வியாழன், 5 டிசம்பர், 2013

ஒரு ஜப்பானியரும் ஒரு தமிழனும்...

இரண்டொரு நாட்களுக்கு முன்பு ஒரு மின் உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்கு வேலை நிமித்தம் சென்றிருந்தேன். அந்த நிறுவனமானது சமீபத்தில்தான் இந்திய மேலாண்மையிலிருந்து ஜப்பானிய மேலாண்மைக்கு மாறியிருந்தது.  அங்கு நான் சந்திக்க வேண்டிய நபர் ஜப்பானியர் ஆவார். என்னுடைய நிறுவனத்துக்கும் அந்த ஜப்பானிய நிறுவனத்துக்கும் இடையே வேறொரு நிறுவனத்தின் தொடர்பு இருந்தது அதாவது மிடில் மேன்ங்க.  அந்த மிடில் மேன் நிறுவனத்திடம் எனக்கு ஜப்பானிய நிறுவனத்தின் நபரோடு சந்திக்க வேண்டிய நேரத்தை முடிவு செய்ய சொன்னேன். அதற்கு அவர் நீ சரியான  நேரத்தை சொல்லு ஏனெனில் அந்த நேரத்தில் அந்த ஜப்பானியர் அந்த தொழிற்சாலையின் முகப்பிலே உனக்காக காத்திருப்பார் என்றும் ஆகையினால்  நீ சொன்னபடி போய் சேர் என்றார்.  அது என்னை உசுப்பிவிட்டது அதனால் குறித்த நேரத்திற்கு 30நிமிடம் முந்திச் சென்றேன்.  அதுவும் அந்த ஜப்பானியரின் இருக்கைக்கு நேரடியாக சென்றுவிட்டேன். எ​னக்கு தெரியும் அது மதிய உணவு இடைவேளை ஆகையினால் அவர் தம் இருக்கையில் குட்டி தூக்கம் போட்டுக்கொண்டிருப்பார் (கொரியர்களும், ஜப்பானியர்களும் மதிய உணவு இடைவேளையின் போது சிறிய உறக்கம் கொள்வது வழக்கம்) என்றிருந்த எனக்கு ...

அங்கு சென்றடவுடன் காத்திருந்த ஆச்சரியம் அவர் 65 வயது நபர் மேலும் தனது கணினியில் ஏதோ வேலை பார்த்துகொண்டிருந்தார்.  அவர் வயது அவரது சுறுசுறுப்புக்கு எந்த பஞ்சமும் ஏற்படுத்தவில்லை. சிறிது ஒட்டமும் நடையுமாக  அவர் என்னை வேலை பார்க்க வேண்டிய இடத்துக்கு நான் எவ்வளவோ மறுத்தும் என்னுடைய உடைமைகளில் பாதி வாங்கிகொண்டு அதாங்க  எனது பொதி சுமைகளில் சரி பாதி வாங்கிகொண்டு அழைத்துச் சென்றார்.  

​ஜப்பானில் வேலை ஒய்வு வயது 62ஆகும், அதற்கு மேல் நாம் விருப்பபட்டால் வேலை பார்க்கலாமாம் ஆனால் 30% சம்பளம் குறைவாக இருக்குமாம். இவர் ஆண்டின் பாதி நாட்கள் உலகம் முழுவதும் சுற்றிகொண்டிருப்பாராம் வேலை நிமித்தமாக, அவரது மனைவி மட்டும் ஜப்பானில் ஒரே மகன்  தனிக்குடித்தனம்  சென்று விட்டாராம்.  (இங்கய நிறைய குடும்பங்களில் சங்கதி அப்படித்தான்) அடுத்த சில நாட்களில் லிபியா செல்ல விருப்பதாக கூறினார். அவரை பார்த்த பிறகு என்னுடைய தன்னம்பிக்கையானது உயர்ந்தது என்று சொல்ல தேவையில்லை.



சரி நம்ம சங்கதிக்கு வருவோம்..

​நான் புகுசிமா அணு மின் உற்பத்தி நிலையத்தினை பற்றி விசாரித்தேன். அது அவரது வீட்டிலிருந்து 300கிமீ  தொலைவில் உள்ளதாகவும், 4 அணு உலைகளே இன்றைய நிலையில் உற்பத்தியில் இருப்பதாகவும் மற்றவை நிறுத்தபட்டிருப்பதாகவும்( மெயின்டனன்ஸ் காரணங்களுக்காகவும்) கூறினார். மேலும் இனிமேல் ஜப்பானில் அணு உலைகளுக்கு அனுமதி கிடையாது என்றும்  ஏற்கனவே உபயோகத்திலுள்ள அல்லது கட்டமைப்பு செய்யப்படும் உலைகளைத் தவிர்த்து என்றார். மேலும் சிறிது சிறிதாக மாற்று வழி மின்சாரத்துக்கு ஜப்பான் செல்லவிருப்பதாகவும் இனி 40ஆண்டுகளில் அங்கு அணு நிலையமே இருக்காது என்றும் கூறினார்.

ஆ​னால் இந்தியாவில் நடப்பது என்ன என்று தோன்றியது.  அணு உலை மாற்று வழி மின்சாரம் என்பதனை நானும் ஒத்துக்கொள்கிறேன்.  அதுவும் உலகம் வெப்பமயமாக்கலின் தாக்கத்தினை குறைக்க வேண்டுமாயின், நாம் அனல் மின்சாரத்தை அறவே ஒழிக்க வேண்டும் அது சாத்தியமாக வேண்டுமாயின் அணு மின்சாரமே உடனடி  தேவை.   

ஆனால் அ​ணு மின்சாரமும்  தீர்வு அல்ல அது ஒரு  தற்காலிக  நீர் குமிழி போன்று என்பது என்னுடைய  தாழ்மையான கருத்து, குறைந்தபட்சம் இந்திய அரசாங்கம் அணு மின் உலைக்கான செலவை பொது கணக்காளரிடம் வைத்தும், பாதுகாப்பு சோதனை பற்றிய ஆண்டறிக்கையை மக்களிடம் பொதுவில் வைத்தும் விவாதிக்கலாமே. அறிவியல் ஒரே நாளில் இன்றைய நிலையே அடையவில்லைதான் ஆனால் அதற்கு நாம் கொடுக்க வேண்டிய விலைதான் இப்பொழுதைய கேள்வி?

அ​துவும் தமிழகம் முழுவதும் சுற்றுபுற சூழலியலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்கள் குறித்து மக்களிடையே  அச்சம்  தவிர்க்கும் எந்த நடவடிக்கைகளையும் எந்த அரசாங்கமும் எடுத்ததாக தெரியவில்லை, தெற்கே கூடன்குளம் அணுமின்சாரதிட்டம், மேற்கே தேனி நியுட்ரினோ ஆய்வகம், கிழக்கே தஞ்சை மீத்தேன் உறிஞ்சும் திட்டம், வடமேற்கே கோவை கெயில் வாயு குழாய பதிப்பு திட்டம் எங்கு காணிலும் தமிழனின் நிம்மதியை பறிக்கும் திட்டமாக இருப்பதாக சூழலியாளர்களின் கேள்வியை அலட்சியபடுத்த மனம் முன்வரமறுக்கிறது. சம்பந்தபட்டவர்கள் கவனிப்பார்களா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக