சனி, 10 ஜனவரி, 2015

மீண்டெழுவோம்

 இலங்கை தேர்தல் செய்தி வெளிவந்துகொண்டிருந்தபொழுது தமிழகத்தில் அரசியல்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் நம்மை கவலையுறச்செய்தது. எது நாம் நடக்கவேண்டாம் என்று நினைத்தோமோ அதுவே நடந்தேறியது. தங்களின் பிழைப்புவாதத்திற்காக ஈழத்தமிழர்களின் பிழைப்பினில் மண்ணள்ளிப்போடும் காரியமாகவே அது நடந்தது. 

இதில் விசித்திரம் என்னவென்றால் இதில் பாதிபேர் நேற்று வரை ஈழத்தமிழர்கள் இந்த தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்று கூச்சலிட்டவர்கள்.  இவர்களது வெற்றுக்கூச்சல் அங்குள்ள சிங்கள நண்பர்களினால் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டால் பாதிப்பு நமது தொப்புள்கொடி சொந்தங்களுக்கே... மேலும் நமக்கு செய்தி வழங்கியதில் ஒரு சிங்களவரும் அடக்கமே, யாரோ சில தனிநபர் அல்லது அமைப்புகள் செய்யும் தவறுகளுக்கு மொத்த இனத்தினையும் பழிப்பது தவறே.

என்ன நடந்தது:

கடந்த இரு வருடங்களாக இலங்கையிலிருந்த நமது நண்பர்களின் மூலமாக நமக்கு வந்த செய்திகள், இலங்கையை ஆள்பவர்களுக்கு எதிரான மனநிலை பெரிதாகி வருகிறது என்பதுவே. போரின் முடிவுக்கு பிறகு ஈழத்திலிருந்து கிடைத்த பொருட்குவியல் ஆள்பவர்களை திகைக்கசெய்தது.  என்ன செய்யவேண்டும், என்ன செய்யப்போகிறோம் என்பது அவர்களுக்கு புரியாத புதிராக இருந்தது. அந்த நிலையில் போரின் போது துரோகிகளானவர்கள் அவர்களுக்கு அந்த பொருட்குவியலை என்ன வழியில் முதலீடு செய்யலாம் என்று வழிநடத்தினர், அதன் மூலம் தமது உயிரினை எச்சங்களாக்கினர். 

அவர்களை தவிர வேறு யாரும் தொழில் செய்ய முடியாத நிலையும், எல்லா பதவிகளிலும் அவரது குடும்பத்தினரே கோலேச்சியதும், ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும், முறையற்ற ஆட்சியும், மதத்தின் பெயரால் நடைபெற்ற வன்முறைகளும் ஆள்பவர்களுக்கு எதிரான மனநிலையை இலங்கையில் சிங்கள மக்களின் மத்தியிலும் தோற்றுவித்தது.

இந்திய ஊடகங்கள் அனைத்தும் ராஜபக்சேவின் தேர்தல் வெற்றியை ஏற்கனவே உறுதி செய்திருந்த நிலையில், நமது நண்பர்கள் திட்டவட்டமான உறுதியை நமக்கு அளித்திருந்தனர். அது ராஜபக்சேவின் தோல்வி நிச்சயமானதுதான், அதையும் மீறி அவரது வெற்றி என்பது சொச்சவாக்குகளிலேயே இருக்கும், அதுவும் நம்மவர்களின் ஒற்றுமையின்மையினாலே விளைந்ததாக இருக்கும். இலங்கையின் தேர்தல் அவர்களது உள்நாட்டு அரசியல் அதில் வெளியில் இருந்து நாம் விடும் செய்திகள் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை நொறுக்கிவிடும் என்ற நிலையினை நாம் ஏற்கனவே எடுத்திருந்தோம், அதனை குறிஞ்சியின் முகப்பக்கத்தில் வெளியிட்டும் இருந்தோம். அதனால் இந்த செய்தியினை முன்கூட்டி வெளியிட வேண்டாம் என்றிருந்தோம். அதாவது ராஜபக்சேவின் தோல்வியினை.

இந்த கட்டுரையானது தமது பெயரினை வெளியிட விரும்பாத அந்த நண்பர்களுக்கு உண்மையினை உரைத்ததற்காககவும், உழைத்ததற்காகவும் நாம் செய்யும் சிறு கைமாறு எனக்கருதுகின்றோம்.

அச்சம் தேவையில்லை...

இன்று வெற்றி பெற்ற புதியவரும் வெளியாள் அல்ல, நேற்று வரை ஆண்டவரோடு தோள்கொடுத்தவரே. அவரிடமிருந்து ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது வந்த வார்த்தைகள் இதுவே, "சர்வதேச நீதிமன்றங்களை இலங்கையின் இறையாண்மையினை கேள்வி எழுப்ப விடமாட்டேன்"  என்பதும் கவனிக்கதக்கது. எனவே இவரிடமிருந்து நாம் பெரிதும் எதிர்பார்க்க ஏதுமில்லை இருந்தபொழுதிலும் நாம் கவலைப்படத்தேவையில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தெளிவாகவே தங்களது தீர்ப்பினை வென்றவருக்கு ஆதரவாக வழங்கியுள்ளது. இவரும் ஒருதலைப்பட்சமாக நடப்பவரானால் வரும் தேர்தலில் எம் சகோதரர்கள் வெற்றிக் கதையை மீண்டெழுதுவர். இந்தியாவின் மைய அரசாங்கம் இந்த தேர்தலின் வெற்றியிலுள்ள செய்தியை தெளிவாக புரிந்துகொள்ள முயலுவர் என்றே நம்புகின்றேன். இல்லையெனில் மலையகதேசத்தின் வல்லூறு அதிகாரிகளின் புரட்டுத்தனத்திற்கு பலியாவர் எனில் வரும் காலங்களில் காலைச்சுற்றிய பாம்பாகவே இலங்கையின் வெளியுறவு கொள்கை இந்திய அரசிற்கு எதிராக மாறும்.

இந்திராகாந்தி அம்மையார் மற்றும் புரட்சித்தலைவர் அவர்களின் மறைவிற்கு பிறகு மலையக அதிகாரிகளின் காலமானது, அவர்களது கூற்று யாதெனில் தனித்தமிழ்நாடு என்பது இந்தியாவிலுள்ள தமிழர்களையும் பிரித்துஎடுத்து சென்றுவிடும் எனவும், அது இந்தியாவின் இறையாண்மையினை கேள்விக்குள்ளாக்கும் என்பதாகவே இருந்தது. ஆனால் போருக்கு பிறகு இலங்கையிலிருந்து வரும் செய்திகள் நமக்கு உவப்பானதல்ல என்பது உளவு அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்.

யாம் பதிவு செய்யவிரும்புவது, தமிழ் பேசும் இந்தியர்களூள் பெரும்பான்மையானோர் இந்தியாவின் அங்கமாகவே இருக்க விழைகின்றனர் என்பதாகும். அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிழைப்புவாதிகள் வேண்டுமாயின் "பாரதத்தின் ஒற்றுமைக்கு எதிராக மேடையில் மட்டும் முழங்கை சட்டையினை மடித்து மூஷ்டியை மடக்கலாமே ஒழிய, களத்தினுள் அது நடைபெறவே இயலாது". நாங்கள் தமிழர்கள் இளம் இளைஞர்கள் "பாரதத்தின் வேர்களூள் வரலாற்றினுல்" எங்களின் பங்களிப்பின் படைப்புகளை எடுத்துக்காட்டவே பயணம் செய்கின்றோம். அதன் சாரம்சமே இந்தியாவின் கடந்த மத்தியதேர்தலில் அடிப்படையே இல்லாத தேசியக்கட்சியின் கூட்டணி 17% க்கும் அதிகமான வாக்குகளை வாங்கியது ஆகும்.

என்ன நடக்கவேண்டும்
தமிழர்களுக்கு என தனித்தேசம் மலருமேயானால் எமக்கு அதில் மகிழ்ச்சியே, ஆனால் நடைமுறையில் இன்று அது சாத்தியமற்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும், முன்னுரை எழுதிய எம் தலைவன் முடிவுரையை முடிக்காமால் போனதால் ஏற்பட்ட பின்னடைவு அது.

கொழும்பிலும் கிழக்கிலும் எண்ணற்ற தமிழர்கள் உள்ளனர். மதத்தின் அடிப்படையில் நாம் பிரிக்கப்படுவதை விரும்பவில்லை. அவர்களின் வாழ்வாதாரமும் இதில் அடங்கியுள்ளது.

அங்கு வாழ்வாதாரத்தை தொலைத்துக்கொண்டு நிற்கும் எம் சகோதர, சகோதரிகளுக்கு முதலில் உணவு, உடை, உறைவிட வசதியினை ஏற்படுத்தி தருவது பற்றியே செயற்பாடு இருக்கவேண்டும்.

நாம் இன்றைய சூழ்நிலையில் செய்யவேண்டியது யாதெனில் ஈழத்திலுள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தினை எழுச்சியுறச்செய்வோம் பொருளியிலிலும், கல்வியிலும். 

வியாபாரம் மூலமே இனி உலகை வென்றெடுக்க முடியும், ஆதலினால் மீண்டும் 

களம் புகுவோம் 
பல களம் காண்போம் 
புது தளம் அமைப்போம்
கூலம் தானே செய்திடுவோம்
வையகம்தானே வென்றிடுவோம்
தளவாடம் கொண்டல்ல இத்தரணியை
எமக்கானதாக்கிடுவோம் பண்டங்கள்கொண்டே





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக