அம்மா மக்கள் சேவை மையம்
அம்மா மருந்தகம்,
அம்மா குடிநீர்,
அம்மா அமுதம் பல்பொருள்
அங்காடி,
அம்மா விதைகள்
அம்மா வேலைவாய்ப்பு
பயிற்சிதிட்டம்
அம்மா பேபி கேர்
அம்மா உப்பு
அம்மா உணவகம்
அம்மா தியேட்டர்ஸ்...
இப்படி எண்ணற்ற
திட்டங்களை கொண்டு வந்.."தாயே"
ஆயினும் நீவீர் மறந்த திட்டங்களை நினைவுபடுத்துவது உன் குடிமக்களின் கடமை அன்றோ...
மின்சாரப் பிரச்சினை
இன்னும் தீரவில்லை, சுயதொழில் செய்வோர் மனம் வெதும்பி போகின்றனர். கோவையின் பக்கம் இதன் தாக்கம் அதிகம்.
கடந்த
சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் மூன்று
மாதங்களில் மின்சார பிரச்சினைக்கு தீர்வு
காண்பேன் என்றீர்கள், அப்பொழுதே விவரம் புரிந்தவர்களுக்குத் தெரியும் அது நடைமுறை
சாத்தியமன்று என்று. ஆயினும் மூன்று வருடங்கள் ஆகியும் முழுவதும் பிரச்சினை
தீரவில்லை கேட்டால் கூறுவார்கள் தமிழகம் மற்ற மாநிலங்களைவிட இப்பொழுதும் மின்மிகை
மாநிலம் என்று, ஏன் குறிஞ்சியிலே அது குறித்து கட்டுரைகளையெல்லாம் நண்பர்கள் பதிவு செய்திருந்தார்கள்.
முந்தைய மத்திய அரசு வஞ்சித்துவிட்டது அது இது
என்று எளிதாக தங்களின் இயலாமையை அடுத்தவர் மேல் போடலாம், ஆனால் இப்பொழுது உங்க படா
தோஸ்து மோடிஜிதான் வந்திருக்கிறார் மத்தியிலே, அதனாலே என்ன செய்தாவது வரும்
சட்டமன்ற தேர்தலுக்குள்ளாவது பிரச்சினையை முழுவதும் தீர்த்து
வையுங்கள்.. அதை விட்டுவிட்டு வாய் பந்தல் வேண்டாம் அதாவது புது வார்த்தைஜாலமென, இது "மின்வெட்டு அல்ல" நிர்வாக நடவடிக்கைகளுக்காக "மின்சார நிறுத்தம்"
என்று. தினமும் நிர்வாக நடவடிக்கை என்று என்னத்த பண்றாங்கனே புரியலை!?
ரியல் எஸ்டேட் எனும்
பூதம் இன்னும் உறங்குவதாய் பாசாங்கு பண்ணிக்கொண்டே இருக்கிறான். எப்பொழுது
வேண்டுமாயினும் அவன் விழிந்தெழுந்து விழுங்குவான் அப்பாவிகளை... மவுலிவாக்கம் போன்று. பத்திரபதிவு கட்டணங்களை
அதிகப்படுத்தியதால் ரியல் எஸ்டேட் எனும் பூதம் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது நல்ல விசயமே. ஆயினும் அது நியாயமாக தொழில் புரிவோரை பாதித்துள்ளது. மேலும் இந்த துறையிலுள்ள
ஊழல் புரியும் அரசு அதிகாரிகள் எனும் கறுப்பு ஆடுகளை களைய வேண்டும். அதுவரை தீர்வு கிடைக்காது.
கிரானைட்
பிரச்சினை மட்டுமல்ல, ஆற்று
மணல் மற்றும் கடல் மணல் அனைத்து இயற்கை வளம் சார்ந்த
பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள், வரலாறு வாழ்த்தும் உங்களை மறவாது.
பல
ஆண்டு தமிழக அரசின் முயற்சியால் நடந்த வழக்குகளில் இந்த
ஆட்சியில் காவிரியில் ஆணைய விசயத்தில் தீர்வு கிடைத்தது, முல்லை பெரியாறு
வழக்கில் தீர்ப்பு வந்தது, நீங்களும் காவிரி தாயே, வைகைத் தாயே என்று பட்டங்களையெல்லாம் வாங்கிக்கொண்டீர்கள்
அம்மா. உங்கள் வாழ்வில் முக்கிய சாதனையாக இது போன்ற தீர்ப்புகளைத்தான்
கருதுகிறீர்கள் என்றீர்கள், ஆயினும் உண்மையாகவே வரலாறு உங்களை போற்றிட
வேண்டுமாயின் குடிநீர் ஆதாரங்களை
பெறுக்க வேண்டும்.
முத்துக்குமரன் மருத்துவகல்லூரி மாணாக்கர்களின் எதிர்காலம் மட்டுமின்றி இன்றைய கல்வி கொள்ளையர்களிடமிருந்து முதல் எதிர்கால தமிழ்சந்ததியினரான மாணக்கர்களின் நலம் காக்கப்படவேண்டும்.
குடியை(சாராயம்) கட்டுப்படுத்தி குடிகளின்(மக்கள்) நலம் காணவேண்டும்.
இண்டர்நெட்டில்
கருத்து பதிவு செய்தோரை அவதூறு செய்ததாக கூறி ஒரு வருடம் விசாரணையின்றி சிறையில் தள்ளலாம் என்று குண்டர் சட்டத்தில் திருத்தம்
செய்தீர்கள். அந்த இண்டர்நெட்
இளைஞர்கள்தான் திமுகவின் கடந்த கால ஆட்சியை மீட்டெடுத்து உங்கள் கரங்களில் கொடுத்த
கதை மறந்திருக்கும், இன்று வரை அவர்களின் கோபக்கணை உங்கள் அருகாமை திரும்பாததாலுமே
இந்த நாடாளுமன்ற வெற்றியின் காரணமும் ஆகும்.
இண்டர்நெட்டில் வரும் பதிவுகளில் முக்கால்வாசிக்கும் மேலே வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழர்களால்தான்
தொலைபேசி வாயிலாகவும் முகநூல் வாயிலாகவும் அவர்களின் நண்பர்களிடத்தும்
உறவினர்களிடத்தும் பரப்படுகின்றது. ஆக இந்த சட்டத்திருத்தம் அவர்களை எதுவுமே
செய்யாது என்பதுதான் நிதர்சனம்.
மேலும் அதன் தாக்கம் உங்களுக்கு புரியாமல் போகலாம், இன்று வரை இண்டர்நெட்
பதிவுகளில் நீங்கள் காமெடி பொருளாக சித்தரிக்கப்படாம் இருக்க காரணமும் அவர்களே. ஆயினும் இந்த சட்டத்திருத்தம் அவர்களை உங்களுக்கு எதிராக மாற்றும். வேண்டுமாயின் எதிர்க்கட்சி அன்பர்களை கேட்டுபாருங்கள், அவர்கள்
இண்டர்நெட் இளைஞர்களிடம் வறுபடும் கதையை உங்களிடத்து பகிர்வார்கள்.
எதிர்க்கட்சிகளை
எதிரி கட்சிகளாக நினைக்க வேண்டாம், அவர்களே உங்களது ஆட்சியின் கடிவாளம், உங்களை
அறியாமல் செய்யும்
தவறுகளை அவர்கள் சுட்டிக்காட்டுவதால் அது பெரும் சேதாராமாய் போவது
மட்டுப்படுத்தப்படுகிறது. அவர்களது சுட்டிக்காட்டல் அவதூறு அல்ல. ஜால்ரா
கூட்டங்களின் சத்தமே
உண்மையில் அவதூறு.
மக்களோடு
நேரடி தொடர்பின்றி மக்களின் கஷ்ட நட்டங்களை உங்களால் எளிதில்
புரிந்துகொள்ளமுடியாது. அதற்காக உங்களை நாங்கள் மாறுவேடத்தில் நகர்வலம் வாருங்கள் என்றெல்லாம் கோரவில்லை. அவ்வப்பொழுது
மக்களை நேரடியாக களத்தில் காணவாருங்கள் எங்கள் வலி உங்கள் உள்ளத்தை தொட்டால்
உங்கள் வழியும் மாறும். உங்களின்
தளபதிகள் முழுவதுமாய் உண்மையை உங்களிடத்து கொண்டுவந்து சேர்ப்பார்கள் என்று
நினைப்பது தவறு.
வளர்ந்த நாடுகளில் அமைச்சர் பெருமக்கள் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கூட்டங்களிலும் அறிமுகப்படுத்துவார்கள். அதற்காக நீங்கள் சும்மா இருக்கிறீர்கள் என்று கூறவில்லை, உங்கள் அமைச்சு பெருமக்களின் பணிசுமை அதிகமானதுதான் என்றாலும் மக்களுக்குகாகத்தான் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. அதனால் மக்களோடு குறைந்தப்பட்சம் 100 முதல் 200 வரை உள்ள பொது மக்களோடு உங்கள் துறை சார்ந்ததிட்டங்களை அறிமுகம் செய்யுங்கள், அவர்களுக்கு அதன் பலாபலன்களை புரியவையுங்கள், அவர்களின் சந்தேகங்களை கேள்விகளை எதிர்கொள்ளுங்கள், அவர்களின் எளிய தீர்வுகளையும் உங்கள் திட்டங்களோடு ஒருங்கிணையுங்கள். வளர்ந்த நாடுகளில்தான் இது சாத்தியம் இந்தியாவில் இது சாத்தியமல்ல என்பதெல்லாம் கட்டுகதை, முயற்சியே செய்யாமல் முடிவு பண்ணாதீர்கள். அரவிந்த்கெஜ்ரிவாலின் குறைதீர்ப்பு கூட்டம் என்ற மோசமான சம்பவங்களை முன்னுதாரமாய் நிறுத்தாதீர்கள்.
அரசாங்கம்
என்பது தனிமனிதரால் நடத்தபடுவது அல்ல என்று. அது ஊர்கூடி தேர் இழுக்க
வேண்டிய விசயம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றி என்பது ஆள்வோரின் நற்சான்றிதழுக்கானது மட்டுமல்ல அது, இன்னும் திமுகவின் அராஜக ஆட்சியின்
வடுக்கள் மீதமிருப்பதாலே. அதன் தடம் மறையும் பொழுது மக்களின் தடமும் மாறும் எனப்
புரிந்தால் சரி.
களம் மாறுகிறது:
திமுகவின் அணுகுமுறையில்
சமீபகாலத்தில் மாற்றமிருக்கிறது. எப்பொழுதும் அவர்கள் கட்சித்தொண்டர்களுடனும்,
பொதுமக்களுடனும் தொடர்பு இருப்பதாக பார்த்துக்கொள்வார்கள் அல்லது அவர்களின்
ஊடகபலத்தின் துணையுடனாவது அதனை ஆதாரப்படுத்துவார்கள். ஆனால் இந்த
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி அதனை புரட்டி போட்டுள்ளது.
சகோதரி கனிமொழி இளைஞர்களால்
தஞ்சை மண்னில் நடத்தப்பட்டு வரும் டெல்டாபுலிகள் என்ற சங்கத்தின் நிர்வாகிகளை
டெல்லிக்கு அழைத்துச்சென்று அமைச்சர்களை சந்திக்க வைத்திருக்கிறார். மீத்தேன்
திட்டத்திற்கு எதிராக குரலை பதிவுசெய்ய உதவி புரிந்திருக்கிறார். சகோதரியின்
அரசியல் எப்பொழுதும் வித்திசியாமனது, அவர் மீது மட்டும் ஊழல் குற்றச்சாட்டு
வைத்துவிட்டு அதன் பலாபலன்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் இன்னொருவரை முழுதும்
காப்பற்ற நினைப்பது ஏனோ! ஆயினும் அதற்கு அவரே விரும்பி ஒத்துழைக்கும்பொழுது அது
நமக்கு தேவையில்லாத வேலை. ஆக அதைப் பற்றி மற்றுமொரு தருணத்தில் விவாதிப்போம்.
மற்றுமொரு சம்பவம் மருத்துவ
படிப்புக்கு சேரமுடியாமல் கஷ்டப்பட்ட மாணக்கருக்கு உதவி புரிய முனைந்த ஐயா,
ஸ்டாலின் அவர்கள்.
எதிர்தரப்பு மக்களோடு நேரடியாக தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முயலுகிறது. என்பது சந்தோசமே, இது ஆளும் தரப்பினருக்கு புரியுமா?
ஏன் மாற்று அரசியல்
வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மாறி மாறி அரசியல் கட்சிகளை ஆட்சியில்
அமர்த்தவேண்டும் என்று நாங்கள் தொண்டை வழிக்க கத்துகிறோம், சரி சரி எழுதுகிறோம்
என்று இப்பொழுதாவது புரிந்திருக்கும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில்
திமுக சில இடங்களையாவது செயித்திருந்தால் ஆள்வோர்க்கு
புரிந்திருக்கும்
சுத்தியுள்ள கூட்டம் எல்லாம் ஜால்ரா கூட்டம் என்று.
ஆள்வோரோ எதிர்கட்சியோ இது விமர்சனமோ அவதூறுவோ அல்ல சாமான்யனின் கருத்து என்று புரிந்துகொள்ளுங்கள்.. நாங்கள் ஆளும் வர்க்கத்தினை மாற்ற விரும்பவில்லை ஆளும் வர்க்கத்தின் மனநிலையையே மாற்ற விரும்புகிறோம்.
நாங்கள்
மாற்று அரசியலையே விரும்புகிறோம். மாறி மாறி உங்களை ஆட்சியில் அமரத்துவது எங்கள்
நோக்கமல்ல. காலம் வரும்பொழுது இந்த சாமன்யனின் கனவும் கைக்கூடும். என்ன
கனவு என்கிறீர்களா, மக்கள் சேவகர்கள் மக்களோடு பயணம் செய்யும் காலமது. குளிர்சாதன அறை அரசியல் என்ற நிலை மாறி கள அரசியல் வேண்டுமென்பது
என்னைப் போன்ற சாமன்யனின் அவா..
ஆழி அமைதியாக இருக்கிறது என்றால் அதனர்த்தம் அதுவல்ல அது அனர்த்தத்துக்கு
தன்னை தயார்படுத்துகிறது என்பதாகும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக