வியாழன், 3 அக்டோபர், 2013

விகடனில் மோடி..!


 மோடி பற்றி இந்த வார ஆனந்தவிகடனில் 'மோடி மேஜிக்' என்கிற கட்டுரை இணையத்தில் எப்படியும் விவாதிக்கப்படும். அந்த கட்டுரைக்கு எதிர்வினையே இது.

  விகடனின் இந்த கட்டுரைக்கான விளம்பரமே கட்டுரை எதன் மீது கவனம் செலுத்தும் என்று சொல்லிவிட்டது. இது கட்டுரையாளர் பாரதி தம்பியின் கைவண்ணம். கட்டுரையாளர் மீது குற்றம் சொல்வது/விமர்சிப்பது கண்டிப்பாக நம் நோக்கம் அல்ல. ஆனால், அவரது நிலைப்பாடு என்ன என்பது கட்டுரைக்குள்ளே போவதற்கு முன் அறிந்துகொள்வது முக்கியமல்லவா? அதையொட்டிய ஒரு தகவல் கீழே...


 இந்தக் கட்டுரையில் மோடியின் ப்ளஸ், மைனஸ்கள், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் அவர்களின் பேட்டி, கம்யூனிஸ்ட் அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பின் பொதுச் செயலாளர் மருதையனின் பேட்டி ஆகியவற்றோடு வந்துள்ளது. குறிப்பிடத்தகுந்த விவரங்களை மட்டும் தருகிறோம்.

 

 இதில் ப்ளஸ்களை வானதி சீனிவாசனிடமே கேட்டுக்கொண்டாராம், மைனஸ்கள் அனைத்தும் அரசின் பல்வேறு அதிகாரப்பூர்வமான அறிக்கைகளிடம் இருந்து எடுக்கப்பட்டதாம். ஏன், ப்ளஸ்களையும் அரசின் அறிவிப்புகளில் இருந்து எடுத்திருக்கலாமே... அல்லது நடுநிலை(அப்படி இருந்தால்) மீடியாக்களின் செய்திகளில் இருந்து எடுத்திருக்கலாமே. அல்லது விகடன்தான் நிருபரை குஜராத் வரை அனுப்பாதா? இந்திய அளவில் அடுத்த பிரதமராக பேசப்படும் ஒரு முதலமைச்சரின் சாதனைகளைப் பற்றி தமிழின் ஒரு முண்ணணி வார இதழில் செய்தி வெளியிடும்போது தகுந்த ஆதாரங்களுடன் எழுதாமல் ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைத்து எழுதிவிட்டு அதை நம்புங்கள் என்று சொல்வது எவ்வளவு நகைப்புக்குரியது? நீங்கள் ப்ளஸ்களாக எழுதியுள்ள அனைத்திற்கும் ஆதாரப்பூர்வமாக தகவல்கள் கிடைக்கும் என்பது உங்களுக்கும் தெரியும், ஆனால் 'அவங்களே சொல்லிக்கிறாங்க..' என்னும் பொதுவான எண்ணம் எழட்டும் என்று எண்ணுகிற நுண்ணரசியலின் வெளிப்பாடே இது. 

  சரி, மைனஸ்களைப் பார்ப்போம். இலவச மின்சாரம் கிடையாது, விவசாயிகள் எங்கிருந்து தண்ணீர் வந்தது என்று கணக்கு காட்டவேண்டும் என்ற இரு மைனஸ்களும் உண்மையில் மைனஸ்களே அல்ல. இலவச மின்சாரம் கிடையாது, ஆனால் தங்குதடையற்ற மின்சாரம் தருவேன் என்று சொல்லித்தான் மோடி கடந்த சட்டசபை தேர்தலில் ஜெயித்தார் என்பது கட்டுரையாளருக்கு மறந்துவிட்டதா, மறைக்கப்பட்டதா? நீங்கள் சொல்லியுள்ள மைனஸ்களிலும் மின் தடை என்பது இல்லையே... விவசாயிகள் தண்ணீருக்கு கணக்குக் காட்டவேண்டும் என்பது திருட்டுமோட்டார் போட்டு தண்ணீர் திருடுவது தடுக்கப்படுகிறது என்பதையும், முறையான வரிகள் உறுதியாக வசூலிக்கப்படுகிறது என்பதையும்தானே காட்டுகிறது. மற்ற இடங்களில் இவை நடந்திருந்தால் 'அய்யய்யோ தண்ணீர் திருடுகிறார்கள்', 'பணக்கார விவசாயிகள் அரசை ஏமாற்றுகிறார்கள்' என்று கூப்பாடு போடும் நீங்கள் குஜராத்தில் நடந்தால் மட்டும் 'இது தப்பு' என்று சொல்வது ஏன்?

  வெளிநாட்டு முதலீடு குறைவு என்பதை எப்படி எடுத்துக்கொள்வது என்றே தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் வெளிநாட்டு முதலீடை எப்போது எதிர்ப்பார்கள், எப்போது ஆதரிப்பார்கள் என்பது இவர்களுக்கே தெரியாது. 

  மற்ற மைனஸ்களில் மோடி தோற்றதாகவே இருக்கட்டும். நாம் தோராயமாக பார்த்தால் மோடிக்கு இந்த கட்டுரைப்படி(ப்ளஸ்களை மைனஸ்களாக காட்டியதையும் சேர்த்து) 70-75% மதிப்பெண்கள் கொடுப்பதாக எண்ணத்தோன்றுகிறது. யப்பா, எங்களுக்கு இப்படி ஒரு செயல்படும் ஆள்தானே தேவை... சரி, இவர் வேண்டாம்... பிரதமராக ஆகக்கூடிய, பெரும்பான்மையான மக்களின் பலத்த ஆதரவுடன் கூடிய, நூற்றுக்கு நூறு வாங்கக்கூடிய ஒரு ஆளை காட்டுங்கள்... நாங்கள் மோடியை விட்டுவிடுகிறோம். இதுதான் குறிஞ்சியின் நிலைப்பாடு என்பதை நாங்கள் முன்பே சொல்லியிருக்கிறோம். 

 மதவாதம்:
                  மோடியின் ஆட்சித்திறனை 'புத்திசாலித்தனமாக' எடுத்தாண்ட கட்டுரையாளர் 2002 கோத்ரா ரெயில் எரிப்பிற்குப் பிறகு நடைபெற்ற கலவரம் தொடர்பாக பல பிரபலங்கள் எதிர்மறையாகக் கூறியதை தனிப்பெட்டி செய்தியாக கொடுத்துள்ளார். ஆனால், குஜராத் முஸ்லீம்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? பயமுறுத்தப்படுகிறார்களா? ஏன் கலவரத்துக்குப் பின்னும் இருமுறை மோடிக்கு ஓட்டுப்போட்டார்கள்? இதையும் அலசி ஆராய்வதுதானே நியாயம்? எவ்வளவோ வசதிகள் கொண்ட பத்திரிக்கை நிருபர்கள் நீங்களே, உங்கள் ஒருபக்க சார்பை 'டெஸ்க் ஒர்க்' செய்யும்போது எந்தவித சுயலாப நோக்கும் இன்றி இந்தியதேசத்தின் நலனுக்காக மட்டுமே ஏராளமான தகவல்கள் திரட்டி எழுதும் நாங்கள் பரவாயில்லை என்று எங்களுக்கு தோன்றுகிறது. சரி, விஷயத்திற்கு வருவோம். 

   குஜராத்தில் முஸ்லீம்களின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது?
  • கிராமப்புற குஜராத் முஸ்லீம்களின் மாதாந்திர தனிநபர் வருமானம் ரூ 668, இது மற்ற இந்துக்கள்(ரூ 644), பிற்படுத்தப்பட்டோர்(ரூ 594), எஸ்சி எஸ்டி(ரூ 527) உட்பட அனைத்துப் பிரிவினரை விட அதிகம். இன்னும் சொன்னால் குஜராத் தவிர்த்த நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லீம்களை விட அதிகம் (ரூ 553).
  • நகர்ப்புற குஜராத் முஸ்லீம்களின் மாதாந்திர தனிநபர் வருமானம் ரூ 875, குஜராத் தவிர்த்த நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லீம்களின் ரூ 804.
  • இந்திய முஸ்லீம்களின் ஒட்டுமொத்த கல்வியறிவு சதவீதம்  64% முதல் 67% வரை இருக்கையில் குஜராத் முஸ்லீம்களின் ஒட்டுமொத்த கல்வியறிவு சதவீதம் 73.5%
  • குஜராத் முஸ்லீம் குடியிருப்புகளின் நீராதார வசதிகள் 97.7 சதவீதமாக இருக்கையில் ஒட்டுமொத்த குஜராத் மாநிலத்தின் சதவீதம் 93.1% மட்டுமே. 
  மேலுள்ள விவரங்கள் பிரதமர் நியமித்த சச்சார் கமிட்டி மற்றும் இந்திய மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டவை. இவை பல்வேறு தளங்களில் காணப்பட்டாலும் அத்வானி அவர்களின் வலைப்பூவில் பக்க விவரங்களோடு கொடுக்கப்பட்டுள்ளன. (http://blog.lkadvani.in/blog-in-english/sachar-committee-tell-tale-facts-about-muslims-in-gujarat) இது மட்டுமல்லாமல் கடற்கரையோர மீனவ முஸ்லீம்களின் நலவாழ்விற்காக எவ்வளவோ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்களேதான் தேடிப்பாருங்களேன். 

  இவை யாவும் கலவரத்திற்குப் பின் சேகரிக்கப்பட்ட விவரங்கள். ஒன்பது வருடங்களாக ஆட்சியில் இருந்துவிட்டு மோடிக்கு எதிராக எந்தவிதமான ஆதாரங்களையும் தாக்கல் செய்யமுடியாமல் பரிதவித்து இப்போது வெறும் ஓட்டுவங்கிக்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் காங்கிரஸின் ஆட்சியில் சேகரிக்கப்பட்ட விவரங்கள். உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் அரசாங்கங்கள் இடஒதுக்கீடு அறிவிப்பு, இலவசங்கள் என சிறுபான்மையினரைக் கவர முயற்சிக்கையில் குஜராத்தில் உண்மையான முன்னேற்றம் நடந்துள்ளது வெளிப்படை.

 மோடிக்கு ஆதரவாக எட்டு முன்னேற்றங்களைக் காட்ட முனைந்தால் இரண்டு பின்னடைவுகள் இருக்கவே செய்யும். மோடி ஒன்றும் கடவுள் கிடையாது. இந்தியாவின் எந்த மாநிலமும் நூறு சதவீதம் சுபிட்சமாக இல்லை. ஆனால், தற்போதைய ஊழல் மலிந்துபோன, விலைவாசி குறித்து மக்களையே கிண்டலடிக்கக்கூடிய மத்திய மந்திரிகள் உள்ள, நாட்டு பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளக்கூடிய, பிரதமரையே செல்லாக்காசாக மதிக்கக்கூடிய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான சரியான தேர்வு மோடிதான்.

  கடைசியாக கட்டுரையில் இடம்பெற்றுள்ள வானதி சீனிவாசனின் ஒரு சரியான பதிலடி...

 'ஆனால், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள், பிரசவ மரணங்கள், ஆண்-பெண் விகிதாசாரம், வறுமைக்கோட்டுக்கு கீழ் ஏராளமாக உள்ள மக்கள்... போன்ற அடிப்படை விஷயங்களில் குஜராத் இன்னும் பின்தங்கியே இருக்கிறதே?''
வானதி சீனிவாசன்: 'மோடி ஏன் 98 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்... 100 ரன்கள் ஏன் அடிக்கவில்லை?’ என்று கேட்பதைப் போல இருக்கிறது இது. மோடி கடந்த 10 ஆண்டுகளாகத்தான் குஜராத்தை ஆட்சி செய்கிறார். இந்தக் குறுகியகால இடைவெளியில் அவர் செய்துள்ள சாதனைகளைத்தான் நாங்கள் பிரசாரம் செய்ய முடியும்.'


  கம்யூனிஸ்ட்காரரே... மன்னிக்கவும் கட்டுரையாளரே, நாட்டின் பிரதமரை அளிக்கக்கூடிய ஒரு மூன்றாவது அணி என்பது உங்கள் கனவில் மட்டுமே நடக்கும் என்பதையும் அப்படியும் நடந்தால் அது பெரும்பாலும் தமிழக புரட்சித்தலைவலியாக இருக்கக்கூடும் என்பதையும் உங்களுக்கு சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறோம். விகடனின் நடுநிலை எப்போதோ செத்துவிட்டது என்றாலும் நீங்கள் எல்லாம் அதை இன்னும் இன்னும் கேலிக்குள்ளாக்காதீர். நன்றி. 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக