திங்கள், 28 ஏப்ரல், 2014

ஆர்எஸ்எஸ், ​மோடி பற்றிய - கழுகுப் பார்வை.3


பாஜக  ஆட்சிக்கு வந்தால் தொழில் அதிபர்களின் கரம் கொடி கட்டி பறக்கும் என்றும், மதரீதியிலான மோதல்கள் இருக்குமென ஒரு கருத்து எதிர்க்கட்சிகளினால் தொடந்து வைக்கப்படுகின்றது.  அது பொதுமக்களில், அப்பாவி மாற்று மத சகோதரர்களின் எண்ணங்களிலும் விழுகின்றது.  இது போன்ற சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பற்றியும் கொஞ்சம்  அறிவோம். 

முதலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்தின் எண்ணங்கள் இந்த வார இந்தியாடுடேவில் வந்துள்ளது.  அது பற்றி ஒரு பார்வை.

மதம்: இந்தியா மதசார்பற்றது, இதற்கு அரசியல் சாசனம் காரணமல்ல, இந்து மதத்தின் மதசார்பற்ற தன்மையை காரணம். மத சுதந்திரம் இந்திய சமூகத்தின் அடிப்படை. இந்தியாவை மதரீதியிலாக பிரிப்பது சிறுபான்மையினர் உட்பட அனைவரையும் பாதிக்கும்.

பொருளாதாரம்: எப்டிஐயை ஒரளவு வரவேற்கலாம். ஆனால் பொருளாதார முடிவுகள் வெளிநாடுகளிலிருந்து  திணிக்கப்படக்கூடாது. நம்முடைய  தேவைகள் மற்றும் வளங்கள் தொடர்பான ஆய்வின் அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்படவேண்டும். இந்திய மக்கள் மீதான  தாக்கமே வழிகாட்டியாக இருக்கவேண்டும்.

அ​ரசியல்: நாங்கள் அரசியலில் இல்லை, எங்கள் வேலை நமோ என கோசம் எழுப்புவதும் இல்லை. பணியில் கவனம் செலுத்துவதே எங்கள் வேலை. நமக்கு பராம்பரியம் இருக்கிறது. அதிலிருந்து விலகக்கூடாது. எல்லோரையும் சமமாக நடத்தும்  தகுதி அடிப்படையிலான நிர்வாகம் நமக்கு தேவை. நல்ல நிர்வாகம் என்பது அனைத்து  மக்களையும் உள்ளடக்கியது.

பெண்கள்: ​பெண்கள் சமூகத்தின் தூண்கள். ஆண்களுக்கு சமமானவர்கள். எனவே வீடு மற்றும் சமூகத்தில் அவர்களது கண்ணியம் மற்றும் மதிப்பு காக்கப்படுவது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியம். இந்திய எதிர்காலம் அதன் ஆண்களை சார்ந்திருப்பது போலவே பெண்களையும் சார்ந்திருக்கிறது. ஆண்களால் செய்ய இயலும் எந்த பொறுப்புகளையும் பெண்களாலும் நிறைவேற்றமுடியும். பெண்களின் மதிப்பை காக்கவும், ஆண் பெண் உறவின் தன்மையை காக்கவும் பெண்களை இன்ப நுகர்விற்கான பொருளாக விற்பனை செய்யும் முயற்சிகள் தடுக்கப்படவேண்டும்.



சீனாவிற்கான எதிரான போரில் ஆர்எஸ்எஸ் 1962ல் கலந்துகொண்டது,  தேசத்தின் இயற்கை பேரிடர் சூழ்நிலைகளிலும், மறுநிர்மானத்தின்  போதும் அவர்களுடைய பங்களிப்பு அளப்பறியது.  அ​தற்கான அங்கீகாரமே  எந்த மனிதர் அந்த அமைப்பினை தடைசெய்யவேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக இருந்தோரோ அவரே 1963ல் குடியரசு  தின அணிவகுப்பில்  கலந்துகொள்ள அனுமதித்தார். அவர் நேரு.



ஆ​ர்எஸ்எஸ் என்பதின் முழுவிளக்கம் ராஷ்டிரிய சுயம்சேவக்  சங் ஆகும்.

ஆ​ர்எஸ்எஸ் 40துணை அமைப்புகளை கொண்டது. அதில் முக்கியமானவைகள்:

அ​கில பாரதிய வித்யார்தி பரிசத், 1948முதல், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் செயல்படுகின்றது.

வனவாசி கல்யான் ஆசிரமம், 1952முதல், பழங்குடியினர் மத்தியில் செயல்படுகின்றது, சுமார் 28000பள்ளிகளை நடத்துகின்றது.

பாரதிய மஸ்தூர் சங்கம், 1955முதல்,  சர்வதேச  தொழிற்சங்கம் அங்கீகாரம் பெறாத உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம்.

வித்யாபாரதி, 1955 முதல் நாடு முழுவதும் கல்வி அமைப்புகளை நடத்துகின்றது.  25000 பள்ளிகள் இருக்கின்றது.  இந்து கலாச்சாரம் மற்றும் புராணங்களில் கவனம் செலுத்துகின்றது.

விஸ்வ ஹிந்து பரிசத், 1964 முதல், கோவில் கட்டுவது, பசுவதை  தடுப்பு பிரச்சாரம்.

பாரதிய கிசான் சங், 1978 முதல், விவசாயத்தில் பாரம்பரிய விவசாயத்தினை மீட்டெடுப்பது.

பாரதிய ஜனதா கட்சி, 1980முதல், அமைப்பின் அரசியல் பிரிவாக பார்க்கப்படுகின்றது. ஆயினும் கொள்கை ரீதியிலான எதிர்ப்புகள் இருதரப்பிலும் உண்டு.


ஆர்எஸ்எஸ் சம்பந்தமான சொற்களும், விளக்கங்களும்
சுயம்சேவகர்கள் - உறுப்பினர்கள், 50இலட்சம் அமைப்பின் கூற்றுபடி
​பிரச்சாரகர்கள் - 2500 பேர் நாடு முழுவதும்.  பிரச்சாரகர்கள் பிரம்மசர்யம் கடைபிடிக்கவேண்டும், இது ஓராண்டோ அல்லது வாழ்நாள் வரை அமையலாம்.
​ஷாகா:  தினசரி பொதுக்கூட்டம், பிரார்த்தனை, உடற்பயிற்சி, விளையாட்டு, மற்றும் கொள்கை விளக்க விவாத கூட்டத்தின் பெயர்.
​சப்தக்மிசன்: கல்லூரி மற்றும் பள்ளிக்கு சென்று நடத்தும் கூட்டத்தின் பெயர்.

​மோடிக்காக எப்பொழுதும் இல்லாத அளவுக்கு  ஆர்எஸ்எஸ் அதன் அமைப்புகளை களம் இறக்கியுள்ள நிலையில் மோடிக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் இடையிலான தொடர்புகள் பாஜக ஆட்சிக்கு வந்தால் நட்போடு இருக்காது என்பதனையே கடந்தகாலம் காட்டுகின்றது.


இந்த முட்டல் மோதல்களை எவ்வாறு கையாளப்போகிறார்கள் என்பதனை பொறுத்தே கட்சியின் வளர்ச்சியும்,  ஆட்சியின் மீதான நன்மதிப்பும் இருக்கும். பார்க்கலாம், மோடியா இல்லை சங்கங்களின் குரலா...


​குறிஞ்சியின் பார்வை:
​மதசார்பின்மை: கட்டுபாடுகளினாலும் நிர்பந்தங்களினாலும் மக்களிடையே எதனையும் திணிக்கமுடியாது. பெரும்பான்மையான இந்தியர்களில் மதத்தைவிட வாழ்வாதாரம் பற்றிய அச்சமே உள்ளது. ஆகவே அவர்கள் மதம் தாண்டிய நட்புறவை வளர்த்துக்கொள்ளவே விரும்புகின்றனர். எம்முடைய நண்பர்களில் பலரும் அவ்வாறே; எம்மால் மதம் தாண்டியும் நட்புறவை செவ்வனே பேணமுடிவதினால் காங்கிரசு மற்றும் மற்ற கட்சிகளினால் பரப்பபடும் பயம் (பாஜக ஆட்சிக்கு வந்தால் மதமோதல்கள் வரும் என்பதில்) அனாவாசியமாகவே​ப்படுகின்றது.

​பொருளாதாரம்:  சுதேசி சார்ந்தே இருக்கவேண்டும். சில்லரை வணிகத்தில் மட்டுமல்ல வங்கி காப்பீடுகளிலும் அன்னியநுழைவு தடுத்து நிறுத்தப்படவேண்டும். இந்தியர்களினால் எந்த துறையினில் பெரிதும் சாதிக்கமுடியவில்லையோ அங்கேல்லாம் அந்நிய முதலீடு இந்திய கலப்பீடுகளோடு அனுமதிக்கப்படவேண்டும். இந்த தேசம் ஒன்றும் அந்நிய முதலாளிகள் லாபம் சம்பாதிக்கும் இடமாகிவிடக்கூடாது. குறிப்பாக லீவர்களும், ப்ரோக்டர்களும் இந்திய சந்தையிலிருந்து விலக்கப்படவேண்டும்.

மோடியின் பொருளாதார கொள்கைகளில் தனியாரின் பங்கு அரசின் பங்கை விட அதிகம்,  ஆனால் ஆர்எஸ்எஸ்ன் பொருளாதார கொள்கைகள் சுதேசி சார்ந்தது. பார்ப்போம் என்ன செய்யபோகிறார்கள் என்று?

இந்திய தேசியத்தின் ஒற்றுமையை எந்த தனி அமைப்போ, தனி மனிதரோ சீர்குலைக்க நினைத்தால் அவர்கள் இந்தியர்களின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாய் இழந்து நிற்பர் என்பதையே குறிஞ்சி ஆணித்தரமாக நம்புகிறது. எனவே அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழிவகுக்கவேண்டும் என்பதனையே குறிஞ்சி வலியுறுத்துகின்றது.  வருங்காலத்தில் மோடியோ, ஆர்எஸ்எஸோ மக்களின் நம்பிக்கையை இழக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் குறிஞ்சியின் பேனா முனையும் மக்களோடு நிற்கும்.


இ​ந்த கட்டுரைக்கு  தேவையான  ஆதாரங்கள், படங்கள்  பெரும்பாலும் இந்தியாடுடேவிலிருந்து எடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக