நாளுக்கு நாள் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே வருகிறது. இல்லை இல்லை நிமிடத்திற்கு நிமிடம் என்கிறீர்களா? சரி. இனி நீங்கள் இ;ங்குமங்கும் போய் வருவதற்கு எந்த வண்டியையும் எடுக்க வேண்டாம். பெட்ரோல் போட வேண்டாம். செலவே இல்லை. எளிதாகப் பயணிக்கலாம்.
என்ன இது.. நடைமுறை சாத்தியமா என்பீர்கள். நடக்கும். நடக்க வைக்கலாம். சின்ன அறிவியல் உண்மையைக் கொஞ்சம் செயல்படுத்திப் பார்த்தால் போதும். சாய்தளம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பலர் மறந்தும் போய்விட்டிருப்பீர்கள். குழந்தைகள் சறுக்கு மரம் என்றதும் கொண்டாடுவீர்கள். சிறிது விவரம் தெரிந்தவர்கள் ரேம்ப் என்றால் அறிவீர்கள்.
இந்த சாய்தளம், சறுக்கு மரம், ரேம்ப் எல்லாமே ஒன்றுதான். கனமான பெட்டி ஒன்றை லாரியில் ஏற்ற வேண்டும். என்ன செய்வீர்கள்? அப்படியே பிடித்துத் தூக்கி ஏற்ற முடியாது. சரிவாய் ஒரு பலகையை வைத்து அந்தப் பலகையின் மேல் உருட்டி அல்லது நகர்த்திச் சென்றால் எளிதாக வேலை முடிந்துவிடும். அதே உத்தியைத்தான் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப் போகிறோம்.
அண்ணாசாலையில் ஓர் உயரமான கட்டடம். அதில் ஏறி நிற்கிறீர்கள். (அதற்குத்தான் மின் ஏணி இருக்கிறதே). அங்கிருந்து பாரிமுனை வரைக்கும் ஒரு சறுக்கு மரம். கற்பனை செய்து பாருங்கள். குழந்தைகளைப் போல் அப்படியே உட்கார்ந்து சறுக்க ஆரம்பியுங்கள். சர்ரென்று பாரிமுனைக்குப் போய்விடுவீர்கள். அப்புறம் பாரிமுனையில் ஏறி, சறுக்கியபடியே அண்ணாசாலைக்கு வந்துவிடலாம். எதிர்த்திசையில் ஒரு சறுக்கு மரம். இதை இன்னும் கொஞ்சம் விரிவாக்கலாம்.
சென்னையிலிருந்து தாம்பரம் வரை. தாம்பரத்திலிருந்து சென்னை வரை. சென்னை –
செங்கல்பட்டு. செங்கல்பட்டு – சென்னை. இதேபோல் நீட்டிக் கொள்ளலாம். சறுக்கிச் சென்றால் இடுப்புத் துணி என்ன ஆகும் என்று கவலைப்படுவீர்கள். அதற்குத்தான் ஜீன்ஸ் துணி இருக்கிறதே. அதற்குக் கொஞ்சம் தயங்குகிறீர்களா? ஸ்கேட் என்று சொல்லப்படும் சக்கரக் காலணிகளைப் பயன்படுத்தலாமே. குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
சரிவில் சறுக்கிச் செல்லச் செல்ல முடுக்கம் அதிகமாகுமே.. இறங்க வேண்டிய இடத்தில் மோதிக் கொள்வோமே என்பீர்கள். அதற்கும் பாதுகாப்புச் செய்து கொள்ளலாம். முதலில் கால்நடையாகச் செல்பவர்களுக்கு இதைச் செயல்படுத்துவோம். அப்புறம் வாகனங்களுக்கு. சுமை உந்துகளுக்கு. எல்லாவற்றுக்கும். நடக்குமா இது?
ஏன் நடக்காமல்? ஓடும். பறக்கும். எல்லாம் செய்யும். தஞ்சைப் பெரிய கோவிலின் கலசத்தை அவ்வளவு உயரத்திற்கு எப்படி ஏற்றினார்களாம்? எல்லாம் சாய்தளம் செய்த வேலைதான். நம்மவர்கள் அதைச் சாரம் என்று அழைத்தார்கள். சாரப்பள்ளம் என்ற ஊரே இதற்குச் சாட்சி.
எகிப்தியர்கள் உலக அதிசயமான பிரமிடுகளைக் கட்டினார்கள். டன் கணக்கில் எடை கொண்ட கற்களை ஏற்றி அடுக்கினார்கள். உதவிக்கு வந்தது சாய்தளம்தான். கட்டுமானப்பொறியாளர்களும் ஒத்துக் கொள்வார்கள். என்ன.. மேம்பாலம் கட்டும் வேலையைக் கொஞ்சம் விரிவுபடுத்த வேண்டியதுதான். மக்களைக் கொஞ்சம் பழக்க வேண்டும். பழக்கம் வேண்டும். அவ்வளவுதான். கிடைக்கக் கூடிய நன்மைகள் என்னென்ன?
எரிபொருள் தேவை இல்லை. சுற்றுச் சூழல் மாசு இல்லை. நெரிசல் இல்லை. தாமதம் இல்லை. தடை இல்லை. தொடர் செலவு இல்லை.
முயன்று பார்க்கலாம் இல்லையா? ஆரம்பக் கட்டமைப்புச் செலவு அதிகமாகுமே என்பார்கள். நீண்ட காலம் செலவே இல்லாமல் பயன்படுத்தப் போகிறோம் என்பதால் துவக்கச் செலவுகளைப் பற்றி யோசிக்கவோ தயங்கவோ தேவையில்லை.
இதை எல்லாம் எப்படி அய்யா நடைமுறைப்படுத்துவது என்பீர்கள். இயற்கைப் பேரிடர் நடந்த இடம் ஒன்றில் மக்களை மீட்பதற்கு இந்தச் சாய்தளத்தைத்தான் பயன்படுத்தினார்கள். அண்மைக் காலச் செய்தி இது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட அந்தச் சாய்தளத்தையே நீண்ட காலத்திற்கு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்கள். அதே எடுத்துக்காட்டை இங்கேயும் நடைமுறைப்படுத்தப்படுத்தலாம். எந்த ஊர் முந்திக் கொள்ளப் போகிறது?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக