விண்வெளி ஆராய்ச்சியுடன் தொடர்புள்ள அமைப்புகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, “குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தையும், மகேந்திரகிரியில் வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தையும், அமைக்க வேண்டும்” என, பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இஸ்ரோ மூலம், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இந்திய வான்வெளி தொழில்நுட்ப நிலையம் தொடங்கப்பட்டது. அதையடுத்து, வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை விஞ்ஞானிகள் பற்றாக்குறையை சமாளிக்க, வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இக்கல்வி நிறுவனத்தை அமைக்க தேவையான நிலம் மற்றும் வசதிகள், திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ளன.
குறிப்பாக, வான்வெளி, திரவ உந்துவிசை, அதிவேக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கட்டுவதற்கு தேவையான தொழில்நுட்பம் இங்கு கிடைக்கும். எனவே, இக்கல்வி நிலையத்தை மகேந்திரகிரியில் அமைக்க வேண்டும்.
இதேபோல், இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை நெல்லை மாவட்டம், குலசேகரபட்டினத்தில் அமைக்க வேண்டும். இப்பகுதி, ராக்கெட் ஆய்வு நிறுவனங்களுக்கு அருகில் உள்ளது. மேலும் பூகோள ரீதியாகவும், ராக்கெட் ஏவுதளம் அமைக்க உரிய இடம். இங்கு திறன் வாய்ந்த பணியாளர்களும் இருக்கின்றனர்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இவ்விரு நிறுவனங்களையும் அமைப்பதன் மூலம், தொழில் வளர்ச்சி இல்லாத இம்மாவட்டங்கள் பயன்பெறும். எனவே, முன்னுரிமை அடிப்படையில், இப்பணிகளை மத்திய அரசு செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பயனுள்ள கோரிக்கை. தி.மு.க. தலைவர் வெறும் கோரிக்கையுடன் நிறுத்திக் கொள்ளாமல், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வந்தால், பாராட்டுக்குரிய வகையில் இருக்கும்.
நன்றி - விறுவிறுப்பு


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக