செவ்வாய், 8 அக்டோபர், 2013

அறிந்து கொள்வோம் - தோழர் தியாகு


   'வெற்றி அல்லது வீரச்சாவு' என்கிற முழக்கத்துடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்துவரும் தோழர் தியாகு அவர்களைப் பற்றி பெரும்பான்மை ஊடகங்கள் வாய்திறக்காது. தற்போதைக்கு தெலங்கானா 'நாடகம்'தான் அனைத்து ஊடகங்களுக்கு முக்கிய செய்தி. தோழரின் உயிரே பிரிந்தாலும் பொதுமக்களுக்கு சொல்வார்களா என்று தெரியாது. மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பெரும்பான்மை இளைய சமுதாயத்திற்கு தோழர் யார் என்றே தெரியாது. பல வருடங்களுக்கு முன்பு நக்சலைட்டாக இருந்து தூக்குதண்டனை விதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர் என்பதும் புகழ்பெற்ற 'மூலதனம்' நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் என்பதும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆகவே இங்கே நம்மால் முடிந்த அளவு அவரைப் பற்றிய விவரங்களைத் தருகிறோம்.

  குறைந்தபட்சம் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளாமல் இருந்தாலாவது தோழர் போராட்டத்தைக் கைவிட வாய்ப்புள்ளது.



     தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகுவின் கோரிக்கைகள் - காமன் வெல்த் அமைப்பில் இருந்து சிங்கள அரசை நீக்க, இந்திய அரசு முதலில் வலியுறுத்த வேண்டும். இரண்டாவதாக, காமன் வெல்த் நாடுகளின் மாநாட்டைக் கொழும்பில் நடத்த அனுமதிக்கக்கூடாது. மூன்றாவதாக, அப்படியே கொழும்பில் நடந்தாலும், இந்திய அரசோ மற்ற காமன் வெல்த் உறுப்பு நாடுகளோ அதில் கலந்துகொள்ளக் கூடாது. இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இலங்கை ஆயுதப் படையினருக்கோ, மற்ற துறையினருக்கோ எவ்வகைப் பயிற்சியும் அளிக்கக்கூடாது. இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடல்வழிக் கம்பி வடம் அமைத்து மின்சாரம் கொடுப்பதற்குச் செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டும். தமிழகச் சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தும் தீர்மானங்களுக்கு மத்திய அரசும் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற உறுதிப்பாட்டுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். 

     திங்களன்று மதியம் காவல்துறையினர் அவர் உண்ணாவிரதம் இருந்த வள்ளுவர்கோட்டத்தில் இருந்து அவரை அகற்றி வலுக்கட்டாயமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனாலும் அங்கிருந்தே உண்ணாவிரதம் தொடரும் என்று அறிவித்துள்ள தோழர் தமிழுணர்வாளர்களும், மாணவர்களும் போராட்டத்தைத் தொடரவேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார். 

  தோழர் தியாகுவின் பொதுவாழ்க்கை என்பது நீண்டநெடிய வரலாறு உடையது.  தோழர் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவாரூரில்தான். சிறு வயதிலிருந்தே திருவாரூரில் பெரியார்அண்ணாஜீவானந்தம், காமராசர், கலைஞர் போன்ற பல தலைவர்களின் பொதுக்கூட்டங்களை ஆர்வமாகக் கேட்டு வளர்ந்தார் தோழர் தியாகு. அக்காலத்தில் படிப்பகங்களில் கிடைத்த தி.மு.க, காங்கிரஸ், தமிழ்த் தேசிய ஆற்றல்கள் உள்ளிட்டோரது பத்திரிக்கைகள் அனைத்தையும் விடாமல் வாசிக்கும் பழக்கமிருந்தது அவருக்கு. 1965 ஆம் ஆண்டு, அவரது குடும்பம் வலங்கைமானுக்கு குடி பெயர்ந்தது. அங்கு ஒரு தட்டச்சுப் பள்ளியில் சேர்ந்த தோழர் தியாகு, அதனை நடத்திவந்த திரு.அமீர்ஜான் என்பவரோடு நண்பரானார். தீவிர சாதி, சமய மறுப்பாளரான திரு.அமீர்ஜான் தோழர் தியாகுவை நாத்திகனாக மாற்றியதோடு, அவரது சிந்தனை முறையிலும் தீவிர தாக்கங்களை உண்டாக்கினார். 

   பெரியாரிடமிருந்து பிரிந்துவந்த குத்தூசி குருசாமி போன்றோர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினர். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த முதல் மாநாட்டிற்கு திரு அமீர்ஜானுடன் சென்றபோது அங்கே மார்க்ஸ், லெனின் போன்றோரது புத்தகங்கள் விற்கப்பட்டன. அப்போதுதான் தோழர் தியாகுவிற்கு முதன்முதலில் மார்க்சியத்தோடு பரிச்சயம் ஏற்பட்டது. பொதுவுடைமை புத்தகங்களை அதிகமாக வாங்கிப் படித்த தியாகு அச்சிந்தனையில் ஈர்க்கப்பட்ட அதேவேளையில், அவரது காங்கிரஸ் கட்சி நண்பர்கள் பலரது வற்புறுத்தலின்பேரில், 1967இல், ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தனது முதல் உரையை ஆற்றினார். 1967 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தபின் காமராசரின் தூண்டுதலில் தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு என்ற அமைப்பு உருவானது. அதன் மாநாட்டில் பேசுவதற்காக தோழர் தியாகு முதன்முதலில் சென்னை சென்றார். காமராசர்கண்ணதாசன்ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் அமர்ந்திருந்த மேடையில், யாருக்கும் அஞ்சாமல் துணிந்து தன்னுடைய கருத்துக்களை முன்வைத்ததால் அவரது உரையை இரசித்த காமராசர் அன்று முதல் எங்கு மாநாடு நடந்தாலும் தோழர் தியாகுவையே முதலில் பேசுமாறு பணித்தார்.

  பொதுவுடைமைச் சித்தாந்த்தால் முழுமையாக கவரப்பட்ட தோழர் தியாகு, காங்கிரஸ் ஒரு பணக்காரக் கட்சி என்பதையும் அது பொதுவுடைமையையும் சமநீதியையும் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியையும் இந்தியப் பொதுவிடைமை(மார்க்சிய) கட்சியையும் அவற்றின் செயல்பாடுகளையும் நிராகரித்த இந்தியப் பொதுவுடைமை(மார்க்சிய-லெனினிய) கட்சியின் அழித்தொழிப்புக் கொள்கையினால் கவரப்பட்ட தோழர் தியாகுவின் மேல் கீழ்வெண்மணி சாதீயப் படுகொலை மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. ஆதிக்கச் சாதியனராகவும் பெரிய நிலச்சுவாந்தாரகளாகவும் இருந்த ஆதிக்கக் கும்பலை அழிக்கும் நோக்கில் 1969 இல்,தன் கல்லூரிப் படிப்பைத் துறந்து, வீட்டைவிட்டு வெளியேறி நக்சல் இயக்கத்தில் இணைந்தார்.

 அமைப்புத் தோழர்களுடன் சேர்ந்து அழித்தொழிப்பு வேளையில் ஈடுபட்டிருந்த தோழர் தியாகு 1970 ஆம் ஆண்டு,தனது பத்தொன்பதாவது வயதில் சிறையிலடைக்கப்பட்டார். 1971 இல் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே தன் தோழர்களுடன் தப்பிக்க முயற்சி செய்தார். சிறையில் இருந்தாலும் தோழர்கள் சோர்ந்துவிடவில்லை எனும் செய்தியைக் கட்சிக்கு அனுப்புவதே அவர்களது நோக்கமாக இருந்தது. பின்னாட்களில் அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது, சிறையிலடைக்கப் பட்டாலும் பிற தோழர்களுடன் சேர்ந்து தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடினார். ”சிறைப்படுத்தப்பட்டோர் நல உரிமைச் சங்கம்”, “எழுத்தறிவு இயக்கம்” போன்ற பல செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்துவந்தார். சிறையிலிருந்த காலகட்டத்தில் லெனினின் எழுத்துக்களை அதிகம் வாசிக்கத் தொடங்கிய தோழர் தியாகு, இந்தியப் பொதுவுடைமை(மா.லெ) கட்சியின் எதார்த்தத்துக்குப் புறம்பான அழித்தொழித்தல் கொள்கையின் தோல்வியை உணர்ந்தார். 

   1975 இல் தோழர் தியாகு சிறையிலிருந்தவாறே காரல் மார்க்ஸ் எழுதிய ”மூலதனம்” புத்தகத்தின் முதல் பகுதியை மொழிபெயர்க்கத் தொடங்கினார். தோழர் பாலசுப்பிரமணியத்தின் வேண்டுகோளுக்கிணங்கி மீதமுள்ள மூலதனத்தின் இரண்டு பகுதிகளையும் 1980, ஜனவரியில் தொடங்கி, நவம்பரில் முடித்தார். அந்தப் புத்தகம் NCBHஆல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.1983 இல், தமிழகத்தில் ஈழப் போராட்டம் வலுப் பெற்றபோது, சிறைக்குள்ளும் பெரிய எழுச்சிகள் ஏற்பட்டன. அக்காலத்தில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோழர் தியாகு, 1500 கைதிகளைத் திரட்டி ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தினார். சிறையிலிருந்தபோதே தன்னை இந்தியப் பொதுவுடைமை(மார்க்சிய) கட்சியில் இணைத்துக் கொண்ட தோழர் தியாகு,1985 நவம்பர் மாத இறுதியில் சிறையிலிருந்து விடுதலையானார்.


   1987 செப்டம்பர் 15 அன்று, ஈழத்தில் திலீபன் தன் உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவக்கினார். அவருக்கு ஆதரவாக தோழர் தியாகுவும் சிலரும் சேர்ந்து ”திலீபன் மன்றம்” ஒன்றை ஆரம்பித்தனர். அன்று நடைபெற்ற கூட்டத்தில், தோழர் தியாகு ஈழப் போராட்டத்தைப் பற்றி மக்களிடம் விரிவாக விளக்கினார். ஈழப் போராட்டம் குறித்து தவறான பார்வையை விமர்சிக்கவும் அவர் தயங்கவில்லை. மறுநாள் அவர் இந்தியப் பொதுவுடைமை(மார்க்சிய) கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். 1993 இல் தோழர் தியாகுவும் சுப. வீரபாண்டியனும் இணைந்து ஜனவரி, 1994இல் “தமிழ் தமிழர் இயக்கம்” துவங்கினர். பின்னாளில் அதிலிருந்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உருவானது.தமிழ்த் தமிழர் இயக்கம், தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட நான்கு அமைப்புகள் இணைந்து தமிழ்த் தேசிய முன்னனியை உருவாக்கின. தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான காவிரி நதிநீர்ப் பங்கீடு, முல்லைப் பெரியாறு உள்ளிட்டவைகளுக்கு வீரியத்துடன் பல்வேறு போராட்டங்களை இக்கூட்டமைப்பு முன்னெடுத்த்து. தமிழ்த் தேசிய விடுதலைக் இயக்கம் உருவானபோது அதன் விடுதலை முழக்கமாக ”சமூகநீதித் தமிழ்த் தேசம்” முன்வைக்கப்பட்டது. சமூக நீதியை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதே இவ்வமைப்பின் நோக்கமாகும். 

   2009 இன் ஈழப் போரின் இறுதியில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இயக்கங்களும் கட்சிகளும் பிரபாகரன் திரும்பி வருவார், அடுத்தகட்ட ஈழப் போர் நிகழும் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் ஈழப் போராட்டத்தில் புலிகளின் பாத்திரம் முடிந்துவிட்டது, ஈழப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது என்பதை உணர்ந்து வெளியிட்டவர் தோழர் தியாகு. ஈழப் போரின் உச்சத்தில் தமிழகத்தினால் இந்திய அரசின் கழுத்தை நெறித்து போரை நிறுத்த முடியாதமைக்குக் காரணம் வெகுமக்கள் ஆதரவைப் பெற்ற ஒரு வலிமையான தமிழ்த் தேசிய இயக்கம் இல்லாததே என்று உணர்ந்துகொண்டவர் தோழர் தியாகு.



  தோழர் தியாகு தமிழ்த் தேசிய விடுதலை உணர்வை மக்களிடம் கட்டி எழுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக முதல் தாய்த் தமிழ்ப் பள்ளியை 07 ஜூன், 1993 இல் துவக்கினார். நாளைய தலைமுறையினரான குழந்தைகளுக்கு தமிழுணர்வு ஊட்டுவதும், அதன்மூலம் தமிழ்த் தேசிய உணர்வுக்கான அடித்தளத்தை அமைப்பதே இப்பள்ளிகளின் பிரதான அரசியல் நேக்கமாக இருந்து வருகிறது.தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள தாய்த் தமிழ்ப் பள்ளிகள், தமிழகமெங்கும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

  ஈழப் போருக்குப் பிந்தைய காலத்தில் பல்வேறு தமிழக அரசியல் இயக்கங்கள் அடையாளப் போராட்டங்களிலே சிக்குண்ட இக்காலகட்டத்திலே, தமிழர்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் விதமாக அக்டோபர் 1, 2013 லிருந்து, இலங்கையைக் காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும், இனப்படுகொலை நடந்த அம்மண்ணில் காமன்வெல்த் நடைபெறக் கூடாது. மீறி நடந்தால் இந்தியா அதில் கலந்துகொள்ளக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, “வெற்றி அல்லது வீரச்சாவு” எனும் முழக்கத்துடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார்.

   பொதுவாழ்க்கையில், தமிழ்த்தேசியப் போராட்டங்களில் தன் பெயரை அழுத்தமாக முத்திரை பதித்துள்ள தோழர் தியாகு சிறை வாழ்க்கை தொடராக ஜூனியர் விகடனில் “சுவருக்குள் சித்திரங்கள்”, “கம்பிக்குள் வெளிச்சங்கள்”, “நந்தன் ஏட்டில்”, “விலங்கிற்குள் மனிதர்கள்” ஆகிய தொடர்களை எழுதியுள்ளார். 'சுவருக்குள் சித்திரங்கள்', 'கம்பிக்குள் வெளிச்சங்கள்' பற்றி பெரும்பாலான புத்தகவிரும்பிகள் அறிந்திருப்பார்கள். 

    தோழரின் போராட்டம் முழுவெற்றியடையவும், தோழர் முழு உடல்நலத்தோடு மீண்டும் வந்து இளைய தலைமுறைக்கு தமிழுணர்வு ஊட்டவும் குறிஞ்சி வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறது. 


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக