கொடுங்கோல் ஆட்சி, நவீன வசதிகளில்லாத மக்கள், பஞ்சத்தில் வாடும் நாட்டின் பெரும்பகுதி இவ்வாறுதான் வட கொரியா உலக மக்களுக்கு காண்பிக்கப்படுகிறது. அப்படியெல்லாம் இல்லை என்று காண்பிப்பதற்கு அவ்வரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான தொடர்பு சாதனங்கள் மக்கள் மகிழ்ச்சியாக பங்கேற்கும் நிகழ்ச்சிகளை/கொண்டாட்டங்களை அவ்வப்போது பிரசுரிக்கும். வெளி உலகத்திற்கு பெரும்பாலும் கதவுகளை மூடியே வைத்திருக்கும் இந்த மர்மதேசம் சில காலமாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சுற்றிப்பார்க்க அனுமதித்து வருகிறது. வட கொரியாவின் ஆட்சியாளர் 'கிம் ஜங் அன்'னை நகைச்சுவையாளராக சித்தரிப்பதே உலக ஊடகங்களுக்கு வழக்கம். இவரது தாத்தா கிம் 2ம் சங்-கில் ஆரம்பித்து வட கொரியாவை ஆளும் மூன்றாம் வாரிசு இவர். தாத்தாவும், அப்பாவும் மக்களை கட்டுப்படுத்தி ஆண்ட சர்வாதிகாரிகள் என்றால் இவர் சர்வாதிகாரியாகவும், சமயங்களில் இருபத்தி மூன்றாம் புலிகேசியாகவும் கலவையாகக் காட்சியளிக்கக்கூடியவர். ஆமாம்,இவரால் அனுமதிக்கப்பட்ட ஒரு சில விதங்களிலேயே அனைவரும் முடிவெட்டிக்கொள்ளவேண்டும் என்பதிலிருந்து தனது கிம் பெயரை குடிமக்கள் யாரும் வைத்திருக்கக்கூடாது என்பது வரை அழிச்சாட்டியம் செய்து வேடிக்கை காட்டினாலும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவருக்கு மரண தண்டனை கொடுத்து பீதியைக் கிளப்பக்கூடியவர். இந்த தண்டனைக்குள்ளானவர்களில் அவரது நெருங்கிய உறவினர்களும் அடங்குவர். இது மட்டுமல்ல, இவருக்கு பொழுது போகாதபோது உலக நாடுகளுக்கு முக்கியமாக தென் கொரியாவிற்கும், அமெரிக்காவிற்கும் அணு ஆயுத தாக்குதல் மிரட்டல் விடுப்பார். வடகொரியாவில் எண்ணெய் இருக்கிறதா என்று தெரியாததாலும் சீனா, ரஷ்யா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளின் ஆதரவு இருப்பதாலும் அமெரிக்கா இதுவரை இந்த நாட்டு மக்களுக்கு 'சனநாயகத்தை' வழங்கவில்லை.
நாம் சொல்ல வந்த விஷயமே வேறு. ஆனால் மேற்சொன்ன விவரங்களை அறிந்துகொண்டால்தான் முழுமையாக செய்தி புரியும்.
இவ்வாறு மேற்கத்திய ஊடகங்களுக்கு பொழுதுபோக்காக விளங்கிய கிம்மை நக்கலடித்து படம் எடுத்ததுதான் வில்லங்கமாகிவிட்டது. ஈவான் கோல்ட்பெர்க், சேத் ரோஜென் ஆகிய இயக்குனர்கள் கிம்மை கண்டபடி கிண்டலடித்து 'தி இண்டர்வியூ' என்கிற படம் எடுக்க, கிம் 'கம்'மென்று உட்காராமல் தன் வில்லன் முகத்தைக் காட்ட, பணம் போட்டு படம் எடுத்த சோனி நிறுவனம்தான் பாவம் சூனியமாகிவிட்டது.
'தி இண்டர்வியூ' படத்தின் முன்னோட்டம் வந்ததுமே தன் எதிர்ப்பை பலமாகக்காட்டிய வட கொரியா படத்தைத் திரையிடக்கூடாது என பிடிவாதமாக சொன்னது. படத்துக்கோ உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. எனவே கிம்மின் எதிர்ப்பை அலட்சியப்படுத்தி விட்டு கிருஸ்துமஸ் அன்று படத்தை விட்டு பணம் அள்ள நினைத்த சோனிக்கு கிம் வைத்தார் ஆப்பு. கிருஸ்துமஸுக்கு சரியாக ஒரு மாதம் முன்பு நவம்பர் 24 சோனி நிறுவனத்தின் அதி பாதுகாப்பான கணிணிகளில் இருந்து மிக முக்கியமான தகவல்களும், கோப்புகளும், மின்னஞ்சல்களும் களவாடப்பட்டன. இது சோனி நிறுவனத்திற்கே சில நாட்கள் கழித்துத்தான் தெரிய வந்திருக்கிறது.
மிக முக்கியமான கோப்புக்கள், அந்தரங்கமான அலுவலக மின்னஞ்சல்கள், நூற்றுக்கணக்கான ஊழியர்களின் தனிநபர் விவரங்கள் போன்ற சென்சிட்டிவ் விஷயங்கள் மட்டுமல்ல வெளியிடத் தயாராக இருந்த 2 முழுத் திரைப்படங்களும் காலி. வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த Brad Pitt நடித்த Fury படத்தின் டிவிடி பதிப்பும் களவாடப்பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக முக்கியமான மின்னஞ்சல்கள் கசிய விடப்பட்டன. அதில் சோனியின் முக்கிய தலைமை அதிகாரிகள் ஹாலிவுட்டின் பிரபல நடிகர்களைப் பற்றி அடித்த நாராசமான கமெண்ட்டுகள், ஆண்-பெண் நடிகர்களுக்கிடையே காணப்பட்ட சம்பள பேதங்கள் எல்லாம் வெளிவர அது தனி தலைவலியானது சோனிக்கு. இப்படி களவாடியவர்கள் தங்களை 'அமைதியின் காப்பாளர்கள்(Guardians of peace)' என்று அழைத்துக்கொண்டனர். ஆனால் இந்தப் பெயருக்கும் அவர்கள் மிரட்டலுக்கும் எந்த தொடர்புமில்லை. ஆம், 'தி இண்டர்வியூ' படத்தைத் திரையிடும் திரையரங்கங்களை தகர்ப்போம் என்பதே அவர்கள் மிரட்டல். மேலும் அவர்கள் திருடிய தகவல்களில் மிக மிக முக்கியமானவற்றை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுவோம் என்றும் மிரட்டினர். இதற்கெல்லாம் அப்பாற்பட்டு தனது கோப்புக்களை, வெளியிடாத திரைப்படங்களை இழந்தவகையில் ஒட்டுமொத்தமாக சோனிக்கு ஏறத்தாழ நூறு மில்லியன் டாலர்கள் நஷ்டம்.
சந்தேகமேயில்லாமல் இதற்கெல்லாம் காரணகர்த்தா யாரென்று தெரிந்துவிட்டது. வெகுண்டெழுந்த அமெரிக்கா குற்றவாளியாக வடகொரியாவை குற்றம் சாட்ட எங்களுக்கு அதில் தொடர்பேயில்லை என்று கைவிரித்து விட்டார் கிம். இதில் நினைவில் கொள்ளவேண்டிய விஷயம் வடகொரியாவிற்கு இணைய வசதியை அளித்து பராமரிப்பது சீனா என்பதும் ஏற்கனவே உலக நாடுகள் பலவற்றின் பாதுகாப்பு விவகாரங்களை சீனா 'ஹேக்கிங்' மூலம் திருடப்பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது என்பதும். பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டு தனது பெயர் சேதமாவதைத் தடுக்க வேறுவழியில்லாமல் 'தி இண்டர்வியூ' படத்தை வெளியிடவில்லை என்று சொல்லிவிட்டது சோனி. இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு. சமூக வலைத்தளங்களில் ஆரம்பித்து ஒபாமா வரை சோனியின் முடிவை அமெரிக்கர்கள் விமர்சித்தனர். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று நொந்தே போனது சோனி. படம் வெளிவராது என்று கிட்டதட்ட அனைவரும் முடிவு செய்திருந்த நிலையில் உள்நாட்டில் இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள limited release என்ற பெயரில் மிகச்சில திரையரங்கங்களிலும், பணம் கட்டிப் பார்க்கும் சில இணையதளங்களிலும் படத்தை வெளியிட்டது சோனி. அடித்து பிடித்து படம் எல்லோரும் பார்த்தாலும் review சிறப்பாக இல்லை. படத்தில் கிம் கதாபாத்திரம் சகட்டுமேனிக்கு கிண்டலடிக்கப்பட்டு இருப்பது மட்டும் உறுதியானது.
கதையில் திருப்பம் வந்தது கடைசியில்தான். திடீரென டிசம்பர் கடைசி வாரத்தில் வடகொரியாவில் மிக சொற்ப எண்ணிக்கையில் இருந்த இணைய இணைப்புகளும் வேலை செய்யாமல் போயின. ஒரு வாரத்தில் சரியானாலும் இன்னமும் சீரான இணைப்பு கிடைக்காமல் இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. ஒரு மிகப்பெரிய வல்லரசு நாட்டின் பிரம்மாண்டமான படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் செயலே இது என பரவலாகக் கருதப்படுகிறது. வடகொரியா கீழ்த்தரமான வார்த்தைகளால் ஒபாமாவை வசைபாடியது. ஆனால், முன்பு வடகொரியா சொன்னதுபோலவே எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்து விட்டது அமெரிக்கா.
எது எப்படியானாலும் நஷ்டத்தையும் அனுபவித்து தனது கோப்புகளையும் இழந்து நிற்கிறது சோனி. திருடப்பட்ட படங்கள் இணையத்தில் ஜோராக தரவிறக்கப்படுகின்றன. களவாடப்பட்ட மின்னஞ்சல்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பைக் கூட்டுகின்றன. பாவம்தான் சோ'நீ'.Somehow Kim had the last laugh by controlling the movie release. இப்போ சொல்லுங்க அவர் காமெடியனா? வில்லனா?
டிஸ்கி 1: எந்தப் பெரிய நிறுவனமானாலும் கணிணிகளில் ஏற்றப்பட்டுள்ள தகவல் பெட்டகங்களையும் இணையப்பாதுகாப்பையும் பலப்படுத்திக்கொண்டே இருப்பது அவசியம். பல நிறுவனங்கள் இப்போதே மில்லியன் கணக்கில் அதற்காக செலவு செய்துகொண்டிருக்கின்றன.
டிஸ்கி 2: இணையத்தாக்குதல், தீவிரவாதத்தாக்குதல் என்று படைப்புச்சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றது. வருங்காலத்தில் இது எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்பதுதான் எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி. இலட்சக்கணக்கில் யூதர்களைக் கொன்று குவித்தவர் ஹிட்லர். அவரை கடுமையாகக் கேலி செய்த சார்லி சாப்ளினின் 'தி கிரேட் டிக்டேட்டர்' படத்தை ஹிட்லர் ரசித்துப்பார்த்தார் என்று வரலாறு கூறுகிறது. நிகழ்காலத்தில் அந்த சகிப்புத்தன்மை காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக