ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பிளான் - பியும், காந்திஜியின் செயல்களும் - ஒர் விவாதம்


நண்பரின் முகப்பக்கத்தில் சமீபத்தில் நேதாஜியும் காந்தியும் பற்றிய விவாதங்களை பார்க்க நேர்ந்தது.

​காந்திஜி பற்றி பல்வேறு தளங்களில் பல்வேறு நேரங்களில் நாம் பார்த்ததினாலும், நேதாஜியை பற்றி கருத்து வெளியிட்ட நண்பரை நான் தொடர்பு கொள்ள முடிந்ததினாலும் இப்பொதைக்கு நேதாஜியை பற்றி அங்கிருந்து அவரது அனுமதியோடு இங்கு பகிர்கிறேன், மற்றபடி உங்களிடம் இந்த கட்டுரைக்கு எப்படி வரவேற்பு இருக்கிறது என்பதை பார்த்த பிறகு இது மாதிரியான சங்கதிகளை தொடர்ச்சியாக வெளியிடுகிறோம்.



​அஜயன் பாலாவின் நூலிருந்து நேதாஜியைப் பற்றி சுதந்திர  தினத்தன்று நண்பர் பகிர்ந்த தகவல் இது.

"ஐரோப்பாவில் அச்சுப்படைகளின் தோல்விகள் கிழக்காசிய பிரதேசங்களில் உடனடியாக பிரதிபலிக்கத் துவங்கியது. அமெரிக்கத் துருப்புகள் ஜப்பானுக்கு அருகே இருந்த சைகோன் தீவை முற்றுகையிட்டன. இதைக்கண்டு பயந்த ஜப்பானிய அரசு உடனடியாக டோஜோவை பிரதமர் பதவியிலிருந்து இறக்கி, புதிதாக கொய்ஸோ என்பவரை பிரதமராக பதவியேற்க வைத்தது. இம்பால் முனையில் பிரிட்டிஷ் துருப்புகள் முன்னேறி வரும் சேதிகள்வேறு ரங்கூனில் முகாமிட்டிருந்த நேதாஜிக்கு மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தின. இதனிடையே பிரிட்டிஷ் படைகள் மெல்ல பர்மாவுக்குள் ஊடுருவி விரைவில் ரங்கூனையே கைப்பற்றும் நிலைமை உருவாகியது. அதற்குமுன் அனைத்துப்படைகளும் ரங்கூனிலிருந்து வெளியேறிவிடும்படி ஜப்பானிலிருந்து உத்தரவு வர, இந்தத் தகவல் நேதாஜியிடம் கொண்டுசெல்லப் பட்டது. இந்திய தேசிய ராணுவத்தினரும் களத்திலிருந்து உடனடியாக ரங்கூனுக்குத் திரும்பும்படி நேதாஜி தகவல் அனுப்பினார்.

ஜப்பானியர் அனைவரும் கிட்டத்தட்ட முழுவதுமாக ரங்கூனிலிருந்து புறப்பட்டுச் சென்றபின், கடைசியாக 1945 ஏப்ரல் 25 மாலை, ரங்கூனிலிருந்த நேதாஜியின் வீட்டு முன் 12 லாரிகள், நான்கு கார்கள் வந்து தாயாராக நிறுத்தப்பட்டன. ஜான்ஸிராணி படையினர் அனைவரும் ஏறிக்கொண்டனர். உடன் இந்திய தேசிய ராணுவ தளபதிகள் பலரும் கடைசியாக நேதாஜியும் ஹிக்காரிக்கான் தலைவர் இஸுடோவும் ஒரு காரில் ஏறிகொண்டனர்.

வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நகரைவிட்டு விலகி காட்டு வழிக்குள் ஊடுருவி சில மைல் தூரத்தில் சென்றதும் சட்டென தலைக்கு மேல் பறந்த விமானம் ஒன்று குண்டுமழை பொழிய அனைவரும் வண்டியிலிருந்து ஓடி காட்டில் பதுங்கினர்.

இப்படியாக தொடர்ந்து பலமுறை இறங்கி ஓடி, மீண்டும் ஏறியபடி மறுநாள் காலை வாவ் கிராமத்தை அடைந்தனர். இனியும் வாகனத்தில் செல்வது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த அனைவரும் காட்டினூடே வாகனங்களை கைவிட்டு நடந்துச் செல்ல தீர்மானித்தனர். ஆனால், தொடர்ந்து எட்டு நாட்கள் காட்டில், மழையில் உணவில்லாமல் அவதிப்படப் போகிறோம் என அவர்களுக்கு அப்போது தெரியவில்லை.

நேதாஜியின் உதவியாளர் அவரை வாகனத்தில் ஏறி முதலில் பாதுகாப்பாக புறப்படும்படி எவ்வளவோ சொல்லியும் அவர் பிடிவாதமாக இருந்தார்... ‘என்னை நம்பி வந்த பெண்களை உயிருக்கு ஆபத்தான நிலையில் தவிக்கவிட்டு செல்வதற்கு என் மனம் ஒப்பவில்லை’ என உறுதியாகக் கூறிவிட்டார். வாகனங்கள் அனைத்தும் இதர அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட, நேதாஜி இதர ஆண்-பெண் வீரர்களுடன் ஒருவராக பசிக்கு உணவில்லாமல் காடுகளில் இருட்டில் நடக்கத் துவங்கினார்.

திடீரென மழை கொட்டத்துவங்க ஒதுங்குவதற்குக்கூட வழியில்லாமல் காடுகளில் இரவு-பகலாக நேதாஜியும் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் வீரர்கள் நடந்துவந்த கண்ணீர்க்கதை இந்திய வரலாறு உணராதது. தொடர்ந்து எது வழி என்றே தெரியாத காட்டில் தலைக்குமேல் பறக்கும் விமானங்களுக்கு பயந்து, நடுங்கி முட்களால் ஆடைகள் கிழிந்து ரத்தம் கசிந்து, பசிக்கு உணவில்லாமல் அதனால், ஏற்பட்ட உடல் சோர்வு ஒருபக்கம், இன்னொருபக்கம் மழை என காட்டிலும் மேட்டிலுமாக எட்டு நாட்களாக ஒரு நிமிடம்கூட உறங்காமல் கிட்டத்தட்ட 300 மைல் தூரத்தை நடந்துவந்த குறிப்பாக 100 பெண் வீரர்களின் அந்த நடைப்பயணம் இந்திய வரலாறு அதிக முக்கியத்துவம் கொடுத்து பதியவைக்க வேண்டியது.

நாட்டுப்பற்று மனிதநேயம் என தொண்டைக் கிழிய கத்துபவர்கள் ஒருமுறை அதன் அர்த்தத்தை உணர, நேதாஜி நாட்டுக்காகவும் சக வீரர்களுக்காகவும் தானே ஏற்று மேற்கொண்ட அவஸ்தையை கொஞ்சம் உற்று கவனித்தால் போதும். அவர் வெளிப்படுத்திய மனிதப் பண்பு அவரது ஒட்டுமொத்த வாழ்வின் பெருமைகளுக்கெல்லாம் இணையானது."

"1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆனால், இந்த சுதந்திரம் எப்படி கிடைத்தது. காந்தி அறப்போராட்டத்தில் வாங்கிக் கொடுத்ததாக பாடப் புத்தகங்கள் மூளை சலவை செய்கின்றன. ஆனால், இது எப்பேர்ப்பட்ட அப்பட்டமான பொய் என்பது ஆர்.சி.மஜூம்தார் எழுதிய ‘விடுதலை இயக்க வரலாறு’ எனும் புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. அதில்... ஐ.என்.ஏ. வீரர்கள் களத்தில் காட்டிய வீரம் மற்றும் அணுகுமுறை பல ஆண்டுகளாகப் பயிற்சி பெற்றுவந்த ராணுவங்களுக்கு நிகரானது. மேலும், அவர்களுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அனுதாபம் இருந்தது. இதனால், பிரிட்டிஷ் ஆட்சி இன்னமும் நீடித்தால் இந்தியர்கள் நம்மை விரட்டியடிக்க துணிந்துவிடுவர் என இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் படையின் தலைமை ராணுவ அதிகாரி கிளமன்ட் அட்லி அப்போதைய பிரிட்டிஷ் தலைவரான வின்ஸ்டன் சர்ச்சிலிடம் கூறியதாக அவரே தன் புத்தகத்தில் எழுதி இருப்பதை மஜூம்தார் தன் நூலில் பதிவு செய்திருக்கிறார்."

அதற்கு மற்றொரு நண்பரின் பதிலானது ஜப்பான் அந்த போரில் வென்றிருந்தால் ஜப்பான் நம்மை ஆண்டிருக்கும், 40கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவை அடக்கி ஆண்ட அவர்கள் நம்மை சுதந்திர நாடாக அனுமதிருக்க மாட்டார்கள் என்றும், காந்தியின் சாத்வீக பாதையே சரியானது என்றும் அழகாகவும், ஆழமாகவும் அவர் தரப்பு வாதத்தினை எடுத்து வைத்தார்.

அ​தற்கு இந்த நண்பரின் பதில் பின்வருமாறு இருந்தது.

பல நேரங்களில் ஜப்பான் ராணுவத்துக்கும், ஐஎன்ஏவுக்கும் இடையில் இருந்த உரசல்களைப் பற்றி மேற்சொன்ன பத்தகத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை நான் படித்த புத்தகங்களில் இருந்து நான் புரிந்துகொண்டது - காந்திக்கும், நேதாஜிக்கும் இருந்த விடுதலை தாகம் பற்றி சந்தேகமில்லை. ஆனால், காந்தி இப்படித்தான் போராடவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். இதற்காக பகத்சிங்கை தூக்கிலிடுவதில் கூட அவர் தலையிடவில்லை என்பதை நீங்களும் படித்திருப்பீர்கள். அதாவது, தன் கொள்கையை பின் தொடராதவர்கள் பற்றி அவர் கவலைப்படவில்லை - அவர்கள் எவ்வளவு தீவிரமான போராட்டக்காரராக இருப்பினும்... நேதாஜிக்கு இந்திய விடுதலை மட்டுமே நோக்கமாக இருந்து. அதனால்தான் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஹிட்லரைக்கூட சந்தித்து உதவி கோரினார். கொல்கத்தா வீட்டுக்காவலில் இருந்து தப்பித்து காபூல் வழியாக எவ்வளவோ கஷ்டப்பட்டு ஜெர்மன் அடைந்தவர், பல்வேறு திட்டங்கள் மூலம் ஐஎன்ஏவை நிறுவி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து பிரிட்டிஷ் படைகளை சிதறடித்த நேதாஜி ஜப்பான் விஷயத்தில் அப்பாவியாக இருந்திருப்பார் என்று தோன்றவில்லை. ஐஎன்ஏ படையெடுப்பு ஜப்பான் உதவியுடன் வெற்றி பெற்றிருந்தால் அதன் பிறகு செய்திருக்கவேண்டியவை பற்றி 'ப்ளான் பி' ஒன்று கண்டிப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

சிறுவயதில் காந்தியையே பெரிதாக எண்ணி வந்தாலும், பல புத்தகங்களையும், செய்திகளையும் படித்த பிறகு காந்தியும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல என்ற முடிவுக்கே வரத்தோன்றுகிறது. மற்றபடி நீங்கள் சொன்னதுபோல் 'வரலாற்றின் சாத்தியக்கூறுகளுக்கும் வாதங்களுக்கும் எல்லையில்லை.


குறிஞ்சி: அந்த மற்றொரு நண்பரின் முழு விவாதமும் இங்கு இடம் பெறவில்லை என்பதால் இது ஓரு முழுமையான பதிலாக இருக்காது என தெரிந்தாலும், நேதாஜியின் சாதனைகளை இந்திய அரசாங்கம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதாலும், என்னால் நேதாஜியினை பற்றி கருத்து வெளியிட்ட நண்பரையை தொடர்பு கொள்ள முடிந்ததாலும் இதில் பாதி விவாதமே வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக