சனி, 10 மே, 2014

மோடி வென்றுவிட்டார் என்றே சொல்லுவேன்...


ஆ​ம் வதோராவில் வெல்வாரா, வாரணாசியில் வெல்வாரா இல்லை முதன்மை மந்திரியாக வெல்வாரா என்றெல்லாம்  தெரியாது.


ஆ​யினும் மோடியே இந்த தேர்தல் பிரச்சாரத்தினை முன்னே துவக்கி முன்னோக்கி எடுத்து சென்று முதலில் இருந்து முன்னனியில் இருந்தார் என்பேன்.  அவரே அவரது எதிர்தரப்பு என்ன பேச வேண்டும் என்பதையும் முடிவுசெய்தார் என்பதையே களம் நமக்கு உணர்த்துகின்றது. 

2014​ல் மோடியின் அதீத டெக்னாலஜி சார்ந்த அணியனரிடம், ராகுலின் அணி  மட்டுமல்ல அத்தனைபேரும் தோற்றுவிட்டதாகவே உணருகின்றது.  சோனியா, ராகுல், பிரியங்கா, முலாயம், பவார், பரூக், மாயாவதி, நிதிஷ், லாலு, நிதின்,ஜெயலலிதா, கருணாநிதி, மம்தா ஏன் மன்மோகன் வரை மோடிதான் அவர்களது பிரச்சாரத்தின் மையமாக இருந்தது.  இவர்கள் இந்தியாவுக்கு பாடுபடபோகிறார்களா இல்லை மோடியை எதிர்ப்பதுதான் இவர்களது பணியா என்று பாமரன் யோசிக்கும் வகையில் மோடி அவர்களை வலையில் சிக்கவைத்தார் என்பேன்.

​காங்கிரசு அலைகள் சூழ்ந்த ஆழியில் ஒட்டை விழுந்த கப்பலில் ஒட்டையை அடைக்க முயற்ச்சிப்பது தற்கொலை முயற்சிக்கு சமம். இவர்கள் கப்பலை மாற்றியிருக்க வேண்டும். பிரித்தாளுவது என்ற ஐதர் காலத்து பாணியை பரணில் ஏற்றியிருக்க வேண்டும் என்பேன். 2007​ல் அன்னையின் மரணவியாபாரி என்ற வார்த்தையே சாய் வியாபாரி எவ்வளவு  தந்திரமாக  தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார் என்பதில் இருந்து இன்னும் அன்னை பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பேன்.

2004​ல் பிரமோத்மகாஜன் இதே போன்று நேர்மறையான பிரச்சாரத்தினை ​பாஜக சார்பாக எடுத்தபொழுது காங்கிரசு ஜெய்ராம்ரமேஷ் தலைமையில் “காங்கிரசின் கை ஆம்ஆத்மியின் கை” என்ற எளிய நேர்மறை பிரச்சாரத்தினை எடுத்தது, அப்பொழுது அது பாஜகவை பெரிதும் பதம் பார்த்தது.

​மோடியின்  தலைமை அணி அகமதாபாத்திலிருந்து செயல்படுகின்றது. பெரும் மலையாளிகள் அதன் அணியிலும் ஊடுருவி  இருப்பதாக சொல்லப்படுவது மோடியின் விசிறிகளான என் நண்பர்களுக்கு கசப்பு மருந்தே... பிரதம வேட்பாளரின் பிரதமசெயலாளர் திரு.கைலாசநாதன்குனில் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் அவர் மலையாளியே என்று சங்கதி சொல்லும் பட்சி கூறுகிறது. சரி இது கட்டுரைக்கு  தேவையில்லாதது. ஏதோ தோனுச்சு சொன்னேன்.

​மோடியின் வலது கரம் அமித்ஷா சிகாகோவில் பிறந்தவர், பங்குவர்த்தக வியாபாரி, சங்க்பரிவாரின் செல்லபிள்ளை, அவர் அகமதாபாத்திலிருந்து கிளம்பிச் சென்று உத்திரபிரதேசத்தில் லக்னோவை மையமாக கொண்டு பூத்துக்கள் வரை பாஜகவை ஊடுருவி நிற்க செய்துள்ளார்.  இவரது கணக்கு நடக்குமாயின் 2014ல் மட்டுமல்ல வரும் சட்டமன்றத்திலும் பாஜகவே வெல்லும்.

அ​மித்ஷா செல்லும் முன்னர் உத்திரபிரதேசத்தில் பாதி கிராமங்களில் கட்சிக்கு கிளைகளை கிடையாது. அறிக்கை அரசியலில்தான் கவனம் செலுத்தினர் பாஜகவின் தலைவர்கள் எனப்படுபவர். இவர் ஒவ்வொரு பூத் பொறுப்பாளருக்கும் ஒரு இருசக்கரவண்டி, ஓவ்வொரு கிராம அமைப்புக்கும் போலரோ வண்டி அது பிரச்சாரத்துக்கு மட்டுமல்ல, மோடியை வைத்து ஷா நடத்திய 40 பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு கூட்டம் சேர்க்கவும் உதவியது. ஒவ்வொரு பொதுகூட்டத்திற்கும் 175கிமீ சுற்றளவிற்குள்ளே இவர்கள் கூட்டம் சேர்த்தனர். கார்ப்பரேட்கள் கூட இவரது துல்லிய நடவடிக்கையை கண்டு வியக்கும். சாதிமத கணக்குகளை சல்லடை போட்டார்; வெற்றி பெரும் உள்ளூர் நபர்களையே வேட்பாளராக்கினார். பிற்படுத்தபட்ட சாதிகளையும் அனைத்துக்கொண்டார். காங்கிரசிலிருந்து கடைசி நேரத்தில் தாவியவர்களுக்கும் வெற்றி பெற வாய்ப்பிருந்தால் சீட் ஒதுக்கினார். ஜோசியை காசியிலிருந்து கான்பூருக்கு மாற்றினார். ​​கல்யான்சிங்கிற்கு சீட் வழங்காமல் பிரச்சாரத்திற்கு அனுப்பினார்.

சங்கங்களின் கார்யகர்த்தாக்களை மட்டும் நம்பியிருந்தால் கட்சி வளராது கட்சிக்கு என எப்பொழுது அமைப்பு இருக்கவேண்டுமென உத்திரபிரதேசபாஜகவினருக்கு உணர்த்தினார்.  ஆக மோடியின் வெற்றியில் உத்திரபிரதேசத்திற்கு பெரும் பங்கு இருப்பது போலவே உத்திரபிரதேசத்தின் வெற்றி நாயகனாவரா அமித்ஷா???

மற்ற ரத கஜ ​தூரக பதாதிகளை பற்றி பேசினால் கட்டுரை நீளும். இத்தோடு விடுவோம்

​முதலில் இளைஞர்களிடம்  பாஜக  தேர்தல் அறிக்கை எப்படி இடம்பெற வேண்டுமென கருத்துக்களை பதிவிட சொன்னவர்கள், அப்படியே இளைஞர்களின் நாடித்துடிப்பையும் அறிந்து கொண்டனர்.  அதை மையமாக வைத்தே மோடியும் தனது பிரச்சாரத்தில் கருத்துகளை முன்வைத்தார்.  முதலில்  உள்ளூர் மக்களின் மொழியில் வாழ்த்து, பின்பு அவர்களின் மண் சார்ந்த பெருமைகள் குறித்து சில வரிகள், பின்பு உள்ளூர் பிரச்சினைகள், அதன்  தீர்வுகள் பின்பு தேசிய பிரச்சினைகள் அதன் தீர்வுகள் கடைசியில் எதிர்கட்சிகள் குறித்த விமர்சனங்கள், கிண்டல்கள் சீண்டல்கள் பின்பு உறுதிமொழிகள் என கோர்வையாக சமைத்தார்.  மற்ற அரசியல்  தலைவர்கள் எல்லோரும் அறிஞர்கள் என்று சொல்லப்படும் அறையில் இருந்து கொண்டே களத்தினை அறிய முற்படுபவர்கள் எழுதி கொடுத்ததை வாசித்தபொழுது(குட்டிக்கதை கூறுபவர் கூட), இவர் இளைஞர்கள் சொன்னதை அவர்கள் மத்தியில் மீண்டும் சொன்னபொழுது கூட்டத்தில் வந்த அந்த துடிப்பு மிக்க இளைஞன், ஆ! இது என் எண்ணமல்லவா இதை சொல்லுபவர்தான் என் தேசத்தினை வழி நடத்த வல்லவர் என்று முடிவு செய்கிறான்.  

ஆ​க இது சிலந்தி பின்னும் வலை போன்று மிக நுண்ணியதும் சிக்கலானதும் கூட. இது நன்மையை தருமா தீமையை தருமா என்பதெல்லாம் காலம் உணர்த்தும்.

​மோடியின் பிரச்சார கதையை கேட்டு எனக்கு மயக்கம் வராத குறைதான், அவ்வளவு திட்டமிடல், நேர்த்தி, உழைப்பு ம்ம்ம் இத ஆட்சிக்கு வந்த பிறகும் தொடரவேண்டும் என்பதே எம்மைப் போன்ற சாமான்யனின் அவா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக