திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மெட்ராஸ் கஃபே - ஏன் எதிர்க்கவேண்டும்?


  நேற்றிலிருந்து இணைய உலகம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஜான் ஆப்ரஹாம் என்ற மலையாளி நடித்த, இலங்கைப் பிரச்சினைகளைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சொல்லும் 'மெட்ராஸ் கஃபே' படத்தினால் ஏற்பட்டதுதான் அந்த சூடு.


    'மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை' என்ற மாவோ கூற்றுக்கேட்ப தமிழர்கள் சற்று எதிர்ப்புணர்வுகளைக் குறைத்து சகஜமாக இருக்கமுற்பட்டாலும் இந்த வட இந்தியர்கள் விடமாட்டார்கள் போல. சில வாரங்களுக்கு முன்னால் 'மெட்ராஸ் கஃபே' முன்னோட்டம் வெளிவந்தபோதே தமிழுணர்வாளர்கள் கொதித்தெழுந்துவிட்டார்கள். இடம்பெற்றிருந்த வசனங்களும், காட்சிகளும் அப்படி. உடனே தமிழகத்தில் மாணவ அமைப்புகளும், தமிழ் அமைப்புகளும் படம் வெளியாவதற்கு முன் தங்களுக்கு திரையிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. அதன்படி இரண்டு நாட்களுக்கு முன் திரையிடப்பட்ட படத்தைப் பார்த்துவிட்டு கொதித்துப்போய் உள்ளனர். இந்தக் கட்டுரையும் படம் பார்த்தவர்கள் பலர் சொன்னதை வைத்தே எழுதப்பட்டுள்ளது.

  தமிழுணர்வாளர்கள் அனைவரும் இந்த படம் எங்குமே திரையிடப்படக்கூடாது என ஒரு குரலில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வழக்கம்போல சிலர் 'இவங்களுக்கு இதே வேலையாப்போச்சு' என்று அலுத்துக்கொள்கின்றனர். நாம் ஏன் இந்தப் படத்தை எதிர்க்கவேண்டும்?

   1987இல் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றதை பிண்ணனியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தமிழினத்தை அவமதித்தும், பொய்யான தகவல்களை புனைந்தும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தவறாக சித்தரித்தும் காட்சிகள் உள்ளனவாம். அதாவது இந்திய அமைதிப்படை அங்கு நிகழ்த்திய கொடூரங்களை மறைத்தும், பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் அவர்களை வரச்சொல்லிவிட்டு சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட ராஜீவ்காந்தியின் போலி முகத்தை மறைத்தும்(இது இந்திய முன்னாள் ராணுவத்தளபதி சொன்னது) இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ராஜபக்சேவின் நிதியுதவியும் கிடைத்திருக்கிறது. ஜான் ஆப்ரஹாம் படப்பிடிப்பின்போதே ராஜபக்சேவை சந்தித்துள்ளான் என்றும் தகவல்கள் சொல்கின்றன.

    முதலில் போராளிகள் மற்றும் தேசியத்தலைவரைப் பற்றிய தவறான சித்தரிப்பு. இலங்கை விஷயத்தில் தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலத்தவர்க்கு நம் உணர்வுகளைப் புரியவைப்பதே பெரும்பாடு. அதுவும் இந்தி எதிர்ப்பு காலத்திலிருந்தே நம் மீதான காழ்ப்புணர்ச்சி திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. மலையாளப்படங்களிலோ, இந்திப்படங்களிலோ நம்மை எவ்வளவு கிண்டலுக்குள்ளாக்கமுடியுமோ அவ்வளவு கிண்டல் செய்வார்கள். மலையாளப்படங்கள் இப்போது பரவாயில்லை. ஆனால் இந்திவாலாக்கள் இப்போது வந்துள்ள 'சென்னை எக்ஸ்பிரஸ்' வரை ஒரே பார்வையோடுதான் எடுக்கிறார்கள்.அவர்களிடம் நம் போராளிகளைப் பற்றி நல்லவிதமான சிந்தனை இருக்காது. இந்தப்படம் மேலும் அதற்கு வலுசேர்க்கிறது.

   அடுத்து, இந்திய அமைதிப்படை இலங்கையில் நிகழ்த்திய கொடூரங்கள் எவ்வளவு புத்தகங்கள் எழுதினாலும் தீராது. எவ்வளவு கற்பழிப்புகள், எவ்வளவு படுகொலைகள், நம்பிக்கை துரோகங்கள்... இந்திய அமைதிப்படையினால் ஈழத்தமிழர்கள் சொல்லமுடியாத துன்பம் அனுபவித்தார்கள். இதற்கு இரண்டே உதாரணங்கள் போதும்.

‘தமிழர்களின் சடலங்கள், சாலை ஓரங்களில் கிடக்கின்றன; நாய் நரிகளும், காக்கை கழுகுகளும் தின்னுகின்றன’ என்று, லண்டனில் இருந்து வெளியாகின்ற கார்டியன் பத்திரிகை தெரிவித்தது.

லண்டன் டைம்ஸ் ஏட்டின் செய்தியாளர் டேவிட் ஹவுஸ்கோ, ‘வியட்நாமின் மைலாய் என்ற ஊரில் அமெரிக்கா நடத்திய படுகொலைகளை, இந்திய இராணுவம் வல்வெட்டித்துறையில் செய்தது’ என்று எழுதினார்.

    நேர்மையாக படம் எடுத்தால் இவை எல்லாவற்றையும்தானே எடுக்கவேண்டும். ஆனால் இவற்றைப் பற்றி படத்தில் ஒன்றுமே இல்லை. ஆக இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி அவர்களுக்கு குரல்கொடுக்கும் தமிழகத்தமிழர்களுக்கும் எதிராக திட்டமிட்டு எடுக்கப்பட்ட படைப்பு. இதில் வெட்கமே இல்லாமல் அஜய் ரத்தினம் என்ற தமிழ் நடிகன் நடித்துள்ளான். 

  அடுத்த முக்கியமான விஷயம், நமது மாணவர்கள் போராடும்போது இந்தியா முழுக்க ஆங்காங்கே ஆதரவுக்குரல் எழுந்தது. வைகோ அவர்கள் சாஞ்சி சென்று போராடும்போது அப்போதுதான் இலங்கைப்படுகொலை பற்றி கேள்விப்பட்ட பொதுமக்கள்(இதுதான் இந்திய ஊடகநேர்மை) தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தனர். இப்போது இதுபோன்ற ஒரு நேர்மையற்ற படைப்பை 'உண்மையை ஆராய்தல்' எனத் தலைப்பிட்டு தேசம் முழுக்க திரையிடுகின்றனர். விளைநிலம் முழுக்க விஷவிதை தூவுவதற்கு ஒப்பான செயல். நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுப்பதன் மூலமே இந்த இந்திய-லங்க-மலையாளி லாபி செய்த திருட்டுவேலையை அம்பலப்படுத்த முடியும். ஈழத்தமிழர்களுக்காக நாடு முழுவதும் எழுந்த ஆதரவுக்குரலை இழக்காமலிருத்தல் அவசியம். அப்போதுதான் அந்த மக்களுக்கு உரிய நிவாரணம் மட்டுமன்றி தப்பு செய்தவர்கள் பதில் சொல்லும் காலமும் கனியும். 

       எல்லாவற்றிலும் அடித்துக்கொண்டு நிற்கும் தமிழர்கள் இந்த சினிமா விஷயத்திலாவது ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டும். எதைப் படம் எடுப்பது என்று தெரியாமல் நிற்கிறது பாலிவுட். முதலில் 'சென்னை எக்ஸ்பிரஸ்', தமிழர்கள் படிக்காதவர்கள்; ரவுடிகள் என்று சித்தரித்தது. ஹிந்தி பேசுபவர்களே இந்தியர்கள் என்றது. எம் தமிழன் அதையும் கை தட்டி ரசித்தான். இப்போது நம் உணர்வுப் பிரச்சினையான ஈழவிடுதலைப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளான் இன்னொருவன். இப்போதும் நாம் அமைதியாக இருந்தால் நாளை வரிசையாக நம்மை இழிவுபடுத்தி படம் எடுத்து நம்மிடமே போட்டுக்காட்டி காசைப் பிடுங்குவான்.

   வெட்டி ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்த ஜான் ஆப்ரஹாம் என்கிற அந்த மலையாளிக்கு திடீரென சம்பந்தமேயில்லாமல் இலங்கைப் பிரச்சினை பற்றி என்ன அக்கறை?

   மாணவர் அணி இப்போதே தயாராக உள்ளது. 'நீ மெட்ராஸ் கஃபே வெளியிடு, நாங்கள் டெல்லி கஃபே வெளியிடுகிறோம்' என்று களமிறங்கியுள்ளனர்.  நாம் பெரிதாக போராட்டம் செய்யவேண்டாம். முடிந்த அளவு இணையத்தில் இந்த தகவல்களைப் பகிர்வோம். வெளிமாநில/வெளிநாட்டு நண்பர்கள் நிறைய இருப்பவர்கள் ஆங்கிலத்தில் பகிருங்கள். 



    கட்சி, சாதி, மதப் பாகுபாடு பாராமல் 'தமிழன்' என்ற ஒற்றைக்குரலில் நிமிர்ந்தெழுவோம். ஹிந்திய கோமாளியை துரத்துவோம்.

குறிப்பு: சில பொதுத்தகவல்கள் 'வைகோ' ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக