வெள்ளி, 3 அக்டோபர், 2014

இடம் இருக்கிறதா?


நாங்கள் சற்றொப்ப முப்பது ஆண்டுக் காலம் பல்வேறு ஊர்களில், வீடுகளில் வசித்திருக்கிறோம். ஆனால் எங்கள் வீட்டுச் சாக்கடை நீர் தெருவில் நின்றதாகவோ சுற்றுச் சூழலை மாசுபடுத்தியதாகவோ சரித்திரம் கிடையாது. ஏன், எப்படி?

பெரும்பாலும் உறிஞ்சு குழிகளை உருவாக்கி இருந்தோம். சிறு வீட்டு்த் தோட்டத்தின் மூலம் காய்கறிகள், கீரைகள்,பூக்கள், கிழங்குகளை விளைவித்தோம்.எண்ணெய் ஆட்டு்ம் அளவுக்குத் தேங்காய்கள் கூடக் கிடைத்தன. விருந்தினர்களுக்கு வாழை இலையில்தான் சாப்பாடு. விழர்க்களுக்கெல்லாம் வாழை மரங்களைத் தருவோம். காய்கறிகளை அப்போதே பறித்து அப்போதே சமைக்கலாம்.மூலிகைகள் பலவும் வைத்தியத்திற்கு உதவும்.



விதவிதமான பறவைகள் வந்து போகும். தோட்டத்துத் தொட்டியில் அவை குடிப்பதும் குளிப்பதும் கும்மாளமிடுவதும் வாடிக்கை. வேடிக்கை. சமையலறைக் கழிவுகளை உரமாக்கினோம். கழிவு நீர் என்பது ஒருபோதும் தொல்லையாக இருந்ததே இல்லை. ஆயினும் இந்தப் பொற்காலமெல்லாம் கிராமப் பகுதிகளில் வாழ்ந்தபோதுதான் சாத்தியமாயிற்று என்பதே உண்மை.

கிஞ்சித்தும் இடம் விடாமல் புறாக் கூண்டுகளாகக் கட்டப்படும் நகர்ப்புற வீடுகளில் தண்ணீரை வெளியே அனுப்பியே ஆக வேண்டும். தொலைவில் எடுத்துச் சென்றே குப்பைகளை அப்புறப்படு்த்தி ஆக வேண்டும்.

ஏமாறுகிறவன் இடத்தில் கொட்டிவிட்டு நடையைக் கட்டலாம். எவன் எப்படிப் போனால் நமக்கென்ன?

இந்தச் சங்கடங்களைத் தவிர்க்க வழி கண்டுபிடித்தால்.. வழி என்ன.. சிறிது இடம்.. இடைவெளி கண்டுபிடித்தால் சாக்கடையும் இருக்காது.. சந்தி சிரிப்பதும் நடக்காது.
-சுப. தனபாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக