புதன், 12 மார்ச், 2014

MH370 - துயரமா? மர்மமா?


 இன்றோடு நான்கு நாட்களாகிவிட்டது, கோலாலம்பூரில் இருந்து கிளம்பி முழுசாய் ஒரு விமானம் 239 பேருடன் காணாமல் போய்... ஏறத்தாழ பத்து நாடுகள் - போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி என கடலிலும், முப்பதுக்கும் மேற்பட்ட ஆகாய் ஊர்திகள் என வானிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 

   பெரும் துயர சம்பவமாக வெளிப்பட்டு இப்போது உலகெங்கும் தலைப்புச்செய்திகளில் மர்மத்துக்குரிய பேசுபொருளாகிவிட்டது.  

     கோலாலம்பூரில் இருந்து நள்ளிரவு சுமார் 12:40 மணியளவில் பீஜிங் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 மலேசிய நிலப்பகுதியை விடுத்து கடலுக்கு மேல் பறந்த கொஞ்சநேரத்தில் அதன் எல்லாவித தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதுவரை விமானத்திலிருந்து எந்தவித அழைப்போ, விமானம் நிலத்தில் மோதிய அறிகுறியோ, கடலில் விழுந்த அடையாளமோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதுதான் நடந்தது. பலதரப்பட்ட, குழப்பமான, முரண்பாடான தகவல்களும் செய்திகளும் இந்த விவாதங்களை சூடேற்றியபடி உள்ளன. மலேசிய-வியட்நாம் கடல் எல்லை குழப்பங்கள், யார் இந்த தேடுதலுக்கு தலைமை வகிப்பது, தகவல்கலை யாருடன் யார் பகிர்ந்து கொள்வது என்பது போன்ற தடுமாற்றங்கள், வியட்நாமிடம் நவீன கருவிகளும், வான் ஊர்திகளும் இல்லாதது, விமானம் விபத்துக்குள்ளானது என்பதை இதுவரை அதிகாரபூர்வமாக ஒத்துக்கொள்ளாமல் 'காணாமல் போனது' என சாதிக்கும் மலேசியன் ஏர்லைன்ஸ்... ஒவ்வொரு நாள் செய்திகளிலும் நமக்கு இந்த தகவல்கள்தான் கிடைக்கின்றன.  அது மட்டுமல்ல, திடீரென முளைத்த ஒரு பெண்மணி நான் அந்த விமானத்தின் துணை விமானியுடன் வேறொரு விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் கும்மாளமடித்திருக்கிறேன் என்று விளம்பரம் தேடுகிறார். இந்த தகவலை சொல்ல இதுவா நேரம்?

    மலேசிய-வியட்நாம் கடல் எல்லைகளில் விமானம் விழுந்திருக்கலாம் என்கிற வாதம் மெல்ல தேய்ந்து வருகிறது. இதுவரை அதற்கான தடயம் கிடைக்கவில்லை. அதிக ஆழமில்லாத அந்த கடல் பகுதியில் இதற்கு மேல் தேட ஒன்றுமில்லை என்று தற்போது தேடல் எல்லையை 50 நாட்டிகல் மைலிலிருந்து மேலும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.

  

     
  எங்கே தேடுவது என்ற குழப்பம்தான் இந்த மீட்பு ஆபரேஷன் தாமதமாகக் காரணம் என்பது வெளிப்படை. காணாமல் போன விமானத்தின் ஒரு பயணியின் கைபேசிக்கு அழைப்பு போகிறது என்று ஒரு தகவல். ஹாங்காங் கடல் பகுதியில் சில விமான பாகங்கள் மிதக்கின்றன என்று ஒரு தகவல். தாய்லாந்து கடல் எல்லை அருகே விமானம் வெடித்து சிதறியது என்று ஒரு பேட்டி. எதுவுமே இன்னும் உறுதியாகவில்லை. 

                  இதனிடையே நேற்று விமானம் தகவல் தொடர்பு அறுந்துபோன இடத்திலிருந்து, எதிர்ப்பக்கமாக திரும்பி மலாக்கா ஜலசந்தியை நோக்கி பயணித்தது என்றது மலேசிய ராணுவம். அதன் ராடாரில் இது பதிவாகியுள்ளது என்றும் 29500 அடி உயரத்தில் பறந்தது என்றும் அடித்து சொன்னது. ஆனால் இன்று மலேசிய கடற்படை அப்படி நடக்க வாய்ப்பேயில்லை, விமானம் அவ்வளவு தூரம்(500 கிமீ) பறந்திருக்காது என்று சொல்லிவிட்டது.  கவனிக்க, ஒரே நாட்டிலேயே பல்வேறு பாதுகாப்புத்துறை பிரிவுகள் வேறுபட்ட தகவல்களை சொல்லும்போது பல நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தேடுதல் முடியும்வரை செய்திகளை அப்படியே நம்புவது ஆகாது. உறவுகளைப் பறிகொடுத்தவர் நிலைதான் பாவம் என்றாகிவிட்டது. பெரும்பான்மையான பயணிகள் சீனாவை சேர்ந்தவர்களாக இருப்பதால் அங்கிருந்து அவர்களை கோலாலம்பூர் அழைத்து வருகிறது மலேசிய ஏர்லைன்ஸ். ஓவ்வொரு பயணிக்கும் ஒவ்வொரு கதை என்றால் அதில் சில சீனர்கள் சிங்கப்பூரில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிடவேலை பார்த்துவிட்டு, இப்போது ஒப்பந்தம் முடிந்து தங்கள் குடும்பத்துடன் சேர திரும்பிக்கொண்டிருந்தனர். பரிதாபம்! 

     இந்த நேரத்தில் 2009இல் நடந்த ஏர் பிரான்ஸ் விமானவிபத்தை நினைவு கூர்வது அவசியம். ஏனெனில் விமானவிபத்து நடந்த இரண்டாம் நாள் விமானத்தின் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அந்த நேரத்தில் சுமார் ஐம்பது உடல்களையே மீட்கமுடிந்தது. நீண்டகால தேடலுக்கு பின்னர் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து கருப்பு பெட்டியும் சுமார் 104 உடல்களும் கடலுக்கடியில் மிச்சமிருந்த விமானத்தின் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டது. மேலும் எழுபது பயணிகளின் உடல்கள் மீட்கப்படவேயில்லை. ஒரு விமான விபத்தில் இதெல்லாமும் சாத்தியம். 

சில புரளிகளும் உண்மைகளும்:

1. விமானத்தில் நான்கு நபர்கள் வரை போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளனர் - உண்மை: இதுவரை இரு ஈரானியர்கள் மட்டுமே போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2. காணாமல் போன விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணித்த இருவரும் தீவிரவாதிகள். விமானம் கடத்தப்பட்டுள்ளது  -  உண்மை: அவர்கள் போலி பாஸ்போர்ட்டில் பயணித்திருந்தாலும் இருவருக்கும் எந்தவித குற்றப்பிண்னனியும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. விமானம் கடத்தப்பட்டிருந்தாலும் இந்நேரம் கடத்தியவர்கள் அதிகாரிகளை தொடர்புகொண்டிருக்கவேண்டும். அதுவும் நடக்கவில்லை.

3. விமானத்தில் பயணம் செய்த 20 Freescale semiconductors பணியாளர்களை வைத்து சீனா தான் கண்டுபிடித்த - விமானத்தை காணாமல் போகச்செய்யும் தொழில்நுட்பத்தை சோதனை செய்கிறது - உண்மை: செமிகண்டக்டர் தொழிற்சாலைல வேலை செய்றது குத்தமாய்யா? இப்படியா அள்ளிவிடுவாங்க? இந்த தொழில்நுட்பமெல்லாம் வளர்ந்த நாடுகள் எப்போதோ கண்டுபிடித்துவிட்டன. மேலும் இவ்வளவு நாட்கள் இவ்வளவு நாடுகளை வெறுப்பேற்றும் செயலை யாரும் செய்யமாட்டார்கள்.

 விமானம் நிலத்தில் எங்காவது விழுந்து வெடித்திருந்தாலோ அல்லது தவறாக தரையிறங்கியிருந்தாலோ இவ்வளவு நாள் தகவல் தொடர்பு இல்லாமலிருக்க வாய்ப்பேயில்லை. ஆகவே கடற்பகுதியில்தான் தேடுதல் தீவிரப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது. கடைசியாக வந்த தகவல்களின் படி தேடுதல் அந்தமான் கடல் பகுதிவரை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

   எப்படியாவது அந்த விமானத்தின் கதியை சீக்கிரம் அறியசெய்யவேண்டும். உறவுகளை பிரிந்து தவிப்பவர்களுக்கு நம் பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு. 



   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக