தீபாவளி, பொங்கல் வந்துவிட்டால் போதும்..இப்போது இந்த வரிசையில் விநாயக
சதுர்த்தியும் சேர்ந்து கொண்டது. எதைச் சொல்ல வருகிறோம் என்று
பார்க்கிறீர்களா? சென்னையிலிருந்து தெற்கே செல்ல வேண்டுமானால் பயணக்
கட்டணம் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. சந்தையின் தேவைதான் விலையை
நிர்ணயிக்கிறது என்பார்கள் பொருளாதார மேதைகள். இருக்கட்டும். அதற்காக 400
கிலோமீட்டருக்கு 1500 ரூபாய் என்பது எந்த வகையில் நியாயம்?
இரண்டு மூன்று நாள் சேர்ந்தாற்போல் விடுமுறை வந்தால் குடும்பத்தோடு
கழிக்க நினைப்பதற்கு இது தண்டனையா? எவ்வளவுதான் முன்கூட்டியே
திட்டமிட்டுப் பதிவு செய்ய நினைத்தாலும் ஒரு சில நொடிகளுக்குள் விற்றுத்
தீர்ந்துவிடும் முன்பதிவு எட்டாக் கனியாக அல்லவா இருக்கிறது?
சில தனியார் பேருந்துக்கார ர்கள் கொள்ளைப் பணத்தையும் வாங்கிக் கொண்டு
பயணிகளைத் தனியே விட்டுவிட்டுப் போனதும் நடந்திருக்கிறது. இந்த அவல
நிலையை மாற்ற என்ன செய்யலாம்?
சென்னையிலிருந்து தெற்கே கிளம்பும் எல்லாப் பேருந்துகளும் திரும்ப
வரும்போது காலியாகவே வர வேண்டி இருக்கும். வெறுமனே திரும்பி வருவதற்குப்
பதில் விடுமுறைக் காலம் முடிந்து புறப்பட்டால்? சும்மா நிறக்கும்
காலத்தில் ஏற்படும் இழப்பு கொஞ்சமாகத்தானே இருக்கும்?திரும்பி வரும்
பயணத்திற்கும் முன்பதிவை விரிவாக்கினால் என்ன?
பிள்ளைகள் பெற்றோரைப் பார்க்கச் சென்னையிலிருந்து வருவதற்குப் பதிலாகப்
பெற்றோர் சென்னைக்குப் புறப்படுவது பற்றியும் யோசிக்கலாம். அவர்களுக்குச்
சில சலுகைகளை அளிக்கலாம். போக்குவரத்துக் கழகங்கள் வைப்பு நிதி பெற்றுக்
கொண்டு அத்தகைய வாடிக்கையாளர்களுக்குப் பயணச் சீட்டை அளிப்பதில்
முன்னுரிமை கொடுக்கலாம்.
துக்ளக் தனமாகத் தோன்றினாலும் சில பல அலுவலகங்களைச் சென்னையை விட்டு
வெளியே கிளப்பலாம். வழித்தட நெரிசல்கள் குறையும். பண்டிகைகளுக்கு
முன்பின் வரும் விடுமுறை தினங்களை விருப்ப அடிப்படையில் பிரித்து
அளிக்கலாம். இணைய வழிச் செயல்பாடுகள் சாத்தியமான நிலையில் ஊழியர்களை
எங்கும் எந்த நாளிலும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பணியாற்ற
வைக்கலாம். அடித்துப் பிடித்துக் கொண்டு விடுமுறைக்காகவும் விடுமுறை
முடிந்தும் ஆலாய்ப் பறக்க வேண்டியதில்லை.
சில தனி அனுமதிகளின் பேரில் விடுமுறைக் காலங்களில் சரக்கு வாகனங்களிலும்
பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கலாம்.விபத்துகள் அதிகரிக்கும் என்பது
உண்மையல்ல. உறக்கம் கெட்ட நிலையிலும் கூடுதல் பணிக்காக விரட்டப்படும்
ஓட்டுநர்களால் ஏற்படுவதை விட அதிக விபத்துகள் ஏற்படப் போவதில்லை.
பூனைக்கு மணி கட்டும் வேலை இது.யார் முன்வருவது?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக