சனி, 31 ஆகஸ்ட், 2013

D Day (Hindi)


     சென்ற மாதம் வெளியான 'ஸ்பை-த்ரில்லர்' வகையறாவை சேர்ந்த இப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் இப்போதுதான் கிடைத்தது. அதைப்பற்றிய நம் பார்வை உங்கள் பார்வைக்கு...  


            பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் இப்ராஹிமை பிடிக்க நம் உளவுப்பிரிவு 'ரா'வின் தலைவர் நாசர் நான்குபேரை வைத்து திட்டமிடுகிறார். அதில் ஒருவர் தாவூதை கண்காணிப்பதற்காகவே ஒன்பது வருடங்கள் பாகிஸ்தானிலேயே திருமணம் செய்து, பிள்ளை பெற்று குடும்பத்துடன் வாழ்கிறார். மகன் திருமணத்துக்கு வரும் தாவூதைப் பிடிக்க உயிரைப் பயணம் வைத்து போடப்பட்ட ரகசிய திட்டம் படுதோல்வி. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும், தாவூத் கூட்டமும் வெறியுடன் இவர்களைத்தேட, இந்தியா 'எங்களுக்கு சம்பந்தமில்லை' என்று நான்குபேரையும் கைகழுவிவிட, திக்குத்தெரியாமல் நிற்கும் நால்வரும் என்ன செய்தார்கள் என்பதை சொல்லும் விறுவிறுப்பு த்ரில்லர்.

           முழுக்க முழுக்க பாகிஸ்தானில் நடக்கும் கதை என்பதே நமக்கு முதலில் வித்தியாசமான அனுபவம். கடைசிவரை விறுவிறுப்பு குறையாமல் முடித்துவிட்டனர். ஆனால் படத்தின் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஒளிப்பதிவு கச்சிதம். பிண்ணனி இசை இன்னும் மிரட்டியிருக்கலாம். 'ரா'வின் தலைவராக வரும் நம்ம நாசரின் துடிப்பும், தவிப்பும், முறைப்பும் அருமை. பாகிஸ்தானில் சிக்கி தடுமாறும் அர்ஜூன் ராம்பால், இர்ஃபான் கான் மற்றும் இருவரும் குறையின்றி நடித்திருக்கிறார்கள். அந்தப் பெண்மணி இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம். தாவூத்தாக வரும் ரிஷிகபூர் சரியான தேர்வு.

      'சாவோம்னு தெரிஞ்சுதான் கசாப் மும்பைக்கு வந்து ரயில்வே ஸ்டேஷன்ல அத்தனைபேரையும் சுட்டுத்தள்ளினான். நாலு வருஷம் கழிச்சு அவனைத் தூக்குல போட்டுட்டு அதைக் கொண்டாடறீங்களே' என்று ஒரு வசனம் நம்மை கேலி செய்கிறது. பிரதமர் தோன்றும் முதல் காட்சியில் நாசருடன் பேசிக்கொண்டிருக்கும் பிரதமர், ஒரு அதிகாரி வந்து 'மேடம் கூப்பிடறாங்க' என்றதும் வேகவேகமாக செல்கிறார். இன்னொரு காட்சியில் 'மேடம், எல்லாம் சரியாயிடும்' என்று போனிலேயே சமாதானம் செய்கிறார். படா நக்கல் இயக்குனர் நிகில் அத்வானிக்கு...

    இந்தப் பதிவைப்படித்து விட்டு செம ஆக்‌ஷன் போல என்று நீங்கள் எண்ணினால் 'சாரி'. மிக அளவான ஆக்‌ஷன் மட்டுமே. அதேபோல் செயற்கையாக நரம்பு முறுக்கேறவைக்கும் தேசபக்தி வசனங்களும் இல்லை. ஆனால் கடைசிவரை நம் கவனம் படத்திலிருந்து சிதறவில்லை என்பதே படத்தின் சிறப்பு. சிற்சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் பளிச்சென தெரிந்தாலும் படத்தின் போக்கில் இடையூறு இல்லை. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம். ஆங்.. சொல்லமறந்துட்டோம். படத்துல நம்ம கமல் பொண்ணும் நடிச்சிருக்காங்க...

- சினிமாக்காரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக