வாசிப்பின் தன்மையை, அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுவரும் இக்கட்டுரைத்தொடரின் நான்காம் பகுதிக்குள் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. வாசிப்பில் கதையின் பங்கை உற்றுநோக்கிய மூன்றாம் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அதன் வாசிப்பனுபவத்தை இதுவரை - தனித்தனி பின்புலங்களில் - அணுகியதைப்போல் பல்வேறு கோணங்களிலிருந்தும் வாய்ப்பிருக்குமிடங்களில் முழுமையாக அணுகி அதன் பரிமாணங்களையும், சுவையையும், நிறைவையும் புரிந்துகொண்டுவிடுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தகம் சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் வரலாற்று நாவல். சில காரணங்களினால் இன்னூல் இக்கட்டுரையின் நோக்கத்திற்கு வெகுவாகப் பொருந்திவருகிறது. முதலில் இது சமகாலத்திய வாசகர்களுக்காக எழுதப்பட்டது (2008). இரண்டாவது, சாகித்ய அகடமி விருதுபெற்றதன்மூலம் தன் உள்ளடக்கத்துக்கு ஒரு வகையான சான்றிதழைப் பெற்றுள்ளது (2011). மூன்றாவது, அறுநூறு ஆண்டுகால மதுரையின், கள்ளர்களின் வரலாறு ஆயிரம் பக்கங்களில் கற்பனைகலந்து எழுதப்பட்டுள்ளதால் பல்வேறு களங்களின் விஷயங்களை, காலமாற்றத்தின் விளைவுகளை ஒன்றாகப்பார்த்துவிடக்கூடிய அனேக வாய்ப்புகளை இயல்பாகவே கொண்டுள்ளது. மேலும் நாவலின் ஒருபகுதி சிலபல மாற்றங்களுடன் அரவான் என்ற திரைப்படமாக வெளியானதால் நாவல் பெற்ற கவனிப்பு இக்கட்டுரையை வாசிக்கும் பலருக்கும் அவர்கள் நாவலை வாசித்திராவிடிலும் எதைக்குறித்துப் பேசப்படுகிறது என்பதில் ஒரு பிடி கிடைக்கும் என்பதும் ஒரு துணைக்காரணம்.
இன்னொரு சுவாரஸ்யமான காரணமும் உண்டு. தற்கால முன்னணி தமிழ் நாவலாசிரியர்கள் இருவர் காவல்கோட்டம் வெளியானதும் (சாகித்யவிருது கிடைப்பதற்கு முன்பே) விரிவான ஆனால் நேர் எதிரிடையான விமர்சனத்தை அளித்திருந்தார்கள்; ஜெயமோகன் சிற்சில குறைகளைத்தவிர முழுக்க பாராட்டியும், எஸ்.ராமகிருஷ்ணன் 'இதில் வரலாறும் சரியில்லை, நாவலாகவுமில்லை. ஆக இது வரலாற்று நாவலல்ல; வெறும் ஆயிரம்பக்க அபத்தம்' என்றும் வர்ணித்திருந்தார். பிறகு வழக்கம்போல் நாவல் வடிவம் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று யார் சொன்னது? என்று இலக்கிய சர்ச்சைகள் கிளம்பின. அதற்குள்போவது இங்கு நோக்கமல்ல. இதையும் ஒரு காரணமாகக் குறிப்பிடுவது ஏனெனில் இந்நாவல் வடிவத்திலும்கூட விவாதிக்கப்படுமளவிற்கு வழக்கத்திலிருந்து கொஞ்சம் மாறுபட்டிருந்ததுதான். டயரிக்கு றிப்புகள், கடிதங்கள், சில வரைபடங்கள் எல்லாமே பின்னிணைப்பாக மட்டும் இல்லாமல் நாவலின் பகுதியாகவே ஆங்காங்கே வந்திருந்ததும் இந்த விவாதத்தைக் கிளப்பியிருக்கலாம்.
எழுத்தாளனின் வாளும் சொற்கள்தான், கேடயமும் சொற்கள்தான். நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்துக்களைக் கோர்க்கும் அவன் நம் விமர்சனங்களை, பாராட்டுகளை எதிர்கொள்வதும் அவ்வெழுத்துக்கள் வழியாகத்தான். மொழி வெறும் தொடர்புக்காகத்தானே என்ற பொதுப்புத்தியிலிருந்து ஒருவனை 'அட நல்லாருக்கே' என்று ரசிக்கவைக்கும் சின்ன இடத்தில்கூட எழுத்தாளன் மொழியையும் அதன்மூலம் வாசகனையும் ஒரு நூல் மேம்படுத்திவிடுகிறான். அந்த அடிப்படையில் காவல்கோட்டத்திலிருந்து ஒரு விஷயத்தைப்பார்ப்போம்.
இது கள்ளர்களின் வரலாறு என்றால் இது அப்போது சாதிப்பெயரல்ல; தொழிற்பெயர். அவர்களுடைய தொழில் திருட்டு. ஆகவே கள்ளர்கள். இவர்களின் முக்கியமான தொழில்வல்லமை 'கன்னமிட்டு'த்திருடுதல் அதாவது சுவற்றில் ஆள் நுழையுமளவுக்குத் துளையிட்டு அவ்வழியாக உள்நுழைந்து பொருட்களைக் கவர்ந்துவருதல். இதை ஊருறங்கும் ஓர் இரவின் குறுகிய காலத்தில், காவற்காரர்கள் கண்ணில்படாமல் செய்துமுடிப்பது எவ்வளவு கடினம் என்பதை யாரும் ஊகிக்கமுடியும். காலமாற்றத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் துளையிடக்கடினமான சுவர்கள் பெருகியதும், இதைவிடச் சுலபமான திருட்டுமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதும் இன்று கன்னமிடுதல் அரிதான திருடுமுறையாக இருக்கக்காரணங்கள். இன்றும் எப்போதாவது தினசரிச்செய்திகள் கன்னமிட்டுத்திருடியது தொடர்பான செய்திகள் வெளியிடும்போது அந்தத்துளையைப் படமெடுத்து போட்டிருக்கிறார்களா என்று பார்ப்பதுண்டு. இதுவரை அப்படி ஏதும் கிடைத்ததில்லை.
சொல்லவந்த விஷயம் வேறு. இன்று 'கன்னம்' என்ற சொல் யாருக்கும் இந்தக்கன்னத்தை நினைவுறுத்துமா என்பது கேள்விக்குறி. ஆனால் கன்னமிடுதலை ஆசிரியர் விவரித்துக்கொண்டே வருகையில் மாம்பழத்தை அரிந்து 'ரெண்டு கன்னம்' சாப்பிடக்கொடுப்பது நினைவில் வந்தது. கிராமங்களில் இந்தசொல் இன்றும் வாழ்ந்துவருகிறது. இப்படி யோசித்துப்பார்க்கலாம்; முழு மாம்பழத்தை ஒரு முகத்தின் வடிவாக ஒப்பிட்டு அதன் இரு கன்னங்கள் மாங்கொட்டையின் இருபக்கங்களிலும் இருப்பதால் அது கன்னமா? அல்லது மாஞ்சுவற்றில் வட்டமாக அரிந்து கள்ளர்கள் சுவற்றில் எடுப்பதுபோல் எடுத்துவிடுவதால் அது கன்னமா? இந்த எண்ணத்தை அந்த எழுத்து நமக்குத் திட்டமிட்டுத் தந்துவிடவில்லை. ஆயினும் மொழியை அனுபவிக்க ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித்தருகிறது. அவ்வெண்ணவோட்டத்தின் நீட்சியாக எங்கிருந்தோ ஒரு திரைப்பாடல் வரிகள் நினைவில் எழுகிறது; "மாந்தோப்பில் நின்றிருந்தேன் மாம்பழம் வேண்டுமென்றான், அதைக்கொடுத்தாலும் வாங்கவில்லை அந்தக்'கன்னம்' வேண்டுமென்றான்". சடாரென மாங்கனியின் கன்னத்தையும் மங்கையின் கன்னத்தையும் ஒருங்கே குறிக்கும் பாடலின் சிலேடை விளங்கிக் கவிஞனின் திறன் ரசனையை மேலெடுக்கிறது. ஒரு சாதாரணமான சொல் சிந்தனையை எங்கெங்கோ இழுத்துக்கொண்டு செல்லும் சக்தியுள்ளதுதான். ஆனால் அதன் சாளரம் வாசிப்பில்தான் திறக்கிறது.
இயேசுவின் பன்னிரு சிஷ்யர்களுள் நால்வர் எழுதியதே விவிலியத்தின் புதிய ஏற்பாடு. அவர்கள் மார்க், மேத்யூ, லூக், ஜான். தமிழில் இவர்கள் பெயர்களை மாற்கு, மத்தேயு, லூக்கா, யோவான் என்று ஆரம்பத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள், அது அப்படியே நிலைத்துவிட்டது. இவர்கள் நால்வருள் ஜானின் எழுத்து மிகவும் கவித்துவமாக இருக்கும். முதல் வசனமே இப்படித்தான் தொடங்கும்; 'ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனோடிருந்தது. அந்த வார்த்தையே தேவனாயிருந்தது'. ஜான் சொன்னதுபோல் சிலநேரங்களில் வாசிப்பனுபவம் புல்லரிக்கச் செய்யும்போது அது ஓரிரு வார்த்தைகளால்கூட நிகழ்ந்துவிடும். அது இறையனுபவமாக ஆகிவிடவும்கூடும்.
எந்தப் புனைவு எழுத்தையும் நம்மை சிலாகிக்கச்செய்யும் மற்றொரு விஷயம் நீண்டகாலமாக நம்மிடையே புழங்கிவரும் பழக்கவழக்கங்களுக்கோ சொற்றொடர்களுக்கோ அதுவரை பரவலாகக் கேள்விப்பட்டிராத ஆனால் நம்பக்கூடிய அல்லது நம்பவிரும்பக்கூடிய பின்புலத்தையோ சம்பவத்தையோ சுவைபடச் சொல்வது. அந்தவகையில் காவல்கோட்டத்திலிருந்து ஒன்றைப்பார்ப்போம்.
பெண்கள் காதைத்துளையிட்டு, அதில் எடைகூடிய ஈயக்குண்டுகளைத் தொங்கவிட்டு, நீட்டி, காதின் அழகைக்கூட்டிக்கொண்டு, பின் அதில் தங்கத்தில் அணிகலன்கள் செய்து மாட்டிக்கொண்டது ஒருகாலம். வாரக்கணக்கில் கவனமாக, காதில் ஆறாத புண்கள் மேவிவிடாமல் இதைச்செய்து வந்தவர்கள் குறவர்கள். இந்நாவலில்வரும் தாதனூர் பெண்களுக்கும் அப்படியொரு எங்கிருந்தோவந்தக் குறவன் பொறுப்பாக செய்கிறான். எல்லோரும் அவன் திறமையை மெச்சிக்கொள்கிறார்கள். காலப்போக்கில் அவன்மேல் நம்பிக்கைக்கூடிவிடுகிறது. இறு தியில் நிறையபெண்கள் ஒரே சமயத்தில் காதுநீட்ட வாய்த்த சமயமாகப்பார்த்து தங்கத்தோடுகளோடு ஆள் மாயமாகிவிடுகிறான். அதுமட்டுமல்லாமல் ஊரிலிருந்த நாய்களுக்கெல்லாம் கஞ்சாவை மாமிசத்தில் கலந்துகொடுத்து மலைமேல் உறங்கச்செய்துவிட்டு ஊரின் உலக்கைகளில் கட்டப்பட்டிருந்த பூண்களைக்கூட கழட்டிச் சென்றுவிடுகிறான். 'எனக்கே காதுகுத்துறியா?' என்ற சொற்றொடர் இன்றும் புழக்கத்திலுள்ளது. அதன் கதை இதுதான் என்று ஆசிரியர் சு.வெங்கடேசன் சொல்லவில்லையாயினும் நாம் தொடர்புபடுத்திக்கொள்ளலாம். சுவையாகத்தானே இருக்கிறது. இன்னொரு விஷயம். தாதனூர் முழுதுமே திருட்டைத் தொழிலாகக்கொண்ட கள்ளர் கிராமம். அவர்களிடமே தனியாளாக திருட்டு நடத்திக்காட்டிவிட்டதால் 'எனக்கே காதுகுத்துறியா?' இன்னும் ஆழமான பொருள்கொள்கிறது. அதாவது நானே திருடன் அல்லது ஏமாற்றுவதில் கெட்டிக்காரன்; என்னிடமே ஏமாற்றுவேலையா என்ற பொருளில் சொல்வதால் கதையும் சொற்றொடரின் இன்றைய பயன்பாடும் துல்லியமாகப் பொருந்திவருகிறது.
கொஞ்சம் வரலாற்றுப்பக்கம் திரும்பி நாவலிலிருந்து அதில் சில சாம்பிள்கள் பார்ப்போம். மதுரை மீனாக்ஷிசுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வெளியே பெரிய கோட்டைச்சுவர்களும் அதற்குவெளியே ஆழமான அகழியும் பாதுகாப்பிற்கிருந்தது இன்று மதுரைவாசிகளுக்கே அனேகருக்குத் தெரியாத வரலாறு. 1840களில் மதுரை கலெக்டராக இருந்த ஜான் பிளாக்பெர்ன் நகரை விஸ்தரிக்க கோட்டைச்சுவர்களை இடித்து அகழியை நிரப்பிவிட யோசனை செய்தார். ஆயினும் அதற்காகும் அசாத்திய செலவுகளைக் கணக்கிட்டு இறுதியில் மனிதனின் ஆசையையே முதலீடாகக்கொள்ளும் ஓர் அபார உத்தியைக்கையிலெடுத்தார்; கோட் டைச்சுவற்றை இடித்து அகழியை நிரப்பி சமப்படுத்துபவர்களுக்கு அந்த நிலமே சொந்தமாகிவிடும். அதாவது எவ்வளவு நிலத்தை நான் என் பொறுப்பில் அகழியியைமூடி உருவாக்குகிறேனோ அவ்வளவுக்கும் நானே அதிபதி. பிறகு கேட்பானேன்? செய்திகேள்விப்பட்ட சுத்துப்பட்டு மக்கள் எல்லாம் மொய்க்க, திட்டம் இனிதே நிறைவேறியது. ஒருபக்கம் இங்கிலாந்தின் castle-கள் வரலாற்றுப்பொக்கிஷங்களாக சிறுகல்லும் விழுந்துவிடாமல் பாதுகாக்கப்படுகையில் தன் ஆளுகைக்குட்பட்ட ஒரு பகுதியில் இப்படிச்செய்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியும் பிளாக்பெர்னுக்கு இருந்ததாக நாவலில் குறிப்புள்ளது. முக்கியமாக இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நில ஆய்வாளர் மாரெட்டும், மேஸ்திரி பெருமாள்முதலியும் கற்பனைக்கதாபாத்திரங்கள் அல்ல என்பதை ஒரு பத்திரிகைச்செய்தியிலிருந்தே உணர்ந்தேன். இன்றும் மதுரையில் நிலைத்திருக்கும் மேலமாரெட் வீதி, கீழமாரெட்வீதி, வடக்குமாரெட் வீதி, தெற்குமாரெட் வீதி ஆகியவையும் அதேவிதத்தில் கீழ, மேல, வடக்கு, தெற்கு பெருமாள் மேஸ்திரிவீதிகளுக்கும் கீழே புதைந்திருக்கும் அகழியையும் இடிபட்ட கோட்டைச்சுவர்களின் வரலாற்றைத் தான் தன்மீது நடப்பவர்களிடம் சொல்லிக்கொண்டுள்ளது. அது நம் காதுகளில்விழ இவ்வாசிப்பு துணைசெய்யும்.
இன்னொரு வரலாற்றுத்துளி. இதே காலகட்டத்தில் மதுரையில் முதன்முதலாக கச்சேரி (போலீஸ் ஸ்டேஷன்) கட்டப்பட்டு அதில் போலீஸ்காரர்கள் வேலைக்கமர்த்தப்படுகிறார்கள். ஊரைக்காக்க காவற்காரர்கள் இருக்க இவர்களின் வேலை என்ன என்பது யாருக்கும் புரியாமல் மக்கள் குழம்புகிறார்கள். எதாவது வரிகிரி வசூலுக்காக இருக்குமென்றும் ஊகித்துக்கொள்கிறார்கள். ஆனால் பேச்சே 'மரக்காலில் ஓட்டைபோட்டு காலுக்குள் மாட்டிக்கொண்டதைப்போன்ற' அவர்கள் ஆடையைப்பற்றித்தான். இதைக்கிண் டலடித்து மருதக்கோனார் எழுதிய 'கச்சேரிக்கும்மி'யும் பிரபலமாகிறது. அதில் 'பெல்ட்' என்ற ஒன்றையும் சேர்த்துக்கொள்ள உத்தரவு வருகையில்தான் அது மாட்டுத்தோலால் செய்யப்பட்டதை அறிந்து கச்சேரியில் சேர்ந்திருந்த பிராமண போலீஸ்காரர்களுக்குப் பிரச்சனை எழுகிறது. முதலில் அக்ரஹாரத்துக்குள்ளேயே அணிந்துவரக்கூடாது என்ற 'சாஸ்திர எதிர்ப்புகள்' எழுந்து பின்னர் காலப்போக்கில் மெதுவாக அடங்கி வீட்டுக்குள் நுழையுமுன் வெளியே 'அதை' கழட்டிவைத்துவிட வேண்டும் என்று 'சாத்திய எதிர்ப்புகள்' பரிணாம வளர்ச்சியடைவதும் வரலாறுகாட்டும் சுவாரஸ்யமான பாடங்களில் ஒன்று. இன்று நாம் கேள்விகளே எழாமல் இயல்பாக ஏற்றுக்கொண்டுவிடும் சாதாரண விஷயங்களாகத்தோன்றுபவை கடந்துவந்திருக்கும்பாதையை விரிவாக அறியும்போது உண்டாகும் உவகையை உணர்ந்துதான் பார்க்கவேண்டும். மானுடவியல் என்ற வரலாற்றுப்பிரிவின் உந்துசக்தியே இதில்தான் அடங்கியிருக்கிறதோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கவியலவில்லை.
வரலாறு ஆழமான சிந்தனைக்கு வித்துக்களை - வாசிப்பின் வழியே - விதைக்கக்கூடியது. படிக்கப்படிக்கப் பரிதாபம் மேலிடுமளவுக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் கஷ்டங்களுக்குள்ளான, தர்மத்திற்குப் புறம்பாக பிறப்பினடிப்படையில் குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்தப்பட்ட - பிறன்மலைக்கள்ளர்கள், பிரமலைக்கள்ளர்கள் என்ற பெயர்களில் அழைக்கப்படும் - இக்கள்ளர்களே இன்று பிறப்பினடிப்படையில் தலித்துகளுக்குச் சமஅந்தஸ்து கொடுக்க மறுப்பதைக்காண்பது அதில் ஒன்று. இவர்களுக்கென்றில்லை, இது அனேகமாக எல்லா எண்ணிக்கைப் பெரும்பான்மை சாதிகளுக்குமே பொருந்தும். ஒருவகையில் ராகிங் செய்யப்படுவதை விரும்பாத, அதை எதிர்த்துப் புகார்களும் போராட்டங்களும் செய்யும் ஒரு முதலாமாண்டு மாணவன் சீனியராகிவிட்டபின் ராகிங் செய்வதை முதற்கடமையாகக்கொள்வதைப் போன்ற உளவியலைக் கொண்டதே இது.
நம் மண்ணில் உணவுக்கும் பொருளுக்கும் பஞ்சங்கள்வந்து உயிர்களைத்தின்றுவிட்டு ஓடியிருக்கின்றன. ஆனால் கதைகளுக்கும் கற்பனைகளுக்கும் பஞ்சம் என்றுமே வந்ததில்லை. காவல்கோட்டத்திலும் அமானுஷ்யங்கள் நிரம்பிய கதைகளுக்குப் பஞ்சமில்லை. தர்க்கரீதியான சிந்தனையும் கல்வியும் அதன் பயன்களை என்றுமே மனிதகுலத்திற்கு வழங்கிவந்துள்ளது. ஆனால் மனிதன் தர்க்கங்களுக்கு மட்டுமே கட்டுப்படும் கணிநிரல்கள் அல்லவே. யோசித்துப்பார்த்தால் தர்க்கரீதியான சிந்தனைகள் உலகியல் பயன்பாடுகளுக்கே உரித்தானவை. உணர்ச்சிகளோடு விளையாண்டு உள்ளத்தை நிரப்புபவை தர்க்கங்களைப் பற்றிக்கவலைப்படாத கதைகளும் அவற்றைச்சுமந்து வரும் எழுத்துக்களும் காட்சிகளும்தானே? காந்திகூட 'நரியும் சிங்கமும் மனிதனிடம் பேசும் ஈசாப்பின் நீதிக்கதைகள் குழந்தைகளை முட்டாள்களாக்கிவிடுவதில்லை; மாறாக அறிவாளிகளாக்குகிறது' என்று கல்வியைக் குறித்து எழுதும்போது குறிப்பிட்டிருக்கிறார். அப்படியேதான் புனைவுகளும். தர்க்கம் செயல்படும் எல்லைகளுக்கு வெளியே தன் ஆட்சியைப் பெருக்கிக்கொண்டேபோகிறது.
மதுரையில் கோட்டையை இடிப்பதற்கு முதலில் யாருமே மனதளவில் தயாராக இல்லை. அச்சுவர்களைக் காலகாலமாகக் காத்துவருபவர்கள் யாரென்று தெரிந்தும் அதைச்செய்யமுடியுமா என்ன? செல்லத்தம்மன், ஜடாமுனி, வண்டியூர் மாரியம்மன், கொத்தளத்து முனி ஆகியோர் நான்கு வாசல்களைக்காத்து வருகின்றனர். பெரியகருப்பன், சின்னகருப்பன், சங்கிலிக்கருப்பன், தேரடிக்கருப்பன், சந்தனக்கருப்பன், காலாங்கரைக்கருப்பன், நாச்சிமுத்துக்கருப்பன் ஆகிய ஏழு கருப்பன்களும் அந்திமாடன், சந்திமாடன், அக்கினிமாடன், ஆகாயமாடன், சுடலைமாடன், தளவாய்மாடன், நல்லமாடன் ஆகிய ஏழுமாடன்களும், மதுரைவீரன், லாடசன்னியாசி, சப்பாணி, சோணை, ராக்காயி, இருளாயி, பேச்சி என்று மொத்தம் இருபத்தியொருவர் சுவர்களையும் காத்துவரும்போது எப்படி முடியும்? அதுவும் இதுவரை நடந்தபோர்களில் வழிந்த செங்குருதியையே உணவாகக்கொண்டு கோட்டையைக்காத்துவரும் இவர்கள்மீது கைவைப்பதென்றால் அது நடக்கிற காரியமா? முதலில் அவர்களை பீடங்களிலிருந்து இறக்கிவிடவேண்டி செய்யப்படும் பூஜைகளும் பலிகளும்கூட மனிதமனங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்காத நிலையில் நரபலியொன்றும் கொடுக்கப்பட்டுவிட்டதாகத் திட்டமிட்டு கிளப்பிவிடப்பட்ட புரளியொன்றுதான் கடைசியில் மக்களை ஆசுவாசப்படுத்திக் காரியத்தில் இறங்கவைக்கிறது. இப்படித்தான் நம்பிக்கை ஒரு கட்டத்தில் தர்க்கத்தைத் தோற்கடித்துவிடுகிறது.
வார்த்தை, வழக்காறு, வரலாறு, வாதங்கள், நம்பிக்கை என காவல்கோட்டம் மட்டுமல்ல எந்த ஒரு புனைவு வாசிப்பும் நம்மை அழைத்துச்செல்லும் பயணம் இனிமையானது. இக்கட்டுரையில் பனிப்பாறையின் நுனி என்றுகூட சொல்லமுடியாத, சடாரென்று நினைவில்வந்த ஒருசில விஷயங்களை மட்டுமே நாவலிலிருந்து எடுத்துக்கொண்டபோதிலும்கூட கடலின் தன்மை அதன் ஒவ்வொரு துளியிலும் உண்டு என்பதுபோல் குன்றிமணிகள் குன்றுகளாக வளர்வதைப் பார்க்கமுடிகிறது. சென்றடைய வேண்டிய இடத்தைவிட செல்லும் அனுபவமே முக்கியம் என்பார்களே அது வாசிப்பைப்பொறுத்தவரை முற்றிலும் உண்மை. அடுத்த கட்டுரையில் ஓர் அபுனைவை எடுத்துக்கொண்டு அதன் வாசிப்பனுபவங்களை அலசிப்பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக