வெள்ளி, 17 அக்டோபர், 2014

மகாராஷ்டிரா தேர்தல் - கழுகுப் பார்வை 5

இந்தியாவின் மைய மாநிலமாக பூலோக ரீதியில் மட்டுமல்ல இந்திய பொருளாதாரத்தினில் பெரிதும் பங்கு வகிக்கின்ற வகையில் மகாராஷ்டிரா மாநில தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறலாம்.  கட்சிகளுக்கு பெரிதும் பண உதவி புரியும் வணிகர்களின் மாநிலம் ஆக ஆட்சியை பிடிக்க அனைவரும் ஆளாய் பறக்கின்றனர் :)

மகாராஷ்டிராவில் பாஜக  தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என கருத்துக்கணிப்புகள் வந்துகொண்டிருக்கின்ற நிலையில், பாஜகவின் மாநில தலைவரான  “தேவந்திர கங்காதர் பட்நாவிஸ்” பாஜக முன்னிலை பெரும்பட்சத்தில் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இவர் ஆர்எஸ்எஸ்-ன் தலைமை பீடமான நாக்பூரைச் சார்ந்தவர். 44வயதை கொண்ட இவர் பதவியேற்கும்பட்சத்தில் இந்தியாவின் இளம் முதல்வர்களுல் ஒருவராவர். இந்தியாவில் நகர மேயர் பதவியை இளம் வயதில் வகித்த வரிசையில் இரண்டாம் நபராவார். ஊ​ழல் குற்றச்சாட்டு ஏதும் அவர் மீதில்லை, மேலும் சங்பரிவாரின் செல்லப்பிள்ளையும் கூட. அமித்சாவின் நம்பிக்கையையும் பெற்றவராதலால் முன்னிலை பெறுகிறார் என்பதே இன்றைய களநிலவரம்.

அமித்சாவின் வருடம்:
இ​ந்த வெற்றி மோடியின் வெற்றியாக்கப்படலாம்.  ஆயினும் இந்த வருடம் மோடியின் வருடம் என்பதை விட அமித்சாவின் வருடமென்பேன். உத்திரபிரதேசத்திலும் பீகாரிலும் அனைவரின் கணிப்புகளையும் பொய்யாக்கி பாஜகவினை மத்தியில் மிருகபலத்துடன் ஆட்சியில் ஏற்றிய சாதனையின் சொந்தக்காரர் இவரே.  ஆயினும் சமீபத்திய இ​டைத்தேர்தல் தோல்விக்கு காரணம் பல உண்டு அதுபற்றி பின்னர் விவாதிப்போம்.

என்ன ஒன்று அவர் மீது சுமத்தபட்ட என்கௌன்டர் வழக்கின் கறைதான் மனதின் ஒரம் ரணமாய் உறுத்துகின்றது. அப்பாவிகள் எப்பொழுதும் பாதிக்கப்படக்கூடாது என்பதுவே குறிஞ்சியின் தலையாய எண்ணம். நீதி என்பது இந்துக்கள், முஸுலிம்கள், கிறித்தவர்கள் எனப் பாகுபாடு பார்த்து வழங்ககூடாது என்பதுவே எமது நிலைப்பாடு. அவரின் கறையை வேறோரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

மகாராஷ்டிராவில் சேனா சமபங்கு அளவிலான ஒப்பந்தத்துக்கு ஒத்துழைக்க மறுத்தபொழுது, மாநில பாஜக  தலைவர்கள் சேனாவிடம் பிரச்சினை பண்ணாமல் கொடுத்ததை வாங்கிக்கொள்வோம் என்றனர். ஆனால் அமித்சாவோ "பால்சாகேப் இல்லாத நிலையில் உத்தவ்தாக்கரே, ராஜ்தாக்கரே எதிர் எதிர் நிலையில் உள்ளவரையில் அது பல் பிடுங்கப்பட்ட பாம்பு" என்று மிகச்சரியாக கணித்தார். பாஜகவினை தனியாக களம் இறக்கினார். சேனாவிற்கு உள்ள வாக்கு பலம் மும்பைநகரம், கொங்கனை தவிர்த்து வெளியே இல்லை என்பதுவே நிதர்சனம்.



​மகாராஷ்டிராவை பின்வருமாறு 6 பகுதியாக பிரிக்கலாம்.
​1. மும்பை நகரம் (60சீட்டுகள்).

2. கொங்கன் (15சீட்டுகள்), இந்த பகுதியை சார்ந்தவர்கள் மும்பை நகரத்தினையே பெரிதும் வாழ்வாதரத்திற்கு நம்பி உள்ளனர்.

3. மேற்கு மகாராஷ்டிரம், புனாவை  தலைமையகமாக கொண்டது. இந்த பகுதி 5​ மாவட்டங்களும் 58சீட்டுக்களும் கொண்டது. இந்த பகுதி சர்க்கரை, துணி உற்பத்தி, பால் உற்பத்திக்கு பெயர் பெற்றது. மரநிலத்தின் 4 முன்னாள் முதல்வர்கள் இந்த பகுதியை சார்ந்தவர்கள். இது காங்கிரசு, தேசியவாத காங்கிரசின் பலம் பொருந்திய பகுதியாகும்.

​4. வடக்கு மகாராஷ்டிரம், நாசிக்கை  தலைமையகமாக கொண்டது. இங்கு 5 மாவட்டங்களும் 47சீட்டுகளும் உள்ளது. இது வெங்காய உற்பத்திக்கு பெயர் பெற்றது. கடந்த தேர்தல் வரை இங்கு காங்கிரசு கோலேச்சிக் கொண்டிருந்த நிலையில், இப்பொழுது பாஜக மெல்ல ஊடுருவுகிறது.

​5. விதர்பா, நாக்பூரை மையமாக கொண்டது. கடந்த காலங்களில் காங்கிரசுவின் கோட்டையான இந்த பகுதி இப்பொழுது பாஜகவின் இரும்பு பிடியில் உள்ளது. இந்த பகுதி தனி மாநில கோரிக்கையை எழுப்பியவாறு உள்ள கதை வேறு. விவசாயிகள்  தற்கொலை இந்த பகுதியினை இந்தியா முழுக்க பேச வைத்தது. 62சீட்டுகளும் 11 மாவட்டங்களும் இந்த பகுதியின் கீழே வருகின்றது.

​6. மராத்வடா பகுதி, அவுரங்கபாத்தினை மையமாக கொண்டது. 8 மாவட்டங்களும் 46சீட்டுகளும் உள்ளது.

குறிஞ்சி: நம்ம நண்பர்களுள் பல பேருக்கு நாம் பாஜகவிற்கு கொடி பிடிப்பதாய் தோன்றலாம். ஆனால் உண்மை அதுவன்று. மற்றபடி நாம் நடுநிலைமையாளர்கள்தான் என வாசகர்களிடையே காட்ட நம் நெஞ்சை பிளக்க நாம் அனுமார் அல்லவே, அமித்சாவின்  தேர்தல் கணக்கு பற்றி விவாதிக்கவே இந்த கட்டுரை. அமித்சாவின் தேர்தல் நிர்வாக திறமை இந்திய  தேர்தல் களத்தின் நிலையை வெகுவாக மாற்றிக்கொண்டிருக்கின்றது. அவரும் சாதி அரசியலை கையில் எடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்மையெனினும் வரும் காலங்களில் காங்கிரசும் மற்ற கட்சிகளும் களத்திற்கு வரவேண்டிய நிர்பந்தத்தை அவர் உருவாக்குகிறார் என்றே தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக