வெள்ளி, 3 அக்டோபர், 2014

கறந்த பாலும் மடி புகும்!


நீங்கள் என்னென்னவோ படித்திருப்பீர்கள். படித்ததைப் பயன்படுத்துகிறீர்களா? பயன்படுத்துவது பற்றி யோசித்திருக்கிறீர்களா? ஆம் எனில் இந்தச் சிக்கலுக்கு விடை சொல்லுங்கள்.

அது, பிரபல விற்பனைப் பெயர் கொண்ட தேங்காய் எண்ணெய் புட்டி. கழுத்தைத் திருகித் திறக்க முடியாது. பிளாஸ்டிக்கால் ஆன உடற்பகுதியை அழுத்தினால் எண்ணெய் மூடியின் மேல் உள்ள துளை வழியே வெளியே வரும்புட்டியில் உள்ள எண்ணெய் தீர்ந்து போனால் துாக்கி எறிய வேண்டியதுதான். சுற்றுச் சூழல் மாசு.

பிரபல எண்ணெயின் விலை அதிகம். ஒவ்வொரு முறையும் அதையே வாங்கிக் கொண்டிருக்க இயலாது. சில்லறைக் கடைகளில் பெரிய புட்டிகளில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித் தனிச் சீசாக்கள் வேண்டும் என்று விரும்பினோம்முன்பு வாங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் கையாள வசதியானவை. சிறு சிறு அளவுகளில் எண்ணெயை வைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும் அவற்றின் கழுத்தைத் திருகி எண்ணெயை உள்ளே நிரப்புவது கடினம். அறுத்து எடுத்தால் மீண்டும் பயன்படுத்த முடியாது.

தேவைகள் இரண்டு. பயன்படுத்திய புட்டியையே மீண்டும் பயன்படுத்த வேண்டும். வெளியில் எறிந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்தக் கூடாது. திறந்து மூட வசதியில்லாத புட்டிக்குள் எண்ணெயை நிரப்ப வேண்டும். வேண்டும் போது எடுத்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வீர்கள்? உங்கள் விஞ்ஞான அறிவைக் கொஞ்சம் விரிவாகப் பயன்படுத்துங்கள் பார்ப்போம்.

காற்று. அழுத்தம். அழுத்த வேறுபாடு. வெற்றிடம். இப்படிப் பல சொற்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். என்ன செய்யலாம்?



பிளாஸ்டிக் புட்டியை நன்கு அழுத்துங்கள். பெரிய புட்டிக்குள் இருக்கும் எண்ணெய்க்குள் பிளாஸ்டிக் புட்டியின் வாய் அமிழும்படி பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது பிளாஸ்டிக் புட்டியை அழுத்திக் கொண்டிருப்பதை மெதுவாகத் தளர்த்துங்கள்பெரிய புட்டியில் உள்ள எண்ணெய் வெளிக் காற்றின் அழுத்தத்தால் புட்டிக்குள் இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப முண்டியடித்துக் கொண்டு முன்னேறும். பிறகென்ன..? உங்கள் தேவை நிறைவேறிவிட்டதுமுன்னொரு காலத்தில் பேனாக்களில் மையை நிரப்ப மை நிரப்பி என்ற சிறு சாதனம் இருந்தது. பல பேர் இதைப் பார்த்திருக்கவே மாட்டீர்கள். அதே மாதிரியான பயன்பாடுதான் இங்கேயும்.

இந்த உத்தியை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
குடிநீர்க் குப்பிகளை நிரப்ப..
கழிவு நீரை வெளியேற்ற..
காற்றோட்டம் ஏற்படுத்த..
நாற்றத்தைத் துரத்த..
பெரிய கொள்ளளவு கொண்டதைப் பிரித்து விநியோகி்க்க..
சிந்தாமல் இடம் மாற்ற..

இப்படி என்னென்னவோ பயன்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது பற்றிச் சிந்திக்கலாம்.


(வணிகப் பெயர் கொண்ட நிறுவனம் வருத்தப்படும்.விற்பனை பாதிக்கப்படுமே என்று. அதனாலென்ன.. இதை முயன்று பார்ப்பதற்காகவாவது பல பேர் அந்த புட்டியை வாங்குவார்கள் இல்லையா?)
-சுப. தனபாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக