சனி, 29 மார்ச், 2014

ஆ​ள்வோர் அரியணையில் வீட்டிருக்க வேண்டுமா அல்லது நம்மோடு இருக்கவேண்டுமா முடிவு நம்கையில்.!

எது நடக்க கூடாது என்று நினைத்தோமோ அதை நோக்கியே நகருகின்றோம். திரு.அரவிந்த்கெஜ்ரிவாலின் அவசரத்தனத்தாலும், மூடத்தனத்தாலும் வருங்காலத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்களின் நம்பிக்கையை அவர் துவம்சம் செய்துகொண்டிருக்கிறார் என்பதையே பின்வரும் ஒட்டளிப்பு குறிக்கின்றது...



அ​ரவிந்த்கெஜ்ரிவால் அவர்களை மக்களிடேயே அஸ்தமித்துக்கொண்டிருந்த அரசியல் நம்பிக்கையை மீட்டெடுக்கும் அற்புதசக்தியாகவே யாம் பார்த்தோம். ஆனால் அவர் நம்மின் நம்பிக்கையினை மொத்தமாக பொய்த்துவிட்டார்... அவரின் மீது  நான் கொண்டிருந்த தனிப்பட்ட நம்பிக்கையும் கனவும் பொய்த்துவிட்டது...

​யார் வேண்டுமானாலும் அரியணையின் மீதேறி மக்களின் நல்வாழ்வுக்கு பரிபாலனம் செய்யலாம் என்று அவர் விதைத்தை, யானை  தானே  தன் மீது மண்ணள்ளி போட்டுகொள்வதை போல அவரே அவசரக்கோலம் கொண்டு சிதைத்துவிட்டார், 

ஆம் ஆத்மியே ஆண்டிருக்கலாம் டெல்லியை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு காங்கிரசுக்கு வேறுவழியே இருந்திருக்காது ஆதரவு  தருவதை விட; மாற்று சக்தியின் வலிமையை பரம்பரை அரசியல்வாதிகளுக்கு காண்பித்திருக்கலாம், சாதாரண மக்களின் ஆட்சியாக அது இருந்திருக்கும்; வரலாறு படைத்திருக்கலாம்.

இ​து பரம்பரை பரம்பரையாக அரசியலில் மையம் கொண்டிருக்கும் சக்திகளுக்கு மகிழ்ச்சி  தரும் செய்தியாக அமையும்,  இனி எளியோர் அரசியலில் நுழைய தயக்கம் கொள்வர்...  ஆயினும் எளிதில் எளியோர் தம் கனவினை விடோம் ஆம் அதனை வென்றெடுப்போம், வீழ்வது யாமாயுனும் வாழ்வது தேசமாயிருக்கட்டும்.

​மக்களின் நல் வாழ்வு பற்றி சிந்திக்காத எந்த அரசியல்  தலைமையையும் விழ்த்துவோம்.

​மேலும் சமீபகாலங்களில் அரவிந்த்கெஜ்ரிவால் அவர்களை  தனிப்பட்ட முறையில்  உடல்ரீதியாக தாக்குபவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். அவரது கருத்தினை எதிர்த்தால் கருத்தால் எதிருங்கள் அதை விட்டு வன்முறையால் அல்ல.  இது அவர் மக்களிடையே  மக்களோடு இருந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தினை மாற்றியமைக்கும்.  இது நமக்கு கிடைத்த பின்னடைவாகும்.  ஆள்வோர் கிழிறங்கி வரமாட்டார்கள் நம்மோடு கலக்கமாட்டார்கள், அப்புறம் எப்படி நம்மின் பிரச்சினை அவர்களுக்கு புரியும் என்று எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள்?

ஆ​ள்வோர் நம்மோடு கலக்காமல் நம்மின்  நடைமுறை பிரச்சினைகளை பற்றி அறியாமலே​யே புரத்திலும், கார்டனிலும், எஸ்டேட்களிலும் இருந்து கொண்டே ஆட்சி நடத்தும் அவலத்தினை இனியும் தொடர நினைக்கிறீர்களா... அறிவிலிகளே (மன்னிக்கவும் முதன்முறையாக குறிஞ்சியில் கடும் வார்த்தை பிரயோகம் என எண்ணுகின்றேன்).



ஆ​ள்வோர் என்பவர்கள் மக்களின் பிரச்சினையை அறிய நகர்வலம் வந்த வரலாறு கொண்ட நாடு இது.  ஆ​யினும் இன்று என்ன நடக்கிறது நம்மின் தினசரி பிரச்சினைகள் என்னவென்று எந்த அரசியல்வாதிக்காவது தெரியுமா. நாம் வீட்டிலிருந்து எவ்வளவு இன்னல்களுக்கிடையே பேருந்தினை பிடித்து பணி சென்று திரும்புகிறோம் என்று அறிவார்களா. எவ்வளவு கூட்டம், எவ்வளவு விலைவாசி என்றாவது புரியுமா. அவ்வளவு ஏன் நம்முடைய சகோதரிகள் வெளியிடத்தில் இயற்கை உபாதைகளுக்கு என்று ஒதுங்க நல்ல கழிப்பறை உண்டா இந்த தேசத்தில்.

​மகாத்மா காந்தியடிகள் "என்று இந்த தேசத்தில் பெண்ணொருத்தி நள்ளிரவில் தனியே வெளியே சென்று வீடு திரும்புகிறாளோ அன்றே இந்த தேசம் சுதந்திரம் பெற்றது" என்றார்.  

யாம் கூறுவதாவது "என்று இந்த  தேசத்தில் என் சகோதரி வெளியிடத்தில் நிம்மதியாக இயற்கை உபாதைகளை கழிக்க முடிகிறதோ அன்றே இந்த தேசம் சுதந்திரம் பெற்றதாகும்".

எ​ன்று ஒரு மக்கள் சேவகன் என்பவர் நம்மை போன்றே சாதாரண பேருந்துகளில் பயணித்து, நம்முடைய பிள்ளைகளைப் போல அரசியல் பள்ளிகளில் அவர்தம் பிள்ளைகளையும் சேர்த்து, அரசு மருத்துவமனைகளில் நம்மை போன்று சிகிச்சை பெருவார்களோ அன்றுதான் நம்முடைய பிரச்சினையின் ஆணி வேர் என்னவென்று ஆள்வோர்க்கு புரியும், அப்பொழுதுதான் அவர்களால் தீர்வு காணமுடியும். களத்திற்கே வராமல் யாராலும் களப்பணியாற்ற முடியாது என்பேன்.

​காமராசர் அவர்கள் அவர்தம் இளம் பிராயத்து வறுமையினாலும், அதன் தாக்கத்தினால் கல்வி பெற முடியாமல் போனதின் வலியையும்  அவரின் அடி மனதோடு ஆழ்ந்து துன்புறுத்தியிருக்கவேண்டும் என்பேன், அதனை அவர் புரிந்து கொண்டதால்தான் ஊர்தோறும் பள்ளிகளையும், அதில் பிள்ளைகள்  பசியால் அவதியுறாமல் தொடர்ந்து படிக்க மதிய உணவுதிட்டத்தினை கொண்டுவர முடிந்தது.  ஏற்கனவே குறிஞ்சியின் கேள்வி பகுதியில் வந்த மற்றொரு  பதிவினையும் நினைவுகூர்கிறோம் இங்கு.. ஐயா காமராசர் முதல்வராக இருந்த பொழுது நடந்த சம்பவம் பெல் தொழிற்சாலை அமைப்பதற்காக மத்திய அரசு அதிகாரிகள் தமிழக அதிகாரிகளோடு தமிழகம் முழுவது சுற்றி பார்த்த பிறகு இடம் கிடைக்கவில்லை எனவே வடநாட்டுக்கு செல்கின்றோம் என்றனர். தமிழக அதிகாரிகளும் அதற்கு ஓத்து ஓதினர். அப்பொழுது காமராசர் அவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் என்ன மாதிரி இடம் பார்க்கிறீர்கள் என்றார், மத்திய அதிகாரிகளோ ஆண்டு முழுவதும் தண்ணீர் வேண்டும் என்றனர், அப்படியானால் திருச்சிக்கு அருகே போய் பாருங்கள் என்றார், இப்படித்தான் பெல் தொழிற்சாலை தமிழகத்திற்கு வந்தது. அவர் கான்வென்டில் படித்தவர் அல்ல, இலக்கணங்கள் படைத்தவரும் அல்ல ஆயினும் தமிழகத்தின் பூகோள அறிவு அவரிடம் இருந்தது.

இப்பொழுது சொல்லுங்கள் ​யார் மக்கள் தலைவர் என்று? மக்களின் தேவை அறிந்தால் போதும் மக்கள் ஆட்சி நடத்தலாம் அதைவிட்டுவிட்டு ஹார்வேர்டு பட்டதாரிகள் கதையெல்லாம் இங்கே சந்தி சிரிக்கின்றது.

இ​ன்று நடப்பதென்ன ஆட்சி அதிகாரம் என்பது அம்பானிக்களும், டாடாக்களும், சுப்ரதோய்களும்... மேமாதத்திற்கு பிறகு வரும் ஆட்சியில் அடானிகளும் வளம் பெறவே.  




ஆள்வோரை அரியணையிலிருந்து அகற்றி அனுதினமும் வேண்டாம் வாரத்தில் இரண்டொரு நாட்களாவது நம்மைப் போன்ற வாழ்வினை வாழ்ந்து பார்க்க சொல்வோம், அப்போதுதான் அவர்களுக்கு நமது பிரச்சினை என்னவென்று புரியும்.  எந்த தலைவனுக்கும் வால் தூக்காதீர்கள், ஆம் குறைந்தபட்சம் சமூக சேவகனுக்காவது கொடி பிடியுங்கள்; அரசியல்வாதிகளுக்கு அல்ல. எப்பொழுது அரசியல்வாதியாக ஒருவர் மாறுகின்றாரோ அப்பொழுதே அவர் நமது சேவகனாகிறார் என்பதை நினைவில் நிறுத்துவோம்.

ஆக இது மாற்றியமைக்கபடவேண்டுமானால் நல்லெண்ணமும், தியாக சிந்தனையும் கொண்ட இளைஞர்கள் அரசியலில் களம் புகவேண்டும்; மக்களோடு மக்களாய் இருந்து பணியாற்ற வேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக