பான ஒன்றாக வாசிப்பவருக்கு ஆகிவிடுவதே ரஸவாதம். ஆகவே வாசிப்பு பழகியிருக்கும் ஒருவர் தான் நினைப்பதை வெளிப்படுத்துவதிலும் கஷ்டமில்லாமல் இந்தக்கதையம்சம் கைகூடிவருகிறது. அவரால் தன் பேச்சைக்கேட்பவைகளையும் எழுத்தைப் படிப்பவர்களையும் சரியான வர்மப்புள்ளிகளில் தொட்டுவிடமுடிகிறது. குடும்ப உறுப்பினர்களிடையே நிதமும் நிகழும் உரையாடல்கள்கூட சுவையும் உற்சாகமும் பெற்றிட இப்பயிற்சி உதவும் என்பது சொந்த அனுபவம். நீங்கள் யாராக இருப்பினும் எந்தத்தொழில் செய்பவராயிருப்பினும் இந்தத்தன்மை - தான் திறம்பட புரிந்துகொள்வதும் தன்னை சிரமமும் பிழையுமின்றி புரியவைத்துவிடுவதும் - இன்றைய சூழ் நிலையில் அதிஅவசியமல்லவா?
நீண்ட ஆராய்ச்சிகளின் இறுதியில் தற்போது தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு வளர்ந்த நாடுகளில் ஒரு பயிற்சி பாடத்திட்டத்தில் அவசியமானதாக இடம்பிடித்திருக்கிறது. நான்கைந்து பொருட்கள் அல்லது விலங்குகள் பெயர்கள் கொடுக்கப்பட்டு அவற்றிக்கிடையே ஒன்றுக்குமேற்பட்ட தொடர்புகளை கற்பனைக்கதைகளாக அமைத்து குழந்தைகள் சொல்லவைக்கப்படுகின்றனர். உதாரணமாக, பாட்டி வடைசுட்ட கதையை அப்படியே நீதிக்கதையாகச் சொல்லிவிடாமல் வடை, நரி, பாட்டி, காகம் ஆகிய நான்கையும் கொடுத்து குழந்தைகளிடம் கதைகளை உருவாக்கச்சொல்வது. எல்லையில்லாத சாத்தியக்கூறுகளுடன் கதைகள் பிறந்துகொண்டேயிருக்கும். நீங்களும் முயற்சித்துப்பாருங்கள். வீட்டில் குழந்தைகளிருந்தால் சோதித்தும்பாருங்கள். இது பலவகைகளில் மூளைவளர்ச்சிக்கு உதவிபுரிவதுடன் எதிர்காலத்தில் அவர்கள் மற்ற பாடங்களைச் சிறப்பாகப் படிக்கவும், எந்தத்துறையில் பணிக்குச்சென்றாலும் அதிலும் பயன்படுகிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், "ஆறு முதல் பன்னிரண்டு வரை வயதுள்ள மாணவர்களை சந்தித்து கதை சொல்வது, அவர்களை கதை சொல்ல வைப்பது என்னுடைய வழக்கம். அதற்கு மேல் உள்ள மாணவர்களிடம் சொன்னால் அவர்கள் கதையை கதையாக பார்க்காமல் லாஜிக் கேட்பார்கள். உலகின் எந்த விஷயத்தையும் கதையின் மூலம் சொல்லலாம். அது அறிவியலின் எந்த விஷயமாக இருக்கட்டும், வேறு எந்த பாடமாகட்டும் கதை மூலம் சொன்னால் அவர்கள் அதை எளிதில் நினைவில் வைத்து கொள்வார்கள்" என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது இங்கே குறிப்பிடத்தகுந்தது.
மற்றதை விடுவோம். அறிவியல் ஆராய்ச்சிக்கு வருவோம். அறிவியல் ஆராய்ச்சிகள் இரண்டு படிநிலைகளை அடிப்படையாகக்கொண்டவை; ஒன்று, கிடைத்திருக்கும் துண்டுதுண்டான தகவல்களை (நிதர்சனத்தில் எப்போதுமே எந்தச்சிக்கலுக்கும் தீர்வு முழுமையாக, நேரடியாகக் கிடைத்துவிடுவதில்லை) அறிவுக்குப்பொருந்தும் வகையில் எப்படியெல்லாம் இணைத்து எத்துணை உத்தேசக்கருதுகோள்களை (hypotheses) உருவாக்கமுடியுமோ உருவாக்குவது. இரண்டு, அவற்றை உண்மையெனவோ பொய்யெனவோ நிரூபிக்கப் பிரயாசைப்படுவது. ஐன்ஸ்டைன் ஏன் அறிவைவிடக் கற்பனை உசத்தியானது என்று சொன்னார் என்பது இப்போது விளங்கக்கூடும். கற்பனை உத்தேசத் தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறது. அது கட்டுப்பாடுகளற்றது; சரி, தவறு அறியாதது. நேர்மாறாக அறிவு ஒரு வரம்புக்குள் நின்றுகொண்டு சோதனைகள்மூலம் மதிப்பிடுகிறது. ஒரு ஜீனியஸ் கற்பனை அதுகாறும் உண்மையென்று நம்பப்பட்டுவந்த அறிவையே புரட்டிப்போட்டுவிடும்; ஒரு புது 'அறிவை'க்கொடுத்துவிடும். அறிவியல் உலகில் தொடர்ந்து இது நிகழ்ந்துவருகிறது.
ஒரு பிழையான புரிதல் ஒரு நல்ல கதை தன்னில் ஒரு நீதியை அல்லது கருத்தைக் கொண்டிருந்தே ஆகவேண்டும் என்று எதிர்பார்ப்பது. சிறுகுழந்தைகள் கதைகேட்பதைத்தவிர வேறு எதையும் காதில்போட்டுக்கொள்ளாது. ஆகவே நாம் சொல்லவேண்டிய விஷயங்களை கதையின் நீதியாக நுழைத்துவிடுவது ஒரு வழக்கமேயொழிய, நீதி அல்லது தீர்மானமான ஒரு இறுதிக்கருத்து கதைக்கான தேவையோ அடிப்படையோ அல்ல. இந்தக்கதை என்ன சொல்ல வருகிறது? என்பது புதிதாக வாசிப்பில் நுழையும் எவருக்கும் வரக்கூடிய முதற்கேள்வி. அப்படி எதையும் சொல்லிவிடவேண்டிய அவசியமில்லை என்ற புரிதல் முக்கியம். ஒரு வகையில் பிரச்சாரத்திற்கான ஊடகமாகக் கதையைப்பயன்படுத்தி வருபவர்கள் தவறாமல் 'தான் சொல்ல வருவதை'ச் சொல்லிவிடுவார்கள். ஆனால் அவற்றில் பெருன்பான்மை நல்ல கதைகளாக ஆவதில்லை. அவற்றில் தொடர்பு தொடர்ச்சி ஆகியவை செம்மையாக இருந்தாலும் இயல்புத்தன்மை கெட்டுவிடுவதுதான் காரணம். ஏதோ ஒன்றைக்குறிவைத்து ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கும்போது இயல்பாக எப்படி இருக்கமுடியும்? அனேகமாக நாம் அனைவருமே தவறவிட்டிருக்கக்கூடிய ஒரு தினசரிக்காட்சியை நுணுக்கமாக 'இந்த சாதாரணத்திலும் உள்ள மேன்மையைப்பார்' என்று சொல்லாமல்சொல்லி நெகிழச்செய்துவிடும் ஒருசிறுகதை மிகவும் தரமானதும் உயர்ந்ததுமே ஆகும்.
ரத்தமும் சதையுமாக, உயிரோட்டமுள்ள, மனது க்கு நெருக்கமான ஒரு புனைவுக்கு முன்னால் எவ்வளவு சுவாரஸ்யமாக எழுதப்பட்ட அபுனைவும் நிற்கமுடியாது ஏனெனில் அவை வெறும் தகவற்கோர்வையும் வறட்டு வாதங்களும்தானே என்று தர்க்கபூர்வமாக(?) முடிவெடுத்து முழுமூச்சாக புனைவுகளையே வாசித்திருந்ததும் உண்டு. வாழ்க்கை வரலாறோ, உலக வரலாறோ, உண்மைச்சம்பவங்களை இணைத்து காரணகாரியவிளக்கம் கற்பிக்கும் நூலோ, புள்ளிவிவரங்களுடன் பகுப்பாய்ந்து அரசியல் தர்க்கிக்கும் நூலோ எதுவாயினும் கற்பனைக்கலப்பின்றி உள்ளதை உள்ளபடி நம் கண்முன்னே கிடத்தும் அபுனைவுகளே நேரமும் உழைப்பும் செலவிடத்தகுதியானவை என்று நியாயப்படுத்திக்கொண்டு புனைவுகளைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டிருந்த நாட்களும் உண்டு. ஒருக்கால் வாசிப்பின் சொர்க்கம் இவற்றிற்கிடையிலெங்கோ இருக்கிறதோ என்று அலைக்கழிந்து உண்மையான புள்ளிகளை சாமர்த்தியமான ஊகங்களாலும் நம்பத்தகுந்த கற் பனைகளாலும் இணைக்கும் வரலாற்று நாவல்களில் மட்டுமே பொழுதைக்கழித்ததும் உண்டு. ஒரு குறிப்பிட்ட வகை எழுத்து உருவாகி, காலத்தால் கரைந்துவிடாமல் நிலைத்திருக்கிறது என்பதே அது தன்னளவில் ஒரு தனித்தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமும் அவ்வகைக்கு ஒரு தேவையிருக்கிறது என்பதற்கு அத்தாட்சியுமாகும்.
புனைவுகளில் மட்டுமே கதை இருக்கும் அல்லது இருக்கவேண்டும் என்பது மிகத்தவறான புரிதல். அபுனைவுகள் கதைத்தன்மையோடில்லாவிட்டால் அவை புத்துணர்வாசிப்பில் வகைப்படாமல் ஆய்வுக்கட்டுரை வகையறாவிற் சேர்ந்துவிடும். பிறகு அவை ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பயன்பாட்டுக்கு மட்டுமே என்ற நிலை உண்டாகிவிடும். எந்த விதத் தனிப்பட்ட துறை நிபுணத்துவமில்லாத சாதாரண மனிதன் வாசித்துப்புரிந்து பயனடைந்துகொள்ளும் ஓர் அபுனைவில் கதையாடல் அல்லது கதைத்தன்மை நிச்சயம் இருக்கும்; இல்லையேல் அது விரைவில் மறக்கப்பட்டுவிடும். 'பத்தாயி ரம் மைல் பயணம்' என்றொரு அபுனைவு வெ.இறையன்பு அவர்கள் எழுத்தில் ஒரு வருடத்திற்குமுன் படிக்கநேர்ந்தது. ஆசிரியர் தரமான புத்தகங்களை படைத்தவர், நல்ல சிந்தனையாளர், பேச்சாளர் என்றாலும் இந்தப் புத்தகத்தை வாசித்து நேரத்தை வீணாக்கிக்கொள்ளவேண்டாம் என்று நண்பர்களிடம் பரிந்துரைக்கவேண்டிவந்தது. எவ்விதத்தொடர்புமில்லாத உதிரிச்செய்திகள் தன்முனைப்பை ஊக்கப்படுத்தும் பொருட்டோ அல்லது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பொருட்டோ வரிசையாக பக்கங்களில் அடுக்கப்பட்டிருந்தன. கதையம்சம் முற்றிலுமில்லை. நூலில் வாசித்த அத்துணை நூற்றுக்கணக்கான உதிரித்தகவல்களில் இன்று ஒன்றுகூட நினைவில்லாதது ஆச்சரியத்துக்குரியதல்ல. வாசித்தவர் மீது ஏதும் பிழையுமில்லை.
"பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம்" என்று ஔவை நல்வழியில் சொன்னதுபோல் எதையெதையோ உதாரணமாகக்காட்டியும், வாதித்தும், சுற்றிவளைத்தும் இக்கட்டுரை சொல்லவருவது இதுதான்; புத்துணர்வாசிப்பில் புனைவோ, அபுனைவோ, இரண்டின் கலவையோ எதுவாயினும் சரி அதில் நல்ல கதையம்சம் இருக்கிறதா என்பதே அவ்வாசிப்பு தன்னளவில் வாசிப்பவருக்குப் பயனளிக்கப்போகிறதா என்பதை முடிவுசெய்கிறது. தன்னளவில் என்று இங்கு குறிப்பிடுவது அவ்வாசிப்பு தன் உள்ளடக்கத்தின் செய்திகளால், அமைப்பால் வாசிப்பவருக்குத் தரும் அறிவையோ உணர்வையோ அல்லாது கதை என்ற அமைப்பின் இயல்பே கூட்டிவிடும் மதிப்பைத்தான். துரதிருஷ்டவசமா க, தண்ணீரில் குதித்துதான் நீச்சல் பழகவேண்டுமென்பதுபோல் இதை ஒரு நூலை வாசிக்காமலேயே ஒருவர் உணர்ந்துகொள்ளவியலாது. ஆயினும் ஓரளவு தொடர்வாசிப்பின்மூலம் எவற்றை ஒதுக்கிவிடுவது என்பதை அனுபவத்தில் கண்டுகொள்ளலாம்; ஆரம்பத்திலேயே எதுவும் கவலைகொள்ளவேண்டாம்.
கடந்த இரு கட்டுரைகளிலும் இக்கட்டுரையிலும் வாசிப்பது ஏன்?, வாசிப்பது எப்படி?, வாசிப்பது எதை? ஆகிய மூன்று விஷயங்களை மையத்தில்வைத்து அவற்றைப்பற்றி விவாதித்திருக்கிறோம். சூத்திரங்களையே விவரித்துக்கொண்டிருந்தால் களைப்பு மிகுந்துவிடுமென்பதால் அடுத்ததாக ஒரு கணக்கைப்போட்டுவிடுவோம். ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவற்றின் செய்திகளை, அடுக்குகளை, அழகுகளைப் பயின்றுபார்த்துவிடுவோம். அள்ளிப்பருகித்தீராத அமுதச்சுனையிலிருந்து ஒருதுளி சுவைத்துப்பார்ப்போம், அடுத்த கட்டுரையில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக