“கால்சியம் சத்து குறைபாடுதான் எல்லாத்துக்கும் காரணம்!’’
“உடம்பு குண்டாக இருந்தால்தான் பிரச்னை. எடை கூடக்கூடத்தான் இதய நோய்கள் வரும். பி.பி. வரும். உடல் எடையைத் தாங்க முடியாமல் எலும்புகள் உடைந்துவிடும் அல்லது எலும்புத் தேய்மானம் ஏற்படும்’ என்றெல்லாம் தானாகவே கற்பனை செய்துகொண்டு, உடலை வருத்தூதி உணவைச் சுருக்கியிருக்கிறார் அனிதா. விளைவு? போதியளவு சாப்பிடாததால் உணவிலிருந்து எலும்புக்குப் போகவேண்டிய சக்தியை போகவிடாமல் தடுத்திருக்கிறார். அதனால் எலும்பு தேய்ந்து உடைந்து போய் இன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அனிதா மட்டுமல்ல, இளம் வயதுப் பெண்கள் பலரும் “ஸ்லிம்மாக இருக்க வேண்டும், உடல் குண்டானால் சக தோழிகள் கிண்டலடிப்பார்கள்’ என்று நினைத்து அதற்கு ஒரே வழி சாப்பாட்டைச் சுருக்குவதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்லிம்மாக இருந்தாலும் சரி, பருமனாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு கால்சியம் குறைபாடு இருந்தால் கண்டிப்பாக எலும்புத் தேய்மானம் ஏற்படும். கால்சியம் குறைந்தவர்கள் சின்ன அளவில் இடறி விழுந்தால்கூட எலும்பு முறிவில் கொண்டுபோய்விடும். எலும்பு முறிவு வந்தவர்களுக்குத்தான் அந்த வலியும் அசௌகரியமும் புரியும். உயிர் போகும் வேதனை அது.
பெண்களின் தவறான உணவுப்பழக்கம்கூட கால்சியம் குறைபாடுக்கு முக்கிய காரணமாகும். ஆண்களுக்கு மது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கண்டிப்பாக எலும்புத் தேய்மான நோய் வரக்கூடும்.
உங்களுக்குத் தெரியுமா? 2012-ம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியாவில் மட்டும் 10 கோடிப்பேர் எலும்புத் தேய்மான நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதில் முக்கால்வாசிப்பேர் பெண்கள் என்பதுதான் வருத்தமான செய்தி. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ, அல்லது வறுமை காரணமாகவோ போதிய ஊட்டச்சத்து எடுத்துக் கொள்ளாததுதானாம்.
மெனோபாஸ் பெரும் தொல்லை!
பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்பட மிகப்பெரிய காரணம் மாதவிலக்குக் காலத்தில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு விடுவதுதானாம். அதாவது, மாதவிலக்கு சுழற்சிநின்றபின்னர் உடம்பில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைந்து விடுவதால்தான் இந்தப் பிரச்னையாம். கர்ப்பப்பை எடுத்த பெண்களுக்கும் இதே நிலைதான் ஏற்படுமாம். இவர்கள் சிறியளவில் இடறினால்கூட, எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்கிறார்கள். இதிலிருந்து விடுபட ஒரே வழி, கால்சியம் சத்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்து உண்பதுதான்.
மருத்துவரின் ஆலோசனையின்பேரில் கால்சியம் சத்துள்ள மாத்திரைகளை எடுத்து அந்தக் குறைபாட்டை நீக்க முடியும்.
எலும்பு தேய்ந்துவிட்டது என்று எப்படி தெரிந்துகொள்வது?
திடீர் திடீரென்று நம் உடம்பில் உள்ள மூட்டின் மேல்பகுதியில் லேசான வலி தெரியும். குதிகாலில் அடிக்கடி வலி தெரியும். சிலர் ஏதோ ரத்த ஓட்டம் காலுக்கு வரவில்லை. நடந்தால் சரியாகிப் போகும் என்ற அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அது தவறு. இன்னும் சிலருக்கு முதுகுப் பகுதியில் விட்டு விட்டு வலிக்கும். அதை வாய்வு என்று கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. அடிக்கடி இந்த வலிகள் வந்தால் அலும்புப் பரிசோதனை செய்து உறுதி செய்துகொள்வது நல்லது.
வரும்முன் காக்கலாம்!
1. “ஸ்லிம் ஆகிறேன் பேர்வழி’ என்று தேவையில்லாத உணவுக் கட்டுப்பாடுகளை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.
2. அதே சமயம், உடற்பருமனை அதிகரிக்கும் உணவுகள் எதுவாக இருந்தாலும் அவற்றைத் தவிர்த்துவிட வேண்டும்.
3. கால்சியம் மற்றும் இரும்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் உண்பது அவசியம். பேரீட்சை, பால், முட்டை, நார்ச்த்துள்ள காய்கறிகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
4. கண்டிப்பாக புகை, மது கூடாது.
5. எளிதான உடற்பயிற்சி அல்லது 45 நிமிட நடைப்பயிற்சி மேற்கொண்டாலே எலும்புகள் உறுதிப்படும்.
6. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒருமுறை தங்கள் எலும்பின் தன்மையை பரிசோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. அதற்குத்தக்க தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்துக் கொண்டால் எலும்புகள் உறுதிப்படுவது உறுதி.
7. பெண்கள் மாதவிடாய் காலங்களில் உளுந்தம்களி உள்ளிட்ட கால்சியம் சக்தி அதிகம் உள்ள உணவுகளை எடுப்பது நல்லது.
நன்றி - கல்கி, இரா.மணிகண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக