ஆன்லைனில் வாங்கு அதுதான் இப்போது டிரெண்டு என்றார் நண்பர். ஆன்லைனில் விலை குறைவு என்று மக்கள் சாரிசாரியாய் குவிகிறார்கள். சில்லறை வணிகத்தில் விலையில் நடந்துவரும் மாபெரும் மோசடிதான் மக்களை ஆன்லைனில் போய் குவிக்க வைக்கிறது.
தமிழகத்தின் பிரபல துணிக்கடையில் வாங்கும்
துணிகளின் விலையானது நியாயமான விலையை விட குறைந்தபட்சம் மூன்று மடங்கு அதிகம் என்பதே உண்மை. எமது நண்பர்கள்
குழாம் இந்த தீபாவளிக்கு சூரத், மும்பை, வாரணாசி, திருப்பூர், கொல்கத்தா போன்ற நகரங்களிலிருந்து
துணிகளை நேரடியாக இறக்க முயற்சிசெய்து வருகின்றது. அவர்களிடம்
விசாரித்தபொழுதுதான் நம்முடைய கடைக்காரர்கள் அடிக்கும்
விலை கொள்ளையை பற்றி தெரியவந்தது. துணியில் மட்டுமல்ல மற்ற பொருள்களிலும் இதுதான் நிலை.
இந்த நிலையில் பொதுமக்கள் மாற்றம் வராதா என்று பார்த்தபொழுதுதான்
வராது வந்த மாமணியாய் வந்தது பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள். கடந்த மாதம் வரை சத்தம் இல்லாமல் டாப்கியரில்
போய்கொண்டிருந்த அவர்களது வியாபாரம்; பிளிப்கார்ட் 6000கோடியை ஒரே நாளில் முதலீடாய்
பெற்றதும், அமேசான் 10000கோடியை இந்திய சந்தையில்
இறக்கவிருப்பதாக அறிவித்ததும் ஊடகங்களில் இவர்கள் கவனம் பெறத்துவங்கினர்.
சுதாரித்த சில்லறை வணிகர்கள் கொந்தளிக்க
துவங்கினர். ஆன்லைன் நிறுவனங்கள் குறைந்தபட்ச விலையை
விட குறைவாய் விற்பது என்பதுவே மோசடி என்றனர். மேலும் அவர்கள் ஒரு பொருளை குறைந்த எண்ணிக்கையில் மட்டும் குறைவான விலைக்கு
விற்றுவிட்டு, அதனை நம்பி வாங்க வந்த மற்றவர்களின் மூலம் வெப்சைட் போக்குவரத்தையும்
பெற்றுக்கொண்டு அவர்களை மற்ற பொருளை வாங்க மறைமுகமாய் தூண்டுகின்றனர் என்கின்றனர்.
மேலும் இவர்களது கிடங்கு டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களிலே உள்ளது. எனவே சென்னையிலிருந்து
ஒருவர் ஒரு பொருளை ஆன்லைனில் வாங்கினால் ஆன்லைன் நிறுவனங்கள் தமிழக அரசிற்கு வரி செலுத்துவதில்லை. இதனால் மாநில அரசிற்கும்
பெருத்த நட்டம். எனவே தமிழக அரசாங்கமும் இவர்கள் மேல் ஒரு வழக்கு போட்டிருப்பதாக செய்தி.
மேலும் பிரபல
இந்திய ஆன்லைன் நிறுவனத்தின் வலைத்தளத்தில் கவனம் பெறப்பட்ட விலை மோசடியும், அமலாக்கபிரிவின்
வழக்கும் அவர்களை நெருக்குகிறது.
வெளிநாட்டு ஆன்லைன் வியாபாரத்தின்
வெற்றி என்பதுவே வாடிக்கையாளருக்கு பொருள் பிடிக்கவில்லையேனில் உடனடியாக அப்பொருள்
திருப்பி எடுத்துக்கொள்ளப்படும், முழுப்பணமும் உடனடியாக திருப்பி அளிக்கப்படும். ஆனால் இந்திய சந்தையில் இது எவ்வாறு சாத்தியம் என்பது அந்த ஏழுகுண்டலவாடாவுக்கே
வெளிச்சம். ஏனென்றால் இந்திய சந்தை என்பது முற்றிலும் மாறுபட்டது.
நம்ம நண்பர் ஒருவரும் ஆண்லைனில் 3000ரூ
மதிப்புள்ள பொருள் ஒன்றினை வாங்கினார். அவரிடம் கூரியரில் அதே போன்ற அட்டைபெட்டியில்
வைத்து சுமார் 1500ரூ மதிப்புள்ள இரண்டாம் தரமிக்க பொருளினை தந்தனர். இவரும் சளைக்காமல்
அந்த பொருளை உடனே போட்டோ எடுத்து அவர்களிடம் அலைபேசியில் பேசியபொழுது, இது விற்பனையாளர்களின் தவறு எனவும், ஆன்லைன் நிறுவனமானது உங்களுக்கு
மீண்டும் பணத்தினை திருப்பிச்செலுத்தும். ஆனால் அப்பொருளை நீங்களே கூரியரில் திருப்பி
அனுப்பினால் 10நாளில் பணம் வரும் என்றனர். இவர் வழக்கு போடுவேன் என்றதும் மிரண்டு போய்
அவர்களே வேறு ஒரு கூரியரை ஏற்பாடு செய்து பொருளை எடுத்துக்கொண்டு பத்துநாளில் பணத்தினை
திருப்பி அளித்தனர்.
ஆன்லைன் நிறுவனங்கள் எப்படி இந்த தவறுக்கு
உடந்தை என்பதுதானே உங்களது கேள்வி?
நேரடியாக ஆன்லைன் நிறுவனங்கள் சம்பந்தபடுவதில்லை. ஆனால் மறைமுகமாய் லாபம்
ஈட்டுகின்றது. அந்த விற்பனையாளரை தடைசெய்யவேண்டியதுதானே எனக்கேட்டால், ஒருவருட காலம் விற்பனையாளர்களை
பொதுவாக விற்பனை செய்ய அனுமதிப்பார்களாம் ( கிரிமினல் வழக்குகள் தவிர்த்து), அந்த காலக்கட்டத்தில் எவ்வளவு மோசமாக வாடிக்கையாளர்களிடம்
இருந்து மதிப்பெண்கள் வருகிறதோ அதைப் பொருத்தே விற்பனையாளர்களின் தரவரிசையானது டைமன்டு,
கோல்டு, சில்வர் என மதிப்பீடு செய்யப்படுகின்றது.
டைமன்டு விற்பனையாளர் 5சதவீதம், கோல்டு
விற்பனையாளர் 10சதவீதமும், சில்வர் விற்பனையாளர் 20சதவீதமும் கமிசனாக அளிக்க வேண்டுமாம். இப்பொழுது புரிகிறதா ஏன் ஆன்லைன் நிறுவனங்கள் மறைமுகமாய் தவறுக்கு
உடந்தை ஆகின்றனர் என.
ஆயினும் ஆன்லைன் வியாபாரம் இந்திய அளவில் இன்னும்
குழந்தை பருவத்தில்தான் உள்ளது. ஆகவே பொருத்திருந்து பார்ப்போம். ஆன்லைன் நிறுவனங்கள் சுதாரித்து தங்கள் தவறுகளை திருத்திக்கொண்டால்
அவர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் பொதுமக்களுக்கும் மாற்று வழி நல்ல வழியாக அமையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக