பிரான்சு நாட்டில் பாரிஸில் 'சார்லி ஹெப்டோ' பத்திரிகை அலுவலகம் மற்றும் போர்ட் டி வின்சென்ஸின் ஒரு யூத பல்பொருள் அங்காடியில் நடந்த தீவிரவாதத்தாக்குதல்கள் பற்றி எழுதி எழுதி இன்னேரம் கைகள் ஓய்ந்திருக்கக்கூடும். ஒட்டுமொத்தமாக பதினாறு உயிர்கள் உலகின் மிக முக்கிய நகரத்தின் வீதிகளில் பலியிடப்பட்டன. ஆவேசமும், சவால்களும், பரிதாபமும், அறிவுரைகளும் உலகெங்கும் இருந்து ஊடகங்களில் கொட்டிக்கிடக்கின்றன. இன்னும் சில வாரங்களுக்கு ஊடகங்களையும் நம் ஓய்வு நேரங்களையும் இந்த சம்பவங்கள் ஆக்கிரமித்திருக்கக்கூடும்.
இந்த பரபரப்பில் பல தகவல்கள் நம் கண்ணில் படாமல் போக வாய்ப்புண்டு. அதிலும் ஏறத்தாழ ஒட்டுமொத்த உலகும் சற்று வெறுப்புடனும் மிரட்சியுடனும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் உயிரை பயணம் வைத்து மக்களைக் காப்பாற்றிய சம்பவங்கள் வெளியே வருவது கடினம். அந்த சம்பவங்கள் உங்களுக்காக
அஹமது மெராபெட்(Ahmed Merabet)
சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்து உயிர்களை பலிவாங்கி விட்டு வெளியில் வந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியவர் இந்த இஸ்லாமிய காவல்துறை அதிகாரி. தன்னைப் பற்றி கவலைப்படாமல் தீவிரவாதிகளின் மிக அருகில் நின்று தாக்குதல் நடத்தியவரை சுட்டு காயப்படுத்திய அந்த கோழைகள் அஹமதின் அருகில் சென்று 'நீ எங்களை வீழ்த்திவிட முடியுமா' என்று கேட்டவாறே அவரது தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தி சுட்டுக்கொன்றனர். இது எதிர் கட்டிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு காணொளியில் நன்றாகப் பதிவாகியிருக்கிறது. ஆனால் இவரது புகைப்படத்தை பரவலாக ஊடகங்களில் பார்த்திருக்கமுடியாது. அதே நேரம் அந்த விவகாரங்களுக்குள் நாம் செல்ல வேண்டாம். இந்த சம்பவங்களை பொறுத்தவரையில் எமது நோக்கம் நாம் அறிந்த தகவல்களை இங்கு பதிவதே. மரியாதைக்குரிய தீரர் அஹமது மெராபெட்டுக்கு குறிஞ்சியின் அஞ்சலிகள்.
லஸ்ஸானா பத்திலி (Lassana Bathily)
24 வயதான இந்த முஸ்லிம் இளைஞன் பாரிஸில் ஒரு யூத பல்பொருள் அங்காடியில் தீவிரவாதிகள் புகுந்து அங்கிருந்த பொதுமக்களை பயணக்கைதிகளாக பிடித்து சுடத்துவங்கியபோது சுமார் ஆறு பேரை அங்கிருந்து காப்பாற்றி தங்கள் கடையில் இருந்த உறைபெட்டியில்(ஃப்ரீஸர்) மறைத்துவைத்து சரக்கு லிஃப்ட் வழியாக காவல்துறை அதிகாரிகளை அடைந்து தீவிரவாதிகள் இருக்கும் இடம் பற்றி தகவல் கூறியவர். ஏதாவது ஒரு கணத்தில் அவர்களிடம் மாட்டியிருந்தால் கண்டிப்பாக பிணம்தான். ஆனால் அதையும் மீறி தன் உயிரை பயணம் வைத்து அப்பாவிகள் ஆறு பேரை காப்பாற்றிய இவருக்கு உள்ளூரில் வாழ்த்துக்கள் குவிகிறது. ஆனால் இந்திய ஊடகம் எதிலும் இவர் முகத்தைப் பார்க்கவில்லை. இவரது செயலால் பல்லாயிரக்கணக்கான் மக்கள் பெருமிதம் கொள்கின்றனர். இவருக்கு குறிஞ்சி தன் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
அடிப்படைவாதிகளோ, தீவிரவாதிகளோ எல்லா மதத்திலும் உள்ளனர். மத வேறுபாடு பார்க்காமல் கெட்டதை விடுத்து நல்லதைப் பரப்புவோம். அவ்வளவுதான்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக