வியாழன், 8 ஜனவரி, 2015

நான், என் காதல், என் காதலிகள் - 1

  முன்குறிப்பு:
                   மன்னிக்கவும் நண்பர்களே, இது காதல் கதை அல்ல. புத்தகங்களை, வாசிப்பை காதலிக்கும் நண்பர் சிவானந்தத்தின் தொடர் தலைப்பு. வாசிப்பின் இன்பங்களையும், புரிதல்களையும், அவர் படித்த புத்தகங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்ள சம்மதித்தற்கு நன்றி கூறுகிறோம். அடுத்த பத்தியில் இருந்து அவர் எழுத்தில்... 

வாசிப்பது ஏன்?

  இங்கு வாசிப்பு என்று குறிப்பிடப்படுவது leisure reading என்று சொல்லப்படும் புத்துணர் வாசிப்பு. இதைத்தமிழில் ஓய்வுநேர வாசிப்பு என்று மொழியாக்கம் செய்வது அவ்வளவு சரியாகப்படவில்லை. ஏனென்றால் இது ஓய்வு நேரத்தில் மட்டும் போனால் போகட்டும் என்று வாசிப்பதல்ல. வாசிக்கும்போது சஞ்சரிக்கக்கிடைக்கும் வேறொரு உலகத்துக்காகவும், வாசித்துமுடிந்ததும் கிடைக்கும் மனவிரிவுக்காகவும், அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது உண்டாகும் நிறைவுக்காகவும் வாசிப்பது. Leisure activities என்பது recreational or refreshment activities என்று புரிந்துகொள்ளப்படுகிறது. அதை மனதிற்கொண்டால் புத்துணர் வாசிப்பு என்ற பெயர் ஓரளவு பொருத்தமாக இருக்கும் என்று படுகிறது. பொதுவாக பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி, சம்பாதிப்பதற்காகச் செய்யும் வேலை ஆகியவற்றிற்காக வாசிப்பதைத்தவிர்த்த மற்ற வாசிப்புகளே இதில் அடக்கம். புனைவும் அபுனைவும் இதன் பெரும்பிரிவுகள். 

'படிப்பு வாசனை இல்லாதவன்' என்ற சொற்றொடர் படிப்பை முகர்ந்துகூட பார்க்காதவன் அல்லது எழுதப்படிக்கத்தெரியாதவன் என்று தற்காலத்தில் புரிந்துகொள்ளப்படுகிறது. அதன் முழுமையான பொருள் படிப்பும் வாசனையும் இல்லாதவன் என்று இருந்திருக்கலாம். அப்படிக்கொண்டால் இங்கே படிப்பு என்பது அடிப்படைக்கல்வி மற்றும் பொருளீட்டுவதற்கு வழிசெய்யும் கல்வியையும், வாசனை என்பது மனவிரிவுக்கான மேல்வாசிப்பையும் குறிக்கும். ஒருகாலத்தில் அதாவது இச்சொற்றொடர் உருவான காலத்தில் இவ்வாசனை என்பது நீதிபோதனை, பக்தி, ஆன்மிக விஷயங்களைக்குறித்து வாசிப்பதைக்குறித்திருக்கலாம். காலப்போக்கில் இதன் எல்லைகள் வெகுவாக விரிவடைந்துள்ளன. 

இசைக்கருவிகளையும் வாசிப்பதாகச் சொல்வது புழக்கத்திலிருக்கிறது.  மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரைக் கேட்டால் ஒருவேளை இவ்விரண்டுக்கும் ஒரே பெயர் வந்ததற்கான மொழியியற் காரணங்கள்  ஏதும் உண்டா என்று ஆராய்ந்து கண்டுபிடிக்கமுடியும். Coffee என்பதற்குத் தமிழ்ச் சொல் உருவாக்கத்துணிகையில் காபிக்கொட்டை கால்நடைகளின் 'குளம்பு'போல் தோற்றத்தில் இருந்ததால் பிரேசிலியன் மொழியில் அதைச்சுட்டும் விதத்தில் காபிவிதைக்கு பெயர் இடப்பட்டதின் வரலாற்றைக்கண்டறிந்து தமிழில் குளம்பி என்று வைக்கலாம் என்று முடிவுசெய்தாராம் அவர். இதை நாஞ்சில் நாடன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இக்கட்டுரை வாத்தியவாசிப்பைக் குறித்து ஏதும் பேசவில்லை என்பதுமட்டும் இப்போதைக்குப்போதும்.

நிகற்படமூலம் : திஹிந்து


வாசிப்பது ஏன்?

1. மலையேறி ஜார்ஜ் மல்லோரியை ஏன் மலையேறுகிறீர்கள்? என்று கேட்டபோது அவர் சொன்ன புகழ்பெற்ற பதில் "ஏனென்றால் அது அங்கே இருக்கிறது (Because it is there)" என்பது. 

2. எழுத்தாளர் தி.ஜானகிராமன் எங்கோ இப்படி எழுதியிருந்ததார்; "ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஏன் காதலிக்கிறீர்கள் என்று கேட்பதும் இதுவும் ஒன்றுதான்". 

3. ஓஷோவிடம் ஏன் இப்படி  பேசிக்கொண்டேயிருக்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டதற்கு "யாருமே செல்லவியலாத காட்டில் அழகான மலர் பூத்துக்குலுங்கிக் கொண்டிருக்கிறது. நீ ஏன் இப்படி இருக்கிறாய்? என்று அதனிடம் கேளுங்கள்" என்றார். 

இப்பட்டியலை மேலும் நீட்டிக்கொண்டும் போகலாம். காலம் காலமாக இந்தக் கேள்விக்கு விதவிதமான பதில்கள் வெவ்வேறு ஆட்களால் - குறிப்பாக தாங்கள் செய்வதில் உயரங்களைத் தொட்டவர்களிடமிருந்து - சொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவைகளின் பொருள் என்னவோ ஒன்றுதான்; அதை அதன் சுவைக்காக மட்டுமே செய்கிறேனேயன்றி வேறு சிறப்புக்காரணங்கள் ஏதுமில்லை என்பதுதான். ஒருக்கால் செய்வதின் இன்பத்துக்காக மட்டுமே செய்யப்பட்ட ஒரு வேலையால் மிகுந்த புகழோ, செல்வமோ வந்திருக்குமானால் அவை வெறும் பக்கவிளைவுகளே. ஆனால் கண்ணுக்கும் வெளிஉலகுக்கும் புலப்படக்கூடியது அப்பக்கவிளைவுகளே என்பதால் அதை மனதில்வைத்தே அக்கேள்விகள் கேட்கப்படுகின்றன. 

இருப்பினும் அனுபவ பூர்வமாக சில நுட்பமான நன்மைகளை உணரமுடிகிறது. புனைவுகளை வாசிப்பதால் நேரத்தைக் கொல்வதைத்தவிர வேறு என்ன பெரிதாக நன்மை இருக்கக்கூடும் என்று பொதுவாக எவரும் எண்ணுவது உண்டு. ஒரு நல்ல புனைவாசிரியன் அதற்குமேலும் வாசகனுக்கு சிலவற்றை அளிக்கமுடியும் என்பதற்கு இரண்டு உதாரணங்கள் இங்கே;

இந்தக்கதை நடப்பது ஐம்பதுகளில். கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பெரும்பகுதியை தம்பியின் கல்விக்கு செலவழித்துவிடும் ஓர் அண்ணன். அவருக்கு மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள். தம்பியும் அவர்களுடன்தான் வசிக்கிறார். அண்ணன் தனக்காகப் படும் இன்னல்களுக்கு எப்படிக்கைமாறு செய்யமுடியும் என்பதே தம்பியின் ஆகப்பெரிய கவலை. ஒரு நிலையில் அண்ணன் தன் ஒளிப்படத் தொழிலுக்காகப்பயன்படுத்திவந்த கருவிகளையே தம்பியின் கல்விக்காக விற்கும் நிலை வந்தும் தன் வாழ்வாதாரத்தையே ஆபத்தில் இறக்கவும் தயங்கவில்லை. 

தம்பிக்கு படிப்புமுடிந்து ஒரு வேலை கிடைக்கிறது. தன் வருமானத்தில் பெரும்பகுதியை அண்ணன் குடும்பத்துக்கு செலவழித்து செஞ்சோற்றுக்கடன் தீர்த்துவருகிறார். ஆனால் அண்ணனுக்கு தம்பி திருமணம்செய்துகொண்டு வாழவேண்டும் என்பது ஆசை, கவலை. தம்பிக்கோ தன் வாழ்நாள்முழுதும் அண்ணனுக்காக அவன் குடும்பத்துக்காகவே உழைத்துத்தீர்த்துவிடவேண்டுமென்பது சங்கல்பம். அண்ணன் என்னென்னவோ சொல்லி தம்பியின் மனதை மாற்றப்பார்க்கிறார். இந்த உலகம் தன் குடும்பத்துக்காக தம்பியின் வாழ்க்கையை அழித்ததாக தன்னை அவதூறு பேசும், அதற்காகவாவது திருமணம் செய்துகொள் என்றெல்லாம் கண்ணீர்விட்டு கெஞ்சிக்கேட்கிறார். தம்பி உறுதியாக மறுத்துவிடுகிறார்.

காலம் இப்படிக் கழிந்துகொண்டிருக்கையில் ஓர் அசந்தர்ப்பமான சூழ்நிலையில்  வென்றுவிட்டோம் என்று நினைத்து இறுமாப்புக்கொண்டிருந்த அந்த மிருகவெறி ஒரு க்ஷணம் ஆட்கொள்ள, எலும்பும் தோலுமாக நடைப்பிணமாக வாழ்ந்துகொண்டிருக்கும் தன் அண்ணியைத் தம்பி கட்டிப்பிடித்துவிடுகிறார். அடுத்தகணத்தில் தான் எவ்வளவுபெரிய குற்றத்தை, கீழ்மையைச்செய்து விட்டோம் என்றுணர்ந்து உடல்பதற கூனிக்குறுகியும்விடுகிறார். அண்ணன் இதைப்பார்த்துவிட நேரிடுகிறது. அடுத்து என்ன நடந்திருக்கும்? இங்குதான் அந்தப்புனைவின் ரசவாதம் உள்ளது. புனைவாசிரியன் வாசகனுக்கு சிந்தனையின் புதிய கோணத்தைக் கொடுக்கிறான். அண்ணன் கண்ணீரும், கோபமும், ஆற்றாமையும் கலந்த சொற்களில் பேசுகிறான்; "நான் உனக்காகச்செய்ததாகவும் நீ எனக்காகச்செய்ததாகவும் நாம் நினைத்துக்கொண்டிருக்கும் தியாகங்கள் நம்மை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது பார்த்தாயா? உன் தற்கொலையை இனியும் என்னால் அனுமதிக்கமுடியாது. இங்கிருக்காதே போய்விடு. இந்த அற்பக்காரணத்தை சாக்கிட்டாவது உன்னை இங்கிருந்து வெளியேற்றிவிடுகிறேன்", என்று இன்னும் என்னென்னமோ பேசுகிறான். ஆனால் தம்பிக்கு மனம் சமாதானமடையவில்லை என்பதை அறிந்து கடைசியாக இப்படிச்சொல்கிறான்; "இது உலகப்பிரச்னை. உலகமே திரண்டுதான் இதைத்தீர்க்கவேண்டும். நீயும் நானும் இரண்டு தனிமனிதர்கள். நாம் இந்தப்பிரச்னையைத் தீர்க்கமுயல்வது முட்டாள்தனம். பேசாமல் போய்விடு".

குற்றத்தையும் தண்டனையையும் குறித்த பார்வையையே வாசித்தவர்களிடம் மாற்றவல்ல இக்கதையின் தலைப்பு 'இரு சகோதரர்கள்'. நிஜவாழ்வில் தமிழ்த்திரைப்படங்களில் வருவதுபோல் சுத்தமான அக்மார்க் நல்லவர்களோ கெட்டவர்களோ கிடையாது. வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுமளவிற்கு நல்ல குணங்களோடு, செயல்பாடுகளோடு வாழும் மனிதர்கள் ஒரு நொடி உந்துதலில் பாதாளத்தில் வீழ்ந்துவிடுகிறார்கள். ஒருகணம் கோபத்தின் உச்சத்தில் ஓர் உயிரை எடுத்துவிட்டு குற்ற உணர்ச்சியிலேயே தன்னை அழித்துக்கொள்ளும் பலரின் சோகக்கதைகளைப் படித்திருக்கலாம். அந்த ஒரு நொடி யாருக்கு எப்போது வரும் என்பது வந்தால்தான் தெரியும். ஆனால் அந்த ஒரு நொடியில் நிதானம் கொள்வதற்கு வாசிப்பு உதவலாம். அது ஒரு வாழ்க்கையையே மாற்றிவிடக் கூடியது. வாசிப்பதால் உண்டாகும் மனவிரிவு என்று முன்னர் குறிப்பிட்டது இதைத்தான். தோனி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் இதை நுணுக்கமாகக் காட்டியிருந்தார். தன் மகன் வாழ்வில் முன்னேற எத்தனையோ பாடுபடும் ஒரு பாசமுள்ள தந்தை ஒரு நொடி கோபத்தின் உச்சத்தில் அந்த மகனைப்பிடித்துத்தள்ள அவன் தலையில் அடிபட்டு உயிருக்குப் போராடவேண்டியதிருக்கும். அந்த ஒரு நொடியைக்கையாள வாசிப்பு ஒருவரை நிதானப்படுத்தலாம். முன்னே குறிப்பிட்டதுபோல் இது வெறும் ஊகமல்ல; அனுபவம்.

இரண்டாவது உதாரணம் பஞ்சத்தின்போது நடக்கும் இடப்பெயர்வுகளை அடிப்படையாகக்கொண்ட ஒரு கதை. இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகத்தின் பலபகுதிகளிலும் குறிப்பாக இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் அதிக எண்ணிக்கையில் வாழ்வதற்கு பஞ்சங்கள் முக்கியக்காரணம். இக்கதை பேசுவது வேற்றுநாட்டுக்குப் புலம்பெயர்வதை அல்ல எனினும் வேற்றூருக்கு பஞ்சகாலத்தில் பிழைப்புதேடிச்செல்லும் ஒரு தாயையும் மகளையும் பற்றியது. மேலோட்டமாகப்பார்த்தால் பிழைக்கவழியில்லை எனவே வேறு ஏதும் வழிபிறக்குமா என்ற நப்பாசையில் வேறு இடத்துக்குப்போகிறார்கள் என்பது காரணம்போலத் தோன்றும். ஆனால் ஒரு நல்ல புனைவெழுத்தாளன் தன் நுண்ணிய பார்வையால் வேறொரு மறைந்திருக்கும் உண்மையை வெளிக்கொணர்ந்து வாசகன்முன் வைக்கிறான்.

தாயும் மகளும் நடந்து செல்லும் திசைக்கு எதிர்திசையில் வேறு ஊர்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்! அதாவது இவர்கள் எந்த ஊரிலிருந்து வாழவழியில்லை என்று கிளம்பிவிட்டார்களோ அதே ஊருக்கு வேற்றூர் மக்கள் வருகிறார்கள். எங்கும் காட்சி இதுதான். அவர்களுக்குமட்டும் எப்படி இங்கே பிழைப்பு கிடைக்கும்? மக்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? இல்லை. ஏதோ அக்கரைக்கு இக்கரைப்பச்சை மாதிரியான விஷயம் என்று நினைக்கலாம். அதுவுமல்ல. உண்மை வேறு. தாங்கள் கௌரவமாக வாழ்ந்த ஊரில், தெரிந்த மனிதர்களின்முன் உணவின்றி நிற்கும் நிலை மனிதனுக்குப் பசியைவிடக்கொடுமையானது என்பதே அது!

சாலையில் இடறிக் கீழே விழுந்தால் முட்டியில் ரத்தம் கசியும் சிராய்ப்பைவிட அதை யாரும் பார்த்துவிட்டார்களா என்பதுதானே நம் முதல் கவலை? அப்படி யாரும் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டால் அந்த சிராய்ப்பு காயத்தின் வலியைவிட அந்த சிரிப்பின் அவமான வலிதானே ரொம்பவலிக்கிறது? அந்த அவமானத்தின் உச்சகட்டமே தன்னால் தனக்கு உணவிட்டுக்கொள்ள வழியின்றி நிற்பது. பட்டினிகிடக்கலாம். ஆனால் யாருக்கும் தெரியக்கூடாது. இங்கே ஜி.நாகராஜன் சொன்னதுபோல் மனிதன் எவ்வளவு மகத்தான சல்லிப்பயல் என்பதைத் தெரிந்துகொள்ள வாசிப்பு உதவுகிறது. இந்த தரிசனம் பஞ்சத்தின் எத்துணை ஒளிப்படங்களைக்கண்டாலும் எவ்வளவு புள்ளிவிவரங்களை அலசி ஆராய்ந்தாலும் கண்டுபிடிக்கவியலாதது. ஆனால் ஒரு புனைவால் அதைச் சாதித்துவிடமுடிகிறது.

அதோடு அந்தக்கதை நிற்கவில்லை. மானுடத்தின் வயிற்றுக்கும் மானத்துக்குமிடையேயான போராட்டத்தை இன்னும் ஒருபடி மேலெடுக்கிறது. இரண்டு நாள் பட்டினியுடன் நடந்து செல்கையில் சாலையில் கிடக்கும் பாதி தின்றுவீசப்பட்ட ஓர் எச்சில் வெள்ளரி தாய், மகள் இருவருக்குமே அமிர்தமாகத் தெரிகிறது. ஆயினும் சாலையில் கிடக்கும் எச்சில்பழத்துக்கு வயிறு ஏங்கியதை ஒப்புக்கொள்ள இருவருடைய தன்மானமும் தடுக்கின்றன. மகள் ஒரு வேகத்தில் கையில் எடுத்தும் இது என்ன காய் என்று பார்ப்பதற்காக எடுத்ததாக சமாளித்துப்பேசுகிறாள். தாயும் கண்டதையும் கையில் எடுத்ததற்காக அவளைக் கடிந்துகொள்கிறாள். அது தன்னை பாதிக்காததுபோல் இருவருமே பாசாங்குடன் கடந்து சென்றுவிடுகிறார்கள். இரவில் ஓரிடத்தில் தங்க முடிவுசெய்து மகள் தூங்கியபின் தாய் தேடிவந்து 'அது' இன்னமும் அங்கே இருக்குமா என்ற பரிதவிப்புடன் அங்கே சென்று பார்க்கிறாள். இன்னும் கொஞ்சம் மிதிபட்டும் அங்கேதான் அது கிடக்கிறது. அதை எடுத்து ஒரு கடிகடித்ததும் ஏதோ தான் பசியை என்றென்றைக்குமாக வென்றுவிட்டதாக ஓர் உணர்வு அவளுக்கு வருகிறது. கதை மேன்மேலும் போகிறது. இக்கதையின் தலைப்பு திரிபுரம். 

இவ்விரண்டு கதைகளையும் எழுதியவர் சிறுகதைக்காக முதன்முதலில் சாஹித்ய அகடமி விருதுபெற்ற கு.அழகிரிசாமி. அவரும் அவரைப்போன்றவர்களும் வாரி இறைத்துவிட்டுப்போன வைரங்களை நாம் வாசித்துதானே பொறுக்கியாகவேண்டும்?

மேலோட்டமாக மனிதர்கள் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள், தூங்குகிறார்கள், இனவிருத்தி செய்கிறார்கள், சிரிக்கிறார்கள், அழுகிறார்கள். மனிதன் அவைகளின் கூட்டுத்தொகுப்பு மட்டுமே என்றால் வாசிப்பு அவசியமில்லை. ஆனால் வெங்காயத்தோலைவிட மெல்லிய பல அடுக்குகள் கொண்ட அந்தரங்கமான மனம் அவனுக்குண்டு. அதில்தான் எத்தனை கூச்சநாச்சங்கள், சொல்லவியலா ஏக்கங்கள், உடல்சிலிர்த்து தொண்டையடைத்து கண்ணீர்தளும்பும் அற்பமான தருணங்கள். உணர்வுகளால் உருவான அந்தப் பெரும்பாறையின் ஒரு நுனியைக் காட்டிக்கொடுக்கும் வல்லமைகொண்டது வாசிப்பு. மனிதன் அப்பத்தினால் மாத்திரம் பிழைத்திருப்பதில்லை என்றொரு விவிலிய வரி உண்டு. அவனுக்கு வாசிப்பும் வேண்டும் போலும்.

இறுதியாக ஒன்று. தியானம் என்ற ஒன்றைக் கற்றுக்கொள்ள இன்று உலகம் பலகோடிகளை செலவழிக்கிறது. விஞ்ஞான, மெய்ஞ்ஞான, மருத்துவ நன்மைகள் பலவும் தியானத்தின் பலன்களாக அடுக்கப்படுகின்றன. வாசிப்பைவிட எளிமையாகப் பழகிவிடக்கூடிய தியானம் இருக்கிறதா என்ன? ஒரு புத்தகத்தை வாசிக்கத்தொடங்கியபின் ஒரு கட்டத்தில் 'இங்கு உட்கார்ந்து இதை நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன்' என்ற எண்ணமே மறைந்துபோய் வெறுமே 'வாசிப்பு' மட்டும் நிகழ்ந்துகொண்டிருக்கும் அந்த தருணத்தில் அது தியானமல்லாமல் வேறென்ன?



சரி வாசிக்கலாமென்றால் கண்ணைக்கட்டி காட்டில்விட்டதுபோலிருக்கிறது. எங்கே ஆரம்பிப்பது? எதை முதலில் எடுப்பது? வாசிக்க ஏதேனும் முறைதளைகள் உண்டா? பலமுறை புத்தகங்களைக் கையில் எடுத்து சில பக்கங்களுக்குள்ளாகவே முயற்சியைக் கைவிடவேண்டி இருந்திருக்கிறதே, என் பிழையா? எழுதியவர் பிழையா? தேர்ந்தெடுத்தலில் பிழையா? சும்மா இருந்தது எவ்வளவோ சுகமாக இருந்ததே, இப்படி வாசிக்கமுயன்று தொடர்ந்து தோற்பது தன்னம்பிக்கைக்கே உலைவைத்துவிடும்போல் இருக்கிறதே, இது நமக்கு அவசியமா? என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

சிவானந்தம் நீலகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக