கவனமாகப் படிக்க ஆரம்பியுங்கள். இல்லாவிட்டால் இதையே இன்னொரு முறை மீண்டும் படித்துப் பார்க்க வேண்டி வரலாம்.
அதுவா..அதைக்குறிப்பிட்ட தொழில்துறையினர் மட்டும்தான் பயன்படுத்துவார்கள்..
விலை கொடுத்து வாங்குவதா? அம்மாடி. நம்மால் எப்படி முடியும்? இப்படி நினைக்க வைத்தது ஒரு காலம்.
மிக மிகப் பயனுள்ளதாக இருக்கிறதே..அட.. இத்தனை வேலைகளுக்கு இதைப் பயன்படுத்த முடியுமா? ஆடை அணிகலன் முதற்கொண்டு அழகுக் கலை வரை பலவற்றிற்கும் பயன் தருமா? ஆச்சரியமாக இருக்கிறதே..
இவ்வளவு சின்ன இடமே போதுமா? பரவாயில்லையே.. ஆகாகா.. எவ்வளவு அருமையான பயன்பாடு.. மிக மிகப் பயனுள்ள கருவிதான்..நல்லது..இதைப் பயன்படுத்தி இந்த வேலையைச் செய்து முடித்துவிட்டேன். சாதனம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் இல்லையா..இதோ..தகுந்த உறை இட்டு மூடி வைப்பேன்..(இந்த அக்கறை எல்லாம் கொஞ்சக் காலத்திற்குத்தான்..அப்புறம் கவனிக்க மாட்டீர்கள்)
அடடடா.. என்னவொரு வசதி..எங்கு வேண்டுமானாலும் எடுத்துப் போகலாம் போலிருக்கிறதே… இது இல்லாமல் எதுவும் ஓடாது..அத்தியாவசிய சாதனம் ஆகிவிட்டது..என்னால் இதைப் பிரிந்து இருக்கவே முடியாது..
அன்பளிப்புச் செய்வதற்கு இதைவிட அருமையான பொருள் வேறென்ன இருக்க முடியும்? இது நல்ல பயன்தரக் கூடியது..இது உனக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.. என் நினைவாக இதை நீ வைத்துக் கொள்.. பயன்படுத்து..
அட..அழகழகான எழுத்துக்களை இதைக் கொண்டு இப்படியெல்லாம் உருவாக்கலாமா? அருமையான கண்டுபிடிப்பாக இருக்கிறதே.. இதை அப்படியே ஏற்றுக் கொள்வோம்..
நீங்கள் சிகை அலங்காரக் கலைஞரா? சிறு கடை வைத்திருப்பவரா? துணி தைப்பவரா? சமையல் வேலையில் ஈடுபடும் சாதாரண வீட்டுப் பெண்மணியா? அறுவைச் சிகிச்சையில் கொடிகட்டிப் பறக்கும் மருத்துவரா? சாலையோர வணிகரா? ஆசிரியரா? நீங்கள் யாராக இருந்தாலும் இது உங்களுக்கு அவசியம் தேவைப்படும்.
ஒரு காலத்தில் இதைப் பெரிய பெரிய அமைப்புகளும் தொழில் நிறுவனங்களும்தான் பயன்படுத்த முடியம் என்கிற நிலை இருந்தது. அப்புறம் தொழில்நுட்பம் வளர வளரச் சாமானியர்களும் வாங்கிப் பயன்படுத்தலாம் என்ற நிலை வந்துவிட்டது. ஆகவே அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக விலை வெகுவாகக் குறைந்து விட்டது. நாளுக்கு நாள் புதிய வகை அறிமுகங்கள் பெருகிவிட்டன.
பெரிய அளவில் இருந்தது..இப்போது வசதிப்படும் அளவுக்குச் சிறிய அளவுகளிலும் கிடைக்கிறது..
இயக்குவதற்குக் கற்றுக் கொள்வது எளிதோ எளிது. குழந்தைகளுக்குப் பெரிதும் பிடிக்கும். பெரியவர்களையும் கவரும். இதைக்கொண்டு விளையாடலாம். சம்பாதிக்கலாம். பொழுதுபோக்கலாம். எது வேண்டுமானாலும் இயலும்.
எந்த விலையிலும் வாங்கலாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வேண்டாம் என்றால் மறுசுழற்சி செய்து கொள்ளலாம். ஒரு வீட்டுக்கு இரண்டு,மூன்று கூட இருக்கலாம். ஆளுக்கு நான்கு என்றும் வைத்துக் கொள்ளலாம். மின்சாரத்திலும் இயக்கலாம்.அது இல்லை என்றாலும் பரவாயில்லை.
இவ்வளவு நேரமும் எதைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தோம் என்பதை ஊகித்து இருப்பீர்கள்.
ஓன்று மட்டும் உண்மை.
நீங்கள் மிகச்சரியாக ஊகித்து விட்டதாக எண்ணிக் கொண்டு இருப்பீர்கள்.
அதுதான் இல்லை.
நீங்கள், இந்தக் கட்டுரை கணினியைப் பற்றிச் சொல்கிறது என்று நினைத்திருப்பீர்கள்.
இல்லை.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இது கத்தரிக்கோலைப் பற்றியது.
மீண்டும் படித்துப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக