வெள்ளி, 16 மே, 2014

மோடியிடம் இருந்து என்ன தேவை?


     குறிஞ்சியின் சார்பாக பிரதமராகப் போகும் மோடிக்கு வாழ்த்துக்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிக்கட்சியாக ஆட்சியில் அமரப்போகும் பாஜக தன் அசுர பலத்தோடு இந்தியாவிற்கு என்ன செய்யப்போகிறது? மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? 

    இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடவேண்டாம். மக்கள் உடனடியாக பணக்காரர்களாக ஆகவேண்டாம். பாகிஸ்தானை பயமுறுத்தி நம் அடிமையாக்க வேண்டாம். ஆனால் குஜராத்தை அதிகாரிகளின் துணையோடு பல துறைகளில் வலுப்பெற செய்த மோடிக்கு நிர்வாகம் புதிதல்ல. இதோ, கிட்டதட்ட அனைத்து தரப்பு எதிர்பார்ப்பையும் தொகுத்து வழங்கியிருக்கிறோம் (அல்லது அதற்கு முயற்சி செய்திருக்கிறோம்). 
  • 1.  அந்நிய முதலீடு சில்லரை வணிகத்தில் மட்டுமல்ல வங்கி, காப்பீடுதுறைகளிலும் விலக்கப்பட வேண்டும். 
  • காப்பீட்டுதுறையைப்  பொறுத்தவரையில் இந்திய வங்கிகளை இறங்கச் செய்யலாம்.
  • 2. வங்கிகளை  தனியாருக்கு  திறந்துவிடக்கூடாது.  குறிப்பாக அம்பானி, டாடாவை விலக்கி வைக்கவேண்டும்.
  • 3. தனியாரின் ஆதிக்கத்தினை பொருளாதாரம், வணிகம், கல்வி  துறைகளில் கட்டுபடுத்த வேண்டும்.
  • 4. அமெரிக்காவை போன்று குறிப்பிட்ட சந்தையில் கோலேச்சும் தனியார் மற்ற துறைகளில் இறங்குவதை தடை செய்யவேண்டும். எ.கா அம்பானிக்கள் மளிகை சந்தையினை போன்ற துறையில் இறங்குவதை ஆதரிக்க அனுமதிக்கக்கூடாது.
  • 5.  சிறு, குறு தொழில்  தொடங்க எளிய கடன் வசதியும், இன்ன பிற அனுமதியும் விரைவில் வழங்க வழி செய்யவேண்டும்.
  • 6. கல்வித்தந்தைகளின் கொட்டம் அடங்கவேண்டும்.  கல்வி கட்டணம் வழங்குவதை விட  அரசு கல்லூரிகள் தொடங்குவது சாலச்சிறந்தது.
  • 7. இந்தியாவின் கல்வி துறையினை காவிமயப்படுத்தாமல் கால ஓட்டத்துக்கு ஏற்ப மாற்ற வேண்டும்.
  • 8. நதிநீர் இணைப்பு  திட்டங்கள் போன்ற இயற்கை சார்ந்ததிட்டங்களை நிறைவேற்றும் முன்னர் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிக்க வேண்டும்.  நாங்கள் நதி நீர் இணைப்புதிட்டம் அபாயமானது என்றே கருதுகின்றோம். மேலும்  தமிழக நதிகள் இன்றைக்கு கூட்டுகுடிநீர்  திட்டம் என்பதின் மூலம் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது.  காவிரி கூட்டுகுடிநீர்  திட்டம் சென்னை முதல் ராமநாதபுரம் வரை  நீர் வழங்குகிறது.  தாமிரபரணி நீர்திட்டம் விருதுநகர் முதல் கூடங்குளம்  வரை நீர் வழங்குகிறது.  
  • 9. சித்த, யூனானி மற்றும்  ஆயுர்வேத மருத்துவமுறைகளையும்  ஆதரிக்க வேண்டும்.
  • 10. செமிகண்டக்டர், விமான, பயோடெக், மரைன், ஆயில் கெமிக்கல் போன்ற  தொழில்கள் இந்தியாவின் விவசாய நிலங்களை பாதிக்காத வகையில்  தொடங்கவேண்டும்.
  • 11. இந்திய  துறைமுகங்களின் வசதியை  அதிகரித்து.  ஆயில் ரிக், கப்பல்  கட்டும்  தொழில்களை வளர்க்க வேண்டும். இந்த ஆயில் ரிக் கட்டும் தொழிலுக்கு ராகுலிடம் கூட ஆலோசிக்கலாம். ஏனெனில் அவர்தான் அதை வெளிநாடுகளில் தயாரித்து வெளிநாடுகளிலேயே தொழில் செய்பவர் என்பது ஒரு செய்தி. :)
  • 12.  வியட்நாமில்  இந்திய கப்பல் படையினை நிறுத்த வேண்டும்,  ஈரானிலிருந்து எண்ணையே கடல்வழியே கொண்டு வரவேண்டும். கடல் கடந்து வசிக்கும்  தொழிலாளர்களின் நலன் பேணப்படவேண்டும்; தேவயானிக்கள் மட்டும் இந்தியர்கள் அல்ல...
  • 13. சிறுபான்மையினர் நலம் காக்க வேண்டும். அவர்கள் அச்சுறுத்தலின்றி பெரும்பான்மையினரோடு இணக்கமாக வாழ வகை செய்ய வேண்டும்.
  • 14. இடஓதுக்கீடு பொருளாதாரத்தினை அடிப்படையாக கொண்டே இருக்க வேண்டும். அதன் முதல் படியாக ஏற்கனவே  அந்த சலுகையை பயன்படுத்தி  அதிகாரிகளாக இருப்போரின் சலுகையை ரத்து செய்ய வேண்டும்.
  • 15. உள்நாட்டிலே தரமான ராணுவ தளவாடங்கள் முதலில் உற்பத்தி செய்ய வேண்டும்.
  • 16. இந்தியாவில் உற்பத்தி மையம் இல்லாத எந்த நிறுவன பொருள்களையும்  தடை செய்ய வேண்டும். எ.கா: மொபைல் போன் உற்பத்தி இந்தியாவில் இல்லாத பட்சத்தில் அந்த மொபைல் விற்பனையை  இந்தியாவில்  தடை செய்ய வேண்டும் அல்லது அவர்களின் லாபத்தில் மேல் அதிக வரி விதிக்க வேண்டும், பொருளின் மேல் அல்ல
    இதுவரை ஏன் மோடி வெற்றிபெறவேண்டும் என்கிற ரீதியிலான கட்டுரைகளைத்தான் குறிஞ்சியில் படித்திருப்பீர்கள். இனி மோடியை இடித்துரைக்கும் விமர்சனக்கட்டுரைகளையே அதிகம் படிக்கவேண்டியிருக்கும். இது எல்லோர் மீதும் குற்றம் காணும் செயலல்ல. குடிமக்களுக்கான அரசாங்கத்தை தேடும் செயல். வழக்கம்போல குறிஞ்சிக்கு உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக